சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன் + பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி
நீ, காவிரி நாட்டு அரசன்.
இவன், பஞ்சவர் எனப்படும் பாண்டிய அரசர்களில்
ஏறு போன்றவன்.
அடி இற்றுப்போன ஆலமரத்தை
அதன் விழுதுகள்
தாங்குவது போல
முன்னோர் மாய்ந்த பின்
பாண்டிய நாட்டுக் குடிமக்களின் அச்சம் போக்கி,
அறநெறி பிறழாமல் ஆட்சி நடத்துபவன்.
உருவில் சிறியதாயினும்
நல்ல பாம்பைக் கண்டு மக்கள்
ஒதுங்குவது போலப்
பகைவர் ஒதுங்கும்படியும்,
இடியைக் கேட்டு நடுங்குவது போலப்
பகைவர்
நடுங்கும்படியும் நாடாள்பவன்.
நீ, உறையூரைக் கைப்பற்றி நாடாள்பவன்.
இவன்,
நெல்லும் நீரும் எல்லாருக்கும் பொது
என்று எண்ணிக்கொண்டு
பொதியமலைச் சந்தனம்,
கடல்முத்து,
மும்முரசு ஆகிய மூன்றையும்
தனதாக்கிக்கொண்டு ஆளும் கூடல் நகர ஆரசன்.
நீங்கள் இருவரும்
இருபெருந் தெய்வங்களாகிய
பலராமனும், திருமாலும் போல ஒன்றிப்
பகைவர்கள் அஞ்சுமாறு தோன்றுகிறீர்கள்.
இப்படியே நீங்கள் இருந்தால்
இதைக் காட்டிலும்
இனிமையான நிகழ்வு வேறு என்ன இருக்கிறது?
இன்னும் கேளுங்கள்.
உங்களின் புகழ் நிலைக்கட்டும்.
ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துகொள்ளுங்கள்.
இருவரும் சேர்ந்தே இருந்தால்
உலகமே உங்கள் கைக்குள் வரும்.
உம் பகைவர்கள் இடையிலே புகுந்து
நல்ல போலவும்,
நலம் பயப்பது போலவும்,
முன்னோர் பின்பற்றிய நெறி போலவும்
ஏதாவது சொன்னால் ஏற்றுக்கொள்ளாமல்
இன்று போலவே என்றும் சேர்ந்தே இருங்கள்.
உங்களுடைய நாட்டுக் குன்றுகளில்
புலி(கோண்மா),
மீன்(கெண்டை)
இரண்டையும் சேர்த்துப் பொறித்துக்கொள்ளுங்கள்.
பாடல்
நீயே, தண் புனல் காவிரிக் கிழவனை; இவனே,
முழு முதல் தொலைந்த கோளி ஆலத்துக்
கொழு நிழல் நெடுஞ் சினை வீழ் பொறுத்தாங்கு,
தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது,
நல் இசை முது குடி நடுக்கு அறத் தழீஇ, 5
இளையது ஆயினும் கிளை அரா எறியும்
அருநரை உருமின், பொருநரைப் பொறாஅச்
செரு மாண் பஞ்சவர் ஏறே; நீயே,
அறம் துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே,
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய என, 10
வரைய சாந்தமும், திரைய முத்தமும்,
இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும்
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே;
பால் நிற உருவின் பனைக் கொடியோனும்,
நீல் நிற உருவின் நேமியோனும், என்று 15
இரு பெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு,
உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி,
இன்னீர் ஆகலின், இனியவும் உளவோ?
இன்னும் கேண்மின்: நும் இசை வாழியவே;
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும் 20
உடன் நிலை திரியீர்ஆயின், இமிழ்திரைப்
பௌவம் உடுத்த இப் பயம் கெழு மா நிலம்
கையகப்படுவது பொய் ஆகாதே;
அதனால், நல்ல போலவும், நயவ போலவும்,
தொல்லோர் சென்ற நெறிய போலவும், 25
காதல் நெஞ்சின் நும் இடை புகற்கு அலமரும்
ஏதில் மாக்கள் பொதுமொழி கொள்ளாது,
இன்றே போல்க, நும் புணர்ச்சி; வென்று வென்று
அடு களத்து உயர்க, நும் வேலே; கொடுவரிக்
கோள்மாக் குயின்ற சேண் விளங்கு தொடு பொறி 30
நெடு நீர்க் கெண்டையொடு பொறித்த
குடுமிய ஆக, பிறர் குன்று கெழு நாடே.
திணை பாடாண் திணை;
துறை உடனிலை.
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனும்,
பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும்,
ஒருங்கு இருந்தாரைக்
காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்
பாடியது.
காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு
முதல்
கி.பி. 2 ஆம்
நூற்றாண்டு
![]() |
| அடிமரத்தை இழந்த ஆலமரத்தை அதன் கிளையிலிருந்து இறங்கிய விழுதுகள் தாங்குவது போல அரசன் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி தன் முன்னோருக்குப் பின் நாட்டைக் காத்தான் |

No comments:
Post a Comment