Pages

Friday, 20 May 2016

அகநானூறு Agananuru 89

காதலனுடன் செல்லும் என் மகளின் மெல்லிய காலடி புனத்தில் நீண்ட தூரம் நடக்குமா


விரும்பிய காதலனுடன் செல்லுமாறு மகளை வழியனுப்பிவைத்த செவிலித்தாய் தனக்குத் தானே சில சொல்லிக்கொண்டு வருந்துகிறாள். 

உச்சி வெயில் சுட்டெரிக்கும் வழி. மழை வறண்டுபோன நிலப்பரப்பு. பேய்த்தேர் என்னும் கானல் நீரோட்டம், நீர் போலத் தோன்றி ஏமாற்றும் வழி. புல் வளர்ந்து சாய்ந்துகிடக்கும் மலைப்பிளவுகளில் இருந்துகொண்டு கோட்டான் சேவல் அச்சம் தரும் குரலைக் கொடுக்கும் வழி. வேல மரத்தில் இருக்கும் சில்வண்டு, கவணிலிருந்து வீசப்படும் கல் செல்லும் ஓசை போல் ஒலி கேட்கும்படி கத்தும் வழி. உலர்ந்த நெற்றுக்கள் வேல மரத்திலிருந்து உதிர்ந்து கிடக்கும் வழி.

2

காழியர் (துணி துவைத்துத் தரும் வண்ணார்) உவர் மண் தோண்டி எடுத்த நிலப்பரப்பில் செல்லவேண்டும். 

(வண்ணார் துணியை வெளுப்பர். துணியில் இருக்கும் அழுக்கை முழுமையாக நீக்குவதற்காக அழுக்குத் துணிகளை நீரில் நனைத்து உப்பு மண்ணில் புரட்டி, நீராவி வரும்படி, சூளையில் வைப்பர். பின் நீரில் துவைப்பர்.) 

களர் நிலத்திலும், கல் நிலத்திலும் நீண்ட தூரம் செல்ல வேண்டும். அங்கே வில்லேந்திய மறவர் இருப்பர். அவர்கள் வேட்டையாடிய விலங்கின் கறியைச் சுட்டுத் தின்பார்கள். தோள் வலிமை மிக்க கழுதையின் மேல் சுமையை ஏற்றிக்கொண்டு வழிப்போக்கர்கள் வருவர். வாள் வீரர்கள் அவர்களோடு போரிட்டு அவர்களின் தலையை வெட்டி வீழ்த்துவர். அவை புலால் நாற்றம் அடிக்கும். வழிப்போக்கரின் அரிய செல்வ வளங்ககளை மறவர்கள் எடுத்துக்கொண்டு வந்து ஊரில் (குறும்பு) உள்ள அனைவரையும் துடி முழக்கி அழைத்து குடும்பத்தார் எண்ணிக்கையில் பங்கிட்டுத் தருவர்.

3

இப்படிப்பட்ட கொல்லைப் புனத்தில் என்மகள் தன் அழகிய மென்மையான அடியை ஊன்றி நடக்கும் வலிமை பெற்றிருக்கிறாளோ என்னவோ?

4

இங்கு நான் பாலில் தேனைக் கலந்து அவளுக்கு ஊட்டுவேன். அவள் உண்ணமாட்டாள். நான் உண்ணும்படி அடிப்பேன். அவள் பந்தல் மணலில் அங்குமிங்கும் ஓடுவாள். இப்போது அவள் மூங்கில் போல் பருத்த தோளினை உடையவள் ஆகிவிட்டாள். மயக்கும் மாமைநிற மேனியள் ஆகிவிட்டாள். இவளால் அந்தக் கடுமையான வழியில் நடக்கமுடியுமா? வருந்துவாளே!

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – பாலை

1
தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின்,
உறு பெயல் வறந்த ஓடு தேர் நனந் தலை,
உருத்து எழு குரல குடிஞைச் சேவல்,
புல் சாய் விடரகம் புலம்ப, வரைய
கல் எறி இசையின் இரட்டும் ஆங்கண்,             5
சிள்வீடு கறங்கும் சிறிஇலை வேலத்து
ஊழுறு விளைநெற்று உதிர, காழியர்
2
கவ்வைப் பரப்பின் வெவ் உவர்ப்பு ஒழிய,
களரி பரந்த கல் நெடு மருங்கின்,
விளர் ஊன் தின்ற வீங்குசிலை மறவர்    10
மை படு திண் தோள் மலிர வாட்டி,
பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய
திருந்து வாள் வயவர் அருந் தலை துமித்த
படு புலாக் கமழும் ஞாட்பில், துடி இகுத்து,
அருங் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர்,             15
வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும்
3
கொல்லை இரும் புனம் நெடிய என்னாது,
மெல்லென் சேவடி மெலிய ஏக
வல்லுநள்கொல்லோ தானே தேம் பெய்து
4
அளவுறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள்,              20
இடு மணற் பந்தருள் இயலும்,
நெடு மென் பணைத் தோள், மாஅயோளே?

மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது.
மதுரைக்காஞ்சிப் புலவர் பாடல்


கி.மு. காலத்துப் பாடல்

குடிஞை | கூகை | கோட்டான் | ஆந்தை

No comments:

Post a Comment