வேலன் என்னைப் பொம்மலாட்டப் பாவை போல் ஆட்டிவைத்தான்
வெறியாட்டு விழா எப்படி நடைபெற்றத் என்பதை இந்தப் பாடல் விளக்குகிறது.
என்பன சங்ககால வீட்டுவிழாக்கள்
என்பன சங்ககால வீட்டுவிழாக்கள்
புலவர் வெறியாட்டு விழாவை இந்தப்
பாடலில் சிறப்பித்துப் பாடிய காரணத்தால் ’வெறி பாடிய’ என்னும் அடைமொழிச் சிறப்புடன்
குறிப்பிடப்படுகிறார்.
அன்னை நடத்தும் வெறியாட்டால் என் வாட்டத்
துன்பம் தணியாது. மேலும் நான் முருகேறி ஆடுவது அவருக்குத் தெரியவரின் நான் என் உயிரையே
விட்டுவிடுவேன் – என்கிறாள் தலைவி.
1
பனிமலையில் (இமயமலையில்) உயர்ந்த மலைமுகடுகளுக்கு இடையில் இருக்கும் கவாண் (கவண் போன்ற அமைப்பினைக் கொண்டிருக்கும் கணவாய் மலைப்பிளவு) பகுதியில், அவர் நமக்கு (எனக்கு) பிணக்கிக்கொள்ளவே முடியாத உறவுக் கோட்பாட்டோடு, இனிமையைத் தந்தார். அந்த இனிய உள்ளம் இப்போது இன்னாததாக மாறிவிட்டது. வெறுக்கத் தக்க நிலையினதாக அவர் தந்த கொடை (நல்கல்) அமைந்துவிட்டது. எனக்கு நேர்ந்துள்ள இந்தத் துன்பம் அவனது மார்பினைப் பெற்றால் அன்றித் தணியாது. இது அன்னைக்குத் தெரியவில்லை. வெறியாட்டு நடத்த முனைகிறாள்.
2
நீண்ட கோலை (வார்கோல்) வளைத்துக் கட்டிச் செய்த, என் தோளிலே செறிவாகக் கிடந்த வளையல் நெகிழ்ந்து நழுவுவதை தாய் பார்த்துவிட்டாள். என்ன செய்வதென்று தெரியாமல், குறி சொல்லும் முதுவாய்ப் பெண்களைக் கேட்டாள். அவர்கள் தன் கையில் வைத்திருக்கும் பிரம்பால் என்னைத் தட்டிப் பார்த்து, “முருகன் பிடித்து ஆட்டுகிறான்” என்னறர். அதனை அவள் நம்பிவிட்டாள் (அது செத்து).
3
ஓவியம் போன்ற வேலைப்பாடுகளால் புனையப்பட்ட இல்லத்தில் வாழும் இவளது உருவழகானது (கவின்) செய்து வைக்கப்பட்ட பதுமை போன்றது. பலரும் ஆராய்ந்து போற்றும் அந்தச் சிறப்பு மிக்க அழகு முன்பு இருந்ததை விட மேலும் சிறப்படையவேண்டும் என்று கூறிக்கொண்டு வெறியாட்டு நடத்துகிறாள்.
4
மேளத்தாளம் முழங்க வெறியாடும் களம் அமைத்தாள். ஆட்ட பாட்டத்துடன் (ஆடு அணி) விழா நடத்தி (அயர்ந்து) அகன்ற பெரிய பந்தல் போட்டாள்.
5
வேலன் வெண்நிறப் கடம்பு மலரைச் சூடிக்கொண்டு வந்தான். இனிய சீரிசையால் பாட்டுப் பாடிக்கொண்டு வந்தான். அந்தப் பாட்டு (பாணி) மென்மையானது (ஐது). கையை ஆட்டிக்கொண்டு வந்தான். ’முருகா’ என்று செல்வனின் பெரும்பெயரைச் சொல்லி வாழ்த்திக்கொண்டு வந்தான். வெறியாட்டு மேடை சிறக்கும்படி வந்தான்.
6
பொம்மலாட்டத்தில் வல்லவன் நடத்திக்காட்டும் பொம்மை போல என்னை ஆட்டிவைக்க வந்தான்.
தோழி!இனி என்ன நடக்குமோ தெரியவில்லை.
7
ஆசையில் மயங்கி, நொந்துகொண்டிருக்கும் பெண்களுக்கு மேலும் துன்பம் உண்டாகும்படி, நான் வெறியாடிய பின்னும் என் மேனி முன்பு இருந்தது போலச் சிறப்படையாது என்பது தானே உண்மை?
8
அதன் பிறகு என்ன நடக்கும். வெறியாட்டத்தில் நெடுவேள் முருகன் இவளுக்கு முன்பு இருந்த நிலையைத் தருவான் என்று கூறிய இந்த அறிவாளிகள் (!) முன்பு இருந்த நிலையை முருகன் நல்காமை கண்டு மேலும் வருந்துவார்களே! செறிதொடியாகிய நான் உற்ற துன்பம் வேறொன்று என்று என் காதலன் கான்கெழு நாடன் கேட்பின், நான் உயிர் வாழ்தல் அரிது அல்லவா?
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – குறிஞ்சி
1
பனி வரை நிவந்த பயம் கெழு கவாஅன்,
துனி இல் கொள்கையொடு அவர் நமக்கு உவந்த
இனிய உள்ளம் இன்னாஆக,
முனிதக நிறுத்த நல்கல் எவ்வம்
சூர் உறை வெற்பன் மார்பு உறத் தணிதல் 5
அறிநதனள் அல்லள், அன்னை; வார்கோல்
2
செறிந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்தமை நோக்கி,
கையறு நெஞ்சினள் வினவலின், முதுவாய்ப்
பொய் வல் பெண்டிர் பிரப்பு உளர்பு இரீஇ,
''முருகன் ஆர் அணங்கு'' என்றலின், அது செத்து, 10
3
ஓவத்து
அன்ன வினை புனை நல் இல்,
''பாவை அன்ன பலர் ஆய் மாண் கவின்
பண்டையின் சிறக்க, என் மகட்கு'' எனப் பரைஇ,
4
கூடு கொள் இன் இயம் கறங்க, களன் இழைத்து,
ஆடு அணி அயர்ந்த அகன் பெரும் பந்தர், 15
5
வெண் போழ் கடம்பொடு சூடி, இன் சீர்
ஐது அமை பாணி இரீஇ, கைபெயரா,
செல்வன் பெரும் பெயர் ஏத்தி, வேலன்
வெறி அயர் வியன் களம் பொற்ப, வல்லோன்
6
பொறி அமை பாவையின் தூங்கல் வேண்டின், 20
என் ஆம்கொல்லோ? தோழி! மயங்கிய
7
மையற் பெண்டிர்க்கு நொவ்வல் ஆக
ஆடிய பின்னும், வாடிய மேனி
பண்டையின் சிறவாது ஆயின், இம் மறை
அலர் ஆகாமையோ அரிதே, அஃதான்று, 25
8
அறிவர் உறுவிய அல்லல் கண்டருளி,
வெறி கமழ் நெடு வேள் நல்குவனெனினே,
''செறிதொடி உற்ற செல்லலும் பிறிது'' எனக்
கான் கெழு நாடன் கேட்பின்,
யான் உயிர்வாழ்தல் அதனினும் அரிதே. 30
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி
தலைமகட்குச் சொல்லுவாளைச் சொல்லியது;
தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.
வெறிபாடிய காமக்கண்ணியார் பாடல்
வெறி ஆட்டம் பற்றி இப்பாடலில்
சிறப்பித்துப் பாடியதால் ‘வெறிபாடிய’ என்று சிறப்பிக்கப்பட்டுள்ளார்.
இப் புலவர் காமக் கண் கொண்ட பெண்புலவர்
போலும்.
கி.மு.
காலத்துப் பாடல்
![]() |
| பொம்மலாட்டம் பொம்மலாட்டத்தில் பொம்மையை ஆட்டிவைப்பது போல வெறியாட்டத்தில் வேலன் தலைவியை ஆட்டிவைப்பான் வல்லோன் பொறியமை பாவை |
![]() |
| வெண் கடம்பு |


No comments:
Post a Comment