அருந்திறல் கடவுள் செல்லூர்
செல்லூர் கோசர் நியமம்
மகளை மணக்க ஊரை விலையாகத் தரும் வழக்கம்
மணமகன் மணமகளுக்குப் பரிசம் தந்து மணந்துகொள்வது
அக்கால வழக்கம். மகளைப் பெற்ற தந்தை மகளின் காதலனுக்கு மட்டுந்தான் மணம் முடித்துத்
தருவான். ’மணந்துகொண்டு இவளை நீ துய்க்கலாம்’ என்று தோழி தலைவனுக்கு அறிவுறுத்துகிறாள்.
1
மூத்தோரின் நரைமயிர் போல வெண்ணிற அலைகளைக் கொண்டது கடல். அந்தக் கடல் மணலில் இளம் மகளிர் மணல்வீடு கட்டி விளையாடுவர். அந்த வீட்டு-வரிகளை கடலலை சிதைக்கும். அங்கே தாழம்பூ விரியும் துறை இருக்கும். ‘கானலம் பெருந்துறை’ என்று இதனை வழங்குவர்.
2
இப்படிப்பட்ட துறைக்குச் சில வேளைகளில் மட்டும் நீ வருகிறாய். இவளோடு கூடியிருக்கிறாய். இது ஊருக்குத் தெரிந்து அலர் தூற்றுகின்றனர். இதனைக் கேட்ட தாய் இவளை வெளியில் செல்ல விடாமல் வீட்டுக்குள்ளேயை இருக்கும்படிச் செய்துவிட்டாள். இது தெரியாமல் நீ பலநாள் வந்து இவளைப் பெற முடியாமல் திரும்பிப் போகிறாய்.
சில் செவி = சில செவ்வி, சில நேரம்
3
வளரும் இவள் முலை, உன் பகட்டான அழகிய மார்பில் மயங்கிய உள்ளத்தோடு வருந்துகிறது. இப்படிப்பட்ட உன்னை ‘வராதே, நீங்குக’ என்று நான் எப்படிச் சொல்லமுடியும்?
4
அரிய திறம் படைத்த கடவுள் குடிகொண்டுள்ள ஊர் செல்லூர். அதற்குக் கிழக்கில் முழங்கும் கடல்.
5
அது கோசர் வாழும் ஊர் (நியமம்). இந்தக் கோசர் சினத்தால் கருத்திருக்கும் கண்களை உடையவர்கள். வாள்-இரும்பு காயப்படுத்தி ஆறிய வடுக்களை முகத்தில் கொண்ட வீரர்கள். வீரப் போராளிகளாகிய கோசர்கள் வாழும் சிறப்பு மிக்க இந்த ஊரையே இவளுக்கு விலையாக, திருமண அணிகலன்கள் செய்துகொள்வதற்காகப் பரிச விலையாகப் பிறர் தந்தாலும் இவளது தந்தை வாங்கமாட்டான்.
(நீ மணந்துகொண்டு இவளைப் பெறுவாயாக)
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – நெய்தல்
1
மூத்தோர் அன்ன வெண் தலைப் புணரி
இளையோர் ஆடும் வரிமனை சிதைக்கும்
தளை அவிழ் தாழைக் கானல் அம் பெருந் துறை,
2
சில் செவித்து ஆகிய புணர்ச்சி அலர் எழ,
இல்வயிற் செறித்தமை அறியாய்; பல் நாள் 5
3
வரு முலை வருத்தா, அம் பகட்டு மார்பின்,
தெருமரல் உள்ளமொடு வருந்தும், நின்வயின்,
''நீங்குக'' என்று, யான் யாங்ஙனம் மொழிகோ?
4
அருந் திறற் கடவுட் செல்லூர்க் குணாஅது
பெருங் கடல் முழக்கிற்று ஆகி, யாணர், 10
5
இரும்பு இடம் படுத்த வடுவுடை முகத்தர்,
கருங் கட் கோசர் நியமம் ஆயினும்,
''உறும்'' எனக் கொள்குநர் அல்லர்
நறு நுதல் அரிவை பாசிழை விலையே.
பகற்குறி வந்து கண்ணுற்று நீங்கும்
தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு நின்று,
இற்செறிப்பு அறிவுறீஇயது.
மதுரை மருதன் இளநாகனார்
பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்

No comments:
Post a Comment