Pages

Saturday, 4 October 2014

புறநானூறு 21 Purananuru 21

கானப்பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதி

என் புலமை எல்லையைக் கடந்த புகழ் மிக்கவனே!

மண்ணின் ஆழம் வரையில் தோண்டிய அகழி, 
வான் அளாவும் மதில், 
மீன் பூத்தது போல் தோன்றும் ஞாயில் (மதில்-ஆள்-இருக்கைகள்), 
சூரிய ஒளி புகாவண்ணம் இருண்டிருக்கும் காவல்-காடுகள், 
கடத்தற்கு அரிய காவலர்களைக் கொண்ட கூடாரங்கள் (குறும்பு) 

ஆகியவற்றைக் பொண்ட கானப்பேர் நகரக் கோட்டையை 
காய்ச்சிய இரும்பு உண்டது போல மீட்டுக்கொள்ள முடியாதது 
என்று போற்றப்பட்ட கோட்டையை, 
அதன் அரசன் வேங்கை மார்பன் 
நாள்தோறும் வருந்தும்படி, 
குழையச்செய்த வெற்றி வேந்தே!
உன்னை இகழ்பவர் 
உன் புகழைப் பாடிச் சாகும்படி 
உன் வேல் பூக்கட்டும்.

பாடல்

புல வரை இறந்த புகழ்சால் தோன்றல்!
'நில வரை இறந்த குண்டு கண் அகழி,
வான் தோய்வு அன்ன புரிசை, விசும்பின்
மீன் பூத்தன்ன உருவ ஞாயில்,
கதிர் நுழைகல்லா மரம் பயில் கடி மிளை,
அருங் குறும்பு உடுத்த கானப்பேர் எயில்,
கருங் கைக் கொல்லன் செந் தீ மாட்டிய
இரும்பு உண் நீரினும் மீட்டற்கு அரிது' என,
வேங்கை மார்பன் இரங்க, வைகலும்
ஆடு கொளக் குழைந்த தும்பை, புலவர்
பாடுதுறை முற்றிய, கொற்ற வேந்தே!
இகழுநர் இசையொடு மாய,
புகழொடு விளங்கிப் பூக்க, நின் வேலே!
  • திணையும் துறையும் அவை.
  • கானப்பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதியை 
  • ஐயூர் மூலங்கிழார் பாடியது.
காலம்     : கி.மு. 3 முதல் கி.பி. 2 (நூற்றாண்டு)



No comments:

Post a Comment