Pages

Sunday 31 July 2016

அகநானூறு Agananuru 138

தென்னவன் பொதியில் பாயும் அருவி போல் இயம் முழங்கும் முருகு விழா 


தலைவி தன் தோழியிடம் சொல்கிறாள்.

1
தோழி! கேள்! அன்பு கொண்ட தோழியே கேள்! குவளை மலர் போன்ற கண்கள் வறிதாகும்படி, பனி பொழிந்து நான் வருந்தக் கண்ட அன்னை வேறொன்று நினைத்துக்கொண்டாள்.
2
மணம் கொண்ட வேம்புப் பச்சிலை, நீல மலர் ஆகியவற்றைச் சூடிய படையுடன் சென்று தென்னவன் பகைவரைத் தாக்கினான். அவனது மலையிலிருந்து இறங்கும் அருவி போல் இசைக் கருவிகள் முழங்கின. கைதொழுது வணங்கி, முருகன் தெய்வத்தைத் தாய் இல்லத்துக்கு வரவழைத்தாள். அவனுடைய கடப்பம் பூவையும் அவனுடைய ஊர்தி யானையையும் போற்றிப் பாடினர். பூக்கொத்துகளையும், மாலைகளையும் கையில் வைத்துக்கொண்டு வளைந்து வளைந்து பலர் நாள் முழுவதும் ஆடினர். இது நன்றோ? தோழி, நீயே சொல்.
3
உனக்குத் தெரியும். மலைநாடன் நீண்ட நாளாக நாம் சொல்லும் குறியிடத்துக்கு வருகிறான். கண்ணை மறைக்கும் வழியில் வருகிறான் அங்கே நாகம் மணியை உமிழ்ந்திருக்கும். பூத்துக் கிடக்கும் காந்தள் பூவில் தேன் உண்ணும் வண்டு நாகமும் அதன் மணியும் போல் தோன்றி அச்சம் ஊட்டும். அதனை நெஞ்சில் நினைத்து நான் வருந்திக்கொண்டிருக்கிறேன். தாயோ இப்படி ஆட்டிப் படைக்கிறாள். இது நன்றோ, தோழி நீயே சொல்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, குறிஞ்சி

1
இகுளை! கேட்டிசின், காதல் அம் தோழி!
குவளை உண்கண் தெண் பனி மல்க,
வறிது யான் வருந்திய செல்லற்கு அன்னை
பிறிது ஒன்று கடுத்தனள் ஆகி வேம்பின்
2
வெறி கொள் பாசிலை நீலமொடு சூடி,   5
உடலுநர்க் கடந்த கடல் அம் தானை,
திருந்து இலை நெடு வேற் தென்னவன் பொதியில்,
அருஞ் சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின்
ததும்பு சீர் இன் இயம் கறங்க, கைதொழுது,
உரு கெழு சிறப்பின் முருகு மனைத் தரீஇ,   10
கடம்பும் களிறும் பாடி, நுடங்குபு
தோடும் தொடலையும் கைக்கொண்டு, அல்கலும்
ஆடினர் ஆதல் நன்றோ? நீடு
3
நின்னொடு தெளித்த நல் மலை நாடன்
குறி வரல் அரைநாட் குன்றத்து உச்சி,   15
நெறி கெட வீழ்ந்த துன் அருங் கூர் இருள்,
திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தட்
கொழு மடற் புதுப் பூ ஊதும் தும்பி
நல் நிறம் மருளும் அரு விடர்
இன்னா நீள் இடை நினையும், என் நெஞ்சே.  20

தலைமகன் சிறைப்புறத்தானாகத், தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது.
எழூஉப்பன்றி நாகன் குமரனார் பாடியது

கி.மு. காலத்துப் பாடல்

கடம்பு | கடப்பம் பூ | வெண்கடம்பு

No comments:

Post a Comment