Pages

Friday, 20 May 2016

அகநானூறு Agananuru 88

நன்னராளன் அசுணமா கொல்லும் வழியில் வருகிறானே


அந்த நன்னராளன் (நல்லவன்) இரவு வேளையில், இடர்பாடுகளுக்கு இடையே நமக்காக வருகிறானே, என்று தோழி தலைவியிடம் சொல்லி அவனுக்கு அருளுமாறு தூண்டுகிறாள்.

1

மேட்டு நிலத்தில் முளைத்து விளைந்திருந்த நல்ல தினைக் கதிர்களை உண்ணுவதற்காகப் புருவைப்பன்றி (முள்ளம்பன்றி) வரும். அதனைத் தெரிவிப்பதற்காகப் பெரிய வாயை உடைய பல்லி ஒலி எழுப்பும். பல்லி ஒலி எழுப்பாத தருணம் பார்த்து புருவைப்பன்றி விளைச்சலில் நுழைந்து தினைக்கதிர்களை உண்ணும்.
  • முதை சுவல் = காட்டு மரங்களை வெட்டி வீழ்த்தி எரித்த மேட்டுநிலம்

2

கானவன் கழுதின்மேல் ஏறிக் காவல் புரிவான். அவன் அந்தப் பந்தலின்மேல் விளக்கு வைத்திருப்பான். கானவன் அந்தப் பந்தலின்மேல் இருப்பதை விளக்கொளியில் பார்த்த நம் நன்னராளன் (நாம் காவலின்றி இருப்பதைப் பார்த்து) நம்மிடம் வருவான். நாம் இரவில் தனிமையில் நடுங்குவதைப் போக்குவான். அப்படி நம் தனிமைத் துன்பத்தைப் போக்கிய நன்னராளன் நம்மை விட்டுவிட்டுக் காட்டு வழியில் செல்வான்.
  • கழுது = ஏறிப் பார்க்கும் பரண்-பந்தல்

3

அவன் செல்லும் வழியில் யானைக் கூட்டம் இருக்குமே. பெரிய புலியைக் கொன்று தொலைத்த பெரிய கையை உடைய யானைகள் ஆயிற்றே, அவை. காதல் உணர்வு மேலிட்டுக் கன்னத்தில் கடாம் (மதநீர்) ஒழுகும் பித்தேறிய யானை அன்றோ அது. 

அந்த யானை, தன்னைக் கொல்லக்கூடிய அசுணம் என்னும் கொடிய விலங்ககின் ஒலி கேட்கிறதா என்று உற்றுக் கேட்டுக்கொண்டு பாதுகாப்பாகச் செல்லுமே. அந்த அசுணமா யாழிசை போல இனிமையாக ஒலித்து நன்னராளனை ஏமாற்றிக் கொன்றுவிடுமே.

4

வளைந்த விரலை உடைய கரடி மூங்கில் காட்டில் வாழும் பாம்புகளை மிதித்துத் தள்ளிவிட்டு, புற்றில் இருக்கும் கறையான்களைத் தோண்டிக்கொண்டிருக்குமே. அந்த வழியில் அல்லவா அவர் வந்து செல்கிறார்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – குறிஞ்சி
1
முதைச் சுவற் கலித்த மூரிச் செந்தினை
ஓங்கு வணர்ப் பெருங் குரல் உணீஇய, பாங்கர்ப்
பகுவாய்ப் பல்லிப் பாடு ஓர்த்து, குறுகும்
புருவைப் பன்றி வரு திறம் நோக்கி,
2
கடுங் கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய   5
நெடுஞ் சுடர் விளக்கம் நோக்கி, வந்து, நம்
நடுங்கு துயர் களைந்த நன்னராளன்
சென்றனன் கொல்லோ தானே குன்றத்து
3
இரும் புலி தொலைத்த பெருங் கை யானைக்
கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம்     10
இருஞ் சிறைத் தொழுதி ஆர்ப்ப, யாழ் செத்து,
இருங் கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும்
4
காம்பு அமல் இறும்பில் பாம்பு படத் துவன்றி,
கொடு விரல் உளியம் கெண்டும்
வடு ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே?         15

இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.
ஈழத்துப் பூதன் தேவனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

புருவைப் பன்றி | முள்ளம்பன்றி

No comments:

Post a Comment