Pages

Saturday, 9 April 2016

நற்றிணை Natrinai 97

பூக்காரி ஒருத்தி மீது காதல் கொண்ட ஒருவன் தன் பாங்கனிடம் பிதற்றுகிறான்.


அழுத்தமாக வெட்டுக் காய விழுப்புண் பட்டு ஆறி வழும்பு (தழும்பு) பட்டிருக்கும் அதே இடத்தில் வேல் வீச்சு பட்டது போல் வலிக்கிறது.

குயில் தன் துணையைத் கூவுவது போலக் குரல் கொடுத்து அவள் பூ விற்றாள்.

அந்தக் குரல் இப்போது என் நினைவில் கொடுமையாக இருக்கிறது.

அப்போது அவள் குரல் இனித்தது.

அந்த இனிய நினைவால் நீர் தெளிந்து ஓடும் ஆறு கூட இப்போது கொடிதாகத் தோன்றுகிறது.

அவளோ இந்த ஆற்றைக் காட்டிலும் கொடியவளாகத் தெரிகிறாள்.

அவள் குரல் அவளை விடக் கொடிதாகத் தெரிகிறது.

“குருக்கத்திப் பூவையும், பித்திகைப் பூவையும் அடுத்தடுத்து வைத்துக் தொடுத்துக் கட்டிய பூ இது. இதனை வாங்குங்களே” என்று கூவினாள்.

“காதல் தெய்வம் மன்மதனின் (மதன்) வெண்மலர்த் தலை போல் இதழுடன் பூத்திருக்கும் பூக்கள் இவை” என்றும் சொல்கிறாள்.

தேன் உண்ணும் வண்டுகள் மொய்த்துக்கொண்டிருக்கும் கூடையில் (வட்டி) பூவை வைத்துக்கொடு திரிகிறாள்.

அவள் தண்டலை உழவன் (பூந்தோட்டக்காரன்) மகள். தனிச் சிறப்புக் கொண்ட ஒரே ஒரு மகள்.

(சொல் பிரிப்புப் பதிவு)
பாடல் 97. முல்லை

அழுந்து படு விழுப் புண் வழும்பு வாய்புலரா
எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்தாங்கு,
பிரிவில புலம்பி நுவலும் குயிலினும்,
தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிதே;
அதனினும் கொடியள் தானே, ''மதனின் 5
துய்த் தலை இதழ பைங் குருக்கத்தியொடு
பித்திகை விரவு மலர் கொள்ளீரோ?'' என
வண்டு சூழ் வட்டியள் திரிதரும்
தண்டலை உழவர் தனி மட மகளே.

பருவம் கண்டு ஆற்றாளாய தலைவி தோழிக்கு உரைத்தது.
மாறன் வழுதி பாடல்


கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

பூக்காரி

2 comments:

  1. அருமையான விளக்கம்

    ReplyDelete
    Replies
    1. பூ விற்றவள் உழவன் மகள்.
      வாங்கியவர் யார்
      நாம் உய்த்து உணர்ந்துகொள்ள வேண்டும்

      Delete