Pages

Friday, 27 November 2015

பரிபாடல் Paripadal 8

திருப்பரங்குன்றத்துத் திருவிழா இந்தப் பாடலில் சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ளது. முருகன் பெருமைகள் முன்வைக்கப்படுகின்றன. காதலர் திளைப்பு ஊடலும் கூடலுமாகிய உரையாடல் முதலான செய்திகள் இதில் ஊடுருவி மணக்கிறன்றன. பாடலில் உள்ள தமிழ் இதில் பறிந்து கிடக்கிறது.
மாவிளக்கு படையல்
திருப்பரங்குன்றத்தில் இத்தகைய படையல் திருவிழா நடைபெற்றது.
1
திருமால், சிவன், பிரமன், பதின்மர். இருவர், மருத்துவர் இருவர், நூலோர் எண்மர். நாதர் பதினொருவர், திசைக்காவலர், - எல்லாரும், பிற தெய்வங்களும், தேவர்களும், மண்ணுலக மக்களாகிய அவுணரும், தவ-முனிவர்களும் ஒன்று திரண்டு உனக்குப் பற்றுக்காடாக, உனது பற்றுக்கோடாக, உன் பொருட்டு உன்முன் நிற்கின்றனர்.
திருமால் – மண்ணுலகில் துளாய்மாலைச் செல்வம் படைத்தவன். கருடன் பறவையைக் கொடியாகக் கொண்டிருப்பவன்.
சிவன் – புங்கவம் என்னும் காளைமாட்டின்மேல் செல்பவன்.
பிரமன் – மலரின் மேல் இருப்பவன். மூவருக்கும் முதல்வன் எனப் போற்றப்படுபவன்.  
பதின்மர் - பிரமனிடம் தோன்றி உலகின் இருளை நீக்கும் 10 பேர்.
இருவர் – இருள் நீக்கும் பதின்மருக்குத் துணைபுரியும் 2 பேர் (ஞாயிறு, திங்கள்)
மருத்துவர் - படைக்கப்பட்ட உயிரினங்களுக்கு மருத்துவம் பார்க்கும் 2 பேர்
படைப்புக்கலை நூலில் வல்லவராய்த் தொழில் புரியும் 8 பேர்
நாதர் 11 பேர் - திருவாதிரை நாளுக்கு உரிய முதல்வன் சிவன். அவனது நாத ஒலியாய் விளங்குபவர் நாதர். இந்த நாதர் 11 பேர். 
திசைக்காவலர் – 8 திக்குப்பாலகர்.
தவமுதல்வர் – யாவரும் விரும்பும் முதுமொழி வல்லுநர், விழுமிய தவம் இயற்றியவர்கள்.
2
திருப்பரங்குன்றமானது இமயமலை போல் மதிக்கும் பெருமை மிக்கது.
இமயமலையின் மதிக்கப்படும் பெருமை உன்னைப் பெற்றெடுத்த தாமரைக்கே உண்டு.
அந்தத் தாமரை மின்னொளி வீசும் இதழ்களைக் கொண்டது.
இமயத்தில் பூத்திருக்கும் பொய்கையானது இங்குப் பரங்குன்றில் இருக்கும் பொய்கை போன்றது.
இது உன் குன்றில் அருவி கொட்டும் சுனையாக உள்ளது.
3
முருக!
நீ முதல்வன்.
உன் யானை முழக்கம் கேட்டு கார்மேகம் எதிரொலியாக இடிமுழக்கம் செய்கிறது.
அதனைக் கேட்ட உன் கோழி குன்றே அதிரும்படிக் கூவுகிறது.
இதனைக் கேட்டதும் உன் மதயானை மீண்டும் முழங்குகிறது.
இது எதிர்குதிர் ஒலி.
இது உன் மலைக்குகையில் அதிரும் ஒலி.  
4
ஏழிசைப் பண்ணும், ஐந்திசைப் பண்ணும் கேட்பது போல, கூட்டம் கூட்டமாக வந்து மொய்க்கும் வண்டும் மிஞிறும் இன்னிசை எழுப்புகின்றன.
அந்த இசையால் சுனையில் உள்ள பூக்கள் மலர்கின்றன.
கொன்றைமலரானது கொடிபோல் பூத்துத் தொங்குகிறது.
காந்தள் பூ தன் வாயை விரிக்கிறது.
இந்த மலர்கள் மன்றல்-மணத்தை வீசுகின்றன.
அந்த மலர்மணத்தை வாங்கிக்கொண்டு தென்றல் அசைகிறது.
இது கூடல் நகரத்தில் உள்ள உன் குன்றத்தின் செம்மாப்பு.
5
கிரவுஞ்சமலைக் குன்றத்தை உடைத்துவிட்டு மின்னும் வேலை உடையவனே!
கூடல் மதுரையில் மணமுரசம் கேட்கும்.
காற்றில் முழங்கும் கடலலை போல கேட்கும்.
கடலில் நீரை முகந்து செல்லும் புயல் காற்றுப் போல மணமுரசம் முழங்கும்.
மேகம் இடி முழங்குவது போல ஒலிக்கும்.
மேகத்தின் இடி மதுரை மணவொலிக்கு எதிரொலியாக இருக்கும்.
இந்திரன் வில்லைப் போல உன் குன்றத்தில் வானவில் வந்து இறங்கும். – இப்படிப்பட்டது உன் குன்று. 
6
வண்டினத் தொகுதி பூவுக்குப் பூ தூது கொண்டுசெல்லும்.
இதன் ஒலி மதுரை மூதூர் மதில்களில் மோதி எதிரொலிக்கும்.
அங்குள்ள மகளிர் மாவடு போன்ற கண், மாந்தளிர் போன்ற மேனி, அகன்ற மெல்லிய மார்பகத் தோள், கையில் சிறிய வளையல் – அகியவற்றைக் கொண்டவர்கள்.
அவர்கள் காமம் நுகர்வர்.
நுகர நுகர நிறைவடையாமல் நுகர்வர்.
பொழில்-பூங்காப் பாய்விரிப்பில் நுகர்வர்.
மலைப்பகுதியில் வரையறை இல்லாமல் நுகர்வர்.
முடிவில்லாமல் நுகர்வர்.
முற்றுப்புள்ளி இல்லாமல் நுகர்வர்.
அடிமை மகளிர் மைந்தரின் மலர்ந்த மார்பை அமுக்கிக்கொண்டு (ஞெமல்) கிடப்பர்.
மகன்றில் பறவை அமுக்கிக்கொண்டு கிடப்பது போலக் கிடப்பர்.
இது விடிவில்லாத மகிழ்ச்சி.
இப்படி மகிழும் சிறப்பினை உடையது நின் குன்றம். 
7
இப்படி மகிழும்போது நல்லவள் ஒருத்தி ஊடினாள்.
இனி யாரையாவது நாறச்செய்.
அங்கே குளுமையான மலர்க்கண்களோடு விளையாடலாம்.
நகைப்பு மலர்களையும் பரிமாறிக்கொள்ளலாம்.
மாலை மாற்றி மாலைக்கு மாலை பரிமாறிக்கொள்ளலாம்.
அவர்கள் காலையில் போய்விட்டு மாலையில் வா என அனுப்பிவைப்பர் – என்றாள் தலைவி
8
தலைவன் தலைவியிடம் கெஞ்சுகிறான்.
இனி அப்படிச் சொல்லாதே.
வையை மணல், வையைப் பொழில், பனி பொழியும் குன்றச் சாரல் போன்ற இடங்களைப் பார்ப்பவன் நான் இல்லை.
என்மீது துனி-சினம் கொள்ளாதே.
நீ மலரைத் தின்னும் கண் கொண்டவள் ஆயிற்றே.
சொல்லால் வேறுபடுத்தாதே.
உன் கனிந்த மலர்க் கண்ணில் வேட்கை மணச் சீப்பு கமழத்தொடங்கினால் இருவருக்கும் அது இனிமை தராது.
9
தோழி இருவருக்கும் இடையே உள்ள பிணக்கைத் தீர்த்துவைக்க இவ்வாறெல்லாம் கூறுகிறாள்.
உன் தலைமேல் கைவைத்துச் சத்தியம் செய் என்கிறாள்.
தோழி சொல்கிறாள்
ஏல!
நான் சொல்கிறபடி செய்.
சான்றாண்மை மிக்கவர்வர்கள் பெற்றெடுத்த மகனே!
இவள் தன் தாய்க்கு ஒரே ஒரு பெண்.
தலைவன் சொல்கிறான்
இருண்ட மை தீட்டிய கண்ணும், அணிகலன்களும் கொண்டவளே!
பெற்ற தாய்க்கு இவள் அரிய பெண்ணோ இல்லையோ எனக்குத் தெரியாது.
இதோ! சூள் (சத்தியம்) செய்கிறேன்.
வெள்ளம் வரும் வையை மணலைத் தொட்டுச் சூளுரைக்கிறேன்.
மணவேள் முருகன் பரங்குன்றத்து அடிமண்ணைத் தொட்டுச் சூளுரைக்கிறேன்.
தோழி சொல்கிறாள்
வையை மணல் உன் மகளிரோடு நீ உறவாடிய மணலாயிற்றே!
முருகன் மலையைத் தொட்டால் ஏழுலகையும் காப்பாற்றும் முருகள் உன்னைத் துன்புறுத்தாமல் காப்பாற்றிவிடுவான்.
அவன் வேல், அவன் மயில், அவன் வேல்நிழலை நோக்கியிருக்கும் அறவர் முதலான யாரும் உன்னைத் துன்புறுத்த மாட்டார்கள்.
எனவே இவர்கள் மேல் வைத்துச் சூளுரைத்தால் ஏற்பதற்கில்லை. 
ஏலா!
முருகன் மனைவி குறமகள் வள்ளிமேல் வைத்துச் சூளுரை செய்
10
தலைவன் கூறுகிறான்.
யாரைப் பிரியவேண்டும்?
யாரிடம் வரவேண்டும்.
யாரை வினவவேண்டும்?
என்ன சொல்லவேண்டும்?
நீயே சொல்லிவிடு.
நீர்மை (ஒழுங்கு) மிக்க சூள் என்று எதனைச் சொல்கிறாய்?
அணிகல மகளே!
குளத்தில் பூத்திருக்கு நெய்தல் மலரின் இதழ் போன்ற கண்களை உடையவளே!
ஒளிரும் நெற்றி கொண்டவளே!
முல்லைப் பூவை வென்று முத்துப் போல ஒளிரும் பற்களைக் கொண்டவளே!
நாம் பேசிக்கொள்வது வெறும் கனவும் அன்று. நனவும் அன்று.
நாம் உரையாடியவை எல்லாமே அப்படி இருக்கட்டும்.
அவள் துனித்திருக்கும் பிணக்கால் நான் படும் துயரத்தைப் போக்கு.
அதற்காக ஏதாவது சொல்.
உன் சொற்கள் என்னைச் சுடுகின்றன.
எல்லாவற்றையும் விட்டுவிடுவோம். (இறை).
பொறுத்துக்கொள் (ஆன்றிசின்).
நாம் தண்பரங்குன்றத்து முருகன் திருவடிகளைத் தொழுது அவன் புகழைப் பறைசாற்றுவோம்.
மலர்களைத் தூவுவோம்.
பொங்கலிட்டுப் படைப்போம் (அவி ஊட்டுதும்).
அவன் கிணை முழக்கம் கேட்டு எழுச்சி பெறுவோம்.  
11
தோழி சொல்கிறாள்.
ஏடா! அணிமகளே!
நீ சென்று அவளிடம் சொல் – என்கிறாய்.
அந்த வேண்டுகோளை நான் பெற்றேன்.
யாருக்காகவும் பொய் சொல்லாமல் சூள் செய்யும் அவளைப் (தலைவியைப்) பார்.
பருவம் காரணமாக பலமுறை நீ பிறரிடம் சென்றிருக்கிறாய்.
போகட்டும். உன்னை அவள் தழுவ விரும்புகிறாள்.
அருளும் பக்கத்தில் இருக்கிறாள்.
வளையல் அணிந்த தன் கைகளால் முருகன் கோயில் மணியை அசைத்து அடிக்கிறாள். 

எருமை இருந்தோட்டி = எருமை போல் இருண்டு கிடக்கும் தோட்டிமலை (தொட்டபெட்டா)
எள் ஈயும் காளை = தொட்டபெட்டா மலையை ஏளனப்படுத்தக்கூடியவனாக நிமிர்ந்து நிற்கும் காளை போன்ற தலைவன்.
செருவம் செயல் = மார்போடு தழுவிப் போரிடல் 
12
மலைக்காற்று பட்டு மழை பொழிய மலர் பூக்கும் பொழில் மரக் கிளைகளில் பறிக்கப் பறிக்கக் குறையாத மலர்கள்.
அந்த மலர்கள் விழுந்து சேறாகிய பொய்கை.
வழியில் மருதமரம்.
மருதமரத்தடியில் மணல்வெளி.
முருகனடியார் அந்த மணல்வெளியில் முருகனுக்கு விழா (சாறு) எடுத்தனர். 

வளி = காற்று
தளி = மழை
13
சந்தனப் புகை, சாம்பிராணிப் புகை (வீறுபடு புகை), வழியில் செல்லும்போது காற்றில் அவியாத மாவிளக்கு, மணம் கமழும் பூ, முழவம் முழங்கும் இசை, மணி, கையில் கட்டும் காப்புக்கயிறு, தோகைமயில் (ஆண்மயில்), வேல் (குடாரி)பிணிமுகம் (பெண்மயில்) – இவை உள்ளிட்ட பிறவற்றையும் படையலுக்காக ஏந்திக்கொண்டு சென்றனர்.
14
பலரும் பலவாறு முருகனிடம் வேண்டிக்கொண்டனர்.
·         கனவில் கண்டதெல்லாம் கைவரப்பெற்று நனவாகவேண்டும்.
·         நனவில் வையையில் வெள்ளம் பெருகவேண்டும்.
·         வயிற்றில் கரு உண்டாகிப் பிள்ளை பிறக்க வேண்டும்.
·         செய்யும் தொழில் சிறக்க வேண்டும்.
·         வியக்கத்தக்க வகையில் போரில் வெற்றி பெறவேண்டும்.
இப்படி வேண்டிக்கொண்டு பாடியவர்களின் பாணிச்சீரும் (வாய்பாட்டு இசையும்), ஆடுவாரின் தாள இசையும் மஞ்சு விளையாடும் அவன் மலையில் ஓய்வுறக்கம் இல்லாமல் ஒலித்துக்கொண்டே இருந்தது.  
15
மைந்தரும் மகளிரும் கலந்து மகிழ்ந்து திளைத்தனர்.
பாவையர் சுனையில் பாய்ந்து எழுந்து மகிழ்ந்தனர்.
அப்போது அவர்களின் கண், முகம், கால்-பாதம் ஆகியவை அந்தச் சுனையில் பூத்திருக்கும் செந்தாமரை போல் அழகுடன் திகழ்ந்தன.
தோள் பொன்-தாமரை போல் பொலிவுற்றிருந்தது.
கையும் கொங்கையும் தாமரை மொட்டுப் போல் காணப்பட்டன.
வாய் ஆம்பல் போல் காணப்பட்டது.
சுனையில் பூத்திருக்கும் நீர்த்தாமரையும், ஆற்றில் பூத்திருக்கும் புனல்-தாமரையும் நீராடுகையில் இடம்மாறிப் போயின.
கூரிய பல்வரிசையும், குவிந்த முலைப்பூணும் கொண்ட மகளிரும், மாரனாகிய மனமதனைப் போன்ற மைந்தரும் மார்புறத் தழுவி இன்புற்றனர்.
அரிவையர் வாயில் ஊறும் அமிர்த-பானத்தை உரிமை பூண்ட மைந்தர் உண்டு அமிழ்தம் என்றனர்.
மைந்தரின் மார்வத்தில் (மார்பகத்த்தில்) செந்தளிர் போன்ற மேனியர் திளைத்துத் தன் ஆசையோட்டத் துன்பத்தைப் (செல்லல்) போக்கிக்கொண்டனர்.
16
என்றெல்லாம் உடம்பில் உணர்வு மிக்க காதலரும், அலாதவர்களும் ஒன்றாகத் திரண்டு கடம்பம்பூ விரும்பும் முருகன் கோயிலைப் பேணி வழிபட்டனர்.
அவனைத் தொண்டையில் நஞ்சு கொண்ட பெருமானுக்கு மாசில்லா உமை பெற்றுத் தந்த மகன் என்றனர்.
அவனுக்கு ஊற்றுநீர்ச் செல்வ-வளம் நிலைபெற்றிருக்க வேண்டும். புழுதிமண் பறக்கும்படி வானம் பொய்த்தாலும் ஊற்றுநீர் வளம் பெருகவேண்டும். தண்பரங்குன்றம் தழையவேண்டும். – இப்படி வாழ்த்தி மகிழ்கின்றனர்.


பொருள் - கடவுள் வாழ்த்து, செவ்வேள்
பாட்டு - நல்லந்துவனார்
இசை - மருத்துவன் நல்லச்சுதனார்
பண் - பாலையாழ்

திருப்பரங்குன்ற அருவி
1
மண்மிசை அவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப்
புள்மிசைக் கொடியோனும்புங்கவம் ஊர்வோனும்,
மலர்மிசை முதல்வனும்மற்று அவனிடைத் தோன்றி
உலகு இருள் அகற்றிய பதின்மரும்இருவரும்,
மருந்து உரை இருவரும்திருந்து நூல் எண்மரும்,               5
ஆதிரை முதல்வனின் கிளந்த
நாதர் பன்னொருவரும்நன் திசை காப்போரும்,
யாவரும்பிறரும்அமரரும்அவுணரும்,
மேஅரு முதுமொழி விழுத் தவ முதல்வரும்---
பற்றாகின்றுநின் காரணமாக;  10
2
பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும்.
இமயக் குன்றினில் சிறந்து
நின் ஈன்ற நிரை இதழ்த் தாமரை
மின் ஈன்ற விளங்கு இணர் ஊழா
ஒருநிலைப் பொய்கையோடு ஒக்கும்--- நின் குன்றின்       15
அருவி தாழ் மாலைச் சுனை.
3
முதல்வநின் யானை முழக்கம் கேட்ட
கதியிற்றே காரின் குரல்.
குரல் கேட்ட கோழி குன்று அதிரக் கூவ,
மத நனி வாரணம் மாறுமாறு அதிர்ப்ப,             20
எதிர்குதிர் ஆகின்று அதிர்ப்புமலை முழை.
4
ஏழ் புழை ஐம் புழை யாழ் இசை கேழ்த்து அன்னஇனம்
வீழ் தும்பி வண்டொடு மிஞிறு ஆர்ப்பசுனை மலர,
கொன்றை கொடி இணர் ஊழ்ப்பகொடி மலர்
மன்றல மலரமலர் காந்தள் வாய் நாற,          25
நன்று அவிழ் பல் மலர் நாறநறை பனிப்ப,
தென்றல் அசைவரூஉம் செம்மற்றே-- அம்மநின்
குன்றத்தான் கூடல் வரவு.
5
குன்றம் உடைத்த ஒளிர் வேலோய்கூடல்
மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழ,      30
காலொடு மயங்கிய கலிழ் கடலென,
மால் கடல் குடிக்கும் மழைக் குரலென,
ஏறு அதிர்க்கும் இந்திரன் இரும் உருமென,
மன்றல் அதிரதிர மாறுமாறு அதிர்க்கும் --நின்
குன்றம் குமுறிய உரை.  35
6
'தூது ஏய வண்டின் தொழுதி முரல்வு அவர்
காதல் மூதூர் மதில் கம்பலைத்தன்று;
வடு வகிர் வென்ற கண்மாந் தளிர் மேனி,
நெடு மென் பணைத் தோள்குறுந் தொடிமகளிர்
ஆராக் காமம்ஆர் பொழிற் பாயல்,        40
வரையகத்துஇயைக்கும் வரையா நுகர்ச்சி;
முடியா நுகர்ச்சி முற்றாக் காதல்,
அடியோர் மைந்தர் அகலத்து அகலா
அலர் ஞெமல் மகன்றில் நன்னர்ப் புணர்ச்சி,
புலரா மகிழ்மறப்பு அறியாது நல்கும்               45
சிறப்பிற்றே---தண் பரங்குன்று.'
7
'இனிமன்னும் ஏதிலர் நாறுதிஆண்டுப்
பனி மலர்க் கண்ணாரோடு ஆட--நகை மலர்
மாலைக்கு மாலை வரூஉம்வரை சூள் நில்--
காலைப் போய் மாலை வரவு.'   50
8
'இனி மணல் வையை இரும் பொழிலும்குன்றப்
பனி பொழி சாரலும்பார்ப்பாரும்;....
துனியல்மலருண்கண்சொல் வேறுநாற்றம்
கனியின் மலரின் மலிர் கால் சீப்பு இன்னது;
துனியல் நனி 'நீ நின் சூள்.'              55
9
'என் பாணி நில் நில்---எலாஅ!--பாணி நீநின் சூள்;
சான்றாளர் ஈன்ற தகாஅத் தகாஅ மகாஅன்!--
ஈன்றாட்கு ஒரு பெண்இவள்.
"இருள் மை ஈர் உண் கண் இலங்கு இழை ஈன்றாட்கு
அரியளோஆவது அறிந்திலேன்ஈதா;           60
வரு புனல் வையை மணல் தொட்டேன்தரு மண வேள்
தண் பரங்குன்றத்து அடி தொட்டேன்என்பாய்;
கேளிர் மணலின் கெழுவும் இதுவோ?
ஏழ் உலகும் ஆளி திரு வரைவேல் அன்பு அளிதோ?
என்னை அருளி அருள் முருகு சூள் சூளின்,   65
நின்னை அருள் இல் அணங்கான் மெய் வேல் தின்னும்;
விறல் வெய்யோன் ஊர் மயில்வேல் நிழல்நோக்கி;
அறவர் அடி தொடினும்ஆங்கு அவை சூளேல்;
குறவன் மகள் ஆணை கூறு ஏலாகூறேல்;
ஐயசூளின்அடி தொடு குன்றொடு      70
வையைக்குத் தக்க மணல் சீர் சூள் கூறல்!'
10
யார் பிரியயார் வரயார் வினவயார் செப்பு?
'நீர் உரைசெய் நீர்மை இல் சூள் என்றி,' நேரிழாய்!
கய வாய் நெய்தல் அலர்கமழ்முகை மண நகை
நயவரு நறவு இதழ்மதர் உண்கண்வாள் நுதல்;    75
முகை முல்லை வென்றுஎழில் முத்து ஏய்க்கும் வெண் பல்____
நகை சான்ற கனவு அன்றுநனவு அன்று___ நவின்றதை:
இடு துனி கை ஆறா என்துயர் கூரச்
சுடும்இறைஆற்றிசின்அடி சேர்ந்துசாற்றுமின்_____
மிக ஏற்றுதும் மலர்ஊட்டுதும் அவி, 80
கேட்டுதும் பாணிஎழுதும் கிணை_____முருகன்
தாள் தொழு தண் பரங்குன்று!
11
'தெரி இழாய் செல்க!' என்றாய்எல்லாயாம் பெற்றேம்,
ஒருவர்க்கும் பொய்யா நின் வாய் இல் சூள் வௌவல்;
பருவத்துப் பல் மாண் நீ சேறவின் காண்டை____     85
எருமை இருத் தோட்டி எள்ளீயும் காளை
செருவம் செயற்கு என்னை முன்னைதன் சென்னி,
அருள்வயினான்தூங்கு மணி கையால் தாக்கி,
நிரைவளை ஆற்றுஇருஞ் சூள்,
திருப்பரங்குன்றம் பொய்கை 
12
வளி பொரு சேண் சிமை வரையகத்தால்       90
தளி பெருகும் தண் சினைய
பொழில் கொளக் குறையா மலர,
குளிர் பொய்கை அளறு நிறைய,
மருதம் நளி மணல் ஞெமர்ந்த
நனி மலர்ப் பெரு வழி,       95
சீறடியவர் சாறு கொள எழுந்து;
13
வேறுபடு சாந்தமும்வீறுபடு புகையும்,
ஆறு செல் வளியின் அவியா விளக்கமும்,
நாறு கமழ் வீயும்கூறும் இசை முழவமும்,
மணியும்கயிறும்மயிலும்குடாரியும்,       100
பிணிமுகம்உளப்படப் பிறவும்ஏந்தி;
அரு வரைச் சேராத் தொழுநர்,
14
'கனவின் தொட்டது கை பிழையாகாது
நனவின் சேஎப்ப நின் நளி புனல் வையை
வரு புனல் அணிக என வரம் கொள்வோரும்,           105
'கரு வயிறு உறுக எனக் கடம்படுவோரும்,
'செய் பொருள் வாய்க்க எனச் செவி சார்த்துவோரும்,
' அமர் அடுக என அருச்சிப்போரும்,
பாடுவார் பாணிச் சீரும்ஆடுவார் அரங்கத் தாளமும்,
மஞ்சு ஆடு மலை முழக்கும்,     110
துஞ்சாக் கம்பலை______
15
பைஞ் சுனைப் பாஅய் எழு பாவையர்
ஆய் இதழ் உண்கண் அலர் முகத் தாமரை,
தாட் தாமரைதோட்தமனியக் கய மலர்,
எம் கைப் பதுமம்கொங்கைக் கய முகை,      115
செவ் வாய் ஆம்பல் செல் நீர்த் தாமரை,
புனற் தாமரையொடுபுலம் வேறுபாடுறாக்
கூர் ஏயிற்றார் குவிமுலைப் பூணொடு,
மாரன் ஒப்பார் மார்பு அணி கலவி;
அரிவையர் அமிர்த பானம்            120
உரிமை மாக்கள் உவகை அமிர்து உய்ப்ப;
மைந்தர் மார்வம் வழி வந்த,
செந் தளிர் மேனியார்செல்லல் தீர்ப்ப;
16
என ஆங்கு,
உடம்புணர் காதலரும் அல்லாரும் கூடி,         125
கடம்பு அமர் செல்வன் கடி நகர் பேண____
மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த____
நெறி நீர் அருவி அசும்பு உறு செல்வம்,
மண் பரிய வானம் வறப்பினும்மன்னுகமா,
தண் பரங்குன்றம்நினக்கு.          130



1 comment:

  1. கார்த்திகை நாளன்று அருமையான காலச்சுவடுகளை அற்புதமாக தந்தீர்கள். மிக்க நன்றி. ஐயா! அரிது அரிது இதனினும் சிறந்த கட்டுரைக் காணுதல் அரிது. எமது தலை தாழ்ந்த வணக்கங்கள்

    ReplyDelete