சோழன் நலங்கிள்ளி
சோழன் நலங்கிள்ளியின் படை
வலம்வருமோ என்று எண்ணி
வடபுலத்து அரசர்கள் தூங்காமல்
கிடந்தனர்
என்கிறார் புலவர் கோவூர் கிழார்.
அறத்தைப் பின்தொடர்ந்து
பொருளும் இன்பமும் வருவது போல,
உன் குடையைப் பின்தொடர்ந்து
சேரர், பாண்டியர் குடைகள்
வருகின்றன.
இதனால் தமிழகமே ஒன்றுபட்டுள்ளது.
நீ புகழ் வேட்டைக்குப் புறப்பட்டுவிட்டாய்.
பாசறையில் உள்ளாய்.
கூர் மழுங்கிய கொம்புகளுடன்
போருக்குத் துடிக்கும் உன் களிறு அடங்க மறுக்கிறது.
போரை விரும்பும் உன் வீரக்கழல் மறவர்
தொலைதூரம் செல்ல விரும்புகின்றனர்.
கீழைக்கடல் அரசனாகிய நீ
தென்கடல் பாண்டியனையும்
மேலைக்கடல் சேரனையும்
அழைத்துக்கொண்டு
வலம் வருவாயோ
என்று வடபுலத்து அரசர்கள்
நெஞ்சம் நடுங்கித் தூங்காமல் கிடக்கின்றனர்.
பாடல்
சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல,
இரு குடை பின்பட ஓங்கிய ஒரு குடை,
உரு கெழு மதியின், நிவந்து, சேண் விளங்க,
நல் இசை வேட்டம் வேண்டி, வெல் போர்ப் 5
பாசறை அல்லது நீ ஒல்லாயே;
நுதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார்
கடி மதில் பாயும் நின் களிறு அடங்கலவே;
'போர்' எனின், புகலும் புனை கழல் மறவர்,
'காடு இடைக் கிடந்த நாடு நனி சேஎய; 10
செல்வேம் அல்லேம்' என்னார்; 'கல்லென்
விழவுடை ஆங்கண் வேற்றுப் புலத்து இறுத்து,
குண கடல் பின்னது ஆக, குட கடல்
வெண் தலைப் புணரி நின் மான் குளம்பு அலைப்ப,
வல முறை வருதலும் உண்டு' என்று அலமந்து, 15
நெஞ்சு நடுங்கு அவலம் பாய,
துஞ்சாக் கண்ண, வட புலத்து அரசே.
- திணை வாகை;
- துறை அரச வாகை; மழபுலவஞ்சியும் ஆம்.
- சோழன் நலங்கிள்ளியைக்
- கோவூர் கிழார் பாடியது.
காலம்
: கி.மு. 3 முதல் கி.பி. 2 (நூற்றாண்டு)

No comments:
Post a Comment