Pages

Sunday, 8 May 2016

அகநானூறு Agananuru 79

நில்லாப் பொருட்பிணி


பொருள் தேடச் செல்லும் தலைவன் வழியில் தலைவியை நினைத்துக்கொள்கிறான். தன் நெஞ்சோடு பேசுகிறான்.
1
கொங்கரின் தோள் பதமானது. கை வலிமையானது. ஆண்கள் கல்லுப்பாறையை உடைத்துப் பள்ளம் தோண்டுவர். உளியால் உடைக்கும்போது தீப்பொறி பறக்கும். பாறை துகள்களாகும். இது அவர்களின் கைத்திற வினை. பலநாள் படர்ந்து (சென்று) கல்லை உடைத்துச் செய்த வினை. அந்த வலிமையான பள்ளத்தில் உப்புநீர் ஊறும். கல்நில வழியில் மணி கட்டிய செந்நிறப் பசுமாட்டு மந்தை (சேதா) செல்லும். செந்நிறத்திலுள்ள வன்மையான நிலம் தூள் பறக்கும்படிச் செல்லும். அந்தச் செம்மண் துகள் வானத்தில் ஊன்றித் தோன்றும்.
2
இந்த வழியில் செல்லும் தலைவன் சொல்கிறான். நெஞ்சே, இந்த அகன்ற காட்டில் உனக்குத் துணையாக எப்போதும் நானும் வருவேன் என்று சொல்லாமல், அவளை (தலைவி) நீனைத்துக்கொண்டு வருத்தத்துடன் என்னைப் பிரிந்து சென்றுவிடுகிறாய். நீ வாழ்க.
3
பொருளை, நிலையில்லாப் பொருளை ஈட்டிக்கொண்டு வர, அவளைப் பிரிந்த நெஞ்சே, நீ வாழ்க.
வளைந்த வாயை உடைய பருந்து. பெண்பருந்து. வானத்தில் பறக்கும்போதெல்லாம் கனைக்கும் ஒலியை எழுப்பும். அங்கு வாழும் எயினர் கொடிய வில்லை எடுத்துக்கொண்டு வேட்டைக்காட்டுக்கு, (கோட்சுரம்) செல்வர். துடிப்பறையுடன் செல்வர். (துடி முழக்கம் கேட்டால் பதுங்கியிருக்கும் வேட்டை விலங்குகள் ஓடும். அப்போது வேட்டையாடலாம் அல்லவா?) அப்போது பருந்து நீண்ட ஒலி எழுப்பிப் பிற பருந்துகளை அழைக்கும். (நமக்கும் விருந்து கிடைக்கும் என்று அழைக்கும்) என்னவளைப் பிரிந்துவந்து செல்லும்போது என்னுடன் வராத நெஞ்சே, நீ சொல்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – பாலை
1
தோட் பதன் அமைத்த கருங் கை ஆடவர்
கனை பொறி பிறப்ப நூறி, வினைப் படர்ந்து,
கல்லுறுத்து இயற்றிய வல் உவர்ப் படுவில்,
பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய
வன் புலம் துமியப் போகி, கொங்கர்  5
படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும்
சேதா எடுத்த செந் நிலக் குரூஉத் துகள்
அகல் இரு விசும்பின் ஊன்றித் தோன்றும்
2
நனந்தலை அழுவம், நம்மொடு துணைப்ப,
''வல்லாங்கு வருதும்'' என்னாது, அல்குவர 10
வருந்தினை வாழி, என் நெஞ்சே! இருஞ் சிறை
3
வளை வாய்ப் பருந்தின் வான் கட் பேடை,
ஆடுதொறு கனையும் அவ் வாய்க் கடுந் துடிக்
கொடு வில் எயினர் கோட் சுரம் படர,
நெடு விளி பயிற்றும் நிரம்பா நீள் இடை,         15
கல் பிறங்கு அத்தம் போகி,
நில்லாப் பொருட் பிணிப் பிரிந்த நீயே.

பொருள்வயிற் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
குடவாயிற் கீரத்தனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

ஆண், பெண், பருந்து 

No comments:

Post a Comment