Pages

Thursday 5 May 2016

அகநானூறு Agananuru 72

உன்னையும் உன் காதலனையும் கூட்டிவைத்த நானே தவறு செய்திருக்கிறேன்

தொடு


தலைவன் காத்திருப்பதைத் தோழி தலைவிக்குச் சொல்கிறாள்.
1
துணியைக் கிழிப்பது போல இருளைக் கிழித்து வானம் மின்னுகிறது. மழை கொட்டி உடல் நடுங்கும் நள்ளிரவு. கரடி உணவுக்காகக் கறையான் புற்றைக் கிண்டுகிறது. அதிலிருந்து ஈசல்கள் பறக்கின்றன. அது கொல்லன் உலைக்களத்தில் உமிப்பொறி பறப்பது போல் காணப்படுகிறது.
2
அவன் வரும் வழியோ கொடுமையானது. அவன் கடக்கும் ஆறோ நினைத்தாலே நடுங்கவைக்கும் முதலைகளை உடையது. படகு தள்ளும் மூங்கிலை ஊன்றமுடியாத அளவுக்கு ஆற்றில் வெள்ளம் பெருகி வருகிறது. அஞ்சும்படித் தனியே வருகிறோமே என்று எண்ணாமல் அவன் வருகிறான். மேகங்கள் மூடிக்கிடக்கும் மூங்கில் காட்டு மலைப்பிளவு வழியில் வருகிறான். கருவை வயிற்றில் தாங்கிக்கொண்டு இரண்டு உயிருடன் இருக்கும் தன் பெண் புலியின் பசியைப் போக்குவதற்காக, ஆண்புலி யானையைத் தாக்கி இழுத்துக்கொண்டு வருகிறது. பாம்பு உமிழ்ந்த மணி வெளிச்சத்தில் இழுத்துக்கொண்டு வருகிறது. வாளின் கூர்மை போன்ற இடுக்கான பிரிவுப் பாதையில் அவன் வருகிறான். நினைத்தாலே நடுங்கவைக்கும் கல்லுப்பாதையில் வருகிறான். உனக்கு அருள் புரிவதற்காக வருகிறான். கையில் இருக்கும் வேல் ஒன்றே துணையாக அமைய அவன் வருகிறான். அப்படி வரும் அவனும் கொடியவன் இல்லை.
3
அவனுக்கு உன்னைத் தந்தாயே நீயும் கொடியவள் இல்லை. உங்கள் இருவரையும் கூட்டிவைத்த நானே தவறு செய்தவள் ஆவேன். – தோழி இப்படிச் சொல்கிறாள்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை -  குறிஞ்சி
1
இருள் கிழிப்பது போல் மின்னி, வானம்
துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள்,
மின்மினி மொய்த்த முரவு வாய்ப் புற்றம்
பொன் எறி பிதிரின் சுடர வாங்கி,
குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை     5
இரும்பு செய் கொல் எனத் தோன்றும் ஆங்கண்,
2
ஆறே அரு மரபினவே; யாறே
சுட்டுநர்ப் பனிக்கும் சூருடை முதலைய;
கழை மாய் நீத்தம் கல் பொருது இரங்க,
''அஞ்சுவம் தமியம்'' என்னாது, மஞ்சு சுமந்து,             10
ஆடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன்,
ஈர் உயிர்ப் பிணவின் வயவுப் பசி களைஇய,
இருங் களிறு அட்ட பெருஞ் சின உழுவை
நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த
மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும் 15
வாள் நடந்தன்ன வழக்கு அருங் கவலை,
உள்ளுநர் உட்கும் கல் அடர்ச் சிறு நெறி,
அருள் புரி நெஞ்சமொடு எஃகு துணையாக
வந்தோன் கொடியனும் அல்லன்; தந்த
3
நீ தவறு உடையையும் அல்லை; நின்வயின்     20
ஆனா அரும் படர் செய்த
யானே, தோழி! தவறு உடையேனே.

தலைமகன் இரவுக் குறிக்கண் சிறைப்புறத்தானாக, தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம்.
எருமை வெளியனார் மகனார் கடலனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

துடுப்பால் தள்ளும் பரிசல் - படம்
மூங்கில் கோலை ஆற்றுமணலில் ஊன்றித் தள்ளும் பரிசல் - பாடல்

No comments:

Post a Comment