Pages

Tuesday 5 April 2016

நற்றிணை Natrinai 89

அழிதுளி | பெருமழை


நீயும் நானும் தனியே புலம்பும்படி வாடைக்காற்று வீசுகிறது. மாலைக் காலமும் வந்துவிட்டது. தோழி! என்ன செய்யலாம்? – தலைவியும் தோழியும் இவ்வாறு உரையாடிக்கொள்கின்றனர்.

1

கீழைக் காற்று வீசி வானத்தில் செறிந்துகொண்டது (நின்றுவிட்டது). திரை பிதிர்ந்து பொங்கும் நுரை போல, வானத்து முகடுகளில் விருப்பத்துடன் ஏறி, சூலுற்ற மழைமேகம் பெருமழை பொழிந்த கடைசி நாளைத் தாண்டிவிட்டது.

2

பனிப் பருவம் தொடங்கியது. உடலில் மயிர் கொண்டுள்ள காய் உழுந்து. உழுந்துச் செடியின் இலை உதிரும்படி வாடை வீசுகிறது. அவர் காதலின்பம் நல்காத காலத்தில் துன்பறுத்திக்கொடு வாடை வீசுகிறது.

3

மிகப் பெரிய யானை கொட்டாவி விடுவது போன்று வீசுகிறது. அத்துடன் மாலையும் வந்துவிட்டது. இந்த நிலையில் அவர் இல்லாமல் தனிமையில் இருக்கிறோம் (புலம்பு).
 
பாடல் (சொல் பிரிப்புப் பதிவு) 89. முல்லை

1
கொண்டல் ஆற்றி விண்தலைச் செறீஇயர்,
திரைப் பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி,
நிரைத்து நிறை கொண்ட கமஞ் சூல் மா மழை
அழி துளி கழிப்பிய வழி பெயற் கடை நாள்,
2
இரும் பனிப் பருவத்த மயிர்க் காய் உழுந்தின் 5
அகல் இலை அகல வீசி, அகலாது
அல்கலும் அலைக்கும் நல்கா வாடை,
3
பரும யானை அயா உயிர்த்தாஅங்கு,
இன்னும் வருமே தோழி! வாரா
வன்கணாளரோடு இயைந்த  10
புன்கண் மாலையும் புலம்பும் முந்துறுத்தே!

''பொருள் முற்றி மறுத்தந்தான்'' எனக் கேட்ட தோழி தலைவிக்கு உரைத்தது.
இளம் புல்லூர்க் காவிதி பாடல்

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

யானை அயா உயிர்த்தல்
யானை கொட்டாவி விடுதல்

No comments:

Post a Comment