Pages

Sunday, 24 August 2014

காதல் பாடல் குறுந்தொகை # 292


292.குறிஞ்சி

மண்ணிய சென்ற ஒள் நுதல் அரிவை
புனல் தரு பசுங் காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு, அவள் நிறை
பொன் செய் பாவை கொடுப்பவும், கொள்ளான்,
பெண் கொலை புரிந்த நன்னன் போல,
வரையா நிரையத்துச் செலீஇயரோ, அன்னை!
ஒரு நாள், நகை முக விருந்தினன் வந்தென,
பகை முக ஊரின், துஞ்சலோ இலளே.

தோழி இரவுக்குறிக்கண் சிறைப்புறமாகக் காப்பு மிகுதி சொல்லியது.

பரணர் பாடல்

(படம் - இவள் உண்பது மாம்பழம். நிகழ்வில் வரும் மாங்காய் அன்று)

விருந்தினனாக ஒருநாள் வந்த அவன் என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டான். அதனால் பகைவர் தாக்கும் ஊர் இரவெல்லாம் தூங்காமல் கிடப்பது போல என் தாய் என்னைப் பாதுகாத்துக்கொண்டு தூங்காமல் கிடக்கிறாள். இவள் நரகத்துக்குச் செல்வாளாக.
ஒரு பெண் குளிக்கச் சென்றாள். அப்போது மாங்காய் ஒன்று நீரில் மிதந்து வந்தது. அதனை அவள் எடுத்துத் தின்றுவிட்டாள். அதற்காக அரசன் நன்னன் அவளுக்குக் கொலை தண்டனை விதித்தான். அவள் செய்தது குற்றமாயின் அந்தக் குற்றத்துக்குத் தண்டமாக 81 யானைகளும் அவள் எடை அளவு தங்கமும் தருவதாக அவளது சுற்றத்தார் தருவதாகக் கூறியும் ஏற்க மறுத்துக் கொன்றுவிட்டான். அதனால் அவனைப் பெண்கொலை புரிந்த நன்னன் என்று குறிப்பிடலாயினர். அவன் இறந்த பின்னர் நரகலோகம் சென்றான்.
அவனைப் போல என் அன்னையும் நரகம் செல்வாளாக.

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment