குட்டுவன் குடநாடு பெறினும் உன்னை மறக்க மாட்டார்
பொருளுக்காக உன்னைப் பிரிந்த அவர், பசி என்பதையே
அறியாவண்ணம் குட்டுவன் காக்கும் குடநாடே பெற்றாலும் உன்னை விட்டுவிட்டுத் தங்கமாட்டார்;
உன்மீது மிகப் பெரிய அன்பு கொண்டவர்; என்று சொல்லித் தலைவியைத் தோழி தேற்றுகிறாள்.
1
பொருள்கள் கண்ணுக்குத் தெரியும்படி உதவும் பல வண்ணக் கதிர்களை உடைய ஞாயிறு, வளம் மிக்க பெருமலையில் அதன் பயனெல்லாம் கெடும்படிக் காய்வதால், அருவி நீரைக் கொட்டிய பெருமலைச் சாரல் சுனையில் நீரின் பயன் இல்லாமல் போய்விட்டது. நீர் பருக அங்குச் சென்ற யானைக் குடும்பம், நீர் இல்லாமையால் அங்கிருந்த நீர்ப்பாசிகளை பிய்த்துத் தின்றுவிட்டு ஆணும் பெண்ணுமாக ஒரு பக்கத்தில் ஒடுங்கிக் கிடக்கும்.
2
அங்கு வெயில் தாங்க முடியாமல் மூங்கில்கள் வெடித்துக் கிடக்கும். அந்த வழியில் அவர் பொருள் தேடச் சென்றாலும் உன் மேல் மிகப் பெரிய அன்பினைக் கொண்டவர்.
3
அங்கு வாழும் மழவர், கண்ணோட்டம் இல்லாத கொடிய கண்களை உடையவர். திருட்டுத் தொழில்தான் அவர்கள் செய்யும் உழவு. ஒடு மரங்கள் மிக்க ஒடுங்காடு அவர்களின் வாழ்விடம். பரல் கற்கள் அடுக்கிய பதுக்கையில் அவர்கள் வாழ்வர். அழுத்தமான புள்ளிகளைக் கொண்ட கலைமான்களும் (இருங்கேழ் இரலை) அந்தப் பதுக்கை இருப்பிடங்களில் வாழும்.
4
அந்த ஒடுங்காட்டுக்கு அப்பால் முரசு முழக்கும் உரிமை பூண்ட சேரமன்னன் குட்டுவன் ஆளும் காப்பிடமான குடநாடு இருக்கும். அந்தக் குடநாட்டு மக்கள் பசி என்பதையே அறியாதவர்கள். தென்னை (பணை) வளம் மிக்கது அந்த நாட்டின் ஊர்கள். அந்த நாட்டு எருமைகள் தாமரைக் குளத்தில் கிடந்து மேய்வது சலித்துப் போய்விட்டால், வளைந்து முதிர்ந்து கிடக்கும் பலா மரத்து நிழலில் உறங்கும். இப்படிப்பட்ட குடநாடே கொடையாகக் கிடைக்குமாயினும்,
மடமானைப் போல மருண்டு பார்க்கும் நோக்கம் கொண்டவளே!
உன் உன்னதமான இன்ப நலனை மறந்துவிட்டு அவர் தங்கமாட்டார். கவலை வேண்டாம்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – பாலை
1
விளங்குபகல் உதவிய பல் கதிர் ஞாயிறு
வளம் கெழு மா மலை பயம் கெடத் தெறுதலின்,
அருவி ஆன்ற பெரு வரை மருங்கில்
சூர்ச் சுனை துழைஇ நீர்ப்பயம் காணாது,
பாசி தின்ற பைங் கண் யானை 5
ஓய் பசிப் பிடியொடு ஒருதிறன் ஒடுங்க,
2
வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனந்தலை
அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும்,
பெரும் பேர் அன்பினர் தோழி!-இருங் கேழ்
3
இரலை சேக்கும், பரல் உயர் பதுக்கைக் 10
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த
நெடுங் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்,
4
விசிபிணி முழவின் குட்டுவன் காப்ப,
பசி என அறியாப் பணை பயில் இருக்கை,
தட மருப்பு எருமை தாமரை முனையின், 15
முடம் முதிர் பலவின் கொழு நிழல் வதியும்,
குடநாடு பெறினும் தவிரலர்
மடமான் நோக்கி! நின் மாண் நலம் மறந்தே.
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி
வற்புறுத்தியது.
மாமூலனார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்

No comments:
Post a Comment