Pages

Monday, 4 July 2016

நற்றிணை Natrinai 140

பெருங்கண் ஆயம்


நெஞ்சே! 

நான் விரும்பும் அவள் தன்னைக் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் சினம் கொள்ளாமல் அவளைப் பின் தொடர்ந்து செல்லத் தயங்காதே. 

காரணம் என் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து அவளைத் தவிர வேறு யாரும் இல்லை. 

அவள் என்மீது இரக்கம் இல்லாதவள் (பரிவிலாட்டி – பரிவு இல் ஆட்டி)

அவளது தந்தை தேரோட்டிச் செல்லும் நிலாக் காயும் மணல் முற்றத்தில் பந்தாடிவிட்டுச் செல்லுகின்ற இரக்கம் இல்லாதவள் அவள். 

அவளை அணுக்கமாகப் பாதுகாக்கும் தோழிமார் கூட்டம் (பெருங்கண் ஆயம்) மகிழும்படிச் செல்கிறாளே அந்த இரக்கம் இல்லாதவள்.

  • பெருங்கண் ஆயம் – அணுக்கத் தோழிமார் கூட்டம் – கூந்தலை வாரி ஐம்பால் ஒப்பனை செய்துகொண்டிருப்பவர்கள் சிலர். கூந்தல் உலர்ந்த பின்னர் பின்புறம் கூழைச்சிண்டு போட்டுக்கொண்டிருப்பவர்கள் சிலர். அவர்கள் சந்தனத் தழைகளைச் செருகித் தலையை ஒப்பனை செய்துகொண்டிருப்பவர்கள். ஆயக் கூட்டமாகச் சேர்ந்து பந்தாடுவர். 
  • சாந்தம் – சந்தனம் – கீழைக்காற்று மேழைத் திசைக்குச் செல்லும்போது பொழிந்த மழையில் தழைத்திருப்பது.
தலைவன் நினைவோட்டம் இப்படி இருக்கிறது. 

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
பாடல் – குறிஞ்சி

கொண்டல் மா மழை குடக்கு ஏர்பு குழைத்த
சிறு கோல் இணர பெருந் தண் சாந்தம்
வகை சேர் ஐம்பால் தகை பெற வாரி
புலர்விடத்து உதிர்த்த துகள் படு கூழைப்
பெருங் கண் ஆயம் உவப்ப தந்தை
நெடுந் தேர் வழங்கும் நிலவு மணல் முற்றத்து
பந்தொடு பெயரும் பரிவிலாட்டி
அருளினும் அருளாள் ஆயினும் பெரிது அழிந்து
பின்னிலை முனியல்மா நெஞ்சே என்னதூஉம்
அருந் துயர் அவலம் தீர்க்கும்
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே

குறை மறுக்கப்பட்ட தலைவன் தன் நெஞ்சினை நெருங்கியது
பூதங்கண்ணனார் பாடல்

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

மகளிர் பந்து |
இது இக்காலம் |
இப்படித்தான் 
சங்க கால மகளிர் 
பந்தாடினர்
சங்ககால மகளிர் பந்தாட்டம்

No comments:

Post a Comment