Pages

Tuesday, 14 October 2014

புறநானூறு 44 Purananuru 44

நெடுங்கிள்ளி


நெடுங்கிள்ளியின் யானை நீராடவில்லை. 
நெல்லஞ்சோறும் நெய்யும் கலந்து உண்ணும் அது 
உணவுக் கவளம் பெறவில்லை. 

அது கட்டப்படிருக்கும் வெளில் என்னும் கூடாரம் 
வருந்தும்படி மோதிக்கொண்டு நிலத்தில் விழுந்து 
பெருமூச்சு விட்டுக்கொண்டு புரண்டு வருந்துகிறது; 
முழங்குகிறது.

குழந்தைகள் பால் இல்லாமல் அலறுகின்றன.
மகளிர் பூ இல்லாமல் வெறுந்தலையை முடிந்துகொள்கின்றனர்.

குடிக்கத் தண்ணீர்கூட இல்லாமல் 
இல்லங்களில் மக்கள் அழும் ஒலி கேட்கிறது.
இப்படி இருக்கும்போது கோட்டைக்குள் நீ பாதுகாப்பமாக இருத்தல் மிகமிகக் கொடுமை.

நீ நெருங்க முடியாத அரிமா போன்று வலிமை மிக்கவன்.
நீ அறநெறியை விரும்பினால் 
கோட்டை உன்னுடையது என்று திறந்து விட்டுவிடுக.

மறநெறியை விரும்பினால் போரிடுவதற்காகத் திறந்துவிடுக.
இரண்டும் இல்லாமல் 
மதிலுக்குள் ஒரு மூலையில் ஒடுங்கிக் கிடத்தல் 
நாணத் தக்க செயல்.

பாடல்

இரும் பிடித் தொழுதியொடு பெருங் கயம் படியா,
நெல்லுடைக் கவளமொடு நெய்ம் மிதி பெறாஅ,
திருந்து அரை நோன் வெளில் வருந்த ஒற்றி,
நிலமிசைப் புரளும் கைய, வெய்து உயிர்த்து,
அலமரல் யானை உரும் என முழங்கவும்,            5
பால் இல் குழவி அலறவும், மகளிர்
பூ இல் வறுந் தலை முடிப்பவும், நீர் இல்
வினை புனை நல் இல் இனைகூஉக் கேட்பவும்,
இன்னாது அம்ம, ஈங்கு இனிது இருத்தல்;
துன் அருந் துப்பின் வய மான் தோன்றல்!        10
அறவை ஆயின்,' நினது' எனத் திறத்தல்;
மறவை ஆயின், போரொடு திறத்தல்;
அறவையும் மறவையும் அல்லையாக,
திறவாது அடைத்த திண் நிலைக் கதவின்
நீள் மதில் ஒரு சிறை ஒடுங்குதல்                 15
நாணுத்தகவு உடைத்து, இது காணுங்காலே.

திணையும் துறையும் அவை.

அவன் 
(சோழன் நலங்கிள்ளி அல்லது 
சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்) 

ஆவூர் முற்றியிருந்த காலத்து அடைத்து இருந்த 
நெடுங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.

காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு

தலையில் பூ முடித்துத் தமிழ்நாட்டு மகளிர் மகிழ்வர்.
வெறுந்தலை முடித்தல் அவர்களுக்கு ஒரு இழப்பு
இந்தப் பாடல் இதனைக் குறிப்பிடுகிறது 



1 comment: