Pages

Monday, 11 July 2016

நற்றிணை Natrinai 158

புகர்முக வேழம்
முகத்தில் புள்ளி கொண்ட யானை
அம்ம, தோழி கேள்.
நம்மிடத்தே இவையெல்லாம் எனக்குத் தென்படவில்லை.
ஓங்கிய மலைநாடன் வரும் வழியில்தான் இந்த இடர்பாடுகள்.
அவன் இரவில் வருகிறான்.
கல்லுப் பாதை அவன் கால்களைக் கொல்லுகிறது.
மிகுந்த இருட்டு அவன் கண்களைக் கொல்கிறது.
குகையில் இருக்கும் புலி யானையைத் தாக்கி அதன் குருதியைப் பருகிவிட்டுத் தன் வாயை வேங்கை மரத்தில் துடைத்துக்கொள்கிறது. 
எனக்கு அச்சமாக இருக்கிறது. – இவ்வாறு தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
பாடல் – குறிஞ்சி

அம்ம வாழி தோழி நம்வயின்
யானோ காணேன் அதுதான் கரந்தே
கல் அதர் மன்னும் கால் கொல்லும்மே
கனை இருள் மன்னும் கண் கொல்லும்மே
விடர் முகைச் செறிந்த வெஞ் சின இரும் புலி
புகர் முக வேழம் புலம்பத் தாக்கி
குருதி பருகிய கொழுங் கவுட் கய வாய்
வேங்கை முதலொடு துடைக்கும்
ஓங்கு மலை நாடன் வரூஉம் ஆறே

வாழி = கேள்
கரந்து = மறைந்து
கனை = மிகுந்த
விடர் முகை = பாறை வெடிப்புக் குகை
புகர் முக வேழம் = முகத்தில் புள்ளிகளைக் கொண்ட யானை
கய வாய் = பெரிய வாய்
ஆறு = வழி

ஆறு பார்த்து உற்ற அச்சத்தால் சிறைப்புறமாகச் சொல்லியது
வெள்ளைக்குடி நாகனார் பாடல்

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

No comments:

Post a Comment