யானையைக் கொன்ற தந்தத்தை வரியாகப் பெற்றுக்கொள்ளும் அறன் இல்லாத வேந்தன்
பொருளீட்டக் காட்டு வழியில் செல்லும் தலைவன்
தன் காதலி இருக்கும் இடத்தையும், தான் செல்லும் வழியையும் எண்ணிப் பார்க்கிறான்.
1
அவளுக்குக் பல இதழ்களை உடைய நெய்தல் மலர் போன்ற கண்கள். யாழ் நரம்பின் இசை போன்ற வாய்ச்சொல். இப்படி நலமெல்லாம் இருக்கும் அந்த ஒருத்தி இருந்த ஊர் எப்படிப்பட்டது?
2
காட்டின் கால்கள் கட்டிவைத்திருப்பது போன்று ஓங்கி உயர்ந்த மரங்கள் நிற்கும் சோலை. தன் கொம்புகளால் யானைக்கூட்டம் அந்த மரங்களைக் குத்தி உழும் மரச்சோலை. மூங்கில் மரங்களில் அணில் ஏறி விளையாடும் சோலை. சோலையைக் கொண்ட திசைப் பரப்பு. இப்படி இருக்கும்.
3
நான் செல்லும் வழி எப்படிப்பட்டது? பதுக்கைகள் (பதுங்குமிடங்கள்) கொண்டது. வெண்மையான முனை கொண்ட அம்பு பாய்ந்து உயிரை விட்டோரின் உடல்கள் எண்ணிலடங்காமல் கிடக்கும் பதுக்கைகள் அவை. அது பாலைநிலம் (சுரம்). அதில் செல்வோர் பிரிவுப் பாதைகளில் (கவலை) வழி தவறிப் போய் இறந்து கிடப்பர்.
4
கையில் பொருள் இல்லை ஆயினும், வழிச்செல்வோரைப் பிடித்துச்சென்று, உயிரை கொன்று தவறு இழைக்கும் மக்கள் வாழுமிடம் இந்தப் பாதை. யானைகளைக் கொன்று அதன் தந்தங்களையும், தோலையும் மன்னனுக்கு வரியாகத் தர, அதனைப் பெற்றுக்கொள்ளும் அறநெறி இல்லாத வேந்தன் ஆளும் ஊர். வறண்ட குன்றுப் பகுதி. கொடிய விலங்ககுகள் பலவற்றின் இருப்பிடம். இதுதான் நான் செல்லும் வழி.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – பாலை
1
பல் இதழ் மென் மலர் உண்கண், நல் யாழ்
நரம்பு இசைத்தன்ன இன் தீம் கிளவி,
நலம் நல்கு ஒருத்தி இருந்த ஊரே
2
கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டிக்
காடு கால்யாத்த நீடு மரச் சோலை 5
விழை வெளில் ஆடும் கழை வளர் நனந்தலை,
3
வெண் நுனை அம்பின் விசை இட வீழ்ந்தோர்
எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கைச்
சுரம் கெழு கவலை கோட்பால் பட்டென,
வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர், 10
4
கைப்பொருள் இல்லைஆயினும், மெய்க் கொண்டு
இன் உயிர் செகாஅர் விட்டு அகல் தப்பற்குப்
பெருங் களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும்
அறன் இல் வேந்தன் ஆளும்
வறன் உறு குன்றம் பல விலங்கினவே. 15
இடைச் சுரத்துத் தலைமகன்
தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
கடுந்தொடைக் காவினார்
கி.மு.
காலத்துப் பாடல்

No comments:
Post a Comment