Showing posts with label மணிமேகலை. Show all posts
Showing posts with label மணிமேகலை. Show all posts

Thursday, 9 November 2017

மணிமேகலை 30-27 Manimegalai 30-27

இந்நால் வகையால் மனத்துஇருள் நீங்குஎன்று
முன்பின் மலையா மங்கல மொழியின்
ஞான தீபம் நன்கனம் காட்ட,
தவத்திறம் பூண்டு தருமம் கேட்டுப்
பவத்திறம் அறுகெனப் பாவைநோற்றனள்என்.

இந்த நான்கு வகையால் மனத்தில் இருக்கும் இருளை நீக்கிக்கொள் என்று முன்னுக்குப் பின் முரண்பாடு இல்லாத மங்கல மொழிகளால் பௌத்த நெறிகளை அறவண அடிகள் விளக்கினார். அந்த ஞான தீப ஓளியில் தவத்தின் மேன்மையைக் கண்ட மணிமேகலை பவத்திறம் (பிறவி) ஒழியும் வகையில் நோன்பிருந்தாள். 

பவத்திறம் அறுக எனப் பாவை நோன்ற காதை முற்றிற்று.
மணிமேகலை முற்றிற்று

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
30 பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
[ பிறவி ஒழிக - என்று மணிமேகலை நோன்பிருந்த பாட்டு  ]

மணிமேகலை 30-26 Manimegalai 30-26

வினாவிடை நான்குஉள
துணிந்து சொல்லல் கூறிட்டு மொழிதல்
வினாவின் விடுத்தல் வாய்வா ளாமைஎனத்

  1. துணிந்து சொல்லல் 
  2. பகுதி பகுதியாகக் கூறு போட்டு மொழிதல் 
  3. எதிர் வினாவால் விடை கூறுதல் 
  4. விடை கூறாமல் இருந்து வினா பிழை என்று உணரவைத்தல் 

என வினாவிடைப் பாங்கு நான்கு வகைப்படும். 

தோன்றியது கெடுமோ கெடாதோ என்றால்
கேடுஉண்டு என்றல் துணிந்துசொலல் ஆகும் 240

தோன்றிய பொருள் கெடுமோ, கெடாதோ என்றால், கேடு உண்டு என்று கூறுதல் துணிந்து சொல்லும் விடை

செத்தான் பிறப்பா னோபிற வானோ
என்று செப்பின்
பற்றுஇறந் தானோ அல் மக னோஎனல்
மிகக்கூ றிட்டு மொழிதல்என விளம்புவர்

செத்தான் பிறப்பானோ, பிறவானோ என்றால், அந்த வினாவை இறந்தவன் பற்றிலிருந்து நீங்கிய மகனா, நீங்காத மகனா எனப் பாகுபடுத்திக்கொண்டு விடை கூறல் கூறிட்டு மொழிதல் விடை.

வினாவின் விடுத்தல் முட்டை முந்திற்றோ 245
பனைமுந் திற்றோ எனக்கட் டுரைசெய்
என்றால் எம்முட்டைக்கு எப்பனை என்றல்

முட்டை முந்தியதா? பனை முந்தியதா? என்று வினவியவனுக்கு எந்த முட்டை? எந்தப் பனை? என்று வினவி விடை கூறுதல் வினாவில் விடுத்தல்.

வாய்வா ளாமை ஆகா யப்பூப்
பழைதோ புதிதோ என்று புகல்வான்
உரைக்கு மாற்றம் உரையாது இருத்தல் 250

ஆகாயப் பூ பழையதோ, புதியதோ என்றால் விடை ஏதும் சொல்லாமல் இருத்தல் வாய் வாளாமை விடை

கட்டும் வீடு அதன்கா ரணத்தது
ஒட்டித் தருதற்கு உரியோர் இல்லை
யாம்மேல் உரைத்த பொருள்கட்கு எல்லாம்
காமம் வெகுளி மயக்கம் காரணம்

ஒருவன் கட்டும் வீடு (வீடு பேறு எனவும் கொள்க) அதன் காரணத்தது. அதனோடு ஒட்டித் தருதற்கு உரியோர் இல்லை. என்பதை, யாம்மேலே உரைத்த பொருள்கட்கு எல்லாம் காமம் வெகுளி மயக்கம் ஆகியவையே காரணம் என உணர்ந்துகொள்ள வேண்டும். 

அநித்தம் துக்கம் அநான்மா அசுசிஎனத் 255
தனித்துப் பார்த்துப் பற்றுஅறுத் திடுதல்

அநித்தம், துக்கம், அநான்மா (ஆன்மா அல்லாதவை), அசுசி (அசிங்கம்) என ஒவ்வொன்றையும் தனித்துப் பார்த்து அதன்மீது உள்ள பற்றினை அறுத்திடுதல் வேஏண்டும். 

மைத்திரி கருணா முதிதைஎன்று அறிந்து
திருந்துநல் உணர்வால் செற்றம்அற் றிடுக

மைத்திரி (கண்ணோட்டம்), கருணை அமுதம் என்று எண்ணிப் பார்த்து, திருந்திய நல்லுணர்வால் சினத்தை விட்டொழிக்க வேண்டும்.

சுருதி சிந்தனா பாவனா தரிசனை
கருதி உய்த்து மயக்கம் கடிக 260

சுருதி (வேதம்), சிந்தனை, பாவனை, தரிசனம் - இவற்றைக் கருதிப் பார்த்து மன-மயக்கத்தைப் போக்கிக்கொள்ள வேண்டும். 

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
30 பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
[ பிறவி ஒழிக - என்று மணிமேகலை நோன்பிருந்த பாட்டு  ]

மணிமேகலை 30-25 Manimegalai 30-25

தொக்க பொருள்அலது ஒன்றுஇல்லை என்றும் 230
அப்பொருள் இடைப்பற்று ஆகாது என்றும்
செய்வா னொடுகோட் பாடுஇலை என்றும்
எய்துகா ரணத்தால் காரியம் என்றும்
அதுவும் அன்றுஅது அலாததும் அன்றுஎன்றும்
விதிமுறை தொகையினால் விரிந்த நான்கும் 235

  1. தொக்க பொருள் அல்லது ஒன்று இல்லை என்றும் 
  2. அப்பொருள் இடைப்பற்று ஆகாது என்றும்
  3. செய்வானொடு கோட்பாடு இல்லை என்றும்
  4. எய்து காரணத்தால் காரியம் என்றும்

அதுவும் அன்று 
அது அல்லாததும் அன்று என்றும்
விதிமுறை தொகையினால் விரிந்தவை நான்கு.

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
30 பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
[ பிறவி ஒழிக - என்று மணிமேகலை நோன்பிருந்த பாட்டு  ]

மணிமேகலை 30-24 Manimegalai 30-24

நான்கு நயம்எனத் தோன்றப் படுவன
ஒற்றுமை வேற்றுமை புரிவின்மை இயல்புஎன்க.

ஒற்றுமைப் படுத்தித் சொல்லுதல், வேற்றுமைப் படுத்திச் சொல்லுதல், சுற்றி வளைக்காமல் சொல்லுதல், இயல்பைச் சொல்லுதல் - ஆகியவை நான்கு வகை நயங்கள் ஆகும். 

காரண காரியம் ஆகிய பொருள்களை 220
ஒன்றா உணர்தல் ஒற்றுமை நயமாம்

காரண காரியத்துடன்  இருக்கும் பொருளை ஒன்றாக ஒப்பிட்டு உணர்தல் ஒற்றுமை நயம்

வீற்றுவீற் றாக வேதனை கொள்வது
வேற்றுமை நயம்என வேண்டல் வேண்டும்

வேறு வேறாகப் பிரித்துக் பிரித்துக் காண்பது வேற்றுமை நயம்

பொன்றக் கெடாஅப் பொருள்வழிப் பொருள்களுக்கு
ஒன்றிய காரணம் உதவுகா ரியத்தைத் 225
தருதற்கு உள்ளம் தான்இலை என்றல்
புரிவின்மை நயம்எனப் புகறல் வேண்டும்

வேண்டும், வேண்டாம் என்று  கூறுவ்வதும், அழியாப் பொருள்களுக்கு ஒன்றி உதவும் காரியத்தைத் தருவதற்கு உள்ளந்தான் இல்லை என்பதைப் புரிவின்மை நயம் என்று சொல்லவேண்டும். 

நெல்வித் தகத்துள் நெல்முளை தோற்றும்எனல்
நல்ல இயல்புநயம் இவற்றில்நாம் கொள்பயன்.

நெல் வித்துக்குள் நெல்முளை தோன்றும் எனல் நல்ல இயல்பு-நயம்

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
30 பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
[ பிறவி ஒழிக - என்று மணிமேகலை நோன்பிருந்த பாட்டு  ]

மணிமேகலை 30-23 Manimegalai 30-23

சொல்லிய தொகைத்திறம் உடம்புநீர் நாடு 200
தொடர்ச்சி வித்து முளைதாள் என்றுஇந்
நிகழ்ச்சியில் அவற்றை நெல்என வழங்குதல்

சொல்லிய தொகைத்திறத்தால் உடம்பு அமைந்துள்ளது. 
நீர், நிலம் ஆகியவற்றின் தன்மைக்கேற்ப நெல் முளை வளர்வது போன்றது அது. 

இயல்பு மிகுத்துஉரை ஈறுடைத்து என்றும்
தோன்றிற்று என்றும் மூத்தது என்றும்
மூன்றின் ஒன்றின் இயல்புமிகுத்து உரைத்தல் 205

இது இப்படி முடியும் என்றும், இப்படித் தோன்றிற்று என்றும், இப்படி மூத்தது என்றும் கூறுதல் இயல்பு-மிகுத்து உரைத்தல் ஆகும். 

இயைந்துரை என்பது எழுத்துப்பல கூடச்
சொல்எனத் தோற்றும் பலநாள் கூடிய
எல்லையைத் திங்கள் என்று வழங்குதல்

எழுத்துக்கள் பல கூடிச் சொல்லாகத் தோன்றும். பல நாள் வளர்ந்த நிலா முழுநிலா ஆவது போன்றது இது. 

உள்வழக்கு உணர்வுஇல் வழக்கு முயல்கோடு
உள்ளது சார்ந்த உள்வழக்கு ஆகும் 210
சித்தத் துடனே ஒத்த நுகர்ச்சி
உள்ளது சார்ந்த இல்வழக்கு ஆகும்
சித்தம்உற் பவித்தது மின்போல் என்கை
இல்லது சார்ந்த உண்மைவழக்கு ஆகும்
காரணம் இன்றிக் காரியம் நேர்தல் 215
இல்லது சார்ந்த இல்வழக்கு ஆகும்
முயல்கோடு இன்மையின் தோற்றமும் இல்எனல்.

முயல் கொம்பு உள்ளது என்பது உணர்வு இல்லா வழக்கு ஆகும். இந்த வழக்கு வழக்கத்தில் இருப்பதுதான். 
சித்தத்துடன் ஒத்த நுகர்ச்சி கொண்டது உள்ளது சார்ந்த இல்வழக்கு ஆகும். 
சித்தத்தில் மின்னல் போல் தோன்றுவது இல்லது சார்ந்த உண்மை வழக்கு
காரணம் இல்லாமல் காரியம் செய்தல் இல்லது சார்ந்த இல்வழக்கு
முயல் கொம்பு இல்லாததால் தோற்றமும் இல்லை என்க. 

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
30 பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
[ பிறவி ஒழிக - என்று மணிமேகலை நோன்பிருந்த பாட்டு  ]

மணிமேகலை 30-22 Manimegalai 30-22

அறுவகை வழக்கு மறுஇன்று கிளப்பின்
தொகையே தொடர்ச்சி தன்மை மிகுத்துரை
இயைந்துரை என்ற நான்கினும் இயைந்த
உண்மை வழக்கும் இன்மை வழக்கும் 195
உள்ளது சார்ந்த உண்மை வழக்கும்
இல்லது சார்ந்த இன்மை வழக்கும்
உள்ளது சார்ந்த இன்மை வழக்கும்
இல்லது சார்ந்த உண்மை வழக்கும்என,

  1. தொகை, தொணர்ச்சி, தன்மை, மிகுத்துரைத்தல், பொருத்தமாக உரைத்தல் என்னும் நான்கு வகையில் பொருந்தி வரும் உண்மை வழக்கு, 
  2. இவை பொருந்தி வராத உண்மையில்லாப் பொய் வழக்கு 
  3. உள்ளது மட்டும் சார்ந்த உண்மை வழக்கு 
  4. இல்லாதன கூறும் இன்மை வழக்கு 
  5. உள்ளதை இல்லை எனக் கூறும் வழக்கு 
  6. இல்லாததை இருப்பதாகக் கூறும் வழக்கு 

இவை அறுவகை வழக்கு 

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
30 பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
[ பிறவி ஒழிக - என்று மணிமேகலை நோன்பிருந்த பாட்டு  ]

மணிமேகலை 30-21 Manimegalai 30-21

உணர்வே அருவுரு வாயில் ஊறே 180
நுகர்வே பிறப்பே பிணிமூப்புச் சாவே
அவலம் அரற்றுக் கவலைகை யாறுஎன
நுவலப் படுவன நோயா கும்மே

உணர்வு 
அருவுரு 
வாயில் 
ஊறு
நுகர்வு 
பிறப்பு 
பிணி
மூப்பு 
சாவு
அவலம் 
அரற்று 
கவலை
கையாறு
எனச் சொல்லப்படுபவை நோய். 

அந்நோய் தனக்குப்
பேதைமை செய்கை அவாவே பற்றுக் 185
கரும ஈட்டம்இவை காரணம் ஆகும்

பேதைமை, செய்கை, அவா, பற்று, ஈட்டிய கருமத் தொகுதி ஆகியவை அந்த நோய்களுக்குக் காரணம் ஆகும். 

துன்பம் தோற்றம் பற்றே காரணம்
இன்பம் வீடே பற்றுஇலி காரணம்
ஒன்றிய உரையே வாய்மை நான்காவது

துன்பம் தோன்றக் காரணம் பற்று. 
இன்ப வீட்டிற்குக் காரணம் பற்றின்மை 
இதனை உணர்ந்துகொள்வது வாய்மை 
இது நான்காவது நிலை. 

உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை 190
உள்ள அறிவுஇவை ஐங்கந்தம் ஆவன

உரு
நுகர்ச்சி
குறிப்பு 
பாவனை
அறிவு
இவை ஒருவனுக்கு உள்ள ஐந்து கந்தம் (துணை)

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
30 பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
[ பிறவி ஒழிக - என்று மணிமேகலை நோன்பிருந்த பாட்டு  ]

மணிமேகலை 30-20 Manimegalai 30-20

அவாவே பற்றே பேதைமை என்றுஇவை
புனையும்அடை பவமும் வினைசெயல் ஆகும்
உணர்ச்சி அருவுரு வாயில் ஊறே
நுகர்ச்சி பிறப்பு மூப்புப்பிணி சாவுஇவை
நிகழ்ச்சிப்பயன் ஆங்கே நேருங் காலைக் 175
குற்றமும் வினையும் பயனும் துன்பம்
பெற்ற தோற்றப் பெற்றிகள் நிலையா
எப்பொரு ளுக்கும் ஆன்மா இலைஎன
இப்படி உணரும் இவைவீட் டியல்பாம்.

அவா
பற்று 
பேதைமை
இவை பவம் உண்டாக்கும் செயல்கள். 

உணர்ச்சி 
அருவுரு 
வாயில் 
ஊறு 
நுகர்ச்சி 
பிறப்பு 
மூப்பு
பிணி 
சாவு
இவை நிகழ்ச்சியின் பயன்கள். இவை நேரும்போது 
குற்றம் 
வினை
பயன் 
துன்பம்
ஆகிய ஏதும் இல்லாத பொருளுக்கு ஆன்மா இல்லை. 
இது வீடு. வீட்டின் இயல்பு இதுதான். 

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
30 பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
[ பிறவி ஒழிக - என்று மணிமேகலை நோன்பிருந்த பாட்டு  ]

மணிமேகலை 30-19 Manimegalai 30-19


19
கால மூன்றும் கருதுங் காலை 160
இறந்த காலம் என்னல் வேண்டும்
மறந்த பேதைமை செய்கையால் அவற்றை
நிகழ்ந்த காலம்என நேரப் படுமே
உணர்வே அருவுரு வாயில் ஊறே
நுகர்வே வேட்கை பற்றே பவமே 165
தோற்றம் என்றுஇவை சொல்லுங் காலை
எதிர்கா லம்என இசைக்கப் படுமே
பிறப்பே பிணியே மூப்பே சாவே
அவலம் அரற்றுக் கவலைகை யாறுகள்
குலவிய குற்றம்எனக் கூறப் படுமே 170

காலம் மூன்று. 
மறந்தவை இறந்த காலம். 
பேதைமைச் செயல் நிகழ்காலம் 
  • உணர்வு
  • அரு-உரு 
  • வாயில்
  • ஊறு
  • நுகர்வு
  • வேட்கை
  • பற்று
  • பவம் 
  • தோற்றம் 
இவை எதிர்காலம் எனல் சமய மரபு 
  • பிறப்பு
  • பிணி
  • மூப்பு
  • சாவு 
  • அவலம் 
  • அரற்றுதல் 
  • கவலை 
  • கையாறு
ஆகியவை குற்றம் என்று கூறப்படும். 

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
30 பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
[ பிறவி ஒழிக - என்று மணிமேகலை நோன்பிருந்த பாட்டு  ]

மணிமேகலை 30-18 Manimegalai 30-18

ஆன்றபிற மார்க்கத்து ஆய உணர்வே 155
தோன்றல் வீடுஎனத் துணிந்து தோன்றியும்
உணர்வுள் அடங்க உருவாய்த் தோன்றியும்
உணர்வும் உருவும் உடங்கத் தோன்றிப்
புணர்தரு மக்கள் தெய்வம்விலங்கு ஆகையும்

பிறவும் ஆன்ற மார்க்கங்களே. அவற்றில் கூறப்படும் உணர்வானது, தோன்றுதல் வீடு பெறுதல் என்னும் துணிவுடன் அமையும். தோற்றத்துக்குள் உணர்வு அடங்கும். உணர்வுள் உரு தோன்றும். உணர்வும் உருவமும் ஒன்றிணைந்து மக்கள் தெய்வமாகவோ, விலங்காகவோ மாறுவர். 

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
30 பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
[ பிறவி ஒழிக - என்று மணிமேகலை நோன்பிருந்த பாட்டு  ]

மணிமேகலை 30-17 Manimegalai 30-17

பிறப்பின் முதல்உணர்வு ஆதிச் சந்தி
நுகர்ச்சி ஒழுக்கொடு விழைவின் கூட்டம் 150
புகர்ச்சிஇன்று அறிவது இரண்டாம் சந்தி
கன்மக் கூட்டத் தொடுவரு பிறப்பிடை
முன்னிச் செல்வது மூன்றாம் சந்தி
மூன்றுவகைப் பிறப்பு மொழியுங் காலை

பிறப்பின் முதல் சந்தி

  • உணர்வு 
  • ஆதிச் சந்தி
  • நுகர்ச்சி 
  • ஒழுக்கம்
  • விழைவின் கூட்டம் 
  • விருப்பம் இல்லாமல் அறிவது 

இரண்டாம் சந்தி

  • கன்மக் கூட்டம் 

மூன்றாம் சந்தி 

  • மூவகைப் பிறப்புக்கு இடையில் எண்ணிப் பார்த்துச் செயல்படுவது.  


மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
30 பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
[ பிறவி ஒழிக - என்று மணிமேகலை நோன்பிருந்த பாட்டு  ]

மணிமேகலை 30-16 Manimegalai 30-16

நான்காம் கண்டம் பிறப்பே பிணியே
மூப்பே சாவுஎன மொழிந்திடும் துன்பம்
எனஇவை பிறப்பில் உழக்குபயன் ஆதலின்

நான்காம் கண்டம் 

  • பிறப்பு 
  • பிணி
  • மூப்பு 
  • சாவு

என மொழிந்திடும் துன்பம்
இவை பிறப்பில் ஒருவனைத் துன்புறுத்தும் பயனாளிகள்.

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
30 பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
[ பிறவி ஒழிக - என்று மணிமேகலை நோன்பிருந்த பாட்டு  ]

மணிமேகலை 30-15 Manimegalai 30-15

மூன்றாம் கண்டம் வேட்கை பற்றுக்
கரும ஈட்டம் எனக்கட் டுரைப்பவை
மற்றுஅப் பெற்றி நுகர்ச்சி ஒழுக்கினுள்
குற்றமும் வினையும் ஆக லானே 145

மூன்றாம் கண்டம் 

  • வேட்கை 
  • பற்று
  • கரும ஈட்டம் 

எனக்கூறப்படுபவை. 
இவை பொறி நுகர்ச்சி ஒழுக்கம். 
இதில் குற்றமும் வினைப்பதிவும் தோன்றும். 

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
30 பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
[ பிறவி ஒழிக - என்று மணிமேகலை நோன்பிருந்த பாட்டு  ]

மணிமேகலை 30-14 Manimegalai 30-14

இரண்டாம் கண்டம் ஆகும் என்ப
உணர்ச்சி அருவுரு வாயில் ஊறே
நுகர்ச்சி என்று நோக்கப் படுவன 140
முன்னவற்று இயல்பால் துன்னிய ஆதலின்

இரண்டாம் கண்டம் ஆகும் என்று கூறப்படுபவை இவை
  • உணர்ச்சி 
  • அருவுரு 
  • வாயில் 
  • ஊறே
  • நுகர்ச்சி 

என்று நோக்கப் படுவன 
இவை முன்னவற்று இயல்பால் கோத்துக்கொண்டு வருபவை. 

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
30 பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
[ பிறவி ஒழிக - என்று மணிமேகலை நோன்பிருந்த பாட்டு  ]

மணிமேகலை 30-13 Manimegalai 30-13

பேதைமை மீளச் செய்கை மீளும் 120
செய்கை மீள உணர்ச்சி மீளும்
உணர்ச்சி மீள அருவுரு மீளும்
அருவுரு மீள வாயில் மீளும்
வாயில் மீள ஊறு மீளும்
ஊறு மீள நுகர்ச்சி மீளும் 125
நுகர்ச்சி மீள வேட்கை மீளும்
வேட்கை மீளப் பற்று மீளும்
பற்று மீளக் கருமத் தொகுதி
மீளும் கருமத் தொகுதி மீளத்
தோற்றம் மீளும் தோற்றம் மீளப் 130
பிறப்பு மீளும் பிறப்புப் பிணிமூப்புச்
சாக்காடு அவலம் அரற்றுக் கவலை
கையாறு என்றுஇக் கடையில் துன்பம்
எல்லாம் மீளும்இவ் வகையான் மீட்சி
ஆதிக் கண்டம் ஆகும் என்ப 135
பேதைமை செய்கை என்றுஇவை இரண்டும்
காரண வகைய ஆத லானே
  • பேதைமை மீளச் செய்கை மீளும் 120
  • செய்கை மீள உணர்ச்சி மீளும்
  • உணர்ச்சி மீள அருவுரு மீளும்
  • அருவுரு மீள வாயில் மீளும்
  • வாயில் மீள ஊறு மீளும்
  • ஊறு மீள நுகர்ச்சி மீளும் 
  • நுகர்ச்சி மீள வேட்கை மீளும்
  • வேட்கை மீளப் பற்று மீளும்
  • பற்று மீளக் கருமத் தொகுதி மீளும் 
  • கருமத் தொகுதி மீளத் தோற்றம் மீளும் 
  • தோற்றம் மீளப் பிறப்பு மீளும் 
  • பிறப்புப் பிணிமூப்புச் சாக்காடு அவலம் அரற்றுக் கவலை கையாறு என்று இந்த முடிவில்லாத துன்பம் எல்லாம் மீளும் இந்த வகையில் என்க. 
  • மீட்சியே ஆதிக் கண்டம். 
  • பேதைமை, செயல் இவ்விரண்டும் காரண வகை என்க. 


மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
30 பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
[ பிறவி ஒழிக - என்று மணிமேகலை நோன்பிருந்த பாட்டு  ]

மணிமேகலை 30-12 Manimegalai 30-12

பேதைமை சார்வாச் செய்கை ஆகும் 105
செய்கை சார்வா உணர்ச்சி ஆகும்
உணர்ச்சி சார்வா அருவுரு ஆகும்
அருவுருச் சார்வா வாயில் ஆகும்
வாயில் சார்வா ஊறுஆ கும்மே
ஊறு சார்ந்து நுகர்ச்சி ஆகும் 110
நுகர்ச்சி சார்ந்து வேட்கை ஆகும்
வேட்கை சார்ந்து பற்றுஆ கும்மே
பற்றில் தோன்றும் கருமத் தொகுதி
கருமத் தொகுதி காரண மாக
வருமே ஏனை வழிமுறைத் தோற்றம் 115
தோற்றம் சார்பின் மூப்புப்பிணி சாக்காடு
அவலம் அரற்றுக் கவலைகை யாறுஎனத்
தவல்இல் துன்பம் தலைவரும் என்ப
ஊழின்மண் டிலமாச் சூழும்இந் நுகர்ச்சி

பேதைமையைச் சார்ந்து ஒருவனது செயல் இருக்கும். 
செய்கையின் சார்வாக உணர்ச்சி இருக்கும்.
உணர்ச்சி சார்பாக அருவுரு இருக்கும்.
அரு-உரு சார்பாக வாயில் இருக்கும்.
வாயில் சார்பாக ஊறு இருக்கும்.
ஊறு சார்ந்து நுகர்ச்சி இருக்கும்.
நுகர்ச்சி சார்ந்து வேட்கை இருக்கும்.
வேட்கை சார்ந்து பற்று இருக்கும்.
பற்றால் கருமம் தோன்றும். 
கருமத் தொகுதி சார்பாக மறுபிறவி தோன்றும். 
தோற்றம் சார்பாக 
  1. மூப்பு, 
  2. பிணி, 
  3. சாக்காடு, 
  4. அவலம், 
  5. அரற்றுதல், 
  6. கவலை 

ஆகிய ஆறும் வந்து அழியாத் துன்பம் தரும். 
இது ஊழ்-மண்டில நுகர்ச்சிச் சுழல். 

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
30 பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
[ பிறவி ஒழிக - என்று மணிமேகலை நோன்பிருந்த பாட்டு  ]

மணிமேகலை 30-11 Manimegalai 30-11

உணர்வுஎனப் படுவது உறங்குவோர் உணர்வின்
புரிவுஇன்று ஆகிப் புலன்கொளா ததுவே

உணர்வு என்பது என்ன?
உறங்குபவர் உணர்வு போல் ஐம்புலன்களிலும் தோன்றி நிலைகொள்ளாமல் இருப்பது.  

அருவுரு என்பதுஅவ் வுணர்வு சார்ந்த 85
உயிரும் உடம்பும் ஆகும் என்ப

அரு-உரு என்பது என்ன? 
உடம்பிலும் உயிரிலும் தோன்றும் உணர்வு. 

வாயில் ஆறும் ஆயும் காலை
உள்ளம் உறுவிக்க உறும்இடன் ஆகும்

ஐம்புலன், உயிர் ஆகிய ஆறும் வாயில்கள். 
இவை உள்ளத்தை உறுத்தும் இடங்கள். 

ஊறுஎன உரைப்பது உள்ளமும் வாயிலும்
வேறு புலன்களை மேவுதல் என்ப 90

உள்ளமும் வாயில்களும் வேறொன்றை விரும்புதல் ஊறு என்று சொல்லப்படும். 

நுகர்வே உணர்வு புலன்களை நுகர்தல்
வேட்கை விரும்பி நுகர்ச்சிஆ ராமை
பற்றுஎனப் படுவது பசைஇய அறிவே

நுகர்வு என்பது ஐம்புலன்களால் நுகர்வது. 
வேட்கை என்பது விரும்பி நுகர்ந்தவற்றில் நிறைவடையாமல் மேலும் நுகர விரும்புதல். 
பற்று என்பது அறிவின் பசை.

பவம்எனப் படுவது கரும ஈட்டம்
தருமுறை இதுஎனத் தாம்தாம் சார்தல் 95

பவம் என்பது ஒருவர் செய்த செயல் சேர்த்து வைத்திருக்கும் பொருள். 
அது செயலைச் சார்ந்த விளைவாக இருக்கும். 

பிறப்புஎனப் படுவதுஅக் கருமப் பெற்றியின்
உறப்புணர் உள்ளம் சார்பொடு கதிகளில்
காரண காரிய உருக்களில் தோன்றல்

பிறப்பு என்பது செய்த கருமத்தின் பலனாக அதே தன்மை கொண்ட சார்பிலும், கதியிலும் காரண காரிய உருவினைப் பெற்று மீண்டும் உலகில் தோன்றுதல். 

பிணிஎனப் படுவது சார்பில் பிறிதாய்
இயற்கையின் திரிந்துஉடம்பு இடும்பை புரிதல் 100

பிணி என்பது சார்ந்திருப்பதிலிருந்து வேறுபட்டு இயற்கையாக உடம்பில் தோன்றி துன்பம் அடைதல். 

மூப்புஎன மொழிவது அந்தத்து அளவும்
தாக்குநிலை யாமையின் தாம்தளர்ந் திடுதல்

மூப்பு என்பது சாகும் வரையில் உடம்பு தாக்குப் பிடிக்காமல் தளர்ந்து போதல்.

சாக்காடு என்பது அருவுருத் தன்மை
யாக்கை வீழ்கதிர் எனமறைந் திடுதல்

சாக்காடு என்பது அருவுருத் தன்மை. மறையும் சூரியன் போல உடம்பிலிருந்து உயிர் மறைதல். 

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
30 பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
[ பிறவி ஒழிக - என்று மணிமேகலை நோன்பிருந்த பாட்டு  ]

மணிமேகலை 30-10 Manimegalai 30-10

நல்வினை என்பது யாதுஎன வினவின்
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கிச்
சீலம் தாங்கித் தானம் தலைநின்று
மேல்என வகுத்த ஒருமூன்று திறத்துத் 80
தேவரும் மக்களும் பிரமரும் ஆகி
மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர்

நல்வினை என்பது யாது என்றால், தீவினை என்று சொல்லப்பட்ட 10 தொகுதிகளிலிருந்து நீங்கி, நல்ல குணமுடையவராகத், தானம் செய்வதில் ஈடுபாட்டுடன் நின்றல். 
இப்படிப்பட்டவர் தேவராகவும், மக்களாகவும், பிரமராகவும் பிறந்து அதன் பயனாக மகிழ்ச்சி அடைவர். 

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
30 பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
[ பிறவி ஒழிக - என்று மணிமேகலை நோன்பிருந்த பாட்டு  ]

மணிமேகலை 30-9 Manimegalai 30-9

தீவினை என்பது யாதுஎன வினவின் 65
ஆய்தொடி நல்லாய் ஆங்குஅது கேளாய்
கொலையே களவே காமத் தீவிழை
உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்
பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில்
சொல்எனச் சொல்லிற் தோன்றுவ நான்கும் 70
வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சிஎன்று
உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும்எனப்
பத்து வகையால் பயன்தெரி புலவர்
இத்திறம் படரார் படர்குவர் ஆயின்
விலங்கும் பேயும் நரகரும் ஆகிக் 75
கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர்

தீவினை என்பது என்ன என்று கேட்கிறாயா? நல்லவளே கேள். 

  1. கொலை
  2. களவு
  3. காமமாகிய தீய ஆசை

உடலைத் துன்புறுத்திக்கொண்டு தோன்றும் இவை 3

  1. பொய் 
  2. பிறரைப் பற்றிக் குறை சொல்லும் குறளை 
  3. கடுஞ்சொல் 
  4. பயனில்லாத வெட்டிப் பேச்சு 

ஆகிய 4

  1. பிறர் பொருளை அடைய ஆசைப்படும் வெஃகல் 
  2. சினம் கொள்ளுதல் 
  3. பொல்லாததைக் காணல் 
என்று உள்ளத்தை உருத்ததும் 3
ஆக இவை 10-உம் தீவினை.
இந்தப் 10 வகையால் பயனடைய விரும்புபவர் புலனின்பம் காண விரும்பும் புலவர். 
இவர்கள் விலங்கும், பேயும், நரகருமாக அடுத்த பிறவியில் பிறப்பர். 

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
30 பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
[ பிறவி ஒழிக - என்று மணிமேகலை நோன்பிருந்த பாட்டு  ]

Wednesday, 8 November 2017

மணிமேகலை 30-8 Manimegalai 30-8

உலகம் மூன்றினும் உயிராம் உலகம்
அலகில பல்உயிர் அறுவகைத்து ஆகும்
மக்களும் தேவரும் பிரமரும் நரகரும்
தொக்க விலங்கும் பேயும் என்றே
நல்வினை தீவினை என்றுஇரு வகையால் 60
சொல்லப் பட்ட கருவில் சார்தலும்
கருவில் பட்ட பொழுதினுள் தோற்றி
வினைப்பயன் விளையும் காலை உயிர்கட்கு
மனப்பேர் இன்பமும் கவலையும் காட்டும்

உலகம் மூன்று. 
அவற்றில் வாழும் உயிர்கள் ஆறு வகை 
  1. மக்கள்
  2. தேவர்
  3. பிரமர்
  4. நரகர் 
  5. விலங்கு
  6. பேய்

நல்வினை, தீவினை என்னும் இருவகைச் செயல்களால், சொல்லப்பட்ட ஆறு உயிரினக் கரு ஒன்றில் தோன்றுவர். முன் பிறப்பில் செய்த வினையின் பயனாக மனத்தில் இன்பமும், கவலையும் தோன்றும். 

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
30 பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
[ பிறவி ஒழிக - என்று மணிமேகலை நோன்பிருந்த பாட்டு  ]

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி