Showing posts with label விநாயகர்அகவல். Show all posts
Showing posts with label விநாயகர்அகவல். Show all posts

Sunday, 14 February 2016

விநாயகர் அகவல் Vinayakar Agaval 7

  • கணு முற்றி நின்ற கரும்பு என்று விநாயகப் பெருமான் காட்டியது சிவபெருமானை. 
  • சிவன் உலகின் உருவப் பொருளான அணுவுக்குள் அணுவாக இருக்கிறான். 
  • அருவப் பொருளாக இருப்பது அண்டத்துக்கு அப்பால் இருப்பது. 
  • இந்த அருவத்துக்கு மேல் அப்பால் அருவமாக இருக்கிறான். 
  • இந்தக் கரும்பை விநாயகப் பெருமான் காட்டினார். 
  • நீறுவேடம் போடவர்களையும், உண்மையாகத் திருநீறு அணிந்தவர்களையும் என்முன் நிறுத்தி விளங்கிக்கொள்ளும்படிச் செய்தார். 
  • ஐந்து எழுத்து (அஞ்சு+அக்கரம்)மந்திரத்தின் பொருளை விளக்கினார். 
  • நெஞ்சக் கருத்து நிலைகொள்ளும் இடத்தை அறிவித்தார். 
  • தத்துவ நிலையை எனக்குத் தந்து என்னை வித்தகன் ஆக்கிய வித்தகன் விநாயகப் பெருமான். 
  • விநாகப் பெருமானின் விரைந்துவரும் திருவடிகளில், மணக்கும் திருவடிகளில் (விரை = விரைதல், மணம்) அடைக்கலம் புகுகிறேன்.

அணு

பாடல் - பொருள் நோக்குச் சொற்பிரிப்பு
பகுப்பு 7

அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க் (65)
கணு முற்றி நின்ற கரும்புளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடு மெய்த்தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலை அறிவித்துத் (70)
தத்துவ நிலையைத் தந்து எனை ஆண்ட
வித்தக! விநாயக! விரைகழல் சரணே. (72)

விநாயகர் அகவல் முற்றும்

15 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய விநாயகர் அகவல்

விநாயகர் அகவல் Vinayakar Agaval 6

இருள்வெளி இரண்டு. ஒன்று நம் மனத்துக்குள் இருக்கும் இருள். மற்றொன்று அண்டவெளிப் பரப்பில் உள்ள இருள். இவை இரண்டுக்கும் இடம் ஒன்றுதான் என்பதைக் காட்டி அருள் பாலித்து ஆனந்தத்தில் என்னை மூழ்கடித்தார். என் காதுகளிலும் ஆனந்தம் பெருகும் கருத்துக்களை ஓதினார். என் துன்பத்தைப் போக்கி அருள் வழியைக் காட்டினார். சத்தத்தின் உள்ளே சதாசிவம் இருப்பதையும் சித்த நினைவலைக்குள்ளே சிவலிங்கம் இருப்பதையும் காட்டினார். (சதாசிவம் = காதுகளில் ஒலிப்பதெல்லாம் சிவம். சிவலிங்கம் = நினைவலைகள் எல்லாம் சிவம்)
சிவலிங்கம்

பாடல் - பொருள் நோக்குச் சொற்பிரிப்பு
பகுப்பு 6

இருள் வெளி இரண்டிற்கு ஒன்று இடம் என்ன
அருள் தரும் ஆனந்தத்து அழுத்தி என் செவியில் (60)
எல்லை இல்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள் வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

15 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய விநாயகர் அகவல்

Thursday, 11 February 2016

விநாயகர் அகவல் Vinayakar Agaval 5

சிந்தை தெளிவித்த செய்திகள் இப்பகுதியில் கூறப்படுகின்றன.
சண்முகம் என்பது 6 முகம். சதுர்முகம் என்பது 4 முகம். எண்முகம் என்பது 8 முகம். விநாயகப் பெருமானின் தம்பிக்கு ஆறுமுகம். பிரமனுக்கு 4 முகம். சிவபெருமானுக்கு 8 தோள். விநாயகப் பெருமான் 6, 4, 8 முகங்களைக் காட்டி அருள் பாலிக்கிறார்.
நம் உடம்பில் உயிரோட்டச் சுழற்ச்சி (புரி) நிகழ்ந்துகொண்டிருப்பதை எனக்குக் காட்டினார். உயிரோட்டத்தின் எட்டு நிலைகளைக் கண் குளிரக் காணும்படிச் செய்தான். மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்கினை, துரியம், இறைநிலை ஆகியவை விநாயகன் காட்டிய எட்டுத் தவநிலைகள்.
கருத்தின் இருப்பிடமாகக் கபாலமாகிய மண்டை ஓட்டுக்குள் இருக்கும் வாயிலைத் திறக்க வழிகாட்டினார். (அறிவைத் திறக்க வழிகாட்டினார்). என் அறிவில் அவர் அமர்ந்துகொண்டு முத்தியைக் கொடுத்தார். “நான்” யார் என்பதை எனக்குத் தெரிவித்தார். முன்பிறவியில் நான் செய்த வினையின் பதிவுகளை வேரோடு கிடுங்கி எறிந்தார். வாய்ப்பேச்சும் மனவோட்டமும் இல்லாத மன-அமைதியைத் தேடும்படி என் சிந்தையைத் தெளிவித்தார்.  

பாடல் - பொருள் நோக்குச் சொற்பிரிப்பு
பகுப்பு 5

சண்முக தூலமும் சதுர்முகச் சூக்கமும்
எண் முகமாக இனிது எனக்கு அருளிப் (50)
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரி எட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிது எனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து (55)
முன்னை வினையின் முதலைக் களைந்தே
வாக்கும் மனமும் இல்லா மனோ லயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து

15 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய விநாயகர் அகவல்
விநாயகர் காட்டிய முகங்கள்

Wednesday, 10 February 2016

விநாயகர் அகவல் Vinayakar Agaval 4

உடல் உறுப்பில் உணர்வு உருளும் சக்கரங்கள் இதில் கூறப்பட்டுள்ளன.
  • உடலில் ஆறு ஆதார நிலைகள் உள்ளன. மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்கினை என்பவை அவை. நினைவொடு கூடிய உணர்வை அவற்றில் நிறுத்தி இயைந்திருக்கும் துரியநிலையை உணர்த்தினார்.
  • மூக்கின் இடப்பக்கத் துளையில் மட்டும் மூச்சு ஓடும்படிச் செய்வது இடகலை (சந்திர-கலை). வலப்பக்கத் துளையில் மட்டும் மூச்சு ஓடும்படிச் செய்வது பிங்கலை (சூரிய-கலை). ஒன்றில் இழுத்து, மற்றொன்றில் விட்டு இரு துளையிலும் மாறி ஓடும்படிச் செய்வது சுழுமுனை. இப்படி மூச்சு ஓடும்படிப் பழக்குவது கபால-நிலை. இதனைக் காட்டிக்கொடுத்தார். 
  • உடலின் உணர்வுகள் மூன்று தூண்களில் முட்டுகின்றன. மூளை, தண்டுவடம், மூலாதாரம் என்பவை அந்த மூன்று மண்டலங்கள். இவற்றில் முளைத்து (நான்று, நாற்றாகி) எழும் பாம்பு (பாயும் உணர்வு) சுழியை பிள்ளையார் தன் நாவால் உணர்த்திக் காட்டினார்.
  • இந்த உணர்வுச் சுழற்ச்சிக்குக் குண்டலினி என்று பெயர். இதில் அசை போட்டு வெடித்து எழும் மந்திரத்தை வெளிப்படையாகச் சொன்னார்.
  • மூலாதாரத்திலிருந்து உணர்வுக்-கனல் எழும்பும். (ஆண் பெண் கூடலில் இதனை உணர்ந்துகொள்ளலாம்) அதனை மூச்சால் எழுப்பும் கருத்தை அறிவித்தார்.
  • அமுத-நிலை என்பது உடலிலுள்ள குளுமை. ஆதித்தன் இயக்கம் என்பது உடலிலுள்ள சூடு. குமுத-சகாயன் என்பது உடலின் வெப்ப-தட்பத்தை உடல் தானாகவே சீராக்கி வைத்துக்கொள்ளும் உடலியக்கம். இவற்றின் தாக்க-விளைவு இது இது என்று எடுத்துச் சொன்னார்.
  • இடைச்சக்கரம் என்பது உடலில் இடையே ஓடும் உயிர். இது உடலில் 16 இடங்களில் நிலைகொள்ளும். கண்டம் என்னும் தொண்டை-முட்டு, நெற்றியின் இரு முனைகளிலும் உள்ள பொட்டு, ஆணின் விதைப்பை, பெண்ணின் குறி-முளை போன்றவை அந்த 16 உயிர்நிலைகள். உயிர்நிலைகள் இவை என்று தொட்டுக் காட்டினார். (இவற்றைத் தொடுவர்மம் என்பர்).

பாடல் - பொருள் நோக்குச் சொற்பிரிப்பு
பகுப்பு 4

ஆறு ஆதாரத்து அங்கு இசைநிலையும் (35)
பேறா நிறுத்திப் பேச்சு உரை அறுத்தே
இடை பிங்கலையின் எழுத்து அறிவித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலம் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்று எழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)
குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டு எழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்தின் மூண்டு எழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச் சக்கரத்தின் ஈர் எட்டு நிலையும்
உடல் சக்கரத்தின் உறுப்பையும் காட்டிச்

15 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய விநாயகர் அகவல்
ஆறு ஆதாரத்தின் ஏழாம் நிலை
மூலாதாரத்தில் மூண்டெழு பாம்பு (பாயும் உணர்வு) 

விநாயகர் அகவல் Vinayakar Agaval 3

பிள்ளையார் காட்டியவை இப் பகுதியில் கூறப்படுகின்றன.
நல்வினை, தீவினை என்பன இருவினை என்று கொள்ளப்படுகின்றன. இருள் சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு என்பது திருக்குறள். இவை மறுபிறவியைத் தோற்றுவிக்கும் விதைகள். இவற்றைப் பிள்ளையார் அறுத்தெறிகிறார். இதனால் மறுபிறவி இல்லாமல் போகிறது.
அறம், பொருள், இன்பம், வீடு என்பன நான்கு இருப்பிடங்கள். மன-இருளைப் போக்கிய பின்னர் இந்த நான்கு இருப்பிடங்களை விநாயகர் அளிக்கிறார்.
காமம், வெகுளி, மயக்கம் என்னும் இவை மூன்றும் மலங்கள். காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக் கெடும் நோய் என்பது திருக்குறள். பிள்ளையார் இந்த மூன்று மலங்களைக் கழுவி விட்டு நம்மைத் தூய்மைப்படுத்துகிறார்.
நம் உடலில் கண் 2, காது 2, மூக்கு 2, வாய் 1, சிறுநீர்-வாய் 1, மல-வாய் 1 – என்று 9 வாயில்கள் உள்ளன அவை வெளி-உலகை உள்வாங்கி, மனத்தில் நிறுத்தி வெளியேற்றுகின்றன. இவற்றைத் தூய்மைப்படுத்த ஒரு மந்திரம் சொல்லித் தந்திருக்கிறார். (நமசிவாய). அதனால் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்புலன்களின் கதவுகளை அடக்கி வைக்கும் முறைகளையும் காட்டியருளினார்.

பாடல் - பொருள் நோக்குச் சொற்பிரிப்பு
பகுப்பு 3

இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து (30)
தலம் ஒரு நான்கும் தந்து எனக்கு அருளி
மலம் ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி

15 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய விநாயகர் அகவல்
மும்மலம்
மூன்று உணர்வுக் கழிவுகள்


Tuesday, 9 February 2016

விநாயகர் அகவல் Vinayakar Agaval 2

விநாயகர் ஆட்கொள்ளும் பாங்கு இப்பகுதில் கூறப்படுகிறது.
இப்போது என்னைத் தன் ஆள் என்று ஆக்கிக்கொள்வதற்காக வந்துள்ளார். தாயாக இருந்து என்னைப் பாதுகாக்கிறார். என்னை விட்டு விலகாமல் மயக்கி என்னைப் பற்றிக்கொண்டிருக்கும் பிறவியை அறுத்து எறிந்துவிட்டார். “நமசிவாய’ என்னும் திருந்திய ஐந்தெழுத்து மந்திரத்தை என் உள்ளத்தில் தெளிவுபடப் புகுத்தினார். எனக்குக் குருவாக விளங்குகிறார். நில உலகில் தன் திருவடிகளைப் பதித்துள்ளார். இதுதான் மெய்பொருள் என்று விளக்கினார். வெற்றியை எனக்கு மகிழ்வோடு வழங்கிக்கொண்டே இருக்கிறார். என் கொடிய செயல்களைத் தன் கொம்பு ஒன்றால் மாற்றி எழுதிக்கொண்டிருக்கிறார். நல்லனவற்றை என் காதுகளில் போட்டுக்கொண்டே இருக்கிறார். என் அறிவைத் தெளிய வைக்கிறார். ஐம்புலன்களை அடக்கும் உத்திகளைத் தன் கருணையால் எனக்குக் காட்டிக்கொண்டே இருக்கிறார். புலனொடுக்கம் பற்றிப் புகட்டிக்கொண்டே இருக்கிறார்.
புலன் ஒடுக்கம்
 
பாடல் - பொருள் நோக்குச் சொற்பிரிப்பு
பகுப்பு 2

இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித்
தாயாய் எனக்குத் தான் எழுந்தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே
திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்து என் உளந்தனில் புகுந்து (20)
குரு வடிவாகிக் குவலயம் தன்னில்
திருவடி வைத்துத் திறம் இது பொருள் என
வாடா வகை தான் மகிழ்ந்து எனக்கு அருளிக்
கோடு ஆயுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில் (25)
தெவிட்டா ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிது எனக்கு அருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து

15 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய விநாயகர் அகவல்


Monday, 8 February 2016

படைப்புருவம் விநாயகர் அகவல் Vinayakar Agaval 1

விஞ்ஞானம் என்னும்போது –வி- எழுத்து ‘சிறந்த’ என்னும் பொருளைத் தருவதை அறிவோம். அதுபோல விநாயகர் என்னும் சொல் சிறந்த நாயகர் (தலைவர்) என்னும் பொருளைத் தரும். பிள்ளையார் என்று மக்கள் வழிபடும் தெய்வம் இது.
பிள்ளையாரின் படைப்பு-உருவம் இந்தப் பகுதியில் போற்றப்பட்டுள்ளது.
  • பிள்ளையாரின் காலடிகளில் குளுமை தரும் சந்தனம் பூசப்பட்டுள்ளது. அவை செந்தாமரைப் பூவைப் போல உள்ளன. அவற்றில் அணிந்திருக்கும் சிலம்பு பல்வேறு இசைகளைப் பாடுகிறது. 
  • பொன்னால் செய்யப்பட்ட அரைஞாண் கயிறும், அழகிய ஆடையும் அவனது இடையில் அழகொளி வீசுகின்றன.
  • பெட்டி போன்ற வயிறு.
  • பெரிய பாரத்தைச் சுமக்கக்கூடிய யானைத்தந்தக் கொம்பு.
  • ஐந்து கைகள்.
  • ஒரு கையில் அங்குசம்.
  • மற்றொரு கையில் பாசக்கயிறு.
  • அடியேன் நெஞ்சில் குடியிருக்கும் நீலநிற மேனி. (திருமால் நீலநிறம்)
  • தொங்கும் வாய்.
  • எட்டுத் தோள்கள்.
  • மூன்று கண்கள்.
  • மூன்று மதம் (யானை மதம்) ஒழுகிய படிவு.
  • இரண்டு காது.
  • பொன்னாலான முடி (கிரீடம்).
  • மார்பில் முப்புரிப் பூணூல்.
  • பூணூல் ஒளிறும் மார்பு.
  • துரியத்தில், சொல்லில் அடங்காத மெய்ஞ்ஞான நினைவலை.
  • இப்படி அற்புதக் களிறாக (ஆனையாக) விளங்குபவன்.
  • மூன்று ஞானப்பழகளை உண்ணுபவன்.

எலி வாகனத்தில் ஏறி வருபவன்.
எலி வாகனத்தில் பிள்ளையார்
பாடல் - பொருள் நோக்குச் சொற்பிரிப்பு
பகுப்பு 1

சீதக் களபச் செந்தாமரைப் பூம்
பாதச் சிலம்பு பல இசை பாட
பொன் அரைஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்து அழகெறிப்ப
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (5)
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)
இரண்டு செவியும் இலங்கு பொன் முடியும்
திரண்ட முப்புரி நூல் திகழ் ஒளி மார்பும்
சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூசிக வாகன (15)

15 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய விநாயகர் அகவல்
மூசிக வாகனன்


விநாயகர் அகவல் Vinayakar Agaval

விநாயகர்
15 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய விநாயகர் அகவல்

பாடல் மூலம்

பொருள் நோக்குச் சொற்பிரிப்பு
1
சீதக் களபச் செந்தாமரைப் பூம்
பாதச் சிலம்பு பல இசை பாட
பொன் அரைஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்து அழகெறிப்ப
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (5)
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)
இரண்டு செவியும் இலங்கு பொன் முடியும்
திரண்ட முப்புரி நூல் திகழ் ஒளி மார்பும்
சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூசிக வாகன (15)
2
இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித்
தாயாய் எனக்குத் தான் எழுந்தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே
திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்து என் உளந்தனில் புகுந்து (20)
குரு வடிவாகிக் குவலயம் தன்னில்
திருவடி வைத்துத் திறம் இது பொருள் என
வாடா வகை தான் மகிழ்ந்து எனக்கு அருளிக்
கோடு ஆயுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில் (25)
தெவிட்டா ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிது எனக்கு அருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து
3
இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து (30)
தலம் ஒரு நான்கும் தந்து எனக்கு அருளி
மலம் ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
4
ஆறு ஆதாரத்து அங்கு இசைநிலையும் (35)
பேறா நிறுத்திப் பேச்சு உரை அறுத்தே
இடை பிங்கலையின் எழுத்து அறிவித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலம் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்று எழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)
குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டு எழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்தின் மூண்டு எழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச் சக்கரத்தின் ஈர் எட்டு நிலையும்
உடல் சக்கரத்தின் உறுப்பையும் காட்டிச்
4
சண்முக தூலமும் சதுர்முகச் சூக்கமும்
எண் முகமாக இனிது எனக்கு அருளிப் (50)
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரி எட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிது எனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து (55)
முன்னை வினையின் முதலைக் களைந்தே
வாக்கும் மனமும் இல்லா மனோ லயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
5
இருள் வெளி இரண்டிற்கு ஒன்று இடம் என்ன
அருள் தரும் ஆனந்தத்து அழுத்தி என் செவியில் (60)
எல்லை இல்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள் வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
6
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க் (65)
கணு முற்றி நின்ற கரும்புளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடு மெய்த்தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலை அறிவித்துத் (70)
தத்துவ நிலையைத் தந்து எனை ஆண்ட
வித்தக! விநாயக! விரைகழல் சரணே. (72)

முற்றும்

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி