கடலன் நகரம் விளங்கில் போல் அழகி
பொருள் தேடச் சென்றுவருகிறேன் என்று தலைவன்
தோழியிடம் தெரிவித்தான். தோழி தலைவியிடம் கூறி, அவள் சொன்னதைத் தலைவனிடம் தெரிவிக்கிறாள்.
1
கரடி வழக்கமாக (நாள்-உலா)
இரை தேடப் புறப்படும். இரும்பை மரத்துப் (இலுப்பை மரம்)
பழங்களை மேயும். அந்தப் பழம் சலித்துவிட்டால், சிறிய வளைகளைக் கொண்ட புற்றைக் கிண்டி
அதில் வெளிவரும் கறையான்களைத் தின்னும். அந்தப் புற்று அந்தக் கறையான் முயன்றெடுத்துக்
கட்டிய ஈரமுள்ள உயர்ந்த மண்மலை போல் இருக்கும். கரடியின் வாய் கொல்லன் துருத்தி போல்
இருக்கும்.
2
கண்ணைப் பறிக்கும் வெயில் வாட்டும். அந்த
வழியில் விரிந்த தலையுடன் இருக்கும் மரா மரத்தில் ஏறிப் பருந்து இருந்துகொண்டு, உணவு
கிடைக்காதா என்று புலம்புவது போல உயவும் (குரல் எழுப்பும்).
அப்போது கோடைக்காலம்.
3
இது கொடிய போர்க்களம் போன்ற பாலைநிலக் காடு.
செம்மாந்த உன் உள்ளம் உன்னை ஓட்ட நீ அதனைக் கடந்து செல்வாய்.
4
விளங்கில் நகரில் இருந்துகொண்டு அரசாண்ட
மன்னன் கடலன். அவன் மின்னும் வேல் தழைத்திருக்கும் காட்டில் (போர்க்களத்தில்) தாக்கும் படையானைகளைக் கொன்று வெற்றி
கண்டவன். மா பெருங் கொடையாளி. அவனது
ஊர் விளங்கில் போன்ற அழகு கொண்டவள் தலைவி. அவளது மை தீட்டிய அழகிய கண் கண்ணீர்
விட்டுக் கழுலும்படி விட்டுவிட்டு பொருள் தேடிவரச் செல்கிறீர்களா?
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – பாலை
1
நாள் உலா எழுந்த கோள் வல் உளியம்
ஓங்குசினை இருப்பைத் தீம் பழம் முனையின்,
புல் அளைப் புற்றின் பல் கிளைச் சிதலை
ஒருங்கு முயன்று எடுத்த நனை வாய் நெடுங் கோடு,
இரும்பு ஊது குருகின், இடந்து, இரை தேரும் 5
மண் பக வறந்த ஆங்கண், கண் பொரக்
2
கதிர் தெற, கவிழ்ந்த உலறுதலை நோன் சினை
நெறி அயல் மராஅம் ஏறி, புலம்பு கொள
எறி பருந்து உயவும் என்றூழ் நீள் இடை
3
வெம் முனை அருஞ் சுரம் நீந்திச் சிறந்த 10
செம்மல் உள்ளம் துரத்தலின், கறுத்தோர்
4
ஒளிறு வேல் அழுவம் களிறு படக் கடக்கும்
மா வண் கடலன் விளங்கில் அன்ன, எம்
மை எழில் உண்கண் கலுழ
ஐய! சேறிரோ, அகன்று செய் பொருட்கே? 15
பிரிவு உணர்த்திய தலைமகற்கு, தோழி தலைமகள் குறிப்பறிந்து
வந்து சொல்லியது.
ஆலம்பேரி சாத்தனார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்

No comments:
Post a Comment