Pages

Saturday, 4 June 2016

நற்றிணை Natrinai 115

விசும்பின் தகவு


பொருள் தேடச் சென்ற நாட்டில் அழியாப் புகழைப் பெற்றாலும் மீண்டு வரத் தவிர மாட்டேன் – என்று தலைவன் சொன்னதைத் தலைவி நினைவுபடுத்திக் கொண்டு ஆறுதலாக இருக்கிறாள்.

1

பொய்கையில் இறங்கிப் பூ பறிக்கும் மகளிர் அயர்வால் கண்ணுறக்கம் கொள்கின்றனர். என் தாயும் சினம் தணிந்து பெருமூச்சு விடுகிறாள்.

2

மழைமேகம் அகன்ற கடலிலுள்ள நீரில் உப்பை விலக்கிவிட்டு இனிய நீரை மட்டும் உட்கொண்டு சில நீரை மழையாகப் பொழிகிறது. 
மனை வேலியில் மயிலின் காலைப்போல இலையைக் கொண்டிருக்கும் நொச்சி மனை நடுவில் உள்ள மௌவல் மரத்தோடு சேர்ந்து பூத்துக் குலுங்குகிறது.

3

இப்படிப் பூத்துக் குலுங்கும்படி கார் காலம் வந்திருக்கிறது. 
காதலர் மிகத் தொலைவிலுள்ள நாட்டில் இருக்கிறார். 
என்றாலும், தோழி, அவர் மிகப்பெரும் அன்பு கொண்டவர்.

4

அவர் அங்குக் காயாத நல்ல புகழைப் பெற்றாலும் அங்கே தங்கமாட்டார் என்னும் செய்தியை அவர் கூறக் கேட்டிருக்கிறேன் அல்லவா? 
அது மழைமேகம் போன்ற தகைமை அல்லவா?

(சொல் பிரிப்புப் பதிவு)
பாடல் – முல்லை

1

மலர்ந்த பொய்கைப் பூக் குற்று அழுங்க 
அயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர் 
அன்னையும் சிறிது தணிந்து உயிரினள் இன் நீர்த் 

2

தடங் கடல் வாயில் உண்டு சில் நீர் என 
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி 
மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழ 

3

கார் எதிர்ந்தன்றால் காலை காதலர் 
தவச் சேய் நாட்டர் ஆயினும் மிகப் பேர் 
அன்பினர் வாழி தோழி நன் புகழ் 

4

உலப்பு இன்று பெறினும் தவிரலர் 
கேட்டிசின் அல்லெனோ விசும்பின் தகவே

பிரிவிடை ஆற்றாளாய தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தியது
ஆசிரியர் பெயர் தெரியவில்லை

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

நொச்சி இலை

மயில் கால்


மயிலின் கால் போல் இலை கொண்ட நொச்சி பூத்திருக்கிறது - என்று பாடல் கூறுகிறது

No comments:

Post a Comment