Showing posts with label பொருநராற்றுப்படை. Show all posts
Showing posts with label பொருநராற்றுப்படை. Show all posts

Saturday, 28 March 2015

பொருநராற்றுப்படை தனிப்பாடல்கள்

பொருநராற்றுப்படை முற்றும்
பொருநராற்றுப்படை முற்றுப்பெற்ற பின்னர் மூன்று வெண்பாப் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவை காலத்தால் பிற்பட்டவை. இவற்றில் மூன்றாம் பாடல் பட்டினப்பாலை நூலின் இறுதியிலும் உள்ளது.
1
அரிகால் நெல்
ஏரிநீர் பாய்வதாலும், ஏற்றம் இறைக்கும் கிணற்றுநீர் பாய்வதாலும் பிறர் நாடுகளில் நீர்வளம் பெருகி நெல் விளையும். நினைத்துப் பார்த்தால் இந்த நெல்வளம் எல்லாமே கரிகாலனின் காவிரி பாயும் நாட்டில் நெல் அறுவடை செய்த பின்னர் அந்த நிலத்தில் உதிர்ந்து முளைத்து விளைந்த அரிகால்-நெல்லே ஈடாக அமையும்.
தனிப்பாடல் வெண்பா
ஏரியும், ஏற்றத்தி னானும், பிறர்நாட்டு  
வாரி சுரக்கும் வளன்எல்லாம் - தேரின்,
அரிகாலின் கீழ் உகூம் அந் நெல்லே சாலும் 
கரிகாலன் காவிரி சூழ் நாடு. 1
2
அகப்பொருள் பாடல்
இந்தப் பாடலானது பாடலில் கரிகால்வளவன் என்று கூறப்படும் இந்த மன்னனைத் திருமாவளவன் என்று குறிப்பிடுகிறது.
அரியணையில் திருமாவளவன் அமர்ந்துகொண்டு ஆட்சிசெய்தான். அவனைத் தொழுதவள் நிலை என்னவாயிற்று எனக் கூறும் அகப்பொருள் பாடலாக இது அமைந்துள்ளது.
இந்தப் பாடலின் முன்பகுதி கரிகாலனையும் திருமாலையும் ‘திருமாவளவன்’ என்னும் பெயரால் பொதுமைப்படுத்திச் சிலேடையாகப் பேசுகிறது.
திருமால் அரிமா வடிவெடுத்து (நரசிம்ம அவதாரம்) போர் (அமளி) மேற்கொண்டான்.
கரிகாலன் அரிமா உருவம் தாங்கிய அமளி(இருக்கை)மேல் அமர்ந்திருப்பவன்.
திருமகளாகிய மா என்று போற்றப்படும் பெண்ணால் வளம் பெற்றுத் திகழ்பவன் திருமால்.
கரிகாலன் திரு என்னும் செல்வம் மிகுதியாகப் பெற்று மாவளவனாக, திருமாவளவனாகத் திகழ்பவன்.
இதனால் இருவரும் திருமாவளவன்.
அதனால் கரிகாலனைத் திருமகளை மார்பிலே கொண்ட ‘மானமால்’ என்று என்றுதான் எண்ணிக்கொண்டு தொழுதேன். கடவுளைத் தொழுதால் கைவளையல் கழலுமா? என் உடல் மெலிந்து என் கையிலுள்ள வளையல்கள் கழறுகின்றனவே! இது ஏன்? கரிகாலன் மேல் எழுந்த காதல்!
வெண்பா
அரிமா சுமந்த அமளி மேலானைத்
திருமாவளவன் எனத் தேறேன்; - திரு மார்பின்    
மான மால் என்றே தொழுதேன்; தொழுத கைப்    
போனவா பெய்த வளை!         2
3
கரிகாலன் கால்நெருப்பு – கதைவழிப் பாட்டல்
மூன்று ஆணைச் சக்கரங்களாகத் திகழும் மூவுலகையும் அளப்பதற்குத் திருமால் தன் இரண்டு கால்களையும் பயன்படுத்தினான்.
அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருள் சக்கரங்களைக் கரிகாலன் தன் கரிந்துபோன ஒரே காலால் அளந்துவிட்டான்.
அதனால் கரிகாலன் திருமாலைக் காட்டிலும் மேம்பட்டவன்.
கரிகாலன் புனல்நீர் நாடன். (திருமால் மாபலி மன்னனிடம் புனல்நீர் பெற்றான்).
கரிகாலனின் புனல்நீர்நாடு அறுவடை செய்த நெல்வயலில் உதிர்ந்த நெல் முளைத்து வளரும் அரிகால் நெல்லானது தேன் கூடு கட்டும் அளவுக்குச் சிறப்புற்று வளரும்.
கரிகாலன் இளம்பிள்ளையாக இருந்த காலத்தில் அவனது தாயாதியர் (அரசுத்தாயம் பெறுவதற்குரிய பங்காளிகள்) அவனது மனைக்குத் தீயிட்டனர். அப்போது அவனது கால் கருகிப்போயிற்று. கரிகாலனானவன் இரும்பிடர்த்தலையார் என்னும் தன் தாய்மாமனால் காப்பாற்றப்பட்டுக் கருவூரில் வாழ்ந்துவந்தான். சோழநாட்டுப் பட்டத்து யானை அவனுக்கு மாலை சூட்டி அழைத்துவர உறையூரில் அரியணை ஏறினான். – இப்படி ஒரு கதை. இந்தக் கதையின் அடிப்படையில் இந்தப் பாடல் புனையப்பட்டுள்ளது.
வெண்பா
முச் சக்கரமும் அளப்பதற்கு நீட்டிய கால்    
இச் சக்கரமே அளந்ததால் - செய்ச் செய்
அரிகால்மேல் தேன் தொடுக்கும் ஆய் புனல் நீர்நாடன்   
கரிகாலன் கால் நெருப்பு உற்று.   3


Thursday, 26 March 2015

பொருநராற்றுப்படை பகுதி 27

கரிகாலன்
காவிரி புரக்கும் நாடு கிழவோன்
முன்பகுதி
அரசன், ஆறு, நிலம், பயிர், மக்கள் - வளம், வாழ்வு
 • கரிகாலன் வெற்றிவேல் வேந்தனாகப் பகைமன்னர் நடுங்க ஆட்சி புரிந்துவந்தான். பகல் தரும் சூரியன் போல் அறத்தையும் தோழமையையும் பரப்பிக்கொண்டு ஆண்டுவந்தான்.
 • முல்லை நிலத்தில் குல்லைப் பூக்கள் கரிந்து போகவும், மலைகள் தீப்பற்றி எரியவும், மலையருவிகள் வறண்டுபோகவும், மேகத் தொகுதி கடல்நீர் மொண்டுசெல்வதை மறந்துபோகவும் பெரியதோர் வறட்சி எய்திய காலத்திலும் காவிரியில் வெள்ளம் வரும்.
 • நறை, நரந்தம், அகில், ஆரம் முதலான மரங்களைக் கருவாகக் கொண்டு சுமந்துவந்து காவிரித்தாய் துறைகண்ட இடங்களிலெல்லாம் கருவுயிர்த்துச் செல்வாள்.
 • நுரை பொங்க ஓசையுடன் காவிரி பாயும்போது மகளிரின் புனலாட்டு நிகழும்.
 • உழவர் கூனியிருக்கும் அரிவாளால் வயலில் நெல் அறுக்கவும் கட்டுக் கட்டிக் களத்தில் மலைபோல் குவிக்கவும், குறைவில்லாத நெற்குப்பையை மூட்டைகளாகக் கட்டி ஆங்காங்குள்ள பாதுகாக்கும் இடமெல்லாம் கிடத்தி வைக்கவும், சாலி என்னும் நெல் சிறை வைக்கப்பட்டுக் கிடக்கும் பாதுகாப்பு மிக்க வேலிதான் காவிரி புரக்கும் நாடு.
 • வேலி என்பது நில அளவை. ஒருவேலி நிலத்தில் ஆயிரம் மூட்டை நெல் விளைச்சல் காணும் வளமுள்ளதாகக் காவிரியாறு அந்தாட்டைப் புரந்துவந்தது. அந்த நாட்டை ஆளும் உரிமை பூண்டவன்தான் சோழன் கரிகாற் பெருவளத்தான்.
அவனைப் பாடிச் சென்றால் … செல்கென விடுக்குமவன் அல்லன்… (177)
என்று பாடலை முறைப்படுத்தி முடித்துக் கொள்ள வேண்டும்.
வேலி என்னும் நில அளவை
(காவிரிப் படுகை வழக்கம்)
100 குழி = 1 மா
20 மா = 1 வேலி
3.5 மா = 1 ஏக்கர்
6.17 ஏக்கர் = 1 வேலி
 • அண்முக் காலத்தில் கருணா என்னும் நெல்லை ஒரு வேலி நிலத்தில் எழுநூறு மூட்டை வரை விளைவித்துள்ளனர். கரிகாலன் காலத்தில் அவன் நாட்டில் ஆயிரம் மூட்டை சாலி என்னும் நெல் விளைந்துள்ளது. 
 • இது ஏற்றுக்கொள்ளத்தக்க வரலாற்று உண்மை
பாட்டு

மன்னர் நடுங்கத் தோன்றி, பல் மாண்  
எல்லை தருநன் பல் கதிர் பரப்பி, 
குல்லை கரியவும், கோடு எரி நைப்பவும்,    
அருவி மா மலை நிழத்தவும், மற்று அக்          235
கருவி வானம் கடற்கோள் மறப்பவும்,  
பெரு வறன் ஆகிய பண்பு இல் காலையும்   
நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும், 
துறைதுறைதோறும், பொறை உயிர்த்து ஒழுகி,    
நுரைத்தலைக் குரைப்புனல் வரைப்புஅகம் புகுதொறும்,   240
புனல் ஆடு மகளிர் கதுமெனக் குடைய
கூனி, குயத்தின் வாய் நெல் அரிந்து,   
சூடு கோடாகப் பிறக்கி, நாள்தொறும்,   
குன்று எனக் குவைஇய குன்றாக் குப்பை    
கடுந் தெற்று மூடையின் இடம் கெடக் கிடக்கும்,   245
சாலி நெல்லின், சிறை கொள் வேலி,  
ஆயிரம் விளையுட்டு ஆக, 
காவிரி புரக்கும் நாடு கிழவோனே.பொருநராற்றுப்படை பகுதி 26

செங்கோல் 
வென்வேல் குருசில்!
கரிகால் வளவன்
முன்பகுதி
பண், பறவை, விலங்கு, செங்கோல்

 • பண் பாடுவதிலும் மயக்கம் நேரும். நெய்தல் நிலத்துப் பரதவர் குறிஞ்சிப்பண் பாடுவர். குறிஞ்சி நிலத்துக் குறவர் நெய்தல் பூவைச் சூடுவர். முல்லை நிலத்துக் கானவர் மருதப்பண் பாடுவர். பாலை நிலத்து அகவர் முல்லைத்திணைப் பண்ணைப் பாடுவர்.
 • கானக்கோழி மருத நிலத்து நெற்கதிர்களைக் குத்தித் தின்னும். மருத நிலத்து மனைக்கோழி முல்லை நிலத்துத் தினைக்கதிர்களைக் கவர்ந்துண்ணும்.
 • மலையில் வாழும் மந்தி கடலோர உப்பங்கழிகளில் குளிக்கும். உப்பங்கழி நாரை மலைமரங்களில் இருக்கும்.
இப்படி எங்கும் நீரின் தண்மை-வளம் மிக்க நாடு காவிரி நாடு. மண்ணின் தண்மையால் மறு இல்லாதது. காவிரி நாடு என்னும் பெயரோடு அது ஒன்றுபட்டிருந்தது.

இதனை நட்பும் அறனும் பூண்டு ஒருகுடைக்கீழ்ச் செங்கோல் செலுத்திக் கரிகாலன் ஆண்டு வந்தான். அவன் வாழ்க.
பாட்டு
குறிஞ்சி பரதவர் பாட, நெய்தல்  
நறும் பூங் கண்ணி குறவர் சூட;  
கானவர் மருதம் பாட, அகவர்     220
நீல் நிற முல்லைப் பல் திணை நுவல;
கானக் கோழி கதிர் குத்த,  
மனைக் கோழி தினைக் கவர;    
வரை மந்தி கழி மூழ்க,    
கழி நாரை வரை இறுப்ப;    225
தண் வைப்பின் நால் நாடு குழீஇ, 
மண் மருங்கினான் மறு இன்றி,  
ஒரு குடையான் ஒன்று கூற,    
பெரிது ஆண்ட பெருங் கேண்மை,
அறனொடு புணர்ந்த திறன் அறி செங்கோல்,  230
அன்னோன் வாழி, வென் வேல் குருசில்!


பொருநராற்றுப்படை பகுதி 25

அவன் நாட்டு ஊர், உணவு, பண்டமாற்று

 • மயிலானது முல்லை நிலத்துப் புறவு சலித்தால் நெய்தல் நிலத்தில் பூத்திருக்கும் புன்னை மரத்துக்குச் சென்றுவிடும்.
 • அருகில் சுறாமீன் வந்துபோகும்
 • கடலலை மோதும்.
இயங்குபடம் - நாரை மீனைத் தின்னும் விளையாட்டு
 • அதில் வாழும் இறால் மீனைத் தின்ற நாரை பூத்திருக்கும் அதே புன்னை மரத்தில் அமர்ந்திருக்கும்.
 • கடலோரப் புன்னை மரத்தில் இருக்கும்போது கடலலை ஓசையை வெறுத்து அந்த மரத்தை விட்டுவிட்டு நாரை பனைமர மடலுக்குப் பறந்து செல்லும். அதுவும் சலித்தால் தென்னை மடலுக்குச் செல்லும்.
 • அதிக உயரம் பறக்க முடியாத மயில் குலை தள்ளியிருக்கும் வாழை மரத்தில் அமரும்.
 • காந்தள் பூத்திருக்கும் இடத்திற்குச் செல்லும்.
 • அருகிலுள்ள மீனவர் பாக்கத்துக் குடிசைப் பகுதியில் இருக்கும் நாகமரத்தில் பாலைநில மக்கள் தம் உடுக்கு போன்ற குடுகுடுப்பைகளைக் கட்டித் தொங்க விட்டிருப்பர். அது காற்றில் ஆடும்போது ஓசை உண்டாகும்.
 • வண்டுகள் இசை பாடும். இந்த இசைக்கு ஏற்ப மயில் தோகை விரித்து ஆடும்.
 • இப்படிப் பல்வேறு நிலமேடுகளில் இடம் பெயர்ந்து மயில் ஆடும்.
தேன்நெய்க்குக் கிழங்கு, மீன்நெய்க்கு நறவு, மதுவுக்கு மான்கறி என்று பண்டமாற்று வாணிகம் பல்வேறு மணல்மேடுகளில் நடைபெறும்.
பாட்டு
சுற வழங்கும் இரும் பௌவத்து  
இறவு அருந்திய இன நாரை
பூம் புன்னைச் சினைச் சேப்பின்,   205
ஓங்கு திரை ஒலி வெரீஇ, 
தீம் பெண்ணை மடல் சேப்பவும்; 
கோட் தெங்கின், குலை வாழை,  
கொழுங் காந்தள், மலர் நாகத்து, 
துடிக் குடிஞை, குடிப் பாக்கத்து,   210
யாழ் வண்டின் கொளைக்கு ஏற்ப, 
கலவம் விரித்த மட மஞ்ஞை   
நிலவு எக்கர்ப் பல பெயர;
தேன் நெய்யொடு கிழங்கு மாறியோர்  
மீன் நெய்யொடு நறவு மறுகவும்;  215
தீங் கரும்போடு அவல் வகுத்தோர்    
மான் குறையொடு மது மறுகவும்;


பொருநராற்றுப்படை பகுதி 24


ஆங்காங்கே மயில்
முன்பகுதி

உழவர் பாட்டும் மயில் ஆடும் இடங்களும்
 • முடம் பட்டுக் கிளை தாழ்ந்திருக்கும் காஞ்சிமரம். செம்மாந்து ஓங்கியிருக்கும் மருதமரம் இரண்டிலும் மயில் ஏறி ஆட்டம் காட்டும்.
 • பசிக்கும் போது பறந்தோடிப் பாகல் பழத்தைத் தின்னும். அடுத்திருக்கும் பலாச்சுளைகளையும் தின்னும்.
கரும்பு வெட்டும்போதும் நெல் அறுக்கும்போதும் களமர் (= உழவர்)
இசைப் பாடல்கள் பாடுவர்.
 • இதனைக் கேட்டுக்கொண்டு மயில் ஆடும்.
 • அடும்பு பகன்றை முதலான கொடிகளும் புன்கு ஞாழல் முதலான மரங்களும் மண்டிக் கிடக்கும் மருத நிலக் காவிலும் அந்த மயில் விளையாடும்.
 • இந்த இடங்கள் சலித்துப் போனால் தளவம், தோன்றி, முல்லை முதலான பூப்புதர்களும் கொன்றை, காயா முதலான மரங்களும் மண்டிக் கிடக்கும் முல்லை நிலப் புறவுத் தோட்டத்திற்குச் சென்று விளையாடும்.
இங்கும் சலிப்பு நேர்ந்தால் …
பாட்டு
முடக் காஞ்சிச் செம் மருதின்,   
மடக் கண்ண மயில் ஆல,  190
பைம் பாகற் பழம், துணரிய
செஞ் சுளைய கனி, மாந்தி; 
அறைக் கரும்பின் அரி நெல்லின் 
இனக் களமர் இசை பெருக, 
வறள் அடும்பின் இவர் பகன்றைத் 195
தளிர்ப் புன்கின் தாழ் காவின்
நனை ஞாழலொடு மரம் குழீஇய 
அவண் முனையின், அகன்று மாறி,    
அவிழ் தளவின் அகன் தோன்றி, 
நகு முல்லை, உகு தேறு வீ, 200
பொன் கொன்றை, மணிக் காயா, 
நல் புறவின் நடை முனையின்,
    


பொருநராற்றுப்படை பகுதி 23

மகளிர் மண்ணில் பொம்மை செய்து 'வண்டல்' விளையாட்டு விளையாடுவர்
காளையர் தம் வலிமை சொலிய (செழிப்புற) பகைமை காட்டிப் போரிட்டு விளையாடுவர்
முன்பகுதி
மகளிர், காளையர் விளையாட்டு

 • இளைய மகளிர் வண்டல் விளையாடுவர்.
 • இளைய காளையர் முதியோரின் மேற்பார்வையில் அவையில் பகைமுரணிய விளையாட்டுகளில் ஈடுபட்டுத் தம் திணவை வெளிப்படுத்துவர்.
பாட்டு
இளையோர் வண்டல் அயரவும்; முதியோர்  
அவை புகு பொழுதில் தம் பகை முரண் சொலியவும்


பொருநராற்றுப்படை பகுதி 22

சோறு தின்ற கருங்காக்கை ஆமைப் பார்ப்பிகளை உண்ணப் பார்க்கும்
முன்பகுதி
ஐந்திணை மயக்கம்
நிலம், புள்
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நானில வளங்களும் காவிரி புரக்கும் கரிகாலன் நாட்டில் மயங்கிக் கிடந்தன. பாலை நிலத்தின் பாங்கும் பாவிக் கிடந்தது.
கடற்கரையில் மாமரங்கள்.
அவற்றை அடுத்துத் தாழை மரங்கள்.
தாழைமரக் கழிகளை அடுத்து வளவயற் சோலை (தண்டலை)
குடில்களில் கூலம் சேமிக்கும் குதிர்க் கூடுகள்.
கருங்காக்கைகள் அக்குடியில் வாழும் மக்கள் வைத்த நெல்லஞ் சோற்றைத் தின்று சலித்தபோது வீட்டு நொச்சிக்குக் கீழே பொறித்திருக்கும் ஆமைக் குஞ்சுகளைக் கவர்ந்துண்ணப் பார்க்கும்.
தாய்-ஆமை அதன் குஞ்சுகளைக் காப்பாற்றும்.
பாட்டு

திரை பிறழிய இரும் பௌவத்துக்  
கரை சூழ்ந்த அகன் கிடக்கை,  
மா மாவின் வயின் வயின் நெல்,    180
தாழ் தாழைத் தண் தண்டலை,
கூடு கெழீஇய, குடிவயினான்,  
செஞ் சோற்ற பலி மாந்திய
கருங் காக்கை கவர்வு முனையின், 
மனை நொச்சி நிழல் ஆங்கண், 185
ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவும்;


Wednesday, 25 March 2015

பொருநராற்றுப்படை பகுதி 21

புகழ்ச்சியை விரும்பாதவன்
நீங்கள் பெற்றவற்றை இவை இவை கரிகால் வளவன் தந்த பரிசில் என்று பிறர் பிறர்க்குச் சொல்லிக்காட்டிவிட்டுச் செல்லத் தொடங்குவீராயின் பிறர்க்குச் சொன்னமைக்காகக் கடிந்துகொள்வான் (புலப்பான்). இந்த உலகம் நிலையில்லாத்து என்னும் உண்மை நிலையைச் சீர்தூக்கிப் பார்த்துச் ‘செல்லுங்கள்’ என அனுப்பிவைக்கவும் மாட்டான். (அவனிடமே இருக்கக்கூடாதா என ஏங்குவான்)
பாட்டு
பெற்றவை பிறர்பிறர்க்கு ஆர்த்தி, தெற்றென, 
செலவு கடைக்கூட்டுதிர் ஆயின், பல புலந்து, 175
நில்லா உலகத்து நிலைமை தூக்கி, 
'செல்க' என விடுக்குவன் அல்லன் ஒல்லெனத்

பொருநராற்றுப்படை பகுதி 20

இது இக்காலத்து வண்டி
இது போன்றதொரு வண்டி அக்காலத்தில் தேர் எனப்பட்டது
கரிகாலன் இது போன்றதொரு தேரில் ஏற்றிப்
பரிசுப் பொருள்களுடன் வழியனுப்பிவைப்பான்
கரிகாலன் அனுப்பிய தேர் இதுபோல் நான்கு வெள்ளைக்குதிரை பூட்டிய தேர். 
முன்பகுதி
கரிகாலன் வழியனுப்பும் 
வெண்குதிரைகள் நான்கு பூட்டிய தேர்மேல் அனுப்பி வைப்பான். ஏழடி பின் சென்று நின்று ஏறுங்கள் எனபான். ஏறியபின் பேரியாழை மீட்டச் சொல்லிக் கேட்பான். அதற்குப் பரிசிலாக வளம் மிக்க ஊர் கொண்ட நாட்டுப் பகுதியைத் தருவான். யானைப் பரிசும் உண்டு.
தேர் – அமரும் இடமான கொடிஞ்சி தந்தத்தால் செய்யப்பட்டது.
குதிரை – குதிரையின் உச்சந் தலையில் வண்ணம் பூசிய குஞ்சம் தொங்கும். அதன் பிடரிமயிர் மடிந்து தொங்கும். குதிரைகள் பால்போல் நிறம் கொண்டவை.
குதிரையை ஓட்டும் கோலின் நுனியில் முள் பொருத்தப்பட்டிருக்கும் முள் பொருத்தப் பட்டிருந்தால் அது தாற்றுக்கோல். சாட்டைப் பொருத்தப் பட்டிருந்தால் அது சாட்டைக் குச்சி. கரிகாலன் தேரோட்டியின் கையில் தாற்றுக் கோல் இல்லாமல் செய்வான். (இது அவன் விலங்குகள் மாட்டும் கொண்டிருந்த கருணையைப் புலப்படுத்துகிறது)
பரிசிலாகத் தரும் நாட்டுப் பகுதியிலுள்ள ஊர்கள் விளைச்சல் குறையாத நன்செய்ப் பண்ணைகள் நிறைந்தவை.
வேழம் – வெருவும் பறை போன்ற காதுகளும் பருத்துப் பெருத்த நீண்ட துதிக்கைகளும் கொண்டவை. சிறந்தவை. எனினும் பகை கண்டால் வெகுள்பவை.
பாட்டு
கோட்டின் செய்த கொடுஞ்சி நெடுந் தேர்
ஊட்டு உளை துயல்வர, ஓரி நுடங்க,   
பால் புரை புரவி நால்கு உடன் பூட்டி,    165
காலின் ஏழ் அடிப் பின் சென்று, 'கோலின்   
தாறு களைந்து, ஏறு' என்று ஏற்றி, வீறு பெறு
பேர் யாழ் முறையுளிக் கழிப்பி, நீர் வாய்த்  
தண் பணை தழீஇய தளரா இருக்கை   
நன் பல் ஊர நாட்டொடு, நன் பல்,  170
வெரூஉப் பறை நுவலும், பரூஉப் பெருந் தடக் கை,   
வெருவரு செலவின், வெகுளி வேழம்  
தரவிடைத் தங்கல் ஓவிலனே: வரவிடைப்   


Tuesday, 24 March 2015

பொருநராற்றுப்படை பகுதி 19

இந்திய அரசு இக்காலத்தில் வழங்கும் பத்மஸ்ரீ விருது இது
பத்மஸ்ரீ = தாமரைத்திரு = திருத்தாமரை
இந்த விருதினைக் கரிகால்வளவன் அன்றே வழங்கினான்
பொன்னால் செய்த தாமரைப் பூவாக வழங்கினான்
முன்பகுதி
பாணனுக்குப் பொன்-தாமரை, பாடினிக்கு முத்தாரம்

பின்னர் விருதாக உன் (பொருநன்) தலையில் பொன்னாலான தாமரை சூட்டுவான்.

 • இவன் சூட்டிவிடும் தாமரை தழல் விட்டும் பிளவு பட்டும் எரியும் தீப்போல் இருக்கும். குளத்தில் இருக்கும் தாமரைக்கு மடங்கும் இதழ் உண்டு. இதில் உள்ளது மடங்காத பொன்னிதழ். பித்தை என்பது ஆணின் உச்சிக் கொண்டை. அது அழகு பெறும்படி உனக்குக் கரிகாலன் தன் கையால் சூட்டிவிட்டுப் பெருமைப் படுத்துவான்.
பாடினி

 • அரில் மாலை – இது நூலில் கோக்கப்படாத முத்துமாலை.அதாவது முத்துக்களைத் தங்கத்தில் பதித்திருக்கும் மாலை.
 • முத்தாரம் – இது நூலில் கோத்த முத்துமாலை.
அரில்மாலையையும், முத்துமாலையையும் பாடினி அணியத் தருவான்.
பண்பாடு
பொருநனுக்குச் சூட்டுவான்
பாடினிக்குத் தருவான்
பாட்டு
எரி அகைந்தன்ன ஏடு இல் தாமரை    
சுரி இரும் பித்தை பொலியச் சூட்டி,          160
நூலின் வலவா நுணங்கு அரில் மாலை
வால் ஒளி முத்தமொடு பாடினி அணிய,    


பொருநராற்றுப்படை பகுதி 18

கரிகால் வளவன்
இது போன்ற
கொட்டைக் கரைய பட்டுடை
நல்குவான்
ஈன்ற பசு தன் கன்றை நோக்குவது போல்
கரிகால் வளவன்
புத்தாடை, தேறல் வழங்குவான்
பொருந! கரிகாலன் காலடி நிழற்பகுதிக்குச் செல்வீராயின்…
பசு அப்போது போட்ட கன்றை நாவால் நக்கித் தெம்பு ஊட்டுவது போல, அவன் உங்களை விரும்பிப் போற்ற முனைவான். நீங்கள் கைதொழுவதற்கு முன்பாகவே புத்தாடை தந்து மாற்றிக் கொள்ளச் செய்வான்.
உங்களது பழைய ஆடை கிழிந்து குறைந்து போயிருக்கும். வேர்வை அழுக்கு ஏறி பாசி படிந்திருக்கும். கிழிசல் ஊசியால் தைக்கப்பட்டிருக்கும், புதிதாக அவன் தந்த பட்டுடையில் கொட்டைக்கரை போட்டிருக்கும்.
நீங்கள் புத்தாடை புனைந்த பின் கிண்ணத்தில் தேறல் ஊற்றி வேண்டிய அளவு பருகத் தருவான். காலை வேளையில் கையைக் குடையாக்கியும் அத் தேறலைப் பருகலாம்.

கரிகாலனது கொடையின் சிறப்பு

ஈற்று ஆ விருப்பின், போற்றுபு நோக்கி, நும் 
கையது கேளா அளவை, ஒய்யென, 
பாசி வேரின் மாசொடு குறைந்த   
துன்னல் சிதாஅர் நீக்கி, தூய   
கொட்டைக் கரைய பட்டு உடை நல்கி,   155
'பெறல் அருங் கலத்தில் பெட்டாங்கு உண்க' என,
பூக் கமழ் தேறல் வாக்குபு தரத்தர,  
வைகல் வைகல் கை கவி பருகி,   பொருநராற்றுப்படை பகுதி 17

யாளி
கரிகால் வளவன்
யாளிக்குட்டி போல் தாக்கி
வெண்ணிப் போரில்
வெற்றி கண்டான்
முன்பகுதி
கரிகால் வளவன் பாட்டுடைத்தலைவன் பெயர்
வெண்ணிப் போரில் வெற்றி கண்டவன்
அவனைத் தொழுது அவன்முன் நிற்பீர் ஆயின்

இந்த நூலின் தலவன் பெயர் கரிகால்வளவன் என்று இங்குக் குறிப்பிடப்படுகிறான்.

ஆளும் விலங்கு ஆளி. ஆளியின்வழி வந்தது அரிமான் என்று போற்றப்படும் சிங்கம். ஆளியை நன்மான் என்று பாடல் குறிப்பிடுகிறது. அதன் குட்டிகூட விலங்குகளை வருத்தும். பால் குடிக்கும் ஆளிக்குட்டி ஞெரேர் எனப் பாய்ந்து முதன் முதலாக வேட்டைக்குச் செல்லும் போதே யானையை அழிப்பது போலக் கரிகாலன் வெண்ணி என்னுமிடத்தில் நடந்த போரில் இருபெரு வேந்தரையும் வென்றான்.
பனந்தோட்டு மாலை அணிந்த சேரனையும், வேப்பந்தழை மாலை அணிந்த பாண்டியனையும் ஆத்தி மாலையைச் சூடிய கரிகாலன் வென்றான். அப்போர்க்களத்திலேயே சேரனும் பாண்டியனும் மாண்டனர்.
வெற்றிகண்ட கரிகால்வளவனைத் தொழுது அவன்முன் நிற்பீர் ஆயின்,

வெண்ணிப்போர் பற்றிக் குறிப்பிடும் பிற சங்கப் பாடல்கள்
 • வெண்ணிவாயிலில் கரிகாலனை எதிர்த்துப் போரிட்ட வேந்தர்களும் அவர்களோடு வந்த வேளிர் பதினோரு பேரும் போர்க்களத்திலேயே மாண்டது கண்டு அழுந்தூர் மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர் என்று பரணர் குறிப்பிடுகிறார். – அகம் 246
 • இப்போரில் தோற்ற மன்னர்களில் ஒருவன் தனக்கு நேர்ந்த புறப் புண்ணுக்காக நாணி வடக்கிருந்து உயிர் துறந்தான் என்று அவ்வூரைச் சேர்ந்த புலவர் வெண்ணிக் குயத்தியார் குறிப்பிடுகிறார் – புறம் 68
 • சோழ வேந்தனின் ஆணைப்படி படையெடுத்துச் சென்ற மத்தி நெடுந்தொலைவிலிருந்த நாட்டில் அரசாண்டு கொண்டிருந்த எழினி என்பவனை வென்று அவன் பல்லைப் பிடுங்கிக் கொண்டுவந்து வெண்ணிவாயில் கதவில் பதித்த செய்தியைப் புலவர் மாமூலனார் குறிப்பிடுகிறார் - அகம் 211
 • கைவண் கிள்ளியின் வெண்ணியில் மகளிர் தழையாடை அணிந்து விளையாடும் திருவிழாவைக் காண்பது கண்கொள்ளாக் காட்சி என்று ஔவையார் குறிப்பிடுகிறார் – நற்றிணை 390

பாட்டு

ஆளி நல் மான் அணங்குடைக் குருளை   
மீளி மொய்ம்பின் மிகு வலி செருக்கி 140
முலைக் கோள் விடாஅ மாத்திரை, ஞெரேரென, 
தலைக்கோள் வேட்டம் களிறு அட்டாங்கு, 
இரும் பனம் போந்தைத் தோடும், கருஞ் சினை 
அர வாய் வேம்பின் அம் குழைத் தெரியலும்,    
ஓங்கு இருஞ் சென்னி மேம்பட மிலைந்த   145
இரு பெரு வேந்தரும் ஒரு களத்து அவிய,
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன் தாள்,    
கண் ஆர் கண்ணி, கரிகால் வளவன் 
தாள் நிழல் மருங்கின் அணுகுபு குறுகித்   
தொழுது முன் நிற்குவிர் ஆயின், பழுது இன்று,        150


Monday, 23 March 2015

பொருநராற்றுப்படை பகுதி 16

கல்லணையில் உள்ள
கரிகாலன் சிலை
புலவர் கரிகாற்பெருவளத்தானது சிறப்புக்களைக் கூறத் தொடங்குகிறார்.
தாய் வயிற்றிருந்து தாயம்
தாய் வயிற்றில் வளரும்போதே ஆட்சிப்பொறுப்பு
சோழர் அரசியலில் செல்வாக்குப் பெற்றிருந்த நலங்கிள்ளியின் கால்வழிக்கூட காணமுடியும். இதனால் தாய்வயிற்றில் இருக்கும்போதே கரிகாலன் அரசுரிமை பெற்றவனாக விளங்கினான்.

இவன் முருகனைப் போன்ற அழகும் பகைவரை அழிக்கும் சினமும் கொண்டவன். அதனால் இவன் தாக்காமலேயே இவனது பகைமன்னர் பலர் இவனுக்கு அடிபணிந்து இவன் சொன்னதை யெல்லாம் கேட்டனர்.இவன் அருள் செய்யாத நாடுகள் குழப்பத்துக்கு உள்ளாயின.
கடலில் தோன்றி ஒளி வீசிக்கொண்டு வானத்தில் உலாவும் கதிரவனைப்போல இவன் பிறந்து தவழக் கற்றது முதலே தன் நாட்டைத் தன் தோளில் சுமக்க வேண்டியதாயிற்று.இப்படிச் சுமக்கும் குழந்தை யாகவே இவன் வளர்க்கப் பட்டான்.

பாட்டு

உருவப் பல் தேர் இளையோன் சிறுவன்,   130
முருகற் சீற்றத்து உரு கெழு குருசில்,
தாய் வயிற்றிருந்து தாயம் எய்தி,    
எய்யாத் தெவ்வர் ஏவல் கேட்ப,ச்
செய்யார் தேஎம் தெருமரல் கலிப்பப், 
பவ்வ மீமிசைப் பகற் கதிர் பரப்பி,     135
வெவ் வெஞ் செல்வன் விசும்பு படர்ந்தாங்கு,    
பிறந்து தவழ் கற்றதன் தொட்டு, சிறந்த நன்    
நாடு செகிற்கொண்டு நாள்தொறும் வளர்ப்ப,


Sunday, 22 March 2015

பொருநராற்றுப்படை பகுதி 15

இது காடடுயானைக் கூட்டம்
இதுபோல்
பழக்கப்பட்ட யானைக் கூட்டத்தைக்
கரிகாலன் கொண்டுவந்து நிறுத்தி
வேண்டுவன கொள்க என்றான் 
தன்னறி அளவை – என்னறி அளவை
உடுக்கு போல் அடி வைக்கும் குட்டியானையோடும், பெண்யானையோடும் சேர்ந்து நிற்கும் ஆண்யானை என்று பலவற்றையும் கொண்டுவந்து நிறுத்தினான். வேண்டியவற்றைக் கொண்டு செல்லுங்கள் என்றான்.
அவனுக்குத் தெரிந்த எண்ணிக்கை அளவில் அவன் மேலும் மேலும் கொண்டு வந்து நிறுத்தினான். எங்களது தகுதியை நாங்கள் அளந்து பார்த்துக் கொண்ட நிலையில் வேண்டுவனவற்றை மட்டும் கொண்டுவந்து விட்டோம். எங்களது வறுமை தீரும் அளவுக்குக் கொண்டுவந்து விட்டோம்.
பாட்டு

'துடி அடி அன்ன தூங்கு நடைக் குழவியொடு    125
பிடி புணர் வேழம் பெட்டவை கொள்க!' என,    
தன் அறி அளவையின் தரத்தர, யானும்    
என் அறி அளவையின் வேண்டுவ முகந்துகொண்டு,  
இன்மை தீர வந்தனென். வென் வேல்பொருநராற்றுப்படை பகுதி 14


சிரறியவன் போல் பார்த்துச் சொன்னான்

கொல்லை என்னும் புன்செய் நிலத்தை உழும் கொழுவைப் போல எங்களின் பல்லானது இரவும் பகலும் புலால் உணவைத் தின்று தின்று மழுங்கிப் போயிற்று. மூச்சு முட்ட முட்ட உணவைத் தின்று விட்டோம். அதனால் உணவைக் கண்டாலே வெறுப்பால் கோவம் வந்தது. எனவே ஒருநாள் வாய் திறந்து சொல்லி விட்டோம்
“உன்மீது சினந்தெழுந்த பகைவரின் திறைப்பொருள் உனது துறையெல்லாம் பரந்து கிடக்க வைத்திருக்கும் செல்வத் திருமகனே. நாங்கள் எங்களது சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்கிறோம்” – என்று மெதுவாகச் சொன்னோமாக… “எம் தோழமையை விட்டுச் செல்கிறீர்களா” என்று சொல்லிச் சினங்கொண்டவன் போலப் பார்த்தான்.
பாட்டு

கொல்லை உழு கொழு ஏய்ப்ப, பல்லே    
எல்லையும் இரவும் ஊன் தின்று மழுங்கி, 
உயிர்ப்பிடம் பெறாஅது, ஊண் முனிந்து, ஒரு நாள்,   
'செயிர்த்து எழு தெவ்வர் திறை துறை போகிய   120
செல்வ! சேறும், எம் தொல் பதிப் பெயர்ந்து' என,
மெல்லெனக் கிளந்தனம் ஆக, 'வல்லே    
அகறிரோ எம் ஆயம் விட்டு?' என,   
சிரறியவன்போல் செயிர்த்த நோக்கமொடு, 


Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி