Showing posts with label மலைபடுகடாம். Show all posts
Showing posts with label மலைபடுகடாம். Show all posts

Friday, 28 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam தனிப்பாடல்

சூரியனைப் பாம்பு விழுங்குவதால்
சூரிய கிரகணம்
நம்பிய பழங்காலக் கதை

 • பிற்காலத்தில் இந்த நூலின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ள தனிப்பாடல் வெண்பா இரங்கல் பாடலாக அமைந்துள்ளது.
 • நன்னன் ஏதோ ஒரு போரில் மாண்டது போன்ற மாய எண்ணத்தைச் சூரியன் பாம்பின் வாய்ப் பட்டானோ என்று பாடலில் பயின்று வரும் பிறிது மொழிதல் அணி தோற்றுவிக்கிறது.
 • (இராகு என்னும் பாம்பு சூரியனை விழுங்கி உமிழும்போது சூரிய கிரகணம் தோன்றுகிறது என்பது அக்காலத்துக் கற்பனை)
 • சூரியன் தெரியவில்லை. ஏன்?
 • (அவனது அரண்மனையில், வந்தவர்களுக்கெல்லாம் விருந்து படைக்க) உணவு மிகப் பேரளவில் சமைக்கும்போது எழும் புகை வானத்தைப் போர்த்திச் சூரியனை மறைத்துள்ளதோ?
 • சூரியனைப் பாம்பு விழுங்கி விட்டதோ?
 • அன்ன நடையும் அழகிய முகமும் கொண்ட மகளிரின் மாந்தளிர் போன்ற நிறம் பசுமை பூத்துக் கிடக்கிறதே! காரணம் என்ன?
 • நன்னன் வானுலகம் சென்றுவிட்டானோ?
 • அவன் இல்லாததால் மகளிர் மேனியில் பசலை பூத்துக் கிடக்கிறதோ?
 • இப்படிப் பார்க்கும்போது இது அகப்பொருள் பற்றிய பாடல்.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு
தனிப் பாடல்

தூஉஉத் தீம் புகை தொல் விசும்பு போர்த்ததுகொல்?
பாஅய்ப் பகல் செய்வான் பாம்பின்வாய்ப் பட்டான்கொல்?
மாஅ மிசையான் கோன் நன்னன் நறு நுதலார்
மாஅமை எல்லாம் பசப்பு!

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை
இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்


மலைபடுகடாம் Malaipadukadam 85

இது பேரியாறு பாயும் நிலம்
இதன் குன்றுகள் சூழ்ந்த பகுதி தன்னன் நாடு
மூங்கிலடர்ந்த நவிரமலையில் பொழியும் மழை போல வழங்குவான்.
தலைநாள் போல் வழங்குவான்.
 • வழங்கும் கை - வறுமையால் வாடிக் கையேந்தும் புலவர்களுக்குக் கைநிறையத் தருவான்.
 • வாய்வளம் - பொருள் வளத்தை வாய்வளம் பழுக்க இனிய கூறித் தருவான்.
 • நவிரம் - அவனது நவிர மலைமேல் திடீர் திடீரென்று மழை கொட்டுவது போல் கொடைப் பொருள்களைக் கொட்டுவான்.
 • தலைநாள் - வாழ்நாளிலேயே தமக்கு வாய்த்த தலைமையான நாள் என்று எண்ணிக்கொண்டு, ஏற்போர் அவர்களது வாழ்நாளில் தலைமையான நாள் என்று கருதும்படிப் பரிசில் வழங்குவான்.
 • அருவி - நவிர மலையில் இறங்கிவரும் அருவியானது நன்னன் தன் பகைவர்களை வென்று மீளும்போது பிடித்துக்கொண்டு வரும் கொடிபோல் தோன்றும்.
 • குன்று சூழ் இருக்கை - நன்னனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடு பல குன்றுகளைத் தன்னகத்தே கொண்டதாக விளங்கிற்று.
இந்த நாட்டின் கிழவன் அவன்.
இந்த நாட்டை ஆளும் உரிமை பூண்டவன் இந்த நன்னன்.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

இலம்படு புலவர் ஏற்ற கைந் நிறைய,               
கலம் பெயக் கவிழ்ந்த கழல் தொடித் தடக் கையின்            
வளம் பிழைப்பு அறியாது, வாய் வளம் பழுநி,           
கழை வளர் நவிரத்து மீமிசை, ஞெரேரென   
மழை சுரந்தன்ன ஈகை நல்கி,    580
தலை நாள் விடுக்கும் பரிசில் மலை நீர்          
வென்று எழு கொடியின் தோன்றும்    
குன்று சூழ் இருக்கை நாடுகிழவோனே            

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை
இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்


மலைபடுகடாம் Malaipadukadam 84

நன்னன் நல்கும் கொடை
புரவியின் பொலம்படை
குதிரை லாடம்
நன்னன் லாடம் கட்டிய குதிரை நல்குவான்
 • தாமரை – தலைவன் தலையில் அணியத் தாமரை என்னும் அணிகல-முடி
 • இழை – விறலியர் மார்பில் அணிய ஒளிவீசும் அணிகலன்கள்
 • தேர் – தண்ணீர் பாய்வது போல் நிறைவுடன் குளுமையாகச் செல்லும் தேர்
 • வேழம் – ஆற்றுவாரி கொள்ளாத அளவுள்ள குன்று போன்ற யானை
 • ஆனிரை - காளைகளுடன் கழுத்தில் மணி கட்டிய மாட்டு மந்தை
 • புரவி - காலில் லாடம் கட்டிய குதிரைகள்.
 • நிதியம் - ஏற்றிச் செல்ல முடியாமல் நிலம் தின்னட்டும் என்று எறிந்துவிட்டுச் செல்லக் கூடிய அளவில் பேரளவு நிதியம்
அனைத்தும் நல்குவான்.
இன்னும் நல்குவான்.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

தலைவன் தாமரை மலைய, விறலியர்          
சீர் கெழு சிறப்பின் விளங்குஇழை அணிய,   570
நீர் இயக்கன்ன நிரை செலல் நெடுந் தேர்,       
வாரிக் கொள்ளா வரை மருள் வேழம்,              
கறங்கு மணி துவைக்கும் ஏறுடைப் பெரு நிரை,     
பொலம் படைப் பொலிந்த கொய் சுவல் புரவி,           
நிலம் தினக் கிடந்த நிதியமோடு, அனைத்தும்,        575

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை
இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்


மலைபடுகடாம் Malaipadukadam 83

முடுவல்
வேட்டைநாய்
உடுக்க ஆடை, உண்ணக் கறிச்சோறு பலநாள் தங்கினும் தருவான். இப்படித்தான் நன்னன் விருந்து இருக்கும்.
புத்தாடை - இழை தெரியாத மெல்லிய நூலால் உடல் தெரியாத அளவுக்கு நெருக்கமாக நெய்யப்பட்ட , பழிக்க முடியாத அளவுக்கு மிகவும் சிறப்பினைக் கொண்ட புத்தாடையை முதலில் அணிந்துகொள்ளச் செய்வான். (வெள் அரை = அரைகுறையாக ஆடை உடுத்திக் கொண்டிருந்த இடை)
விருந்து - முடுவல் என்னும் வேட்டை நாய் முடுக்கித் தான் கொண்டுவந்த விலங்கினக் கறியோடு நீண்ட அரிசியைக் கொண்ட நெல்லஞ் சோற்றை விருந்தாகப் படைப்பான்.
பலநாள் தங்கினாலும் முதல் நாளில் காட்டிய அதே விருப்பத்தோடு வழங்குவான்.
செல்வேம் தில்ல - நாங்கள் எங்கள் பழைய ஊருக்குச் செல்ல விரும்புகிறோம் – என்று மெல்ல, செய்தி சொல்லி அனுப்பினால் போதும். அவன் முந்திக் கொள்வான்.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

இழை மருங்கு அறியா நுழை நூல் கலிங்கம்            
எள் அறு சிறப்பின் வெள் அரைக் கொளீஇ,    
முடுவல் தந்த பைந் நிணத் தடியொடு,             
நெடு வெண்ணெல்லின் அரிசி முட்டாது,       
தலை நாள் அன்ன புகலொடு, வழி சிறந்து     565
பல நாள் நிற்பினும், பெறுகுவிர்; 'நில்லாது  
செல்வேம் தில்ல, எம் தொல் பதிப் பெயர்ந்து!' என,              
மெல்லெனக் கூறி விடுப்பின், நும்முள்          

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை
இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்


மலைபடுகடாம் Malaipadukadam 82

வானம்
நன்னன் வானம் போல்
பரந்த உள்ளம் கொண்டவன்

 • நன்னன் ஆற்று மணலைப்போல் மாய விரும்பாதவன்.
 • ஆற்று வெள்ளம் போல் வாழ விரும்புபவன்.
 • தனக்கென்று வரையறுக்கப்பட்ட நாள்கள் புகழோடு கழியட்டும் என்று விரும்புபவன்.
 • அதுதான் பரந்து கிடக்கும் வானம் போன்று விரிந்து கிடக்கும் உள்ளம்.
 • நீங்கள் அவனை நயந்து செல்கிறீர்கள்.
 • அவனோ உங்களைக் காட்டிலும் உவந்த உள்ளம் கொண்டவனாய் ஆசையோடு உங்களைப் பார்த்து வரவேற்பான்.
 • அதுதான் விசும்பு தோய் உள்ளம்

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

அதனால், புகழொடும் கழிக, நம் வரைந்த நாள்!' என,         
பரந்து இடம் கொடுக்கும் விசும்பு தோய் உள்ளமொடு,      
நயந்தனிர் சென்ற நும்மினும், தான் பெரிது,
உவந்த உள்ளமோடு, அமர்ந்து இனிது நோக்கி,         560

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை
இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்


Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி