கழுவுள் அரசனின் காமூர் போரில் கலங்கியது போல …
ஆதிமந்தி போல …
1
என் மேனி தளிர் போல் வனப்புக் கொண்டது. புள்ளிகளுடன் கூடிய மாமை நிறம் கொண்டது. அந்த அழகு கெடும்படி நெற்றியில் பசப்பு பாய்ந்துள்ளது. பீர்க்கம் பூ போல மஞ்சள் நிறப் பசப்பு பாய்ந்துள்ளது. அதனால் மை எழுதிய என் கண் அழுகிறது.
2
(அட்டன் அத்தி கழார் ஊரில் காவிரியாற்றுத் துறையில் வேந்தன் கரிகாலன் மேற்பார்வையில் நீச்சல் நடனம் ஆடிக் காட்டினான். அவனுடன் காவிரி என்னும் பெண்ணும் சேர்ந்து ஆடினாள். நீரோட்டத்தில் அத்தியும் காவிரியும் அடித்துச் செல்லப்பட்டனர். கரிகாலன் மகள் ஆதிமந்தி ஆட்டனத்தியின் காதலி. காதலனைக் காணாத காதலி ஆதிமந்தி பித்துப் பிடித்தவள் போலப் பிதற்றிக்கொண்டு காவிரிக்கரை ஓரமாகவே தேடிக்கொண்டு சென்றாள்.)
ஆதிமந்தி போல என் அறிவு மழுங்கிவிட்டது. பித்துப் பிடித்துக் கிடக்கிறேன். என்மீது காதல் கொண்டுள்ள தோழி! இதனைக் கேள்.
3
காயும் வெயில் கசக்கிப் பிழிவதாலும், கடுமையான காற்று வீசுவதாலும் ஆடும் தளிரோடு கூடிய இரும்பைக் காய் வளைவாகக் கடைந்தெடுக்கப்பட்ட கழங்குக் காய்களை நிலத்தில் விசிறிப் பரப்புவது போல பாறைமீது விழுந்து தெரிக்கும். இப்படி இரும்பைப் பூ தெரிக்கும் காட்டு வழியில் காதலர் சென்றுள்ளார்.
4
வேளிர் குடி அரசர்கள் 14 பேர் ஒன்று சேர்ந்து, கழுவுள் அரசனின் காமூர் நகரைத் தாக்கினர். கழுவுள் சாயாத சிறந்த புகழையும், வானளாவும் வெண்கொற்றக் குடையும் கொண்டவன். போரில் காமூர் கலங்கியது போல, அவரை நம்பிய என் நெஞ்சம் கலங்குகிறது. தலைவி தன் தோழியிடம் சொல்லிக் கலங்குகிறாள்.
பாடல் சொல் பிரிப்புப்
பதிவு
திணை – பாலை
1
திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க,
புதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்பப்
பசலை பாய்ந்த நுதலேன் ஆகி,
எழுது எழில் மழைக் கண் கலுழ, நோய் கூர்ந்து,
2
ஆதிமந்தியின் அறிவு பிறிது ஆகி, 5
பேதுற்றிசினே காதல்அம் தோழி!
3
காய்கதிர் திருகலின் கனைந்து கால் கடுகி,
ஆடுதளிர் இருப்பைக் கூடு குவி வான் பூ,
கோடு கடை கழங்கின், அறைமிசைத் தாஅம்
காடு இறந்தனரே, காதலர்; அடுபோர், 10
4
வீயா விழுப் புகழ், விண் தோய் வியன் குடை,
ஈர் எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த
கழுவுள் காமூர் போலக்
கலங்கின்று மாது, அவர்த் தெளிந்த என் நெஞ்சே.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தோழிக்குச்
சொற்றது.
பரணர் பாடியது
கி.மு. காலத்துப் பாடல்



No comments:
Post a Comment