Showing posts with label பொதுவன் பாட்டு. Show all posts
Showing posts with label பொதுவன் பாட்டு. Show all posts

Saturday, 16 February 2019

இறை God

கடவுள் என்று சொல்லப்படும் இறைவன் நம்மிடம் எப்படி இருக்கிறான்
நமக்கு வெளியில் நிலம், நீர், தீ, வளி, விண் என்று ஐந்து பூதங்களாக இருக்கிறான்
நமக்குள்ளே சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்புலன்களாகக் காலத்தில் மலர்கிறான்
நினைவாகக் காலம் கடந்து ஓடுகிறான். 

கடவுள் என்னும் இறைநிலை
பொறியாய்ப் புலனாய் நமக்குள்ளளே
            பூக்கும் அறிவும் நினைவுகளும்
இறைவன் நமக்கென் றெண்ணிடுவோம்
            எல்லா ருக்கும் நலமாகும்.

மண்ணீர் (மண்+நீர்) வளிதீ ஆகாயம்
     மாந்தர்க்(கு) அடங்கா இறைநிலைகள்
எண்ணம் அறிவைக் கடக்காது
     இறைவன் அறிவைக் கடந்தவனாம்.

நினைவின் ஓட்டம் அதுகாலம்
     நிகழ்வ தெல்லாம் செயலாற்றல்
மனத்தின் உடலின் பெயர்ச்சியிவை
     வரவும் செயலும் ஊழ்வலியாம்.Saturday, 22 December 2018

திருவருட்பா Tiruvarutpa 3366

இப்பாரில் உடல் ஆவிப் பொருள் உன்பால் கொடத்தேன் மற்று எனக்கென்று இங்கே
எப்பாலும் சுதந்தரம் ஓர் இறையும் இலை அருட்சோதி இயற்கை என்னும்
துப்பாய உடல் ஆதி தருவாயோ இன்னும் எனைச் சோதிப்பாயோ
அப்பா நின் திருவுளத்தை அறியேன் இவ் அடியேனால் ஆவ(து) என்னே
வள்ளலார் திருவருட்பா 3366

படிக்கின்றீர் நல்லவரே அடியேனும் எழுதுகிறேன் பண்டைச் சான்றோர் 
வடித்தெடுத்த செந்தமிழின் வளங்கண்டேன்  மணங்கண்டேன் மனத்தில் வாங்கிக் 
கொடுக்கின்றேன் கொள்கின்றீர் கொண்டாடி மகிழ்கின்றீர் உம்மைப் போற்றிக் 
கிடக்கின்றேன் படிப்போரின் காலடியில் தமிழ் போற்றும் கிழமை யாலே 
பொதுவன் அடிகள்  


திருவருட்பா Tiruvarutpa 3369

பாட்டுவித்தாய் பாடுகின்றேன் பணிவித்தாய் பணிகின்றேன் பதியே நின்னைக்
கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால் குழைகின்றேன் குறித்த உணை
ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறங்குவித்தால் உறங்குகின்றேன் உறங்கா(து) என்றும்
ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோ இச் சிறியேனால் ஆவ(து) என்னே - திருவருட்பா 3369
வள்ளலார் பாடல்

எழுதுவித்தீர்  எழுதுகின்றேன் எண்ணுவித்தீர்  எண்ணுகின்றேன் எந்தன் முன்னோர் 
எழுதியதைப் படிக்கின்றேன் எளியேனுள் கண்டவற்றை எண்ணிப் பார்த்தேன் 
உழுதவயல் இட்டபயிர் விளைவதுபோல் ஒண்டமிழைச் சுவைத்துக் கண்ட 
பழச்சாற்றை இணையத்தில் படைத்திட்டேன் அடியேனால் ஆவ(து) என்னே 
அடியேன் பொதுவன் அடிகள்

Friday, 6 October 2017

தெய்வம் 2 God 2


ஊறும் உணர்வு ஒருதெய்வம்
உந்தும் அறிவு பெருந்தெய்வம்

ஆறும் உறக்கம் ஒருதெய்வம்
ஆடும் எழுச்சி மறுதெய்வம்

ஏறும் பாய்மம் இருந்தெய்வம்
இயங்கும் சுழற்சி வருந்தெய்வம்

கூறு போட்டுக் கிடப்பதனைக்
கூர்ந்து பார்த்துத் தெளிவோமே.

உணர்வு - sense 
அறிவு - mind 
உறக்கம் - sleeping 
எழுச்சி - motive 
பாய்மம் - inertia 
சுழற்சி - rotating and revolving 

தெய்வம் 1 God 1

உதவி செய்வான் ஒருதெய்வம்
ஒத்துப் போவான் உயர்தெய்வம்

கதவே இல்லாத் தோல்பைக்குள்
காற்று வெப்பம் நம்தெய்வம்

சிதைந்து வளர்தல் உழைப்புணவால்
தெரியா ஊழே பெருந்தெய்வம்

இதமாய் நமக்காய் இருக்கின்ற
இறைவன் தெய்வம் ஏற்போமே.

சிதைந்து வளர்தல் - Metabolism 

Friday, 25 March 2016

அகப்பால் உணர்வுகள் வண்ணநிலா Moon in my tongue

வாயூரிய வண்ணநிலாவெண்பா யாப்பு
வானத்து வெண்டிங்காள் வையத்துப் பாவலனைப்
பானத்து நின்முகத்தால் பார்த்து மகிழ்கின்றாய்
தேனத்துப் பால்நிலவால் தேடி அணைத்துவிட்டாய்
மோனத் திருப்பனோ நான் 7
You moon in the sky! I am a poet in the earth. You are happy looking at me. You are also hugging me with your hands of light of milk with honey. How can I mute?  

கோல முழுநிலவைக் கூசாது பார்த்திருந்தேன்
நீல உடையாள் நிலைமறந்து பார்த்திருந்தாள்
சால மகிழ்ந்தென்னைத் தண்ணொளிக்கை யாலனைத்தான்
பாலோடு நின்ற பதம் 8
I saw the moon-girl without shame. She in her blue dress is also looking at me in her stupid mood. Feeling happy she embraced me with her cool light. That is my food of rice with milk.  

வெண்ணிலவை நோக்கியான் விட்டேன்என் நெஞ்சத்தைப்
பெண்ணிலவாள் கண்ணொளியால் பேசாமல் தொட்டுவிட்டு
மண்ணிலவாய் வந்து மணந்திருக்க மாட்டாமல்
எண்ணியுடல் தேய்ந்தாள் இனிது 9
I send my mood towards the moon. She touched me with her eye sight. She could not come to earth to marry me. Longing so, she leaned diminishing in her body.  

பேச முடியாமல் பேரொளிக்கை யாலணைத்தாள்
ஆசைப் பெருக்காலே அப்படியே நின்றுவிட்டேன்
மோசம் இதிலொன்றும் மூளவிலை என்றாலும்
கூசிமறைந் தாள்காரிற் குள் 10
Having unable to speak she hugged me with her light. I stood in my passion without moving. There is no wrong in this event. However, she hides her behind the cloud.   

தொட்டள் அணைத்திருந்தாள் தூய ஒளிக்கையால்
கட்டி அணைக்கவென் கையெடுத்தேன் காணவிலை
வட்ட நிலவேயென் வாயூறிப் போகலையோ
மட்டாய் மணந்திருப்பாய் மன் 11
She touched and hugged me with her hands of light. I tried to do so with my hand. She is not there. You! My moon rounding! You are leaving from my words of saliva. Isn’t it? Be happy in my words of honey.

என்னாவில் பட்ட எழில்நிலவே உன்னுடைய
கன்னம் கனியாய்க் கனிந்து பழுக்காதோ
மன்னிய வெண்முத்தம் வைத்திருப்பின் என்ன பயன்
உன்னிக் கொடுஎனக் கொன்று 12
You! Moon in my tongue! Let your cheek be a fruit to kiss. What is the use of having pearls of teeth? Give me with your kiss.

பழுத்த பழமான பால்நிலவே நிற்குக்
கொழுத்த வளர்ச்சியால் கூடிடுமோ இன்பம்
அழைத்தேன் உனக்கே அனைத்தும் கொடுக்கப்
பிழைத்துக் கிடக்கிறேன் பேறு 13
You, moon of ripple-fruit you have ascended to full. By this you can’t enjoy lust. I call you to enjoy. I am living only to share my entire lust happiness with you.  

அடியேன் செங்கைப் பொதுவன் அவ்வப்போது பாடிய பாடல்கள்.
பாடிய நாள் நளி 20, 1994 (கி. பி. 1973)
English translation has been made on March 26, 2016.


Thursday, 24 March 2016

அகப்பால் உணர்வுகள் நெஞ்சவிளக்கு Flash in heart

நெஞ்ச விளக்கு
அவள்
வெட்டுச் சட்டை
தொட்டுச் சேலைப்
பட்டு நழுவுதே – தோளை
விட்டு நழுவுதே – அழகு
கொட்டி வைத்த
சிட்டு மேனி
வெட்டிப் பிதுங்குதே – சட்டை
கட்டிப் பிதுங்குதே – வேளன்
கண்ணைத் தின்னவோ – இல்லை
எண்ணைப் பின்னவோ 1

மீனைப் போட்டு
மீனைப் பிடித்துப்
போனக் கயிற்றி னால் – சிறு
நாணக் கயிற்றி னால்
ஆனை கட்டித்
தீனி போட்ட
மானைக் கேட்டதென் – வேளன்
தேனைக் கேட்ட(து)உன் 2

முல்லை விரித்து
வில்லை ஒடிக்கும்
செல்லப் பார்வை நீர்- அவள்
கொல்லும் பார்வை நீர்
கல்லை உருக்கிச்
செல்லும் வான
வில்லைக் கேட்டதென் – வேளன்
புல்லக் கேட்டதுன் 3

வண்ணக் கோவை
தண்ணீர் ஊறப்
பண்ணி வெடித்ததால் – புதிர்க்
கண்ணி வைத்ததால்
எண்ணைக் கட்டித்
தின்னு கின்ற
மின்னைக் கேட்டதென் – வேளன்
கன்னம் கேட்ட(து)-உண் 4

அடங்க மறுக்கும் குடங்கள் 
அடங்க மறுக்கும்
குடங்கள் தாங்கி
நுடங்கும் இடுப்பு-நூல் – அச்ச
மடங்கொள் பயிர்ப்புக்-கோல்
மடங்கல் ஏறு
அடங்கிச் சுழல
நடங்கொள் கொடியைக் கேள் – வேளன்
இடங்கொள் தோளைக் கேள் 5

பிஞ்சு விரல்கள்
கொஞ்சும் இதழைக்
கெஞ்சிக் கோதுமாம் – எழில்
விஞ்சி ஒழுகுமாம்
நெஞ்ச விளக்கில்
பஞ்சு நெய்யாய்த்
தஞ்ச மாகினாள் – வேளன்
மஞ்ச மாகினாள் 6

அடியேன் செங்கைப் பொதுவன் அவ்வப்போது பாடிய பாடல்கள்.
பாடிய நாள் 16, 17 – 11 – 1973


Wednesday, 23 March 2016

அருள்தரு சுளைகள் கனாநிலை Dreams

  • பலர் உணராவிட்டாலும் ஒவ்வொருவரும் உறங்கும்போது 3 முதல் 6 முறை நாள்தோறும் கனவு காண்கின்றனர்.
  • ஒவ்வொரு கனவும் 5 முதல் 20 நிமிடம் நீடிக்கிறது.
  • விழித்துக்கொள்ளும்போது கனவில் 95% மறந்துபோகும்.
  • கனவால் சில பாடங்களைப் படித்துக்கொள்கிறோம்.
  • ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களின் கனவு பெரும்பாலும் குடும்பம், குழந்தை சார்ந்ததாக அமைகிறது.
  • கடந்த கால நினைவுக் கனவுகளைக் கனவுக்கால் எனலாம்.
  • கண் சுழலும் கனவுகளும், கண் சுழலாக் கனவுகளும் உண்டு.
  • 48% பேர் எதிர்காலம் பற்றிக் கனவு காண்கின்றனர்.
  • பார்வை இல்லாதவர்கள் பிற புலனுணர்வுகளால் கனவு காண்கின்றனர்.
  • குடி போதையில் கனவு வருவதில்லை.

முன்பின் உணராத தாக்கங்களும் கனவில் வருகின்றன என்பது என் பட்டறிவு.
பறப்பது போன்ற கனவு

கனாநிலை
யாரோ ஒரு குழந்தை
என் எழுது கோலைத் திருடிக் கொண்டு செல்வது போல்
கனவு கண்டு எழுந்தபோது பாடியவை

ஆட்டுக்கா லைத்திருடி ஆயோர் முலைபோனாள்
கோட்டுப்பெண் ணைத்திருடிக் கூறுபட்டா னப்பன்சேய்
தீட்டுக்கோ லைத்திருடிச் செங்கோட்டில் ஏறுவனேல்
கேட்டாபா டும்என்வாய் கேள் 36 - மடங்கல் 24, 1995 (கி. பி. 1964)
ஆட்டுக்காலைத் திருடி ஆய் ஓர் முலை போனாள் \ கோட்டுப் பெண்ணைத் திருடிக் கூறுபட்டான் அப்பன் \ சேய் தீட்டுக் கோலைத் திருடிச் செங்கோட்டில் ஏறுவனேல் கேட்டா பாடும் என் வாய் கேள்
நீயே இந்தக் கதையைக் கேள். ஆடும் கால்களை உடைய சிவனைத் திருடி முருகனின் தாய் அம்மையப்பன் ஆனபோது தன் ஒரு முலையை இழந்தாள். \ மலைமகளைத் திருடி முருகனின் அப்பன் தன் உடம்பு பாதியாக அறுபட்டான். \ மகன் குழந்தை-முருகன் என் எழுதுகோலைத் திருடிக்கொண்டு மலைமேல் ஏறினால், என் வாய் அவனைக் கேட்டுக்கொண்டா பாடும்?

கலைதிருடச் சொல்லிக் கணவனைப் போக்கி
நிலையான வெள்ளாடை நிற்கும் – கலைமகளே 
என்னெழுது கோலை எடுத்தோடு வாயேல்நான்
கன்னடுவேன் தீட்டிக் கதை 37
கலைகளைத் திருடச்சொல்லி கணவன் பிரமனை அனுப்பிவிட்டு, கைம்பெண்ணாய், வெள்ளாடை உடுத்திக்கொண்டு நிற்க்கும் கலைமகளே! என் எழுதுகோலை எடுத்துக்கொண்டு ஓடுவாயேல், உன்னைக் கற்சிலையாக்கிக் கதை கட்டி வைத்துவிடுவேன்.
       
நனவில் காவடிக்குக் காசு கொடுத்து அறியாதவன் நான். காவடி எடுப்பவர் கந்தசாமி ஆச்சாரிபோல் அறிமுகமானவரானால் கண்ணோடிக் கொடுப்பதுண்டு. அப்படி இருந்தும் கனவில் காவடி என் இல் வர, காணிக்கை அளிக்க நான் சற்றுத் தாழ, அது அடுத்த இல் முன் செல்ல, நான் அங்குச் சென்று ஒரு ரூபா காணிக்கை அளித்து விட்டு, நானே திருநீற்றை எடுத்து அணிந்து கொண்டேன். இக்கனவு கண்டு எழுந்தவுடன் பாடியவை.

காவடியாய் வந்து கருத்துள் பதுங்கிவிட்ட
நாவடியாய் நின்று நடவாது – போவாயோ
வண்டுக்கே பூத்தாலும் வண்டேறின் கொம்பாடல்
உண்டிஃ துலகியல்பு காண் 38  - விடை 20, 2002(கி. பி 1971)
முருகா! காக்கும் திருவடியாக அடியேன் கருத்தில் பதுங்கிவிட்டாய். அப்படிப்பட்ட நீ என் நாவின் அடியில் பா-மொழியாய் நடக்காமல் போவாயோ? பூ வண்டைத் தேடிக்கொண்டுதான் பூத்திருக்கும். என்றாலும் வண்டு உட்கார்ந்ததும் பூ ஆடுமல்லவா? அதுபோல முருகன் அருளால் வாய் பாடும்.  

என்னாடி வந்தென்றன் எண்ணமலர் வீற்றிருந்து
என்னாடி நீவிலக எண்ணினாய் – கன்னாடிக்
கோவணத்தோ டாடும் குழகுளத்தை காட்டிவிட்டாய்
தாவெணத்தேன் போகவிடேன் தட்டு 39 - விடை 20, 2002(கி. பி 1971)
முருகா! என்னை நாடி வந்தாய். என் எண்ண-மலரில் வீற்றிருந்தாய். என்னை விட்டுஊ விலக எண்ணினாயே, அது எந்த நாடித் துடிப்பு? கல்லில் சிலையாகக் கோவணத்தோடு ஆடும் குழவிக்குழந்தை புத்தியைக் காட்டிவிட்டாய். தாவும் என் எண்ணத் தேனிலில் கட்டிப் போட்டுவிட்டு ஓடி விளையாடு என்று விட்டுவைத்திருக்கிறேன். உன்னால் என்னை விட்டு ஓடிவிட முடியாது.

ஆடுமயில் விட்டென்கை ஆடுமையில் ஏறுவையேல்
கூடுமையின் கோக்குடிக் குக்குறையோ – தேடுமையைக்
கொங்குக் குமரி குழவியெனப் பாடியுள்ளேன்
இங்குக் குமரா எழு 40 - விடை 20, 2002(கி. பி 1971)
முருகா! ஆடும் மயிலில் ஏறி விளையாடும் நீ என் கையில் ஆடும் மையில் ஏறி விளையாவையேல், உன்னில் குடிகொண்டுள்ள உமை அம்மையின் தலைமையான குடிக்குக் குறை வந்துவிடுமோ? நீ தேடும் உமையைக் ‘கொங்குக்குமரி பிள்ளைத்தமிழ்’ என்னும் நூலாகப் பாடிவைத்துள்ளேன். குமரா! இங்கு வந்து விளையாடு.    

அடியேன் செங்கைப் பொதுவன் அவ்வப்போது பாடிய பாடல்கள்.
பாடிய நாள் அந்தந்தப் பாடலின் இறுதியில் தரப்பட்டுள்ளது.


Monday, 21 March 2016

அருள்தரு சுளைகள் காக்கும் ஒருவன் His Grace

காக்கும் ஒருவன்
விருத்தம்
வல்லான் ஒருவன் உளன்-அவனை
வழுத்தி வழுத்தி நிற்பேனால்
எல்லான் இனியான் எழில்-உருவான்
இயலான் இசையான் கூத்துடையான்
சொல்லான் தூயான் துணைவனவன்
தொல்லான் விருந்தான் தோழேன்-எனையும்
நல்லான் காக்க முந்துற்றான்
ஞாலம் காக்க வேண்டுவனே 22 - நளி 29, 1993 (கி, பி 1962)
தொழாத என்னைக் காக்க வந்தான்.
உலகைக் காப்பாற்று என வேண்டிக்கொண்டேன்.

இன்பம் எல்லாம் எனக்களித்தென்
இன்னல் எல்லாம் அவனேற்றான்
அன்பை எல்லாம் எனக்களித்தென்
அழிவை எல்லாம் அவனேற்றான்
பொன்மை எல்லாம் எனக்களித்தென்
பொல்லாங் கெல்லாம் அவன்பொறுத்தான்
இன்மை தனிலும் இருந்துதவும்
இறைவா வாழி வாழியவே 23 - நளி 30, 1993 (கி, பி, 1962)
என்னிடம் யாதும் இல்லாதபோதும்
இருந்து உதவுகிறான்.

பார்ப்புக் கூட்டும் பறவைபோல்
பாருக் கெல்லாம் ஊட்டுகிறான்
கார்ப்புக் கோம்பும் நீரேபோல்
காத்தே என்னை ஓம்புகிறான்
மார்ப்புக் கூட்டும் மடவார்போல்
மாளா இன்பம் ஆனான் தன்
பேர்ப்புக் குரையா பேதையெனைப்
பேணும் ஒருவன் வாழியரோ 24 - வில் 1, 1993 (கி, பி, 1962)
என் மார்பில் கிடக்கும் என் மனைவி போல்
இன்பம் தருகிறான்.

வெண்பா
வண்ணத் திருவுருவை மாவாய்த் திருவருளை
எண்ணத் திருவொளியை என்னுயிரை – நண்ணி
நயந்தளித்து நாடேனை நாடோறும் காக்கும்
பயந்தெளிந் தென்பாடு கோ 25 - வில் 3, 1993 (கி, பி, 1962)
நாடேனை நாடும் பயனை
எப்படிப் பாடுவேன்

விருத்தம்
நிலமெலாம் நிறைந்துநீ நிற்கின்ற போதுநும் நிலையைக் காணேன்
அலமெலாம் போக்கிநீ ஆட்கொளும் போதுநான் அறியா நின்றேன்
வலமெலாம் கூட்டியென் வாழ்வினில் மாட்டிநீ வளர்த்து வந்த
நலமெலாம் கூறிட நாவிருந் தாண்டிட நாடி னேனே 26 - வில் 4, 1993 (கி. பி. 1962)
காணாதவன் பாடுகிறேன்
என் நாக்கை ஆள்க
வெண்பா
ஓயா தலமந் துழல்வேனை ஒன்றேயாய்க்
காயா துவந்துநீ காக்கின்றாய் – ஆயாது
நின்றுணையைத் தேடாது நின்றேனை வந்தளித்தாய்
என்றுணை எற்காகும் நிற்கு 27 - வில் 5, 1993 (கி. பி. 1962)
நாடாத என்னை நாடிவந்து காக்கின்றாயே
என் துணையால் உனக்கு என்ன பயன்?

கோவணத்தோ டாடிக் குமராநீ நின்றிருக்க
மாவணத்தாள் வள்ளிதுணை வந்தாளோ – பூவணத்துப்
பட்டாடை கட்டப் பயிர்ப்பின்றி ஒட்டிவரும்
கட்டாடை சோர உலா 28 - கன்னி 6, 1994 (கி. பி. 1963)
கோவணத்து ஆண்டியோடு
வள்ளி உலா வருகிறாளே!

வேலன் படைமுரசே வேளின் கொடைமுரசே
ஆலும் பறையென்றே அண்டவந்தால் – கோலமயில்
கைக்கொரு-பெண் கொண்டு கடிமுரசாய் நின்றறியா
மைக்கொறுப்பாய்ப் போக்கும் மறித்து 29 - கன்னி 6, 1994 (கி. பி. 1963)
அறியாமையைத் தண்டிப்பாயாக

வேளென்றார் வேண்டினேன் வேலோங்கி வந்தாய்நீ
கோளென்றார் அண்டினேன் கோளாய் நெறியேர்புத்
தேளென்றார் தீண்டென்றேன் சேயாகிச் செய்யநல்
வாளென்றால் வாங்கிவிட்டாய் மன் 30 - மடங்கல் 25, 1995 (கி. பி. 1964)
புத்தேள் என்றனர்
தேளை அண்டினேன்

பேயோள் மகனென்றும் பித்தன் மகனென்றும்
மாயோன் மருமகன் மன்னென்றும் – சேயோனாய்
நீயிருந்தால் சொல்லாரோ நெஞ்சத்துள் நீங்காது
நீயிருந்தால் சொல்வாரோ நில் 31 - மடங்கல் 25, 1995 (கி,பி. 1964)
என் நெஞ்சில் நீ இருந்தால்
உன்னைப்பற்றிக் கண்ட கதைகளைச் சொல்வார்களா

காவெறே நின்றன் கழலடியைத் தோள்மேலே
காவுவார் தம்மையான் கண்டதனால் – தாவென்றே
முத்தமிழை வேண்டி முருகாவென் நாவாலே
நத்தியே காவுவேன் நன்று 32 - மடங்கல் 26, 1995 (கி. பி. 1964)
காவடி = காப்பாற்றும் திருவடி

ஆண்டி
மலையேறி வண்ண மயிலேறி வாங்கும்
அலையேறிப் போமாண்டிக் காரோ – கலையில்
சிலையேற்றி விட்டார் சிவசிவ பாவின்
கலையேற்றி வைப்பென் கடன் 33 - மடங்கல் 26, 1995 (கி. பி. 1964)
சிவ சிவ
ஆண்டவனை ஆண்டியாக்கி
மலைமேல் கல்லாக்கிவிட்டார்களே

கோட்டன் மகளொற்றைக் கோட்டன் குறமடந்தை
ஓட்டான் இவர்பால் ஒருங்கிருந் தாறுபடை
வீட்டான் முருகாய் விளங்கிடினும் நாடுசெங்
கோட்டான் எனக்கூறும் கொண்டு 34 - மடங்கல் 27, 1995 (கி. பி. 1964)
ஆறுபடை வீடு இருக்கும் முருகன்
திருச்செங்கோட்டான் ஆனான்

அம்மான் உரிக்கந்தன் அண்ணன் எலிக்கந்தன்
அம்மா அரைக்கந்தி அப்பன் பொடிக்கந்தன்
எம்மான் முருகனை என்கந்தன் என்பீரேல்
சும்மா உளக்கந்தன் சொல் 35 மடங்கல் 27, 1995 (கி. பி. 1964)
கந்து = துணை, பற்றுக்கோடு
மாமனுக்கு உரி துணை
அண்ணனுக்கு எலி துணை
அம்மாவுக்கு அப்பனில் பாதி துணை
அப்பனுக்குச் சாம்பல்பொடி துணை
முருகனுக்கோ நம் உள்ளம் துணை

அடியேன் செங்கைப் பொதுவன் அவ்வப்போது பாடிய பாடல்கள்.
பாடிய நாள் அந்தந்தப் பாடலின் இறுதியில் தரப்பட்டுள்ளது.


Friday, 18 March 2016

அருள்தரு சுளைகள் மாரியம்மன் God’s Grace Rain-God

மாரியின் பேருலா
மழைத்தெய்வம் திருவிழா

1993 (கி. பி 1662) சித்திரை மாதம் 2 ஆம் நாள் செங்காட்டுப்பட்டி மாரியம்மன் திருவிழாவிற்குக் காப்புக் கட்டி மாரியம்மன் உலாவந்தது கண்டு பாடியவை

வெண்பா

நூலுள் உலாவாய் நுதிவேலான் போதநீர்ப்
பாலுள் தமிழ்ப்பெண்டிர் பண்பழிந்து – கோலும்
நிறையழிதல் தீதென்பார் நீயோபெண் மாரி
பறையொலியப் போந்தாய் உலா 10
ஆண்மகன் உலா வருவான். அதனைப் பார்த்துப் பெண்மகள் நிறை அழிவாள். உலாநூல் இப்படிப் பாடும். பெண் கண்டவனைப் பார்த்து நிறை அழிதலே பண்பு அன்று எனல் தமிழ்நெறி. நீயோ பெண்மகள். உலா வரலாமா?

ஊரன் உலாவில்லான் என்றாலும் ஒள்ளிழை  
நாரான் புலக்கும் நலத்தகைய – சீரான
இன்றமிழப் பண்பென்னை ஆக்கினாய் நீமாரி
இன்றிமிழப் போந்தாய் உலா 11
மாரிப் பெண்ணே! ஆரவாரத்தோடு உலா வருகிறாயே! உலா வராத ஆணிடமும் புலவி கொள்ளும் பெண்மைப் பண்பு என்னவாயிற்று?

கடலன்ன காமம் உழந்துநைந் தாலும்
மடலேறாப் பெண்மையின் மாண்பை – விடலுனக்கு
நன்றோசொல் மாரி நாளும் பறைமுழங்க
அன்றோசெல் கின்றாய் உலா 12
கடல் போல் காம உணர்வு இருந்தாலும் மடலேறாப் பெண்ணைப் போல் பெருமை கொள்ளத் தக்க பிறவி வேறு இல்லை என்று திருக்குறள் பாடுகிறது. நீயோ பறை முழக்கத்துடன் உலா வருகிறாய். இது பெண்ணுக்கு அழகா?

நிறையுடைமை நீங்காமை வேண்டின் நிலம்போல
பொறையுடைமை போற்றி ஒழுகல் – இறையுடைமை
அன்றோசொல் மாரி அறியார் உனைப்பொறுக்க
நன்றோநீ போதல் உலா 13
நிலம் போலப் பொறுத்துக்கொள்ளுதல் நிறை – என்கிறது திருக்குறள். மாரி! நீயோ பிறர் பொறுத்துக்கொள்ளும் சுமையாக வருகிறாயே, இதுவா இறைத்தன்மை?

தீயார் தெறவந்தாய் என்றால் சிறுபடையும்
பேயோய்நின் கையில் பிறங்கவிலை – தாயேநீ
பாலூட்டு மாரில் பனிமலர் சேணாற
ஆலூட்டி வந்தாய் உலா 14
தீயவர்களை அழிக்க உலா வருகிறாய் என்றால், உன் கையில் படைக்கருவி எதுவும் இல்லையே. முலை மேல் மணக்கும் மாலை அணிந்துகொண்டு அல்லவா ஆலோலம் போட்டுக்கொண்டு வருகிறாய்.

தூங்கிக் கிடந்தாலும் சும்மா விடாதென்னை
ஏங்கு மணியால் எழுப்பிவிட்டு – வாங்கியென்
வெற்றிலையைக் கொண்டு விழாவில் உலாப்போந்த
பற்றிலையை என்னென்பேன் பார்த்து 15
நள்ளிரவில் நான் தூங்கும்போது, மணியொலியால் எழுப்பிவிடுகிறாய். நான் படைத்த வெற்றிலைப் பாக்கை மட்டும் பூசாரி எடுத்துக்கொண்டார். உனக்கு என்மேல் பற்றே இல்லை.

கிள்ளை மீதேறிநீ கிள்ளையைக் கொண்டெங்கும்
கொள்ளை மிக் குண்டு குடுகுடெனக் – கொள்ளை
மலர்மாலை சூடி மறுகில் இரவில்
புலர்மாலோ போந்தாய் உலா 16
கிளி வாகனத்தில் வருகிறாய். கிளியைக் கையில் வைத்துக்கொண்டு வருகிறாய். மலர்மாலை சூடிக்கொண்டு தெருவில் வர உனக்கு இத்தனை ஆசையா?

ஒருவன்மேல் சென்றால் ஒருத்திக்கின் புண்டாம்
மருவிப் பலர்மேலே சென்றால் – உருமாரி
எங்குநிற் கின்புன் டியம்பிடுவாய் பின்னெதற்கோ
செங்கையில் போந்தாய் உலா 17
ஒருவன் மேல் இருந்தால் ஒருத்திக்கு இன்பம். தூக்கிவரும் பலர்மேல் இருக்கிறாயே! எங்கே இன்பம்?

நாலாளின் மேலேறின் நானிலத்தில் வையார்பல்
காலாளின் மேலேறக் கண்டனம் – மாலாளின்
மாரிநீ ஊழை மறுத்துய்ந்து மானிலத்தில்
ஊரோடு போந்தாய் உலா 18
நாலு பேர் தூக்கிச் சென்றால் கொளுத்திவிடுவார்கள். பலர் உன்னைத் தூக்கிக்கொண்டு வருகிறார்களே!

கட்டைநீ ஆதலால் காட்சி கடிதென்று
கட்டைமீ தேற்றிப்பின் கட்டியே – கட்டைக்கால்
கொண்டுன்னைத் தூக்கினார் அந்தோ கொடுமறலி
கண்டுன்னைத் தூக்கினேன் கா 19
நீயோ கட்டை (குட்டை,குள்ளம்). அதனால் உன்னைப் பார்க்க முடியாது என்று கட்டை மேல் ஏற்றிக் கட்டித்தூக்கிக்கொண்டு வருகிறார்கள். அவர்களைப் போன்ற எமனாக நானும் உன்னைத் தூக்கிக்கொண்டு வருகிறேனே!

மேற்படி விழாவின்போது வெட்டுக்குதிரை நாளன்று பாடியவை


பணத்துக்கு வக்கில்லாப் பஞ்சைப் பயலைப்
பிணத்துக்கும் வக்கில்லாப் பேணிக் – குணத்துக்காய்
நல்லோரை வாட்டும் இறையே எனைவாட்டி
வல்லாங்கு வாழுதி மன் 20
நான் பணத்துக்கு வக்கு இல்லாத பஞ்சைப் பயல். பிணமாகாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். குணமுள்ளவர்களையே வாட்டுவது கடவுள் தன்மையாக உள்ளது. அப்படித்தான் என்னையும் வாட்டுகிறாய். நீ நீடூழி வாழ்க.

மாரி இருந்தாலே வாரி பெருகுமால்
ஏரி நிறையுமால் என்பார்கள் – மாரிநீ
தேர்வரு முன்பே சிறியேன்பால் இன்மையே
கூர்வரும் நன்றுன் குறி 21
மாரி பொழிந்தால் வாரி பெருகும். ஏரி பெருகும். மாரியே! நீ வரும்போதும் என்னிடம் வறுமையே வந்திருக்கிறது. எதற்கு இப்படிக் குறி வைக்கிறாய்?

அடியேன் செங்கைப் பொதுவன் அவ்வப்போது பாடிய பாடல்கள்.
பாடிய நாள் 1993 (கி. பி 1662) சித்திரை மாதம் 2 ஆம் நாள்


அருள்தரு சுளைகள் தமிழ் God’s Grace Tamil


செந்தமிழ்வேள்
தமிழ்க்கொடை

செந்தமிழே செவ்வேளே தேன்பால் ஊற்றே
சிறியேனைத் தேடிவரும் செல்வப் பாவாய்
வெந்தாலும் நொந்தாலும் என்னுள் ளத்தை
வேண்டிநிற்கும் விழுமியநல் லின்பப் பேறே
தந்தாலும் பெற்றாலும் வளரு கின்ற
தனித்திருவே உனைநாடிச் சார்ந்தே விட்டே
வந்தாலும் போனாலும் மணந்தே என்னை
வாழ்விக்கும் என்னிறையே வாழி நன்றே 6

நலமில்லா என்நாவை நாடி வந்தாய்
நாடாத என்நெஞ்சைத் தேடி நின்றாய்
வலமில்லா என்சொல்லின் வலமாய் நின்று
மதியேனை ஆளாக்கி வளர்க்கின் றாயே
நிலமில்லா உழவன்போல் நின்னில் லாத
நேயருக்கு நீயருள மாட்டா யோகொல்
புலமில்லா அடியேற்கும் புரிந்தே ஊட்டும்
புத்தமிழ்தே என்னிறையே போற்றி போற்றி 7

காணாத மடம்பட்டேன் காணு மாறு
கருத்தினிலே விளையாடிக் களிக்கின் றாயே
மாணாத என் நாவால் வள்ளால் நின்றன்
மாட்சிமையை வல்லார்முன் வாய்தி றந்து
நாணாது நான்காட்டக் கூடு மாமோ
நற்றமிழே என்கந்த வேளே நீயும்
பேணாத பொல்லேனைப் பேணு கின்றாய்
பெருந்தன்மைக் கென்செய்வேன் பேதை யேனே 8

அருள்சேர்ந்த செல்வத்தை அள்ளித் தந்தாய்
அடியேனும் கைம்மாறாய் என்ன செய்வேன்
பொருள்சேர்த்துக் கொடுத்தாலும் வாங்க மாட்டாய்
பூச்சூட்டி விட்டாலும் வாடிப் போகும்
இருள்சேர்ந்த என்நெஞ்சில் இருப்ப தெல்லாம்
எடுத்தடுக்கிப் பாவென்றே என்னுள் ளம்போல்
மருள்சேர்ந்த வாயினிலே வந்த வாறு
மாற்றியே பாடிடுவேன் வாங்கிக் கொள்ளும் 9

அடியேன் செங்கைப் பொதுவன் அவ்வப்போது பாடிய பாடல்கள்.
பாடிய நாள் 1997 (கி. பி. 1966)


Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி