Pages

Friday, 8 April 2016

நற்றிணை Natrinai 95

கொடிச்சி


பெண் ஒருத்தி கழைக்கூத்து ஆடும்போது பார்த்துக்கொண்டிருந்த கொடிச்சி (குறப்பெண்) ஒருத்தியின்மீது காதல் கொண்ட தலைவன் தன் பாங்கனிடம் அவளைப் பற்றிக் கூறுகிறான்.


அவள் ஆடுமகள் (ஆட்டக்காரி)
வளைத்துத் திரித்த வலிமையான கயிற்றின்மீது நடப்பாள். 
அப்போது அந்தக் கயிறு கட்டிய மூங்கில் படுத்து நிமிர்ந்து வருந்தும். 

கையில் இருக்கும் மூங்கிலும் ஆடும். 
மேளம் கொட்டப்படும்.

அதனைப் பார்த்துக் குரங்குக் குட்டி தன் தாய் மந்தியைப் பிடித்துக்கொண்டு தொங்கும். 

அந்தக் குரங்குக் குட்டிக்கு அத்திப்பழம் போல் சிவந்த முகம். 
தலையில் சில மயிர்களே இருக்கும் துய்த்தலை. 
வலிமையான கைகள்.

ஆடும்போது அவள் ஏறியிருக்கும் மூங்கில் பாரத்தால் விசைத்து எழுந்து ஆடும்.

பார்க்கும் குன்று வாழ் குறவர் சிறுவர்கள் அவள் ஆட்டத்துக்குக் கைத்தாளம் கொட்டுவர்.

அந்தச் சிற்றூரில்தான் அந்தக் கொடிச்சி (கொடி போன்றவள், குறமகள்) இருக்கிறாள்.

அந்தக் கொடிச்சியின் கைப்பிடியில் (கை = ஒழுக்கம் - நடந்துகொள்ளும் வாழ்வுப் பாங்கில்) என் நெஞ்சு மாட்டிக்கொண்டது.
பிறரால் அந்த நெஞ்சை விடுவிக்க முடியாது.  

(சொல் பிரிப்புப் பதிவு)
பாடல் 95. குறிஞ்சி

கழை பாடு இரங்க, பல் இயம் கறங்க,
ஆடு மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று,
அதவத் தீம் கனி அன்ன செம் முகத்
துய்த் தலை மந்தி வன் பறழ் தூங்க,
கழைக் கண் இரும் பொறை ஏறி விசைத்து எழுந்து,              5
குறக் குறுமாக்கள் தாளம் கொட்டும் அக்
குன்றகத்ததுவே, குழு மிளைச் சீறூர்;
சீறூரோளே, நாறு மயிர்க் கொடிச்சி;
கொடிச்சி கையகத்ததுவே, பிறர்
விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே.  10

தலைமகன் பாங்கற்கு, ''இவ்விடத்து இத்தன்மைத்து'' என உரைத்தது.
கோட்டம்பலவனார் பாடல்

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

கழைக்கூத்து
கயிறூர் பாணி
கயிற்று நடனம்
Rope dance

No comments:

Post a Comment