Pages

Friday, 6 May 2016

அகநானூறு Agananuru 74

கோவலர் ஊதும் குழலோசை வருத்துகிறதே


இன்றே வருவார் என்று நீ சொல்லும் சொல்லைக் கேட்டு நான் அமைதி பெறுவேன். ஆனால் நாள்தோறும் மாலையில் கோவலர் ஊதும் குழலோசை கேட்கிறதே. என்ன செய்வேன், என்று தோழியிடம் தலைவி கூறுகிறாள்.

போரில் வெற்றி கண்ட மகிழ்ச்சியில் போர்வீரர்கள் மன்னன் (என் தலைவன்) தாளை வாழ்த்துகின்றனர். மழை பொழிந்து எங்கும் பசுமை காணப்படுகிறது. குருதி நிறத்தில் செந்நிற மூதாய்ப் பூச்சிகள் வழியெங்கும் பரந்து மேய்கின்றன. வெண்ணிறக் களர் மண்ணில் நீர் அரித்துக் கிடக்கும் மணலில் பச்சைநிற முல்லைக்கொடி மென்மையாகப் பூக்கும் புதிய மொட்டுகளை வண்டுகள் அவிழ்க்கின்றன. 

அதன் மணம் கமழும் முல்லை நிலத்தில் கருநிறக் கொம்புகளை உடைய ஆண்மான் தான் விரும்பும் பெண்மானுடன் சேர்ந்து உலாவுகிறது. 

வலவ (பாகனே) 

தேரை ஓட்டுக என்று கடவிக்கொண்டு அவர் இன்றே வருவார். கண்ணில் ததும்பும் பனியைத் தாங்கிக்கொள்க என்று வற்புறுத்துகிறாய். நீ சொல்வதை நம்பி நான் என் நெஞ்சை வற்புறுத்திக் கல்லாக்கிக்கொண்டு இருக்க முயல்கிறேன். 

ஆனால் நாள்தோறும் மாலை வேளையில் கோவலர் ஆனிரைகளுடன் இல்லம் திரும்பும்போது ஊதும் குழலிசை என்னை வருத்தாமல் இருக்க வேண்டுமே!

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – முல்லை

வினை வலம்படுத்த வென்றியொடு மகிழ் சிறந்து,
போர் வல் இளையர் தாள் வலம் வாழ்த்த,
தண் பெயல் பொழிந்த பைதுறு காலை,
குருதி உருவின் ஒண் செம் மூதாய்
பெரு வழி மருங்கில் சிறு பல வரிப்ப, 5
பைங் கொடி முல்லை மென் பதப் புது வீ
வெண் களர் அரிமணல் நன் பல தாஅய்,
வண்டு போது அவிழ்க்கும் தண் கமழ் புறவில்,
கருங் கோட்டு இரலைக் காமர் மடப் பிணை
"திண் தேர் வலவ! கடவு" எனக் கடைஇ,          10
இன்றே வருவர்; ஆன்றிகம் பனி'' என,
வன்புறை இன் சொல் நன் பல பயிற்றும்
நின் வலித்து அமைகுவென் மன்னோ அல்கல்
புன்கண் மாலையொடு பொருந்தி, கொடுங் கோற் 15
கல்லாக் கோவலர் ஊதும்
வல் வாய்ச் சிறு குழல் வருத்தாக்காலே!

தலைமகன் பிரிவின்கண் அழிந்த கிழத்தி வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது.
மதுரைக் கவுணியன் பூதத்தனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

மூதாய் 

No comments:

Post a Comment