Pages

Friday, 6 May 2016

அகநானூறு Agananuru 75

ஆள்வினை ஆடவர் பொருள், அருள் அன்று


நினைத்தாலும் உன்னை விட்டுப் பிரியமுடியுமா என்று சொல்லி அவன் அவளைத் தேற்றுகிறான்.
1
ஆண்கள் முயலும் ஆள்வினை என்பது அருள் இல்லாத செயல். என்றாலும் அதுதான் அவர்கள் உள்ளத்தில் ஊறிக்கிடக்கும் பொருள். இந்தப் பொருள் உண்மையில் பொருளற்றது. என்றாலும் அது அவர்களின் உள்ளத்தின் வலிமை. இந்த வலிமையோடு தூங்காமல் இருப்பர்.
ஆள்வினை = பொருள் சேர்க்கும் முயற்சி
2
பொருள் தேடச் செல்வர். வெயிலின் சினம் தவழ்ந்துகொண்டிருக்கும் நெடிய காட்டு வழியில் செல்வர். அந்தக் காட்டில் மரங்கள் கரிந்துபோன குத்துக்கட்டைகளுடன் இருக்கும். அந்தக் காட்டில் மறவர்கள் இருப்பார்கள். அவர்கள் கொல்லும் புலியைப் போல வலிமை மிக்கவர்கள். காலிலே வேண்டும்போது மாட்டிக்கொள்ளும் கழல் அணிந்திருப்பர். அவர்களின் பழமையான ஊரில் இருக்கும் மன்றத்து மரநிழலில் அவர்கள் படுத்து உறங்குவர். பொருள் தேடச் செல்பவர் அவர்களுடன்தான் உறங்கவேண்டும். அது மிக உயர்ந்த மலை. நீரே இல்லாமல் காய்ந்துபோயிருக்கும் மலை. அந்த வழியில் பொருள் தேடச் செல்வாராயின்,
அண்ணல் = உயர்ந்த
ஆம் = நீர்
3
அவரது காதலி நல்ல நெற்றியழகினை உடையவள். குற்றமற்ற உள்ளக் கோட்பாட்டைக் கொண்டவள். பவளம் போன்ற வாயால் அவள் சில சொற்களையே பேசுவாள். முன்னங்கையில் ஒளி திழும் வளையல்களை அணிந்திருப்பாள். சிறந்த அணிகலன்களையும் அணிந்திருப்பாள். முலைகளுக்கு நடுவே முத்தாரம் இருக்கும். காதலனின் மலர்மாலை அங்குதான் குழையும். பொருள் தேடச் சென்றால் அந்த முலையழகின் வீறாப்பு போய்விடுமே, மீட்டுத்தருவார் காதலனை தவிர வேறு யார் உலகில் உள்ளார் என்று காதலன் நினைப்பான்.
4
நீ மழைகாலத்தில் தளிர்க்கும் மாந்தளிர் போன்ற மேனி உடையவள். மென்மையான இடை உடையவள். பருத்த அல்குலில் காசுகள் கோத்த அணிகலன்களைக் கொண்டவள். மென்மையான இயல்பை உடைய சிறுமி. நான் பிரிந்தால் என் பிரிவைப் பற்றிப் புலந்து பேசித் துன்புறுவாய். இப்படி நீ துன்புறும்படி விட்டுவிட்டு உன்னைப் பிரிய நினைப்பேனா? நீ பெறுதற்கு அரிய சிறப்பினை உடையவள் அல்லவா? – இப்படிச் சொல்லி அவன் தன் காதலியைத் தேற்றுகிறான்.
ஈங்கை = ஈனும் தளிர்
ஐது = உள்ளதன் நுணுக்கம் (தொல்காப்பியம்- உரியியல்)
அல்குல் = இடுப்புத் தொடை

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – பாலை
1
"அருள் அன்று ஆக, ஆள்வினை, ஆடவர்
பொருள்" என வலித்த பொருள் அல் காட்சியின்
மைந்து மலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது,
2
எரி சினம் தவழ்ந்த இருங் கடற்று அடைமுதல்
கரி குதிர் மரத்த கான வாழ்க்கை,            5
அடு புலி முன்பின், தொடு கழல் மறவர்
தொன்று இயல் சிறுகுடி மன்று நிழற் படுக்கும்
அண்ணல் நெடு வரை, ஆம் அறப் புலர்ந்த
கல் நெறிப் படர்குவர் ஆயின் நல் நுதல்,
3
செயிர் தீர் கொள்கை, சில் மொழி, துவர் வாய்,            10
அவிர் தொடி முன்கை, ஆய்இழை, மகளிர்
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து,
ஆராக் காதலொடு தாரிடைக் குழையாது
சென்று படு விறற் கவின் உள்ளி, என்றும்
இரங்குநர் அல்லது, பெயர்தந்து, யாவரும்  15
தருநரும் உளரோ, இவ் உலகத்தான்?'' என-
4
மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன
அம் மா மேனி, ஐது அமை நுசுப்பின்;
பல் காசு நிரைத்த, கோடு ஏந்து, அல்குல்;
மெல் இயல் குறுமகள்! புலந்து பல கூறி   20
ஆனா நோயை ஆக, யானே
பிரியச் சூழ்தலும் உண்டோ,
அரிது பெறு சிறப்பின் நின்வயினானே?''

''பொருள்வயிற் பிரிவர்'' என வேறுபட்ட தலைமகட்கு, ''பிரியார்'' எனத் தோழி சொல்லியது.
மதுரைப்போத்தனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

நுசும்பு என்னும் இடை
அல்குல் என்னும் உறுப்பு 

No comments:

Post a Comment