Showing posts with label விவேகசிந்தாமணி. Show all posts
Showing posts with label விவேகசிந்தாமணி. Show all posts

Wednesday, 8 March 2017

விவேகசிந்தாமணி யாத்திரை VivegaSindamani 135

தண்டுல மிளகின் றூள்புளி யுப்பு தாளிதம் பாதர்த்த மிதேஷ்டம்
தாம்புநீர் தோற்ற முன்றுகோ லாடை சக்கிமுக் சகிக்கை ராந்தல்
கண்டகங் காண்பான் பூசை முஸ்திபூ கமுற்குடை யேவல்சிற் றுண்டி
கம்பளி ஊசி நூலெழுத் தாணி கரண்டகங் கண்டமேற் றங்கி
துண்டுமூ றியகாய் கரண்டிநல் லெண்ணெய் துட்டுடன் பூட்டுமே கத்தி
சொல்லிய வெல்லாம் குறைவறத் திருத்தித் தொகுத்துப் பல்வகையினி தமைத்துப்
பெண்டுக டுணையோ டெய்துவா கன்னாய்ப் பெருநிலை நீர்நிழல் விறகு
பிரஜையுந் தங்கு மிடஞ்சமைத் துண்டு புறப்படல் யாத்திரைக் கழகே. (135)

அரிசி
மிளகுத்தூள்
புளி
உப்பு
தாளிக்கும் பொருள்
வடவம்
கயிறு
தண்ணீர்
தோற்றம் காட்டும் கண்ணாடி
ஊன்றுகோல்
மாற்று ஆடை
தீ பற்றவைக்கும் சக்கிமுக்கிக் கல்
கை ராந்தல்
கண்டம் செய்யும் வாள்
காண்பான்
பூசைப்பொருள்
வெற்றிலை
பாக்கு
முன்னழகுப் பொருள்
குடை
ஏவலாள்
சிற்றுண்டி
கம்பளி
ஊசி
படிப்பதற்கு நூல்
எழுத்தாணி
சுண்ணாம்புக் கரண்டகம்
கண்டமேற்றங்கி (கழுத்தில் போட்டுக்கொள்ளும் ஆடை)
துண்டு
மூறிய காய்
கரண்டி
நல்லெண்ணெய்
துட்டு (காசு)
பூட்டு
மேகத்தி (சாவி)
சொல்லிய வெல்லாம் குறைவறத் திருத்தித் தொகுத்துப் பல்வகை இனிது அமைத்துப் பெண்கள் துணையோடு எய்துவாக அடுப்புக்கல் நாய்த்துணை நீர் நிழல் விறகு மக்கள் தங்குமிடத்தில் சமைத்து உண்டு புறப்படல் வெளியூர் செல்லும் யாத்திரைக்கு அழகு.
 
கை ராந்தல் 
யாப்பு – விருத்தம்
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


பிற்கால ‘ராந்தல்’ விளக்கைக் கூறுவதால் இந்தப் பாடலும், இது போன்ற சில பாடல்களும் இந்த நூலில் பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட பாடல்களாக இருத்தல் வேண்டும். 

விவேகசிந்தாமணி தடாரி VivegaSindamani 134

தடாரி தண்ணுமை பேரிகை சல்லரி இடக்கை
கடாத மெங்கணு மதிர்ந்திட ஒலித்திடக் காணல்
விடாத நாணகன் றன்னிய புருடனை விழைந்தே
அடாது செய்த மங்கையர் வசை யொலித்தல் போலாம். (134)

விடக்கூடாத நாண் அகன்று, அன்னிய ஆண்மகனை விரும்பி, அடாது செய்த மங்கையின் வசை குணங்கள் தம்பட்டம் அடிக்கபடுவதைக் கேட்பதானது, பம்பை, மத்தளம், பேரிகை, சல்லரி, இடக்கை, நகார் ஆகியவை எங்கும் அதிர்ந்து ஒலித்திடக் காணல் போன்றதாம்.
 
பேரிசைக் கருவிகள் முழக்கம்

தடாரி முழக்கம்

யாப்பு – விருத்தம்
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


விவேகசிந்தாமணி காமமே VivegaSindamani 133

காமமே குலத்தினையும் நலத்தினையும் கெடுக்க வந்த களங்கம்
காமமே தரித்திரங்க ளனைத்தையும் புகட்டி வைக்குங் கடாரங்
காமமே பரகதிக்குச் செல்லாமல் வழிய டைக்குங் கபாடங்
காமமே யனைவரையும் பகையாக்கிக் கழுத்தரியுங் கத்தி தானே. (133)

காமமே,
 • குலத்தினையும் நலத்தினையும் கெடுக்க வந்த களங்கம்.
 • தரித்திரங்கள் எல்லாவற்றையும் புரட்டி வைக்கக் கூடிய கடாரம்.
 • வானுலகம் செல்லும் வழியை அடைத்துவைக்கும் கதவு.
 • எல்லாரையும் பகையாக்கிக் கழுத்தறுக்கும் கத்தி.  


யாப்பு – விருத்தம்
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


விவேகசிந்தாமணி கம்பமத VivegaSindamani 132

கம்பமத கடகளிற்றான் தில்லை வாழும் கணபதிதன் பெருவயிற்றைக் கண்டுவாடி
உம்பரெலாம் விழிந்திருந்தா ரயில்வேல் செங்கை யுடையவறு முகவனுங்கண் ணீரானான்
பம்புசுடர் கண்ணனுமோ நஞ்சுண் டான்மால் பயமடைந்தா னுமையுமுடல் பாதியானாள்
அம்புவியைப் படைத்திடுதல் அவம தேயென் றயனுமன்ன மிறங்காம லலைகின் றானே. (132)

மும்மதம் ஒழுகும் களிறாகத் தில்லையில் வாழும் கணபதியின் வயிற்றைப் பார்த்து வாட்டத்துடன் வானுலகில் வாழும் தேவர்கள் எல்லாரும் கண் இமைக்காமல் விழித்துக்கொண்டிருக்கின்றனர். தன் சிவந்த கையில் வேலை உடைய ஆறுமுகன் கண்ணீர் விட்டான். பெருகும் சுடர்த்தீ கண் கொண்ட சிவன் நஞ்சை எடுத்து உண்டான். திருமால் பயந்துபோனான். உமை தன் உடலில் பாதியை இழந்தாள். உலகைப் படைத்த பிரமன் தான் உலகைப் படைப்பது வீண் என்று எண்ணி அன்னம் இறங்காமல் அலையலானான். (உணவு இறங்காமல் \ அன்னப்பறவையிலிருந்து இறங்காமல் அலையலானான்)
 
கணபதி வயிறு

அன்ன ஊர்தியில் பிரமன்

யாப்பு – விருத்தம்
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


விவேகசிந்தாமணி ஒருபாதி VivegaSindamani 131

ஒருபாதி மால்கொள மற்றொரு பாதி யுமையவள்கொள
டிருபாதி யாலு மிறந்தான் புராரி யிருநிதியோ
பெருவாரிதியிற் பிறை வானிற் சர்பம் பிலத்திற் கற்பகத்
தருவான போஜகொடை யுன்கையோடென்கை தந்தனனே. (131)

முப்புரம் எரித்த புராரி (சிவன்) தன் உடம்பில் ஒரு பாதியைத் திருமாலுக்கும், மற்றொரு பாதியை உமையவளுக்கும் கொடுத்தான். எனவே உடம்பு ஏதுமின்றி இறந்தான். சங்கநிதி, பதுமநிதி என்னும் இரண்டு பெரிய நிதியங்களும் கடலில் மூழ்கிவிட்டன. பிறை வானத்துக்கும் போய்விட்டது. பாம்பு பாதாளத்துக்குப் போய்விட்டது. கற்பக மரமான போஜகொடை (போசம் = வேண்டியதெல்லாம் வழங்குதல்) உன் கையிலும் என் கையிலும் இறைவன் தந்துவிட்டான்.  
 
சிவன் | ஒருபாதி திருமால், மறுபாதி உமை
யாப்பு – விருத்தம்
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


விவேகசிந்தாமணி கரி VivegaSindamani 130

கரியொன்று பொன்மிகும் பையேறக் கற்றவர் சூழ்ந்துதொழ
எரியென்னும் செல்வன் துலாத்தினி லேற இருண்ட மஞ்சு
சொரிகின்ற நாகமின் சோற்றினி லேறித் தொடர்ந்துவர
நரியொன்று சொந்தக் கனலேறி வந்தது நங்களத்தே. (130)

யானைமுகக் கடவுள் பொன் மிகும் பையில் (பெருச்சாளியில்) ஏறி வந்தான்.

கற்றவர் சூழ்ந்து வந்து தொழும்படி எரி ஒன்று கடவுள் (சேயோன்) துலாக்கோல் போல் தோன்றும் மயில்மேல் ஏறி வந்தான்.

இருண்ட மேகங்கள் மழை சொரிகின்ற நாகமின்னலாகிய மலைமகள் சோற்றில் (அன்னத்தில்) ஏறித் தொடர்ந்து வந்தாள்.

மாணிக்க வாசகருக்காக நரியைப் பரியாக்கிய சிவன் சுடுகாட்டுத் தீ மீது ஏறி நம் களத்தில் வந்தான்.
 
யானை பெருச்சாளி மேல்
யாப்பு – கட்டளைக் கலித்துறை
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


Tuesday, 7 March 2017

விவேகசிந்தாமணி சிரம் VivegaSindamani 129

சிரம்பார்த்தா னீசனயன் றேவி தனைப்பார்த்தான்
கரம்பார்த்தான் செங்கமலக் கண்ணன் உரஞ்சேர்
சிலைவளைத்த திண்புயத்து வண்ணான் ஸ்ரீராமன்
கலைவெளுத்த நேர்த்திதனைக் கண்டு. (129)

ஸ்ரீராமன் என்னும் வண்ணான் துவைத்துத் தந்த ஆடையின் நேர்த்தியைக் கண்டு,
 • ஈசன் தலையிலுள்ள கங்கை நீரைப் பார்த்தான்.
 • பிரமன் தன் மனைவி கலைமகள் உடுத்தியிருக்கும் வெண்ணிற ஆடையைப் பார்த்தான்.
 • செங்கமலக் கண்ணன் தன் கையிலிருக்கும் சங்கின் வெண்ணிறத்தைப் பார்த்தான்.

வண்ணான் ஸ்ரீராமன் தன் திண்புயத்தால் வில்லை வளைத்து தடாதகை, வாலி, இராவணன் ஆகியோரை வீழ்த்திய இராமன் பெயரைத் தன் பெயராகக் கொண்டவன்.
 
கலைமகள், பிரமன் மனைவி
வெள்ளைக் கலை உடுத்தியவள்
வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பவள் 
யாப்பு - வெண்பா
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


விவேகசிந்தாமணி சிறுவன்னை VivegaSindamani 128

சிறுவன்னை செம்பயறு செந்நெற் கடுகு
மறிதிகிரி வண்டு மணிநூற் … பொறியரவம்
வெற்றேறு புள்ளன்னம் வேதனரன் மாலுக்குக்
கற்றாளம் பூவே கறி. (128)

 • வேதன் என்னும் பிரமனுக்கு உகந்தவை - சிறுவன்னை என்னும் வன்னி இலை, பயறு, நெல், கடுகு. வாகனம் அன்னம் – இருப்பிடம் தாமரைப் பூ.  
 • மாலுக்கு உகந்தவை – சுழலும் சக்கரம், வளைவு கொண்ட சங்கு, கவுத்துவ மணி, படுக்கும் பாம்பு, வாகனம் கருடப் பறவை. – இருப்பிடம் தாளம் என்னும் பாம்பு.
 • அரனுக்கு உகந்தவை – வெள்ளைக் காளை வாகனம் – இருப்பிடம் மலை.   


யாப்பு - வெண்பா
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


விவேகசிந்தாமணி பண்புளருக்கு VivegaSindamani 127

பண்புளருக் கோர்பறவை பாவத்திற் கோரிலக்கம்
நண்பிலரைக் கண்டக்கா னாற்காலி … திண்புவியை
ஆள்வார் மதுரை யழகியசொக் கர்க்கரவம்
நீள்வா கனநன் னிலம். (127)

 • பண்பு உள்ளவர்களுக்கு ஒரு பறவை, ஈ.
 • பாவச் செயல்களுக்கு ஓர் இலக்கம், எட்டு, எட்டி நில்.
 • நட்பு இல்லாதவரைக் கண்டால் நாற்காலி, உடன் செல்லாமல் அமர்ந்துகொள்.
 • இந்த உலகை ஆளும் மதுரைச் சொக்கநாதப் பெருமானுக்குக் கையில் பாம்பு. நீண்ட வாகனம் இந்த நிலவுலகமாகிய மாடு.  

யாப்பு - வெண்பா
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


விவேகசிந்தாமணி கவத்துவ ராமகிருஷ்ணன் VivegaSindamani 126

என்னனைக் கன்று முத்தனைக் குளிக்கு மிறைவனை யனைக்குமே யன்று
மன்னனைக் கன்று பின்னனைக் குதவா வன்பினால் வந்திடுவா டுவனோ
முன்னனைக் கொன்று பின்னனைப் புரந்த முதுபகை லன்பிதா வுறாமல்
கன்னனைக் கொன்று விசயனைக் காத்த *கவத்துவ ராமகிருஷ் ணனே. (126)

கவத்துவ ராமகிருஷ்ணன் என்பவர் விவேகசிந்தாமணி பாடிய புலவரின் புரவலன். அவனைப் புலவர் இப் பாடலில் தெய்வமாகப் போற்றுகிறார்.

என் அன்னை திருமகளுக்கு அன்று முத்தனாகிய காமனைப் பெற்றெடுக்க முழுகாமலிருக்கச் செய்த இறைவனாகிய திருமால். அவன் முதலையிடமிருந்து யானையைக் காத்த மன்னன். கன்றுகளின் பின்னால் மேய்க்கச் சென்றவன். அவன் அன்பு கொண்டு அனைவர்க்கும் உதவால் வந்திடுவானோ? முன்னவனாகிய துரியோதனனைக் கொன்றான். பின்னவனாகிய தருமனைக் காத்தான். முது பகை, அன்பு இது உறாமல், கன்னனைக் கொன்று அருச்சுனனைக் காத்த கவத்துவ ராமகிருஷ்ணன் ஆகிய என் புரவலன்.  
காமன் | முத்தன் | அனங்கன் | மன்மதன்

காமன் | முத்தன் | அனங்கன் | மன்மதன்

காமன் | முத்தன் | அனங்கன் | மன்மதன்

காமன் | முத்தன் | அனங்கன் | மன்மதன்

யாப்பு - விருத்தம்
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


விவேகசிந்தாமணி இந்திரன் VivegaSindamani 125

இந்திரன் பதங்கள் குன்று மிறையவர் பதங்கள் மாறு
மந்தர நிலைகள் பேர மறுகயல் வறுமையாகும்
சந்திரன் கதிரோன் சாயுந் தரணியிற் றேசு மாளும்
அந்தணர் கருமங் குன்றில் யாவரே வாழ்வர் மண்ணில். (125)

அந்தணர் தம் கடமை குன்றுவாரேயானால்,
 • வானுலக அரசன் இந்திரன் பெற்றிருக்கும் பேறுகள் குன்றும்.
 • மண்ணுலக அரசர்கள் பெற்றிருக்கும் பேறுகள் மாற்றம் அடையும்.
 • மலைகளின் நிலைகள் பெயரும்.
 • தெருக்களிலும், அயலிடங்களிலும் வறுமை நிலை தோன்றும்.
 • சந்திரன், சூரியன் ஒளி சாயும்.
 • உலகின் ஒளி அழியும்.

உலகில் யார்தாம் நலமுடன் வாழ்வார்?
 
இந்திரன்
யாப்பு - விருத்தம்
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


விவேகசிந்தாமணி சங்கரன் VivegaSindamani 124

சங்கரன் தேவி தமையன் மனைவி தனக்கு மூத்தாள்
அங்கவ ளேறிய வாகனங் காணிவள்மற் றங்கவளோ
கொங்கைக ளீரைந் துடையவ ளாய்க் குவலயத்தில்
எங்குத் திரியும் வயிரவ மூர்த்தியென் றேனிலையே. (124)

இரண்டு காமுகர்கள் தான் உடலுறவு கொண்ட பெண்ணைப் பற்றிப் பேசிக்கொள்கின்றனர்.
ஒருவன் சொன்னான்.
 • சங்கரன் தேவி பார்வதி. பார்வதி அண்ணன் திருமால். திருமால் மனைவி இலக்குமி. இலக்குமி அக்கா மூதேவி. மூதேவி வாகனம் கழுதை. நான் புணர்ந்தவள் ஒரு கழுதை.

மற்றொருவன் சொன்னான்.
 • வைரவக் கடவுளின் வாகனமாக, முலைகள் பத்து கொண்டதாக ஊரெல்லாம் திரிவது நாய். நான் புணர்ந்தவள் ஒரு நாய்.  

 
ஒரு காமுகன் சொன்னான் - நான் புணர்ந்த பெண் ஒரு கழுதை

மற்றொரு காமுகன் சொன்னான் - நான் புணர்ந்த பெண் ஒரு நாய்

யாப்பு - விருத்தம்
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


Monday, 6 March 2017

விவேகசிந்தாமணி அரவிந்த நண்பன் VivegaSindamani 123

அரவிந்த நண்பன் சுதன்றம்பி மைத்துனன் அண்ணன்கையில்
வரமுந்தி யாயுதம் பூண்டவன் காணுமற் றங்கவனே
பரமன் றிகிரியை யேந்திய மாந்தன் பகைவன் வெற்பை
உரமன் றெடுத்தவன் மாற்றான்றன் சேவக னொண்டொடியே. (123)

அக்கா தங்கையராகிய விலைமாதர் இருவர் அவரவர் வீட்டுக்கு வந்து உறவாடியவன் யார் என்று சொல்கின்றனர்.
அக்கா தன் வீட்டிக்கு வந்தவன் யார் என்று சொல்கிறாள்.
 • தாமரையின் நண்பன் சூரியனுக்குப் பிறந்தவன் கன்னன்.
 • கன்னன் தம்பி அருச்சுனனின் மைத்துனன் கண்ணன்.
 • கண்ணன் தம்பி பலராமன் கையில் இருக்கும் கலப்பையை இழுப்பது எருமைக் கடா.
என் வீட்டுக்கு வந்ததவன் ஒரு எருமைக் கடா.

தங்கை தன் வீட்டுக்கு வந்தவன் யார் என்று சொல்கிறாள்.
 • திகிரியாகிய சக்கரம் ஏந்திய திருமால் மனிதனாக வந்தது இராமன்.
 • இராமன் பகைவன் இராவணன்.
 • இராவணன் பரமன் மலையைத் தூக்கிய உரம் படைத்த மன்னன்.
 • இராவணனின் மாற்றான் இராமன்.
 • இராமன் சேவகன் அனுமான்.
 • அனுமான் ஒரு குரங்கு.

என் வீட்டுக்கு வந்தவன் ஒரு குரங்கு.
 
என் வீட்டுக்கு வந்தவன் ஒரு எருமைக் கடா

என் வீட்டுக்கு வந்தவன் ஒரு குரங்கு

யாப்பு - விருத்தம்
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


விவேகசிந்தாமணி அறங்கெடும் VivegaSindamani 122

அறங்கெடும் நிதியுங் குன்று மாயுங் காலன்
நிறங்கெடும் மதியும் போகி நீண்டதோர் நரகிற் சேர்க்கும்
மறங்கெடும் மறையோர் மன்னர் வணிகர்நல் லுழவோ ரென்னுங்
குலங்கெடும் வேசை மாதர் குணங்களை விரும்பு வோர்க்கே. (122)

வேசை மாதர் குணங்களை விரும்புபவருக்கு
 • அறநெறி கெட்டுப் போகும்.
 • செல்வம் குறையும்.
 • வாழ்நாள் மாயும்.
 • மேனியின் போலிவு நிறம் கெடும்.
 • புத்தி கெட்டுப்போகும்.
 • நீண்ட நரக உலகில் சேர்ப்பிக்கும்.
 • வீர உணர்வு கெடும்.
 • மறையோர், மன்னர், வணிகர், நல்ல உழவர் என்று பாராட்டப்படும் குலச் சிறப்பு கெடும்.

வேண்டுமா வேசை ஆசை?

யாப்பு - விருத்தம்
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


விவேகசிந்தாமணி வேலியானது VivegaSindamani 121

வேலியானது பயிர்தனை மேய்ந்திட விதித்தாற்
காலனானவ னுயிரதனைக் கவர்ந்திட நினைந்தால்
ஆலமன்னையர் பாலகர்க் கருத்துவ ரானால்
மேலிதோர்ந்துடன் யார்கொலோ விலக்குவர் வேந்தே. (121)

மன்னனுக்கு அறிவுரை கூறியது
வேந்தே!
 • பயிரைக் காக்கும் வேலியே பயிரை மேய்வது விதி ஆனால்
 • சாகும் காலம் வருமளவும் உயிரைக் காப்பாற்ற வேண்டிய எமன்னே இடையில் உயிரைக் கவர்ந்தால்
 • நஞ்சினைத் தாயே தன் பிள்ளைக்கு ஊட்டக் கருதினால்

மேல் இதனை எண்ணிப்பார்த்து விலக்க வல்ல ஆற்றல் படைத்தவர் யார்?

யாப்பு - விருத்தம்
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


விவேகசிந்தாமணி ஒருவனே VivegaSindamani 120

ஒருவனே யிரண்டு யாக்கை யூன்பொதி யானநாற்றம்
உருவமும் புகழு மாகு மதற்குள் நீயின்ப முற்று
மருவிய யாக்கை யிங்கே மாய்ந்திடு மற்றி யாக்கை
திறமதா யுலக மேத்தச் சிறந்துபின் னிற்கு மன்றே. (120)
 
உடம்பு
ஒருவனுக்கு இரண்டு உடம்பு உண்டு. ஒன்று சதைப் பிண்டமாக மணக்கும் உருவ உடம்பு. மற்றொன்று புகழ் உடம்பு. மாய்வதற்குள் இரண்டு உடம்புக்குள்ளும் இன்பம் காணவேண்டும். உருவ உடல் மாய்ந்த பின்னர் புகழ் உடம்பு நிலைத்து நிற்கும்.

யாப்பு - விருத்தம்
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


விவேகசிந்தாமணி அருமையும் VivegaSindamani 119

அருமையும் பெருமை தானு மறிந்துடன் படுவர் தம்மால்
இருமையு மொருமை யாகி யின்புறற் கேதுவுண்டாம்
பரிவிலாச் சகுனி போலப் பண்புகெட்டவர்கள் நட்பால்
ஒருமையி னரக மெய்து மேதுவே யுயரு மன்னோ. (119)

அருமை பெருமைகளை அறிந்து உடன்பட்டுக் கூடி வாழ்பவர்களால் இம்மை இன்பமும், மறுமை இன்பமும் பெறலாம்.

இரக்கமே இல்லாத சகுனி போன்ற பண்பு கெட்டவர் நட்பால் உறுதியாக நரகம் எய்தும் வாழ்வே கிட்டும்.
 
சகுனி
யாப்பு - விருத்தம்
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


விவேகசிந்தாமணி ஆதி VivegaSindamani 118

ஆதியா மிருவர் நட்புக் கவமதிப் புற்ற வர்க்குள்
சூதினால் கபடஞ் செய்து துணைபிரிந் திடுவ ரென்றால்
வேதியன் பவன வாயில் வேசைதாய் பச்சை நாவி
யூதிய கதைபோ லாகி உறுநர கெய்து வாரே. (118)

ஆதியில் நண்பராக இருந்த இருவருக்குள் ஒருவரால் மற்றொருவருக்கு அவமதிப்பு நேர்ந்தபோது, சூதாட்டக் கபடத்தால் இருவரும் பிரிந்தனர். (துரியோதனன், பாண்டவர் கதை) வேதியன் ஒருவன் வேசியிடம் தொடர்பு வைத்திருந்தான். வேதியன் பணம் தரவில்லை என்று வேசியின் தாயானவள் வேதியனைக் கொல்ல அவன் உடலுறவு கொள்ளும் உறுப்பில் நஞ்சு வைத்தாள். அந்த நஞ்சு உடலுறவின்போது விந்தில் இறங்கி, வேதியனும் மகளாகிய வேசையும் மாண்டுபோயினர்.
 
உடல் உறவு
யாப்பு - விருத்தம்
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


விவேகசிந்தாமணி கைகேசி VivegaSindamani 117

மங்கை கைகேசி சொற்கேட்டு மன்னர்புகழ் தசரதனும் மரண மானான்
செங்கமலச் சீதைசொல் ஸ்ரீராமன் கேட்டவுடன் சென்றான் மான்பின்
தங்கையவள் சொற்கேட்ட ராவணனும் கிளையோடு தானு மாண்டான்
நங்கையர்சொற் கேட்பதெல்லாங் கேடுவரும் பேருலகோர் நகைப்பர் தாமே. (117)


 • மங்கை கைகேசியின் சொல்லைக் கேட்டு மன்னர் பலரும் புகழும் தசரதன் மாண்டான்.
 • செங்கமலச் செல்வி சீதையின் சொல்லைக் கேட்டு சீர் மிக்க இராமன் மானின் பின் சென்று மனைவியை இழந்தான்.
 • தங்கை சூர்ப்பனகையின் சொல்லைக் கேட்டு இராவணன் தன் சுற்றத்தாருடன் மாண்டுபோனான்.
நங்கையர் சொல்லைக் கேட்பது எல்லாமே நகைப்பை உண்டாக்கும். கேடு விளைவிக்கும்.  

இராவணன்
யாப்பு - விருத்தம்
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


விவேகசிந்தாமணி மை VivegaSindamani 116

மையது வல்லியம் வாழ் மலைக்குகை தனிற் புகுந்தே
ஐயமும் புலிக்குக் காட்டி யடவியிற் றுரத்துங் காலை
பையவே நரிக்கோ ளாலே படுபொரு ளுணரப் பட்ட
வெய்யவம் மிருகத் தானே கொன்றிட வீழ்ந்த தன்றே. (116)

மை என்று சொல்லக்கூடிய ஆட்டுக் கடா புலி வாழும் மலைக் குகையில் புகுந்து, புலி அஞ்சும்படி ஏதோ ஒரு தந்திரம் செய்து புலியைக் காட்டுக்குள் ஓடும்படித் துரத்தும்போது, அங்கே வந்த நரியின் குறிப்பால் ஆட்டுக் கடாவின் உண்மை நிலையைத் தெரிந்துகொண்டு, புலி ஆட்டுக் கடாவினைக் கொன்றது. ஆட்டுக்கடா புலிக்கும் நரிக்கும் உணவானது.
 
மை | மைந்நிற ஆட்டுக் கடா
யாப்பு - விருத்தம்
அல்லல் போம் வழிகள் கூறும் நூல் விவேக சிந்தாமணி
உலகியல் | பகுத்தறிவு | மனச்சுடர்


Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி