Showing posts with label பெரும்பாணாற்றுப்படை. Show all posts
Showing posts with label பெரும்பாணாற்றுப்படை. Show all posts

Saturday, 11 July 2015

பெரும்பாணாற்றுப்படை சேர்க்கை-வெண்பா

தொண்டை நாடு
இளந்திரையன் தொண்டையரின் வழித்தோன்றல்

 • ·         மங்கித் தோன்றும் மழைமேகங்கள் முகந்து செல்லும்படி நீர் வழங்கும் கடல் இரவும் பகலும் தூங்காமல் ஆரவாரம் செய்துகொண்டிருப்பதற்குக் காரணம்,
 • ·         வெஞ்சின வேலைக் கையில் ஏந்திக் கொண்டும், காட்டில் பூத்த பூவின் கண்ணி மாலையைத் தலையில் சூடிக்கொண்டும், பாயும் குதிரைமேல் செல்லும் திரையனைப் பெற்றுத் தந்த செருக்குத்தான்.      
கான் பயந்த கண்ணி என்பது தொண்டைக் கொடியின் கண்ணிமாலை 
தொண்டை = ஆதொண்டை = பல்லவம் 
ஆடி அம்மாவாசை நோன்பிற்கு உகந்ததாகப் போற்றப்படுவது ஆதொண்டங்காய். 
ஆதொண்டங் கொடியை அக்காலத்தில் மிகுதியாகக் கொண்டிருந்த நாடு தொண்டைநாடு

பிற்காலத்தில்
காஞ்சியில் இருந்து கொண்டு ஆட்சி புரிந்த பல்லவரும்
திரையன் மரபில் வந்தவர்
என்பதை வெளிப்படுத்தும் சான்று இந்த வெண்பா

பாட்டு – சொல் பிரிப்புப் பதிவு
தனிப் பாடல்

கங்குலும் நண்பகலும் துஞ்சா இயல்பிற்றாய்,
மங்குல் சூழ் மாக் கடல் ஆர்ப்பதூஉம் – ‘வெஞ் சின வேல்    
கான் பயந்த கண்ணிக் கடுமான் திரையனை 
யான் பயந்தேன்' என்னும் செருக்கு.    


பெரும்பாணாற்றுப்படை பகுதி 57

இது ஏற்காடு மலையிலுள்ள அருவி
இளந்திரையன் மலைநாட்டு அருவி
அவன் அருவிய மலைகிழவோன்

 • ·         கின்னரம் என்னும் சில்லு வண்டுகள் ஒலித்துக் கொண்டேயிருக்கும் அச்சம் தரும் மலைச்சாரலில் மயில்கள் மகிழ்ந்து விளையாடும்.
 • ·         அந்த மரமடர்ந்த காடுகளில் ஆண் குரங்குகள் பாய்ந்து விளையாடும்.
 • ·         அப்போது மண்ணில் வீழ்ந்த மலர்களைப் பெண்குரங்குகள் சீய்த்து விளையாடும்.
 • ·         அங்கே விலங்குகள் துஞ்சும்.
·         புறவு என்பது முல்லைநிலம்.

 • ·         அங்குள்ள குடில் முற்றங்களில் முனிவர்கள் தீ வளர்ப்பர்.
 • ·         களிறுகள் கொண்டு வந்து தந்த விறகுகளைக் கொண்டு தீ வளர்த்து வேள்வி செய்வர்.
 • ·         அருகில் தெளிந்த ஓளியுடன் பளிச்சிடும் அருவிகள் பல வீழ்ந்தோடும்.
இப்படிப்பட்ட மலைநாட்டை ஆளும் உரிமை பெற்ற அரசன் தான் தொண்டைமான் இளந்திரையன்.
ஏற்காடு அல்லது சேர்வராயன் மலைப்பகுதி தொண்டைமானின் ஆட்சிக்கு அக்காலத்தில் உட்பட்டிருந்தது போலும்

சவ்வாது மலைப்பகுதி என்பது டாகடர் மா, இராசமாணிக்கனார் கருத்து.
பாட்டு – சொல் பிரிப்புப் பதிவு

கின்னரம் முரலும் அணங்குடைச் சாரல்,
மஞ்ஞை ஆலும் மரம் பயில் இறும்பின், 495
கலை பாய்ந்து உதிர்த்த மலர் வீழ் புறவின்,  
மந்தி சீக்கும் மா துஞ்சு முன்றில்,
செந் தீப் பேணிய முனிவர், வெண் கோட்டுக் 
களிறு தரு விறகின் வேட்கும்,   
ஒளிறு இலங்கு அருவிய மலைகிழவோனே.  500


பெரும்பாணாற்றுப்படை பகுதி 56

இது நான்கு குதிரை பூட்டிய வண்டி
வண்டிப் போட்டியில் கலந்துகொள்ளும் வண்டி
இளந்திரையன் இது போல் நான்கு குதிரை பூட்டிய வண்டி தருவான்
பரிசுப் பொருள்களை ஏற்றிச்செல்ல இந்த வண்டி
இளந்திரையன் உணவு, உடை, பரிசில் தந்து பேணும் பாங்கு இப்பகுதியில் கூறப்படுகிறது.

 • தன்னைத் தானே சீர்தூக்கிப் பார்த்துக்கொண்டான்
 • உலகம் ஒரு நிலையில் நிற்பதில்லை. பொருள்களும் எண்ணங்களும் மாறி மாறி உருண்டோடிக் கொண்டே இருக்கும்.
 • உலகில் நிலையானது என்பது ஒருவனது செயலால் பிறருக்கு விளைவதை எண்ணிப் பார்க்கும் புகழோ, இகழோதான்.
 • இளந்திரையன் தனக்கு நற்பெயர் உலகில் அழிவு இல்லாமல் நிற்க வேண்டும் என்று விரும்பினான்.
 • அதற்காகத் தன் செயல்களைத் தானே சீர்தூக்கிப் பார்த்துக் கொண்டான்.
புத்தாடை

 • ·         கிணற்றுப் பாசி போல் அழுக்குப் படிந்து கிழிந்துள்ள உங்களது ஆடைகளை நீக்கிவிட்டு, நீராவி போல் மென்மையும் தூய்மையும் கொண்ட புத்தாடைகளை உடுத்திக் கொள்ளச் செய்வான்.
 • ·         சென்ற நீங்கள் மட்டுமல்லாமல் ஊரில் வாழும் உங்களது சுற்றத்தாரும் உடுத்திக் கொள்ளுமாறு தந்து உதவுவான்.
புழுக்கல் (பிரியாணி)

 • ·         பலவகையான புலவுகளைச் சேர்த்துப் புழுங்கச் செய்த உணவை அவனே உங்கள்முன் நின்று கொண்டு ஊட்டுவான்.
 • ·         எவ்வளவுதான் உண்டாலும் எப்படித்தான் சுவைத்துச் சாப்பிட்டாலும் இன்னும் இன்னும் என்று சொல்லிப், பின்னும் உண்ணச் செய்ய வேண்டும் என்று எண்ணும் நிறைவுறாத ஆசையோடு ஊட்டுவான்.
 • ·         கொடிய வாளைப் பிடித்துப் பிடித்து அதன் அழுத்தத்தால் காப்புக் காய்த்துப்போன தன் வலிமை மிக்க கைகளால் ஊட்டுவான்.
 • ·         சமையல் தொழிலில் வல்லவன் செந்நெல் அரிசியொடு பலவகையான புலால் துண்டுகளைச் சேர்த்துச் சமைத்த புழுக்கலை ஊட்டுவான்.
 • ·         அறுத்துப் போட்ட அரியிலேயே நன்றாக முற்றி விளைந்து தெரித்திருக்கும் நெல்லிலிருந்து உண்டாக்கிய அரிசியில் சமைத்த புழுக்கல் அது.
 • ·         விளையாத காரரிசிப் புழுக்கல் அன்று.
·         அமுது என்பது குழம்பு.

 • ·         நல்ல மணமும், இனிய சுவையும் கொண்டது அந்த அமுது.
 • ·         உண்டவர் மீண்டும் மீண்டும் உண்ண விரும்பும் வகையில் வழி வழியாகச் சமைத்துப் பழகிய கைப்பக்குவத்தை உள்ளடக்கிப் புழுக்கிய உணவு அது.
 • ·         வானத்தில் மீன்கள் பூத்துக் கிடப்பது போல் பரந்த இடத்தில் உண்கல வட்டில்களைப் பரப்பிப் புழுக்கல் இட்டு ஊட்டுவான்.
அணிகலன் – (தாமரை)

 • ·         மேகம் மேயும் வானத்தில் நிலா ஒளிர்வது போல், கரிய கூந்தலில் போடப்பட்ட பித்தைக் கொண்டையின் மேல் தாமரை ஒளிரும்.
 • ·         வண்டுகள் மொய்க்காத பொன்னால் செய்யப்பட்ட தாமரைப் பூவை அழகு தோன்றும் வகையில் தானே தன் கைகளால் சூட்டி விடுவான்.
ஊட்டுவான்

 • ·         பெற்ற மக்களுக்கு உணவு ஊட்டுவது போல ஊட்டுவான்.
அணிகலன் – மாட்டல் - கொண்டைமாலை

 • ·         பொன்னின் தொடையமை கொண்டை மாலை என்பது மாட்டல்
 • ·         கடலில் நீர் முகந்து சென்ற பருவ வானம் பகலில் பெய்துகொண்டு மின்னுவது போல் ஒளி வீசும் கொண்டை-மாலையை விறலியரின் கதுப்பில் சூட்டி வீடுவான்.
 • ·         கதுப்பு என்பது காதுப் பக்கம் உள்ள மயிர்.
ஊர்தி – நாலு குதிரை பூட்டிய தேர்

 • ·         கடலின் சிறப்பை நூல்கள் புகழ்ந்து பாடுகின்றன.
 • ·         ஆசை கொள்ள வைக்கும் அந்தக் கடலிலுள்ள சங்குகள் போல் வெள்ளை நிறமுள்ள நான்கு குதிரைகள் பூட்டிய முத்துத் தேரைப் பரிசாக நல்குவான்.
ஊர்தி – சவாரிக் குதிரைகள்

 • ·         தன் கொடையில் அத்துடன் நிறைவடையாமல் படைக் குதிரைகளையும் பரிசாக நல்குவான்.
 • ·         போர்க்களத்தில் பகைவர்களைத் தொலைத்து வெற்றி கண்ட போது அவர்கள் விட்டுச் சென்ற குதிரைகள் அவை.
 • ·         வானத்தில் பறப்பது போல் தாவிச் செல்லும் நடையோட்டம் கற்றவை அவை.
இப்படி உடை, உணவு, அணிமணி, ஊர்திகள் முதலானவற்றை அவனிடம் பெறக் காத்திருக்க வேண்டுவதில்லை.

 • அவனைப் பார்த்த அன்றே பெற்றுத் திரும்பலாம்.
 • பெற்ற வளங்களைத் தம் வரவுக்காகக் காத்திருக்கும் மற்றவர்களுக்கு விரைந்து உதவி மகிழலாமல்லவா!
பாட்டு – சொல் பிரிப்புப் பதிவு

நாவல் அம் தண் பொழில் வீவு இன்று விளங்க,    465
நில்லா உலகத்து நிலைமை தூக்கி,    
அந் நிலை அணுகல் வேண்டி, நின் அரைப்   
பாசி அன்ன சிதர்வை நீக்கி,
ஆவி அன்ன அவிர் நூல் கலிங்கம்    
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇ,     470
கொடு வாள் கதுவிய வடு ஆழ் நோன் கை  
வல்லோன் அட்ட பல் ஊன் கொழுங் குறை, 
அரி செத்து உணங்கிய பெருஞ் செந்நெல்லின்
தெரி கொள் அரிசித் திரள் நெடும் புழுக்கல்,  
அருங் கடித் தீம் சுவை அமுதொடு, பிறவும்,  475
விருப்புடை மரபின் கரப்புடை அடிசில், 
மீன் பூத்தன்ன வான் கலம் பரப்பி,
மகமுறை, மகமுறை நோக்கி, முகன் அமர்ந்து,    
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி,  
மங்குல் வானத்துத் திங்கள் ஏய்க்கும்   480
ஆடு வண்டு இமிரா அழல் அவிர் தாமரை   
நீடு இரும் பித்தை பொலியச் சூட்டி;    
உரவுக் கடல் முகந்த பருவ வானத்துப் 
பகற் பெயல் துளியின் மின்னு நிமிர்ந்தாங்கு, 
புனை இருங் கதுப்பகம் பொலிய, பொன்னின்  485
தொடை அமை மாலை விறலியர் மலைய;  
நூலோர் புகழ்ந்த மாட்சிய, மால் கடல் 
வளை கண்டன்ன வால் உளைப் புரவி, 
துணை புணர் தொழில, நால்கு உடன் பூட்டி, 
அரித் தேர் நல்கியும் அமையான், செருத் தொலைத்து 490
ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்து ஒழித்த   
விசும்பு செல் இவுளியொடு பசும் படை தரீஇ,
அன்றே விடுக்கும் அவன் பரிசில். இன் சீர்க் 


பெரும்பாணாற்றுப்படை பகுதி 55

துணங்கையஞ்செல்வி (காளி)
சூரபன்மாவைக் கொன்ற முருகனைப் பெற்றவள்
உரும்பில் சுற்றத்தோடு காட்சி தரும் அவனிடம் நீங்கள் சென்று அவனை வாழ்த்த வேண்டும்.
இப்படி யெல்லாம் சொல்லி அவனை வாழ்த்தலாம். 

 • பொறிவரிப் புகர்முகம் = புள்ளிகளையும் கோடுகளையும் முகத்தில் கொண்ட யானை, 
 • வயமான் = சிங்கம். 
 • கொடுவரிக் குறளை = வளைந்த கோடுகளையுடைய புலியின் குட்டி.
யானை சிங்கத்தைத் தாக்கியது. 
தாக்கப்பட்ட சிங்கம் புலிக்குட்டிகளைத் தாக்க விரும்பி எழுந்தது போல இளந்திரையன் பகைவர்மேல் போருக்கெழுந்தான். 

மக்கள் – யானை,
திரையன்- சிங்கம்,
பகையரசர் –புலி

முறையும், குறையும், வேண்டுவனவும் வழங்கும்படி வேண்டிய வண்ணம் இளந்திரையனாகிய சிங்கத்தை மக்களாகிய யானைக்கூட்டம் தாக்கியது.
இளந்திரையன் புலவர்களுக்கும் மக்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளையெல்லாம் செய்துவிட்டுச் சிங்கம் புலிக்குட்டியின் மீது பாய்வது போல் பகைவர்கள் மீது பாய்ந்தான். இவ்வாறு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 • பகைவர்களின் காவல் மதில்கள் அவனுக்கு ஒரு பொருட்டு அன்று.
 • பகைவர்களின் தலை முடிகளைப் (கிரீடங்களைப்) பறித்து வந்தான்.
 • அவன் கையிலிருந்த அவனது வாள் கண்டது வெற்றியைத் தவிர வேறொன்றும் இல்லை.
 • எனவே அவனது வினையுடம்பைச் சுட்டாலும் அவனது வாள் அவனுடன் ஒன்றாக வைத்துச் சுடப்படும்.
 • பகைநாட்டை வென்று பெற்ற கொண்டிப் பண்டங்களே தொண்டைநாட்டுப் படைவீரர்களின் உணவு. 

 1. இப்படிப்பட்ட தொண்டையர்களின் மரபுவழித் தோன்றலே! – 1 ள்ளர் = உடல் திற வீரர். மறவர் = படைத்திற வீரர்.
 2. மள்ளருக்கும் மள்ளனே! – 2
 3. மறவருக்கும் மறவனே! – 3
 4. செல்வர்களுக்கும் செல்வனே! – 4
 5. போரில் மேம்பட்டவனே! – 5 
 • துணங்கையஞ் செல்வி = பார்வதி = அம்மை = மாயவள். 
 • இவள் மாமோடாகிய ஆகாயத்தில் நடனமாடினாள். 
 • அணங்கு = மருளாட்டம். 
 • கடலிலே சூரபன்மாவைக் கொன்றவன் முருகன். 
 • அவனை உண்டாக்கித் தந்தவள் பார்வதி. 
 • (இவள் மாயவள் உருவம் கொண்டு மரக்கால் ஆட்டம் ஆடினாள். 
 • இதனைக் …காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள். மாயவள் ஆடிய மரக்கால் ஆடல் … என்று மாதவி ஆடிய பதினோர் ஆடல்களில் ஒன்றாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. – கடலாடு காதை)

 1. அருட்தெய்வமாகிய அம்மை அணங்காட்டம் ஆடிய போது அள்ளித் தரும் கொடையால் அவளை ஆற்றுவிப்பது போல வந்தவர்க் கெல்லாம் வரையறை இல்லாமல் வாரி வழங்கும் கொடையால் திரையன் என்று பெயர் பெற்றவனே (திரை = கடல் அலை) – 6
 2. பெரும 
இப்படிப்பட்ட நின் பெரும்புகழைப் பாடிக்கொண்டு வந்துள்ளேன். 
நெடிது வாழிய! … என்று சொல்லிக்கொண்டே உங்களிடமுள்ள பேரியாழை முறையாக மீட்டுங்கள். 
(பேரியாழ் மீட்டியதால் இவன் பெரும்பாணன். இவனை ஆற்றுப் படுத்தியதால் இந்நூல் பெரும்பாணாற்றுப் படை.)

 • உங்கள் கடமைகளை உங்களுக்குத் தெரிந்த அளவில் செய்து அவனைக் கைகூப்பித் தொழுங்கள். 
 • உங்களது வறுமை நிலையை நீங்கள் சொல்ல வேண்டியதில்லை.
அவனே தெரிந்து கொண்டு செயல்படுவான்.

பாட்டு – சொல் பிரிப்புப் பதிவு

'பொறி வரிப் புகர்முகம் தாக்கிய வய மான்  
கொடு வரிக் குருளை கொள வேட்டாங்கு,   
புலவர் பூண் கடன் ஆற்றி, பகைவர்     450
கடி மதில் எறிந்து குடுமி கொள்ளும்   
வென்றி அல்லது, வினை உடம்படினும்,
ஒன்றல் செல்லா உரவு வாள் தடக் கை,
கொண்டி உண்டி, தொண்டையோர் மருக!    
மள்ளர் மள்ள! மறவர் மறவ!     455
செல்வர் செல்வ! செரு மேம்படுந!
வெண் திரைப் பரப்பின் கடுஞ் சூர் கொன்ற   
பைம் பூண் சேஎய் பயந்த மா மோட்டு, 
துணங்கை அம் செல்விக்கு அணங்கு நொடித்தாங்கு,    
தண்டா ஈகை நின் பெரும் பெயர் ஏத்தி, 460
வந்தேன், பெரும! வாழிய நெடிது!' என, 
இடனுடைப் பேர் யாழ் முறையுளிக் கழிப்பி, 
கடன் அறி மரபின் கைதொழூஉப் பழிச்சி,    
நின் நிலை தெரியா அளவை அந் நிலை


Friday, 10 July 2015

பெரும்பாணாற்றுப்படை பகுதி 54

படம் - வேண்டியவர்களுக்கு வேண்டியதை வழங்கும் அறிவன்
அரசன் இளந்திரையன் வேண்டியவர்களுக்கு வேண்டியதை வழங்குவான் 

 • உரும்பில் சுற்றம் என்பது அரசனின் உரிமைச் சுற்றம்.
 • ஆட்சி உரிமை பெற்ற அலுவலர்களும் இதனுள் அடங்குவர்.
 • அவனைப் போலவே அவனது இந்த உரும்பில் சுற்றத்தாரும் கூம்பாமல் மலர்ந்திருக்கும் உள்ளம் படைத்தவர்.
 • கொடை வழங்குதலையும் தமது அன்றாடக் கடமையாகக் கொண்டு செயல்படுபவர்கள்.
 • அரசன் இளந்திரையன் முறை (நீதி) வேண்டுபவர்களுக்கு முறை வழங்குவான்.
 • கீழைக் கடலில் தோன்றி வெளிச்சம் தரும் பகலவன் போல நீதி வழங்குவான்.
 • தனக்கு இன்ன குறை உள்ளது, அதனைத் தீர்த்து வைக்க வேண்டும் என்று வேண்டி வந்தவர்களுக்கு அவர்களின் குறையைத் தீர்த்து வைப்பான்.
 • மற்றும், யார் எதை வேண்டுகிறார்களோ அவர்களுக்கு அதனை அருளி உதவுவான்.
 • உரும்பில் சுற்றத்தோடு காட்சி தரும் அவனிடம் நீங்கள் செல்ல வேண்டும்.
பாட்டு – சொல் பிரிப்புப் பதிவு

குண கடல் வரைப்பின் முந்நீர் நாப்பண்
பகல் செய் மண்டிலம் பாரித்தாங்கு,    
முறை வேண்டுநர்க்கும், குறை வேண்டுநர்க்கும்,   
வேண்டுப வேண்டுப வேண்டினர்க்கு அருளி, 
இடைத் தெரிந்து உணரும் இருள் தீர் காட்சி,  445
கொடைக் கடன் இறுத்த கூம்பா உள்ளத்து,  
உரும்பு இல் சுற்றமோடு இருந்தோற் குறுகி, 


பெரும்பாணாற்றுப்படை பகுதி 53

டில்லி ஜம்மா மசூதியில் வாழும் புறாக்கள் பறக்கும் காட்சி
அக்காலக் காஞ்சி அரசன் இளந்திரையன்
மாடத்திலிருந்து இப்படிப் புறாக்கள் பறந்ததாம்
அரசன் இளந்திரையனின் அரண்மனை ஓங்கி உயர்ந்த மாடங்களைக் கொண்டது.

 • அதில் புறாக்கள் வாழும்.
 • அவற்றில் ஆண்-புறாக்களின் கால்கள் சிவப்புநிறம் கொண்டவை.
 • கொல்லர் போர்-யானைகளின் தந்தங்களுக்கு காப்பு வளையல்கள் செய்வார்கள்.
 • அதற்காக அவர்கள் உலைக்கூடத்தில் இரும்பைத் தட்டும் ஓசையைக் கேட்டு அஞ்சி வெருவி அங்குள்ள மாடப் புறாக்களின் சேவல்கள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கும்.
 • அரண்மனையில் செல்வம் பயன்படுத்த முடியாமல் தூங்கும்.
பாட்டு – சொல் பிரிப்புப் பதிவு

பெருங் கை யானைக் கொடுந் தொடி படுக்கும்
கருங் கைக் கொல்லன் இரும்பு விசைத்து எறிந்த  
கூடத் திண் இசை வெரீஇ, மாடத்து   
இறை உறை புறவின் செங் கால் சேவல்,    
இன் துயில் இரியும் பொன் துஞ்சு வியல் நகர் 440


Thursday, 9 July 2015

பெரும்பாணாற்றுப்படை பகுதி 52

கங்கை ஆற்றைப் படகில் கடக்கும் காட்சி
சென்ற படகு மீண்டு வரும்வரை
கடக்க விரும்பும் மக்கள் கரையில் காத்திருப்பது
போல
அரசன் திரையனைக் காண அரசர்கள் காத்திருப்பார்களாம் 

 • இமையோர் உறையும் சிமையம் ஆகையால் இமையம். (ஹிமம் = பனி – வடமொழி) இமயமலை = பனிமலை
 • அந்தச் சிறந்த இமையமலையின் வெள்ளைத் திரையைக் கிழித்துக் கொண்டு கங்கையாறு இறங்கிக் கொண்டிருக்கும்.
 • அது அந்த மலையில் விளங்கும் சுடர் போல் கங்கை இறங்கும்.
 • தன் பொலிவைக் காட்டிக் கொண்டு இறங்கும்.
 • கங்கையைச் படகின் துணை இல்லாமல் கடந்து செல்ல இயலாதாகையால் அது போக்கருங் கங்கை.
 • கங்கையாற்றில் படகில் செல்வதற்குப் படகுக்காகக் கரையில் காத்திருக்கும் மக்களைப் போல இளந்திரையனின் முகப்பார்வை கிட்டாதா என்று அவனைப் பணியும் மன்னர்கள் காத்துக் கிடப்பார்கள். மதிப்பில் தொய்வு இல்லாத பெருஞ் செல்வத்துடன் வந்து நெருங்கி நின்று காத்துக் கிடப்பர்.
பாட்டு – சொல் பிரிப்புப் பதிவு

இமையவர் உறையும் சிமையச் செவ் வரை, 
வெண் திரை கிழித்த, விளங்கு சுடர் நெடுங் கோட்டுப்    430
பொன் கொழித்து இழிதரும், போக்கு அருங் கங்கைப்    
பெரு நீர் போகும் இரியல் மாக்கள்
ஒரு மரப் பாணியில் தூங்கியாங்கு
தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇ,
செவ்வி பார்க்கும் செழு நகர் முற்றத்து, 435


பெரும்பாணாற்றுப்படை பகுதி 51

இப்படி அரசன் தொண்டைமான் இளந்திரையனைப் பலரும் சூழ்ந்திருப்பர்

 • திரையனை விரும்பி அவனிடம் செல்பவர்களுக்கு அவன் பாதுகாவலாக விளங்குவான்.
 • நண்பர்கள் விரும்பியதை அவன் மழைபோல் அள்ளித் தருவான்.
 • பகைவர்களை அவன் தீயைப்போல் சுட்டெரிப்பான்.
 • அவனை எதிர்த்துப் போரிட்டவர்களின் நிலம் பாழாகும்.
 • அவனை நயந்து வாழ்வோரின் நிலம் பொன் கொழித்துப் பூக்கும்.
 • மலையிலிருந்து இறங்கும் அருவி கடலை நோக்கிச் செல்வது போல், அரசர்களும் மக்களும் அவனது நட்பைப் பெறுவதற்காக அவனைச் சூழ்ந்து வந்து கொண்டேயிருப்பர்.  
 • துணை இல்லாதவர்கள் அவனது துணை-வலிமையைப் பெறுவதற்காக அவனைச் சூழ்ந்து வந்து கொண்டேயிருப்பர்.  
 • அவனைச் சுற்றிப் படர்ந்து கொண்டேயிருப்பர்.
 • பணிந்து கொண்டேயிருப்பர்.
பாட்டு – சொல் பிரிப்புப் பதிவு

நச்சிச் சென்றோர்க்கு ஏமம் ஆகிய
அளியும் தெறலும் எளிய ஆகலின்,    
மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ் பட, 
நயந்தோர் தேஎம் நன் பொன் பூப்ப,    
நட்புக் கொளல் வேண்டி நயந்திசினோரும்,    425
துப்புக் கொளல் வேண்டிய துணையிலோரும்,
கல் வீழ் அருவி கடல் படர்ந்தாங்கு,   
பல் வேறு வகையின் பணிந்த மன்னர் 


பெரும்பாணாற்றுப்படை பகுதி 50

பிறை சூடிய பெம்மான் நினைவோட்டம்
அந்தி வானத்தில் பிறை
போர்க்களத்தில் வெட்டப்பட்ட யானைத் தந்தத்தை
இரத்த வெள்ளம் இழுத்துச் செல்லும் காட்சி
Who is God Siva?
Crescent at the sky in the evening

 • காஞ்சி அரசன் இளந்திரையன் கொடையையே கைக்கு வளமாகப் பெற்றுத் தோன்றியவன்.
 • நூற்றுவரை வென்ற ஐவர் போல பல போர்களில் வெற்றி கண்டவன்.
(பிறவிக் கொடையாளி)
(வலிமையா, வளமா?)
கையின் வலிமையை விடக் கையின் வளமே (கொடையே) மேலானது.

 • போர்களத்தில், வெட்டப்பட்ட யானையின் வெண்ணிறத் தந்தத்தைச் சிவந்த குருதி-வெள்ளம் ஈர்த்துச் செல்லும் காட்சியானது வெயில் மறையும் மாலைக் காலத்தில் மழைமேகம் வெண்ணிறப் பிறை நிலாவைச் சூடிச் சிவந்து காணப்படுவது போல் இருக்கும்.
 • பிறை சூடிய சிவபெருமான் போல - நினைவோட்டம்
 • தன் பகைவர்களைப் போர்க்களத்தில் மாயச் செய்த இளந்திரையன், நூற்றுவரைப் போர்க்களத்தில் மாயச் செய்த ஐவர் போரிடத் தேரில் சென்றது போலச் சென்று, வெற்றி ஆரவாரத்தோடு, தேரில் திரும்பி வந்த வள்ளல் ஆவான்.
பாட்டு – சொல் பிரிப்புப் பதிவு

அவ் வாய் வளர் பிறை சூடிச் செவ் வாய்    
அந்தி வானத்து ஆடு மழை கடுப்ப,    
வெண் கோட்டு இரும் பிணம் குருதி ஈர்ப்ப,  
ஈர் ஐம்பதின்மரும், பொருது, களத்து அவிய,  415
பேர் அமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந் தேர்   
ஆராச் செருவின் ஐவர் போல,   
அடங்காத் தானையோடு உடன்று மேல்வந்த 
ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்து ஆர்த்து,   
கச்சியோனே, கை வண் தோன்றல்,     420


பெரும்பாணாற்றுப்படை பகுதி 49

பலாப்பழத்தில் பழம் தின்னும் கொசு-ஈக்கள் 
காஞ்சிமாநகரம் எப்போதும் விழாக் கோலமாக இருக்கும்.

 • காஞ்சிமா நகரத்தின் வீடுகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டிருந்தன.
 • கிளையில் பழுக்கும் பழங்கள் பலவற்றுள்ளும் பலா சிறந்தது.
 • அதில் ஈ மொய்க்கும்.
 • இழுமென் புள் என்பது ஈ.
 • உலகம் புலவு நாற்றம் அடிக்கும் கடலை ஆடையாக உடுத்திக் கொண்டுள்ளது.
 • வானத்தை முடியாகச் சூடிக்கொண்டுள்ளது.
 • பலாப்பழத்தின் சுளைகளில் பழம் தின்னும் கொசு-ஈக்கள் மொய்ப்பது போல உலகின் பல்வேறு திசைகளிலுள்ள மக்கள் விழாக் காலத்தில் காஞ்சிமா நகருக்கு வந்து தொழுவர்.
விழாக் கொண்டாடுவதில் பழம் பெருமை கொண்டது காஞ்சிமாநகரம்.

பாட்டு – சொல் பிரிப்புப் பதிவு

சுடுமண் ஓங்கிய நெடு நகர் வரைப்பின், 405
இழுமென் புள்ளின் ஈண்டு கிளைத் தொழுதிக்
கொழு மென் சினைய கோளியுள்ளும்  
பழம் மீக் கூறும் பலாஅப் போல, 
புலவுக் கடல் உடுத்த வானம் சூடிய   
மலர் தலை உலகத்துள்ளும் பலர் தொழ,     410
விழவு மேம்பட்ட பழ விறல் மூதூர்   


பெரும்பாணாற்றுப்படை பகுதி 48

திருமால் கொப்பூழிலிருந்து நான்முகன் தோன்றிய கதைப்படம்
காஞ்சிமா நகரமானது நீலநிற உருவம் கொண்ட திருமால் படுத்திருப்பது போலவும்,
திரையனின் அரண்மனையானது திருமாலின் கொப்பூழில் தோன்றிய நான்முகன் அமர்ந்திருக்கும் தாமரையின் பொகுட்டு போலவும்
அமைந்திருக்கும்.

காஞ்சிமா நகரம் தாமரை என்றால்
அரசன் திரையனின் அரண்மனை
அதன் பொகுட்டு.
தாமரைப் பூவில் உள்ள நடுமேடு
(அரசன் பிரமன் போன்றவன்)
தாமரைப் பொகுட்டு
பாட்டு – சொல் பிரிப்புப் பதிவு

நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவற் பயந்த பல் இதழ்த்  
தாமரைப் பொகுட்டின் காண்வரத் தோன்றி,   


பெரும்பாணாற்றுப்படை பகுதி 47

இது சென்னை
அரங்கநாதன் தெரு, காட்சி
காஞ்சிமாநகரத் தெரு
இப்படிக் கொடுக்கல் வாங்கல்
மிக்கதாய், விரைந்து
செல்லமுடியாததாய்
இருந்ததாம்
கொடுக்கலும் வாங்கலுமாகப் பரபரப்பாக உள்ள தெருக்களில் நடந்து செல்வதுகூட எளிதாக இருக்காது.  

 • திண்மையான தேர் சென்றதால் நீண்ட தெருக்கள் குண்டும் குழியுமாக இருக்கும்.
 • அத்தெருக்களில் படை வீரர்களின் குடும்பங்கள் வாழும்.
 • அக்குடியினர் வலிமையால் புகழ் பெற்றவர்கள்.
 • வெளியிடங்களில் படைக்கருவிகளும் கையுமாகத் திரிவர்.
 • அவர்கள் அந்த வீரப் புகழைக் கடைக்காலிலே கட்டித் தூக்கி எறிந்து விட்டு வழியில் செல்வோரைத் தடுத்து பிடித்து வந்து கொடை வழங்குவதில் ஆர்வம் காட்டுவர்.
 • (கடைக்கால் = தண்ணீர் பாயும் கடைமடை)
 • திரையன் அரண்மனையின் வாயில் கதவம் எப்போதும் அடைக்கப் படாமல்  திறந்தே இருக்கும்.
 • காவல் புரிவோரும் தம் வீரத்தை வெளிப்படுத்தாமல் வழிப் போக்கர்களைத் தடுத்து அரசனிடம் கொடை பெறச் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பர்.
பாட்டு – சொல் பிரிப்புப் பதிவு

திண் தேர் குழித்த குண்டு நெடுந் தெருவில், 
படை தொலைபு அறியா மைந்து மலி பெரும் புகழ்,
கடை கால்யாத்த பல் குடி கெழீஇக்    
கொடையும் கோளும், வழங்குநர்த் தடுத்த    400
அடையா வாயில், மிளை சூழ் படப்பை,


பெரும்பாணாற்றுப்படை பகுதி 46

யானையைக் குழியில் விழச்செய்து பழக்குதல் 
இளந்திரையன் ஊர் கச்சி. அம் மாநகரத் தெருக்களில் யானைகள் கட்டப்பட்டிருக்கும். காடுகளில் யானைகளைக் குழியில் விழச்செய்து பழக்கிக்கொண்டிருப்பர்.
காழோர் என்போர் யானைப் பாகர்.
அவர்கள் சோற்றில் நெய் ஊற்றிப் பிணைந்து கவளமாக்கிப் பழக்கி வைத்திருக்கும் யானைக்கு ஊட்டுவர்.
இவர்கள் சோர்ந்திருக்கும் காலம் பாரத்து கருவுற்றிருக்கும் மந்தி நெய்ம்மிதி கவளத்தைக் கவர்ந்து சென்று உண்ணும்.
வெளிறு என்பது யானை கட்டிவைக்கும் இடம்.
கந்து என்பது பற்றுக்கோடு
இங்கு யானையைக் கட்டி வைக்கும் தூண்.
வெளிறு இல்லாத கந்து என்பது, வைரம் பாயாத இளங் குச்சிகளால் மூடி, யானையை விழச் செய்யாத பற்றுக்கோடு உள்ள இடம்.
வேறு சில காழோர் வெளிறு இல்லாத கந்தினைப் பயன்படுத்திக் காட்டிலுள்ள யானையைக் குழியில் விழச்செய்து அதன் சினத்தை அடக்கிக் கொண்டிருப்பார்கள்.

பாட்டு – சொல் பிரிப்புப் பதிவு

காழோர் இகழ் பதம் நோக்கி, கீழ,
நெடுங் கை யானை நெய்ம் மிதி கவளம்    
கடுஞ்சூல் மந்தி கவரும் காவில்,  395
களிறு கதன் அடக்கிய வெளிறு இல் கந்தின்,


பெரும்பாணாற்றுப்படை பகுதி 45

ஆப்பிக்காவில் நடைபெறும் ஒரு திருவிழாக் காட்சி
இதுபோல் காஞ்சி நகரப் பெருந்துறையில் வேனில் விழா நடைபெறுமாம்
வேனில் விழா
பூமலி பெருந்துறைச் செவ்வி
இந்திர விழா

 • வேனில் விழாதான் பூமலி பெருந்துறைச் செவ்வி என்று போற்றப்படுகிறது.
 • (சிலப்பதிகாரம் போற்றும் இந்திர விழா போன்றது காஞ்சியில் நடைபெற்ற திருமாலின் திருவிழா)
 • துறக்கம் என்னும் சுவர்க்கம் பழமைச் சிறப்பினை உடையது.
 • அதனைப் பெறுவதென்பது இயலாத ஒன்று.
 • துறக்கம் என்பது பொய்மை.
 • (காஞ்சி வேனில் விழா பெற்று மகிழக்கூடிய துறக்கம்.)
உண்மையில் பொய்யாத மரபினைக் கொண்டு மண்ணுலகில் இருக்கும் துறக்கந்தான் வேனில் காலமும் அதில் கொண்டாடப்படும் விழாவும்.

 • காஞ்சியில் இந்த விழா நடைபெறும்.
இந்த விழாவைக் கொண்டாடுபவர்களோடு சேர்ந்து நீங்களும் கொண்டாடிக்கொண்டு அங்குச் சிலநாள் தங்குங்கள்.

 • அக்காலத்தில் கடவுளை (இந்திரன், காமன்) வாழ்த்திப் பாடுங்கள்.
 • உங்களிடம் உள்ள கருங்கோட்டு இனிய யாழை மீட்டிக் கொண்டே பாடுங்கள்.
 • இனிய இசைக் கருவிகளையம் சேர்த்து இசைத்துக்கொண்டே பாடுங்கள்.
பின் உங்களின் குறியிடம் நோக்கி வழிமேற் செல்லுங்கள்.

பாட்டு – சொல் பிரிப்புப் பதிவு

பெறற்கு அருந் தொல் சீர்த் துறக்கம் ஏய்க்கும்
பொய்யா மரபின் பூ மலி பெருந் துறை,
செவ்வி கொள்பவரோடு அசைஇ; அவ் வயின் 390
அருந் திறல் கடவுள் வாழ்த்தி, சிறிது நும்   
கருங் கோட்டு இன் இயம் இயக்கினிர் கழிமின்.    


Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி