பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி
மிகுந்து வரும் வெள்ளத்தைத் தடுக்க இயலாது.
மிகுந்து வரும் தீச் சூட்டைத் தடுக்கக் குடை பிடிக்க முடியாது.
மிகுந்து வரும் காற்றை எதிர்த்து
நிற்கும் வலிமை யாருக்கும் இல்லை.
வெயிலின் பெருவெளிச்சத்தயும் தடுக்க இயலாது.
அதுபோல,
வழுதியை எதிர்த்து நிற்க யாரும் இல்லை.
தமிழ்நாடு எல்லா அரசர்களுக்கும் பொது என்பதை
இவன் பொறுத்துக்கொள்ள மாட்டான்.
தமிழ்நாடு முழுவதும் தனக்கே உரியது எனப் போரிடுவான்.
கொண்டி (திறை) தரவேண்டும் என்பானாயின்
கொடுத்த
மன்னர் அச்சமின்றி அரசாளலாம்.
அவனது அரவணைப்பை இழந்தவர்
இரக்கம் கொள்ளத் தக்கவர்.
புற்றிலிருந்து கிளம்பும் ஈயல்
ஒருநாள் வாழ்க்கையில்
அழிவது போல
அவர்களின் வாழ்வு அழியும்.
பாடல்
நீர் மிகின், சிறையும் இல்லை; தீ மிகின்,
மன் உயிர் நிழற்றும் நிழலும் இல்லை;
வளி மிகின், வலியும் இல்லை; ஒளி மிக்கு
அவற்று ஓர் அன்ன சினப் போர் வழுதி,
'தண் தமிழ் பொது' எனப் பொறாஅன், போர் எதிர்ந்து, 5
கொண்டி வேண்டுவன் ஆயின், 'கொள்க' எனக்
கொடுத்த மன்னர் நடுக்கு அற்றனரே;
அளியரோ அளியர், அவன் அளி இழந்தோரே
நுண் பல சிதலை அரிது முயன்று எடுத்த
செம் புற்று ஈயல் போல, 10
ஒரு பகல் வாழ்க்கைக்கு உலமருவோரே!
திணை வாகை;
துறை அரச வாகை.
பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியை
ஐயூர் முடவனார்
பாடியது
காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.
2 ஆம் நூற்றாண்டு

No comments:
Post a Comment