Pages

Saturday, 30 August 2014

காதல் பாடல் குறுந்தொகை # 319


319. முல்லை

மான் ஏறு மடப் பிணை தழீஇ, மருள் கூர்ந்து,
கானம் நண்ணிய புதல் மறைந்து ஒடுங்கவும்,
கையுடை நல் மாப் பிடியொடு பொருந்தி, (படம்)
மை அணி மருங்கின் மலையகம் சேரவும்,
மாலை வந்தன்று, மாரி மா மழை;
பொன் ஏர் மேனி நல் நலம் சிதைத்தோர்
இன்னும் வாரார் ஆயின்,
என் ஆம், தோழி நம் இன் உயிர் நிலையே

பருவ வரவின்கண் வேறுபட்ட கிழத்தி வன்புறை எதிரழிந்து சொற்றது.

தாயங் கண்ணன்  

ஆண்மான் பெண்மானைத் தழுவிக்கொண்டு காதல் மயக்கத்தோடு காட்டின் புதர் மறைவுக்குள் செல்லும்படியாகவும், ஆண்யானை பெண்யானையைக் கையால் தழுவிக்கொண்டு மலைப்பகுதிக்குள் செல்லும்படியாகவும் மாரி காலத்து மழை பொழியும் காலமும், மாலைக்காலமும் வந்துவிட்டன. பொன் போன்ற என் மேனி நலம் குன்றிச் சிதைகிறது. தோழி! இன்னும் அவர் வரவில்லை என்றால் என் உயிரும் உன் உயிரும் என்னவாகும்?

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment