Pages

Saturday 28 May 2016

அகநானூறு Agananuru 102

ஊரார் அலர் தூற்றுவது 
எனக்குத் துன்பம்
அவனுக்கு இன்பம்


அவன் அவளுக்காக இரவு வேளையில் வந்திருப்பதை அறிந்த தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்.

1
தினைக்கதிர் போல வளைந்த கொம்புகளை உடையது உளைமான். வலிமை மிக்க உளைமான் தினைப்புனத்தில் மேய வருகிறது. தினைக்கு உரிய கானவன் கழுது என்னும் மேடைப் பந்தலின் மேல் ஏறிக் காவல் புரிகிறான். அவன் கையால் பிழிந்து பிழிச்சாறு உண்டாக்கினான். அதனை மகிழ்ச்சியோடு உண்டான். அவன் சந்தனக் கட்டையைத் தன் கையால் உரைத்தான். பூசிக்கொண்டான். சாறு பிழிந்ததும், சந்தனம் உரைத்ததுமான தன் கையால் தலைமயிரைக் கோதி உலர்த்திக்கொள்கிறான். அவன் மனைவி கொடிச்சி மலையே எதிரொலிக்கும்படி, குறிஞ்சிப் பண்ணால் பாட்டுப் பாடுகிறாள். யானை தினையை மேய வருகிறது. தினைக் கதிர்களை (குரால்) அது உண்ணவில்லை. பாட்டைக் கேட்டுக்கொண்டு கண் மூடாமல் உறங்குகிறது. – இப்படிப்பட்ட மலைநாட்டுத் தலைவன் அவன்.
2
அவன் (வந்த தலைவன்) மார்பில் சந்தனம் பூசியிருந்தான். அவன் மார்பில் இருக்கும் பூமாலையிலும், தலையில் இருக்கும் கண்ணியிலும் சிறுவண்டுகள் (அரிமிஞிறு) மொய்த்துக்கொண்டிருந்ததன. கையிலே வேல் வைத்திருந்தான். நம் வீட்டுக் காவலாளிகளை ஒதுங்கச் செய்துவிட்டு மெதுவாக வந்தான். வீட்டுக் கதவை அசைத்தான். உள்ளே நுழைந்தான். பெருமூச்சு விட்டுக்கொண்டு என் தோளை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான். இனிய சொற்கள் பலவற்றைப் பேசினான். திரும்பிச் சென்றுவிட்டான். தோழி, இதுதான் நடந்தது.
3
அவன் இன்றும் எதற்காகவோ வந்திருக்கிறான். அவன் எனக்கு எதுவும் தரவில்லை. என்றாலும் ஊர் எங்களைப் பற்றி பேசுகிறது. என் நெற்றி அவனுக்காக ஏங்கிப் பசந்துகிடக்கிறது. ஊரார் பேசுவது அவனுக்கு உவப்பாக இருக்கிறது. எனக்கோ துன்பமாக இருக்கிறது. தோழி என்ன செய்வேன்?

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை –  குறிஞ்சி
1
உளைமான் துப்பின், ஓங்கு தினைப் பெரும் புனத்துக்
கழுதில், கானவன் பிழி மகிழ்ந்து வதிந்தென;
உரைத்த சந்தின் ஊரல் இருங் கதுப்பு
ஐது வரல் அசைவளி ஆற்ற, கை பெயரா,
ஒலியல் வார் மயிர் உளரினள், கொடிச்சி  5
பெரு வரை மருங்கில் குறிஞ்சி பாட;
குரலும் கொள்ளாது, நிலையினும் பெயராது,
படாஅப் பைங் கண் பாடு பெற்று, ஒய்யென
மறம் புகல் மழ களிறு உறங்கும் நாடன்;
2
ஆர மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்ப,             10
தாரன், கண்ணியன், எஃகுடை வலத்தன்,
காவலர் அறிதல் ஓம்பி, பையென
வீழாக் கதவம் அசையினன் புகுதந்து,
உயங்கு படர் அகலம் முயங்கி, தோள் மணந்து,
இன் சொல் அளைஇ, பெயர்ந்தனன் தோழி!                  15
3
இன்று எவன்கொல்லோ கண்டிகும் மற்று அவன்
நல்காமையின் அம்பல் ஆகி,
ஒருங்கு வந்து உவக்கும் பண்பின்
இருஞ் சூழ் ஓதி ஒண் நுதற் பசப்பே?

இரவுக்குறிக்கண் சிறைப்புறமாக, தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது.
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங் கூத்தன்

கி.மு. காலத்துப் பாடல்

உளைமான்

No comments:

Post a Comment