பலர் புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலன்
கபிலனைப் போற்றிய வள்ளல் பாரி சுனையில் பூத்த புதுமலர் மணக்கும் நெற்றி கொண்டவள் தலைவி
தோழி தலைவனை வினவுகிறாள்.
1
பரந்து கிடக்கும் கானம். அங்குத் தாக்கவரும்
சிங்கம் போன்ற ஆளி. ஆளியைக் கண்டு யானை-இனத் தொகுதி நடுங்குகிறது. அஞ்சாதே என்பது போல
ஆண்யானை தன் வலுமை மிக்க கையால் தன் பெண்யானையைத் தழுவிக்கொண்டு அழைத்துச் செல்கிறது.
அந்த ஆண்யானை தோள் (எறுழ்) வலிமை மிக்கது. கண்ணிலிருந்து
ஒழுகும் கடாம் (மதம்) வாயில் பாயும். அது பால்-உணர்வு
கொண்டது. அந்த மதநீரில் வண்டுகள் மொய்க்கின்றன. புள்ளிகளுடன் கூடிய நெற்றியைக் கொண்டது
அந்த யானை-ஒருத்தல்.
2
அங்கே குறவர் வாழும் வீட்டு முற்றம். அந்த
முற்றத்தில் தேன் பிழிந்த நறவுக் கோதுகள். அதன் மேல் முந்தூழ் மலர்கள் கொட்டுகின்றன.
காந்தள் பூக்களின் இதழ்த் துடுப்புகள் ஒடிந்து விழுகின்றன. பூக்களின் நிலை இவ்வாறு
ஆகும்படி வாடைக்காற்று வீசுகிறது. இது பனி பொழியத் தொடங்கும் அற்சிரக் காலம்.
3
பொருள் தேடச் சென்ற இடத்தில் நாம் தனிமையில்
வாடுகிறோமே, அவர்களது ஊரில் அவர்கள் என்ன நிலைக்கு ஆளானார்களோ – என்று எம்மை விட்டுச்
சென்ற சில நாட்களில் சிறிதேனும் நினைத்துப் பார்த்தது உண்டா? ஓங்குமலை நாடனே சொல்லுங்கள்.
தோழி கேட்கிறாள்.
4
உள்ளதை உள்ளபடி வாயில் மொழியும் பாங்கு கொண்டவன்
புலவன் கபிலன். உலகில் உள்ளவர் நாவெல்லாம் பேசும் புகழை உடையவன் அந்தக் கபிலன்.
5
பாரி அரசன் கபிலரோடு வாழ்ந்துவந்தான். பழக்கிய
பறவைகளைக் கொண்டு வயலில் விளைந்த நெற்கதிர்களைக் கொண்டுவந்து சமைத்து, ஆம்பல் மலரைப்
பொரியலாக்கி உண்டு முற்றுகைக் காலத்தில் பாரியும் கபிலனும் வாழ்ந்துவந்தனர். பாரியின்
பறம்புமல்லை முற்றுகை பல ஆண்டுகள் நீடித்தது. எனினும் பாரி ஆள்-இடூஉ என்னும் வீரர்
படையையும், வேந்தர்களின் யானைப் படையையும் ஓடும்படிச் செய்தான். குதிரையில் சென்று
வாளால் போரிட்டு ஓடும்படிச் செய்தான். இந்தப் பாரி சிறந்த கொடையாளி.
6
இந்தப் பாரியின் மலையில் இனிய நீர் ஊறும்
சுனை (பைஞ்சுனை). அதில் ஆம்பல் மலர் பூத்திருக்கும். அந்த ஆம்பல் மலர் போல் மணம் கமழும்
நெற்றியைக் கொண்டவள் தலைவி. அந்தத் தலைவியை நினைத்ததுண்டா என்று தோழி தலைவனை வினவுகிறாள்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – குறிஞ்சி
1
''நனந்தலைக் கானத்து ஆளி அஞ்சி,
இனம் தலைத்தரூஉம் எறுழ் கிளர் முன்பின்,
வரி ஞிமிறு ஆர்க்கும், வாய் புகு, கடாத்து,
பொறி நுதற் பொலிந்த வயக் களிற்று ஒருத்தல்
இரும் பிணர்த் தடக் கையின், ஏமுறத் தழுவ, 5
கடுஞ்சூல் மடப் பிடி நடுங்கும் சாரல்,
2
தேம் பிழி நறவின் குறவர் முன்றில்,
முந்தூழ் ஆய் மலர் உதிர, காந்தள்
நீடு இதழ் நெடுந் துடுப்பு ஒசிய, தண்ணென
வாடை தூக்கும் வருபனி அற்சிரம், 10
3
நம் இல் புலம்பின், தம் ஊர்த் தமியர்
என் ஆகுவர்கொல் அளியர்தாம்?'' என,
எம் விட்டு அகன்ற சில் நாள், சிறிதும்,
உள்ளியும் அறிதிரோ ஓங்குமலைநாட!
4
உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல் இசை 15
வாய்மொழிக் கபிலன் சூழ, சேய் நின்று
5
செழுஞ் செய்ந் நெல்லின் விளைகதிர் கொண்டு,
தடந் தாள் ஆம்பல் மலரொடு கூட்டி,
யாண்டு பல கழிய, வேண்டுவயிற் பிழையாது,
ஆள் இடூஉக் கடந்து, வாள் அமர் உழக்கி, 20
ஏந்துகோட்டு யானை வேந்தர் ஓட்டிய,
கடும் பரிப் புரவிக் கை வண் பாரி
6
தீம் பெரும் பைஞ் சுனைப் பூத்த
தேம் கமழ் புது மலர் நாறும் இவள் நுதலே?
களவுக் காலத்துப் பிரிந்து
வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.
மதுரை நக்கீரனார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்



No comments:
Post a Comment