Pages

Saturday, 4 October 2014

புறநானூறு 19 Purananuru 19

பாண்டியன் நெடுஞ்செழியன்


வெற்றிவேல் கொண்ட செழியனே!

தமிழரோடு தமிழர் மோதிக்கொண்ட 
தலையாலங்கானப் போரில் 
நீ தனியொருவனாகவே பல உயிர்களை மாய்த்திருக்கிறாய்

இது எமன் தனியனாகச் செய்யும் செயல் போன்றது.

பெரிய கல் அடித்து விழும்படி 
வேட்டுவன் புலிக்குப் பொறி வைப்பான். 

புலி தானே வரும்போது அந்தக் கல்லில் அடிபட்டு விழும்
நீ அந்தப் பெருங்கல் அடார் போன்றவன் நீ. 

தானே வந்து பகைவர் விழக் கொல்பவன் நீ 
எனவே உன் மார்பை விரும்பித் தழுவினேன். 

நீ உன்னை எதிர்த்த ஏழு அரசர்களைத் 
தலையாலங்கானப் போரில் வென்றவன். 

அந்தப் போரில் 
என் கணவனும் புதல்வரும் மாண்டனர். 
இனி நமக்கு என்ன இருக்கிறது என்று 
மகளிர் கசிந்து அழுவதைப் பார்த்துக் 
கூற்றுவனே மனம் இரங்கிய போர்க்களம் அது.  

அந்தப் போர்க்களத்தில் அம்புகள் 
குருவிக்கூட்டம் போல யானைமீது பாய்ந்தன. 
புண்பட்ட யானையின் துதிக்கையும் வாயும் துண்டிக்கப்பட்டு 
உழும் கலப்பை போல நிலத்தில் கிடந்தன.
இப்படி வென்ற 
கவசமும் ஆரமும் தாங்கிய 
உன் மார்பைத் தழுவினேன் 
பாதுகாப்பாயாக.

பாடல்

இமிழ் கடல் வளைஇய ஈண்டு அகன் கிடக்கை,
தமிழ் தலைமயங்கிய தலையாலங்கானத்து,
மன் உயிர்ப் பன்மையும், கூற்றத்து ஒருமையும்,
நின்னொடு தூக்கிய வென் வேல் செழிய!
'இரும் புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய
பெருங் கல் அடாரும் போன்ம்' என விரும்பி,
முயங்கினேன் அல்லனோ, யானே மயங்கிக்
குன்றத்து இறுத்த குரீஇ இனம் போல,
அம்பு சென்று இறுத்த அரும் புண் யானைத்
தூம்புடைத் தடக் கை வாயொடு துமிந்து,
நாஞ்சில் ஒப்ப, நிலம் மிசைப் புரள,
எறிந்து களம் படுத்த ஏந்து வாள் வலத்தர்
எந்தையொடு கிடந்தோர், எம் புன் தலைப் புதல்வர்;
'இன்ன விறலும் உளகொல், நமக்கு?' என,
மூதில் பெண்டிர் கசிந்து அழ, நாணி,
கூற்றுக் கண்ணோடிய வெருவரு பறந்தலை,
எழுவர் நல் வலம் கடந்தோய்! நின்
கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே?
  • திணை வாகை
  • துறை அரச வாகை.
  • பாடியவர்குடபுலவியனார்
  • பாடல் பெற்றவர்பாண்டியன் நெடுஞ்செழியன்
காலம்     : கி.மு. 3 முதல் கி.பி. 2 (நூற்றாண்டு)

தூம்புடைத் தடக் கை 
வாயொடு துமிந்துநாஞ்சில் ஒப்ப
பாடல் அடி



No comments:

Post a Comment