Pages

Sunday, 1 May 2016

நற்றிணை Natrinai 108

பழகிய பகையும் பிரிவு இன்னாது


தோழி தலைவனுக்கு அறிவுரை கூறுகிறாள்.

மலையோரமாகத் தினை ’கருகரு’வெனத் தழைத்திருந்தது. 

தன் துணையைப் பிரிந்த யானை ஒன்று ஆசைக் கண்ணோடு அந்த விளைச்சலை அடைத்து நாசமாக்கிக்கொண்டிருந்தது. 

அங்கே குடியிருக்கும் குறவர்கள் அதனைக் கண்டனர். 

எய்து ஓட்ட வில்லம்பு, ஓசைப்பட்டுத்தி ஓட்டக் கிணை, கல் வீசி ஓட்டக் கையில் மாட்டிக்கொள்ளும் கவண் ஆகியவற்றுடன் வந்தனர். 

பக்கத்துக் குடியிருப்புக்களில் வாழ்வோரையும் கூவி அழைத்துக்கொண்டு வந்து ஆரவாரம் செய்தனர்.

இப்படி ஆரவாரம் செய்யும் நாட்டை உடையவனே!

பழகியவர் பகையாளி ஆனாலும் அவரைப் பிரிதல் துன்பமே. 
அப்படி இருக்கும்போது உன்னைப் பார்த்து ஆசையோடு பல் இளிக்கும் இவளது சுடரும் முகநெற்றி பசப்பு ஊர்ந்து வாடும்படி விட்டுவிட்டாயே.

(சொல் பிரிப்புப் பதிவு)
பாடல் 108 குறிஞ்சி

மலை அயற் கலித்த மை ஆர் ஏனல் 
துணையின் தீர்ந்த கடுங்கண் யானை 
அணையக் கண்ட அம் குடிக் குறவர் 
கணையர் கிணையர் கை புனை கவணர் 
விளியர் புறக்குடி ஆர்க்கும் நாட 
பழகிய பகையும் பிரிவு இன்னாதே 
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மடந்தை 
சுடர் புரை திரு நுதல் பசப்ப 
தொடர்பு யாங்கு விட்டனை நோகோ யானே

வரையாது நெடுங்காலம் வந்து ஒழுகல் ஆற்றாளாய தோழி தலைமகளது ஆற்றாமை கூறி வரைவு கடாயது
பாடியவர் பெயர் தெரியவில்லை

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

No comments:

Post a Comment