Pages

Tuesday 20 October 2015

ஐங்குறுநூறு AinguruNuru 31-40

தோழிக்குரைத்த பத்து

மருதம்

அம்ம வாழி தோழி என்று தோழியை விளித்துத், தலைவி தன் கணவன் பிற மகளிருடன் வாழ்வதைச் சொல்லி அங்கலாய்த்துக் கொள்ளும் பாடல்கள் இவை.
அவன் மகிழ்நன் (மகிழ்ச்சியில் திளைப்பவன்) ஆகிவிட்டான்.
அவன் ஊரன் (ஊருக்கு உரியவன்) ஆகிவிட்டான்.

ஐங்குறுநூறு நான்காம் பத்து
பாடல் – 31-40
தோழிக்குரைத்த பத்து
புலவர் – ஓரம்போகியார்
திணை – மருதம்

பாடல் சொல் பிரிப்புப்பதிவு

31          

அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
கடன் அன்று என்னும் கொல்லோ நம் ஊர்
முடம் முதிர் மருதத்துப் பெருந் துறை
உடன் ஆடு ஆயமோடு உற்ற சூளே?


முன் ஒரு நாள் தன்னோடு புதுப்புனல் ஆடுழி, 
'இனிப் புறத்தொழுக்கம் விரும்பேன்' 
என ஆயத்தாரோடு சூளுற்ற தலைமகன் 
பின்பும் பரத்தையரோடு புனலாடத் தொடங்குகின்றான் 
என்பது கேட்ட தலைமகள், 
அவன் உழையர் கேட்ப, 
தோழிக்குச் சொல்லியது.


தோழி! கேள் (வாழ்க). 
நம் ஊரில் முடம் பட்டு முதிர்ந்திருக்கும் மருதமரத்து 
ஆற்றுநீர்த் துறையில் 
நம்மோடு நீராடும் மகளிர் கூட்டத்திற்கு நடுவே 
‘உன்னைத் தவிர வேறொருத்தியை விரும்பமாட்டேன்’ 
என்று சூளுரை கூறினானே! 
அந்தச் சொல்லைக் காப்பாற்றுவது 
அவனுக்குக் கடமை இல்லை போலும்!

தீ உறு மெழுகு உருகுதல்
மனம் உருகுதலுக்கு உவமை

32          

அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
ஒரு நாள் நம் இல் வந்ததற்கு, எழு நாள்
அழுப என்ப, அவன் பெண்டிர்
தீ உறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே.


வாயில் வேண்டிப் புகுந்தார் கேட்பத் 
தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 2


தோழி! கேள்! 
அவன் ஒரு நாள்தான் நம் இல்லம் வந்தான். 
மற்ற நாளெல்லாம் அவன் விரும்பிய பெண்களோடுதான் வாழ்கிறான். அப்படி இருந்தும் அவன் பெண்கள் (பரத்தையர்) 
தீயில் பட்ட மெழுகு போல 
ஏழு நாள் (பல நாள்) அழுகின்றனர் 
என்று பேசிக்கொள்கிறார்களே.

33          

அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
மருது உயர்ந்து ஓங்கிய விரி பூம் பெருந் துறை,
பெண்டிரொடு ஆடும் என்ப தன்
தண் தார் அகலம் தலைத்தலைக் கொளவே.


இதுவும் அது. 3


தோழி, வாழி!  
மருதமரம் ஓங்கியிருக்கும் ஆற்றுத் துறையில் 
மகளிர் பலரோடு அவன் நீராடுகிறான் என்கின்றனர். 
அவள் கொஞ்ச நேரம், இவள் கொஞ்ச நேரம் என்று 
மாலை அணிந்திருக்கும் அவன் மார்பைத் தழுவிக்கொள்கிறார்களாம்.

34          

அம்ம வாழி, தோழி! நம் ஊர்ப்
பொய்கைப் பூத்த, புழைக் கால் ஆம்பல்
தாது ஏர் வண்ணம் கொண்டன
ஏதிலாளர்க்குப் பசந்த என் கண்ணே.


இதுவும் அது. 4


தோழி, வாழி! 
அவர் ஏதிலாளர் (உறவுக்காரர் அல்லாதவர்) ஆகிவிட்டார். 
அவரைப் பார்க்கவேண்டும் என்று என் கண் தேடுகிறது. 
பசபசக்கிறது. 
நம் ஊரில் பூத்திருக்கும் ஆம்பல் பூவில் உள்ள 
மகரந்தப் பொடிகளின் வண்ணம் கொண்டு சோர்ந்து கிடக்கின்றன. 
ஆம்பல் மலர் போல் அழகுடன் திகழ்திருந்த கண்கள் 
மஞ்சள் பூத்துக் கிடக்கின்றன.

35          

அம்ம வாழி, தோழி! நம் ஊர்ப்
பொய்கை ஆம்பல் நார் உரி மென் கால்
நிறத்தினும் நிழற்றுதல் மன்னே;
இனிப் பசந்தன்று, என் மாமைக் கவினே.


வாயிலாய்ப் புகுந்தார் தலைமகன் குணம் கூறிய வழி, 
'அவனுக்கு இல்லாதனவே கூறுதலால், 
இப்பொழுது காண் என் மேனி பசந்தது' 
எனத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 5


தோழி வாழி, 
என் மேனி அவனை எண்ணிப் பசந்து கிடக்கிடக்கிறது. 
ஆம்பல் கொடியில் உரித்த நார் நிறத்தைக் காட்டிலும் மெல்லிதாகப் பசந்து கிடக்கிறது. 

(நிழத்தல் = உள்ளதன் நுணுக்கம் – உரிச்சொல் -  தொல்காப்பியம் சொல்லதிகாரம், நூற்பா 330)

36          

அம்ம வாழி, தோழி! ஊரன்
நம் மறந்து அமைகுவன் ஆயின், நாம் மறந்து
உள்ளாது அமைதலும் அமைகுவம் மன்னே
கயல் எனக் கருதிய உண் கண்
பசலைக்கு ஒல்கா வாகுதல் பெறினே.               5


தான் வாயில் நேரும் குறிப்பினளானமை அறியாது, 
தோழி வாயில் மறுத்துழி, 
அவள் நேரும் வகையால் 
அவட்குத் தலைமகள் சொல்லியது. 6


ஊரன் நம்மை மறந்துவிட்டால், நாமும் அவனை மறந்துவிடலாம். 
ஆனால் 
என் கணகள் அவனைத் தேடிப் பசக்கின்றனவே!

37          

அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
நயந்தோர் உண்கண் பசந்து, பனி மல்க
வல்லன் வல்லன் பொய்த்தல்;
தேற்றான், உற்ற சூள் வாய்த்தல்லே.


தலைமகளைச் சூளினால் தெளித்தான் 
என்பது கேட்ட காதல் பரத்தை 
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத் 
தன் தோழிக்குச் சொல்லியது. 7

அவன் மகிழ்நன் 
அவனை நயந்தவர் 
கண் பசந்து 
கண்ணீர் விடுமாறு செய்ய வல்லவன் 
பிரியமாட்டேன் என்று சொன்ன சூளுரை 
மனத்தெளிவு இல்லாமல் சொன்னது போலும் 

38          

அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
தன் சொல் உணர்ந்தோர் அறியலன் என்றும்
தண் தளிர் வௌவும் மேனி,
ஒண் தொடி முன்கை, யாம் அழப் பிரிந்தே.


தலைமகன் மனைவயிற் போகக் கருதினான் 
என்பது சொல்லிய தன் தோழிக்குப் 
பரத்தை சொல்லியது. 8


தளிர் போன்ற என் மேனியும், கையில் உள்ள வளையல்களும் பிரிந்து அழுகின்றனவே! 
அவன் தான் அளித்த வாக்கை நினைத்துப் பார்க்கவில்லையே!

39          

அம்ம வாழி, தோழி! ஊரன்
வெம் முலை அடைய முயங்கி, நம் வயின்
திருந்து இழைப் பணைத்தோள் நெகிழ,
பிரிந்தனன் ஆயினும், பிரியலன் மன்னே.


ஒரு ஞான்று தலைவன் தன் மனைக்கண் சென்றது கொண்டு, 
'அவன் பெண்மை நலம் எல்லாம் துய்த்துக் காதல் நீங்கிப் பிரிந்தான்' என்பது தலைவி கூறினாள் எனக் கேட்ட பரத்தை, 
அவட்குப் பாங்காயினார் கேட்ப, 
தன் தோழிக்குச் சொல்லியது.


ஊரன் என் முலை இலையாகும்படி [அடைய] 
அழுத்தமாகத் தழுவிவிட்டு 
என் தோளில் அணிகலன் கழலும்படிப் பிரிந்து போய்விட்டான். 
என்றாலும் 
அவன் நினைவு என்னை இட்டுப் பிரியவில்லையே.   

40          

'அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
ஒண் தொடி முன்கை யாம் அழப் பிரிந்து, தன்
பெண்டிர் ஊர் இறைகொண்டனன்' என்ப
கெண்டை பாய்தர அவிழ்ந்த
வண்டு பிணி ஆம்பல் நாடு கிழவோனே.         5


உலகியல் பற்றித் 
தலைவன் தன் மனைக்கண் ஒரு ஞான்று போனதே கொண்டு, 
'அவ்வழிப் பிரியாது உறைகின்றான்' என்று, 
அயற் பரத்தையர் பலரும் கூறினார் 
என்பது கேட்ட காதல்பரத்தை, 
அவர் பாங்காயினார் கேட்ப, 
தன் தோழிக்குச் சொல்லியது



நழுவும் வளையல் கையுடன் நான் அழுகிறேன்.  
அவன் ஊர்ப்பெண்டிருடன் தங்கியிருக்கிறான் 
[இறை கொண்டனன்] 
என்கின்றனர். 
கெண்டைமீன் பாய்ந்து ஆம்பல்பூ பூக்கும் நாட்டுக்கு உரியவன் ஆயிற்றே.

தீ உறு மெழுகு உருகுதல்
மனம் உருகுதலுக்கு உவமை

No comments:

Post a Comment