Pages

Wednesday, 8 October 2014

புறநானூறு 30 Purananuru 30

சோழன் நலங்கிள்ளி


ஞாயிறு செல்லும் பாதையையும்
அந்த ஞாயிறு தாங்கிக்கொண்டிருக்கும் சுமைகளையும்
அந்தச் சுமைக்குள் சூழ்ந்திருக்கும் உருண்டை மண்டலங்களையும்
காற்று திரியும் திசையையும்
ஒன்றுமில்லாமல் வெறிச்சோடிக் கிடக்கும் ஆகாயத்தையும் 
தாமே நேரில் சென்று அளந்து அறிந்தவர் போல 
இனைத்து என்று அளவு கூறுவாரும் உளர்.

அவர்களாலும் அளவிட்டுக் கூறமுடியாத அடக்கம் கொண்டவன் நீ.
எறிகல் = விளாம்பழம்

யானை வாயில் பட்ட விளாம்பழம் போலச் 
செரிக்கும் வலிமையை மறைத்துக்கொண்டிருப்பவன் நீ.
இப்படிப்பட்ட உன்னைப் புலவர் எப்படிப் பாடமுடியும்?

கூம்பின் பாய்மரத்தைத் தொய்ய விடாமல் 
புகார் நகரத்தில் புகுந்த பெருங்கலத்தை (பெருங்கப்பலை)த் 
தடுத்து நிறுத்தி 
அதிலுள்ள பண்டங்களை 
உள்நாட்டுப் பகுதிகளுக்குக் கொண்டுவந்து கொடுக்கும் 
கடல்பஃறாரம் (கடல்படு செல்வம்
நிறைந்த நாட்டுக்கு உரியவன் நீ.

பாடல்

செஞ் ஞாயிற்றுச் செலவும்,
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்,
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்,
வளி திரிதரு திசையும்,
வறிது நிலைஇய காயமும், என்று இவை
சென்று அளந்து அறிந்தோர் போல, என்றும்
இனைத்து என்போரும் உளரே; அனைத்தும்
அறி அறிவு ஆகாச் செறிவினை ஆகி,
களிறு கவுள் அடுத்த எறிகல் போல
ஒளித்த துப்பினைஆதலின், வெளிப்பட
யாங்ஙனம் பாடுவர், புலவர்? கூம்பொடு
மீப் பாய் களையாது மிசைப் பரம் தோண்டாது
புகாஅர்ப் புகுந்த பெருங் கலம் தகாஅர்
இடைப் புலப் பெரு வழிச் சொரியும்
கடல் பல் தாரத்த நாடு கிழவோயே!
  • திணை பாடாண் திணை
  • துறை இயன்மொழி
  • சோழன் நலங்கிள்ளியை 
  • உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.
காலம்     : கி.மு. 3 முதல் கி.பி. 2 (நூற்றாண்டு)

மீப் பாய் களையாது மிசைப் பரம் தோண்டாது
புகாஅர்ப் புகுந்த பெருங் கலம் - பாடல் வரிகள்
படம் - இக்காலப் பெருங்கலம்


    2 comments:

    1. உங்கள் முயற்சிக்கு நன்றி

      ReplyDelete