Pages

Tuesday, 17 May 2016

அகநானூறு Agananuru 82

தான் எய்த யானையைத் தேடி வந்தவனைப் பார்த்தவர் பலர். நான் மட்டும் அவனை நினைத்துக்கொண்டு தூங்கவில்லையே, ஏன்?


அவனைப் பார்த்த மகளிர் பலர். அவர்களில் நான் மட்டும் அவனை நினைத்துக்கொண்டு தூங்காமல் இருக்கிறேனே, அது ஏன் தோழி? – தலைவி கேட்கிறாள்.
1
விறலி நடனம் ஆடுவாள். அது போலக் காட்டில் மயில் நடனம் ஆடிற்று. ஆடும் மூங்கிலில் வண்டுகள் துளையிட்டிருந்தன. மேலைக்காற்று அதில் நுழைந்து குழல் ஊதும் இசையைத் தந்தது. அருவி கொட்டும் ஓசை முழவு இசையாக முழங்கிற்று. கலைமான் எழுப்பும் குரல் கொம்பு ஊதும் இசையாகக் கேட்டது. மலையின் பூஞ்சாரலில் வண்டுகள் பாடும் இசை யாழிசையாகக் கேட்டது. இப்படிப் பலவகையான இசையைக் கேட்டுக்கொண்டு பெண்-குரங்குகள் அந்தக் காட்டு மன்றத்தில் மயில் ஆடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தன. இது நனவில் தோன்றி ஆடும் விறலி போல் தோன்றிற்று. இப்படிப்பட்ட நாட்டுக்கு அவன் தலைவன்.   
2
அவன் கையில் அச்சம் தரும் வில்லை வைத்திருந்தான். அம்பு பூட்டிக் குறி பார்த்துக்கொண்டே வந்தான். அவனோடு போராடி அவனைத் தாக்கவந்த யானை சென்ற வழியைக் கேட்டுக்கொண்டே வந்தான். வந்தவன் தினை விளைந்திருந்த வயலின் ஒருபுறம் நின்றுகொண்டு யானை சென்ற வழியை வினாவினான். அவன் மார்பிலே மலர்மாலை அணிந்திருந்தான். அப்படி நின்றவனைக் கண்டவர் பலர்.
தோழி, வாழ்க.
3
அவர்களில் நான் மட்டும் நள்ளிருளில் என் மெத்தைமீது படுத்துக்கொண்டு, நெகிழும் தோளோடு, கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறேனே, அது ஏன் தோழி.  

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – குறிஞ்சி
1
ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின்
கோடை அவ் வளி குழலிசை ஆக,
பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை
தோடு அமை முழவின் துதை குரல் ஆக,
கணக் கலை இகுக்கும் கடுங் குரற் தூம்பொடு,          5
மலைப் பூஞ் சாரல் வண்டு யாழ் ஆக,
இன் பல் இமிழ் இசை கேட்டு, கலி சிறந்து,
மந்தி நல் அவை மருள்வன நோக்க,
கழை வளர் அடுக்கத்து, இயலி ஆடு மயில்
நனவுப் புகு விறலியின் தோன்றும் நாடன் 10
2
உருவ வல் விற் பற்றி, அம்பு தெரிந்து,
செருச் செய் யானை செல் நெறி வினாஅய்,
புலர் குரல் ஏனற் புழையுடை ஒரு சிறை,
மலர் தார் மார்பன், நின்றோற் கண்டோர்
பலர்தில், வாழி தோழி! அவருள்,            15
3
ஆர் இருட் கங்குல் அணையொடு பொருந்தி,
ஓர் யான் ஆகுவது எவன்கொல்,
நீர் வார் கண்ணொடு, நெகிழ் தோளேனே?

தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றது.
கபிலர் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

ஏன் தூங்காமல் இருக்கிறேன்? 

2 comments: