Showing posts with label பழமொழி. Show all posts
Showing posts with label பழமொழி. Show all posts

Sunday, 30 July 2017

பழமொழி தற்சிறப்புப் பாயிரம் 2 PalaMoli About 2

பிண்டி நீழல் பெருமான்
அருகன்
தற்சிறப்புப் பாயிரம்
நூல் தன்னை உணர்த்தும் முன்னுரை, முடிவுரை

பிண்டியின் நீழற் பெருமான் அடிவணங்கிப்
பண்டைப் பழமொழி நானூறும் - கொண்டினிதா
முன்றுறை மன்னவன் நான்கடியும் செய்தமைத்தான்
இன்றுறை வெண்பா இவை.

பிண்டியின் நீழற் பெருமான் அடி வணங்கி, பண்டைப் பழமொழி நானூறும் கொண்டு, இனிதா, முன்றுறை மன்னவன், நான்கு அடியும் செய்து அமைத்தான், இன் துறை வெண்பா இவை.

முன்றுறை அரையனாரை இப் பாடல் "முன்றுறை மன்னவன்" என்று குறிப்பிடுகிறது. 
பிண்டி என்னும் அசோக மரத்தடியில் அமர்ந்து தவம் புரியும் பெருமான் அருகனை வணங்கி நூலை இனிதாக இயற்றினான்.
இவற்றில் பண்டைய பழமொழிகள் 400 உள்ளன. 
நான்கு அடிகள் கொண்ட இனிய பாடல் துறையாகிய வெண்பாவால் இயற்றினான். 

முன்றுறை அரையனார் இயற்றிய பழமொழி (பழமொழி நானூறு)
பழமைப் பேச்சு

பழமொழி மிகை 3 PalaMoli Extra 3

தானே ஆடும் பேய் பறை முழக்கம் கேட்டால் ஆடாதோ

அறியாமை யோடிளமை ஆவதாம் ஆங்கே
செறியப் பெறுவதாம் செல்வம் - சிறிய
பிறைபெற்ற வாணுதலாய் தானேயா டும்பேய்
பறைபெற்றால் ஆடாதோ பாய்ந்து

(புறத்திரட்டு-1139)

அறியாமையோடு இளமை ஆவதாம்; ஆங்கே, செறியப் பெறுவதாம் செல்வம்;-சிறிய பிறைபெற்ற வாணுதலாய் தானே ஆடும் பேய், பறைபெற்றால் ஆடாதோ, பாய்ந்து?

அறியாமையோடு வளர்வதுதான் இளமை. 
இளமையில் சேர்ப்பதுதான் செல்வம். 
சிறிய பிறை போன்ற நெற்றியை உடையவளே 
தானாகவே ஆடும் பழக்கம் கொண்ட  பேய் பறை-முழக்கம் கேட்டால் ஆடாதோ?

அறியா இளமை மூதாதையர் செல்வத்தால் சீரழியும். 

முன்றுறை அரையனார் இயற்றிய பழமொழி (பழமொழி நானூறு)
பழமைப் பேச்சு

பழமொழி மிகை 2 PalaMoli Extra 2

நகையே ஆற்றுவிடும்
நகைப்பே ஆற வைக்கும் 

அமையப் பொருளில்லார் ஆற்றாதா ரென்ப
திமையத் தனையார்கண் இல்லை - சிமைய
நகையேர் இலங்கருவி நல்வரை நாட
நகையேதான் ஆற்று விடும்.

(புறத்திரட்டு-1107)

'அமையப் பொருள் இல்லார் ஆற்றாதார்' என்பது இமையத்து அனையார்கண் இல்லை; சிமைய நகை ஏர் இலங்கு அருவி நல் வரை நாட! நகையேதான் ஆற்றுவிடும்.

வேண்டிய அளவு பொருள் இல்லாதவர் 
வாழ முடியாமல் இருப்பவர் 
என்பது 
இமயம் போன்ற பெரியவர்களிடம் இல்லை. 
மலை முகட்டிலிருந்து நகைத்துக்கொண்டு அருவி இறங்கும் நல்ல மலைநாட்டு வேந்தனே 
செயலாற்றல் நகைப்பை ஆறுமாறு செய்யும். 

முன்றுறை அரையனார் இயற்றிய பழமொழி (பழமொழி நானூறு)
பழமைப் பேச்சு

பழமொழி மிகை 1 PalaMoli Extra 1

வெள்ளத்தில் தீர்த்தம் மிகை
வெள்ளத்தில் வரும் நீர் இரண்டாவது 
உள்ளத்தில் நீர்மை முதலாவது

அருளுடைமை கொல்லாமை ஐந்தடக்கல் வாய்மை
இருளடையாக் கல்வியோ டீகை - புரையில்லா
உள்ளத்தில் தீர்த்தம் இவையுளவா கப்பெற்றால்
வெள்ளத்தில் தீர்த்தம் மிகை.

(புறத்திரட்டு-146)

அருளுடைமை, கொல்லாமை, ஐந்து அடக்கல், வாய்மை, இருள் அடையாக் கல்வியொடு, ஈகை, புரை இல்லா உள்ளத்தில் தீர்த்தம் இவை உளவாகப் பெற்றால், வெள்ளத்தில் தீர்த்தம் மிகை.

உயிர்களிடம் இரக்கம் காட்டுதல் 
உயிர்களைக் கொல்லாமை 
ஐம்புலன்களை அடக்குதல் 
வாய்மை பேசுதல் 
இருள் இல்லாத தெளிவான கல்வி 
ஈகைக் குணம் 
புரை ஓடாத உள்ளத்தில் நீர்மை 
இவை உளவாகப் பெற்றால் 
ஆற்று வெள்ளத்தில் வரும் நீர் இரண்டாவதாக அமையும். 

முன்றுறை அரையனார் இயற்றிய பழமொழி (பழமொழி நானூறு)
பழமைப் பேச்சு

பழமொழி 400 PalaMoli 400

வித்து இன்றிச் சம்பிரதம் இல்
விதை இல்லாமல் விளைச்சல் இல்லை
 
400.

நாணின்றி ஆகாது பெண்மை நயவிய
ஊணின்றி ஆகா துயிர்வாழ்க்கை - பேணுங்கால்
கைத்தின்றி ஆகா கருமங்கள் காரிகையாய்
வித்தின்றிச் சம்பிரதம் இல்.
 
நாண் இன்றி ஆகாது, பெண்மை; நயவிய ஊண் இன்றி ஆகாது, உயிர் வாழ்க்கை; பேணுங்கால், கைத்து இன்றி ஆகா, கருமங்கள்;-காரிகையாய்! வித்து இன்றிச் சம்பிரதம் இல்.

நாணம் இல்லாவிட்டால் பெண்மை இல்லை. 
நயமான உனவு இல்லாவிட்டால் உயிர்-வாழ்க்கை இல்லை. 
எதைச் செய்தாலும் கையில் வளம் இல்லாவிட்டால் செயல் ஈடேறாது. 
அழகியே
விதை இல்லாமல் விளைச்சல் இல்லை அல்லவா?

முன்றுறை அரையனார் இயற்றிய பழமொழி (பழமொழி நானூறு)
பழமைப் பேச்சு

பழமொழி 399 PalaMoli 399

உரைத்தாலும் பேதைக்கு உணர்வு தோன்றாது
 
399.

பூத்தாலும் காயா மரம் உள; மூத்தாலும்
நன்கு அறியார் தாமும் நனி உளர்; பாத்தி
விதைத்தாலும் நாறாத வித்து உள; பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு.
 
பூத்தாலும் காயா மரம் உள; மூத்தாலும் நன்கு அறியார் தாமும் நனி உளர்; பாத்தி விதைத்தாலும் நாறாத வித்து உள; பேதைக்கு உரைத்தாலும் தோன்றாது உணர்வு.

பூத்தாலும் காய் காய்க்காத மரங்கள் உள்ளன. 
அதுபோல,
வயதில் மூத்தாலும் நல்லனவற்றை அறிந்துகொள்ளாத மக்கள் உள்ளனர். 

பாத்தியில் விதைத்தாலும் முளைக்காத சில விதைகள் உள்ளன. 
அதுபோல,
அறியாப் பேதைகளுக்கு என்னதான் எடுத்துச் சொன்னாலும் உணர்வு தோன்றாது. 

முன்றுறை அரையனார் இயற்றிய பழமொழி (பழமொழி நானூறு)
பழமைப் பேச்சு

பழமொழி 398 PalaMoli 398

உடம்பினால் என்ன பயன்
 
398.

நட்டாரை ஆக்கிப் பகைதணித்து வைஎயிற்றுப்
பட்டார் அகலல்கு லார்ப்படர்ந்து - ஒட்டித்
தொடங்கினார் இல்லத் ததன்பின் துறவா
உடம்பினால் என்ன பயன்?
 
நட்டாரை ஆக்கி, பகை தணித்து, வை எயிற்றுப் பட்டு ஆர் அகல் அல்குலார்ப் படர்ந்து, ஒட்டித் தொடங்கினார் இல்லத்து, அதன்பின் துறவா உடம்பினால் என்ன பயன்?

நண்பர்களைச் சிறந்து விளங்கச் செய்ய வேண்டும். 
பகைவர் அச்சத்தைத் தணிக்க வேண்டும். 
அழகு மிகுந்த பல்லை காட்டும் மகளிரின் அகன்ற அல்குல் தடத்தில் படர்ந்து இன்பம் க்காண வேண்டும். 
அவரோடு கூடிய இல்லறத்தில் வாழ்க்கையைத் தொடங்க வேண்டும். 
அதன் பின்னர் துறவு வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும். 
இப்படி வாழாத உடம்பினால் என்ன பயன்? 

முன்றுறை அரையனார் இயற்றிய பழமொழி (பழமொழி நானூறு)
பழமைப் பேச்சு

பழமொழி 397 PalaMoli 397

நெய் வைத்த பானையில்தான் நெய்யை எடுக்கலாம் 
 
397.

வேந்தன் மதித்துணரப் பட்டாரைக் கொண்டேனை
மாந்தரும் ஆங்கே மதித்து உணர்ப - ஆய்ந்த
நலமென் கதுப்பினாய் நாடினெய் பெய்த
கலமேநெய் பெய்து விடும்.
 
வேந்தன் மதித்து உணரப்பட்டாரைக் கொண்டு, ஏனை மாந்தரும் ஆங்கே மதித்து உணர்ப ஆய்ந்த நல மென் கதுப்பினாய் நாடின் நெய் பெய்த கலமே நெய் பெய்துவிடும்.

சிறந்தவன் என்று வேந்தனால் மதித்து உணரப்பட்டவரை 
ஏனைய மக்களும் மதித்து உணர்வார்கள். 
சிறந்த நல்ல மென்மையான கூந்தலை உடையவளே 
நெய்யை வைத்த பானையில் தானே நெய் இருக்கும்? 

முன்றுறை அரையனார் இயற்றிய பழமொழி (பழமொழி நானூறு)
பழமைப் பேச்சு

பழமொழி 396 PalaMoli 396

கிழட்டு எருதுக்குப் போட்ட புல் 
 
396.

தொடிமுன்கை நல்லாயத் தொக்க பொருளைக்
குடிமகன் அல்லான்கை வைத்தல் - கடிநெய்தல்
வேரி கமழும் விரிதிரைத் தண்சேர்ப்ப
மூரியைத் தீற்றிய புல்.
 
தொடி முன்கை நல்லாய்! அத் தொக்க பொருளைக் குடிமகன் அல்லான் கை வைத்தல்,-கடி நெய்தல் வேரி கமழும் விரி திரைத் தண் சேர்ப்ப! மூரியைத் தீற்றிய புல்.

முன்னங்கையில் வளையல் அணிந்த நல்லவளே 
மணக்கும் நெய்தலில் தேன் மணம் மிகுந்திருக்கும் சேர்ப்பு நிலத் தலைவனே 
சேர்த்து வைத்திருக்கும் அந்தச் செல்வத்தை நல்ல குடும்பம் குடிமகன் அல்லாத ஒருவனிடம் பாதுகாக்கும்படி வைத்தலானது 
கிழட்டு எருதை உண்ணச் செய்த புல் போல் பயன்படாமல் போய்விடும். 

முன்றுறை அரையனார் இயற்றிய பழமொழி (பழமொழி நானூறு)
பழமைப் பேச்சு

பழமொழி 395 PalaMoli 395

அவரவர்க்கு அவரவர் நீர்மையே தலைமையானது
தன்னனிலை ஒழுக்கம் மேலானது
 
395.

மெய்ந்நீரர் ஆகி விரியப் புகுவார்க்கும்
பொய்ந்நீரர் ஆகிப் பொருளை முடிப்பார்க்கும்
எந்நீரர் ஆயினும் ஆக அவரவர்
தந்நீரர் ஆதல் தலை.
 
மெய்ந் நீரர் ஆகி விரியப் புகுவார்க்கும், பொய்ந் நீரர் ஆகிப் பொருளை முடிப்பார்க்கும், எந் நீரர் ஆயினும் ஆக அவரவர் தம் நீரர் ஆதல் தலை.

சிலர் மெய்மையான ஒழுக்கத்தை  மேற்கொண்டு விரிவடைய விரும்புகின்றனர். 
சிலர் போலி வேடம் போட்டுக்கொண்டு பொருளைச் சேர்க்க விரும்புகின்றனர். 
எவர் எந்தத் தன்மை உடையவர் ஆயினும் ஆகுக. 
தன்னிலையில் ஒழுக்கம் தவறாதவராக இருக்க வேண்டும். 

முன்றுறை அரையனார் இயற்றிய பழமொழி (பழமொழி நானூறு)
பழமைப் பேச்சு

பழமொழி 394 PalaMoli 394

கல் தேயும், சொல் தேயாது
 
394.

கெடுவல் எனப்பட்டக் கண்ணும் தனக்கோர்
வடுவல்ல செய்தலே வேண்டும் - நெடுவரை
முற்றுநீர் ஆழி வரையகத் தீண்டிய
கற்றேயும் தேயாது சொல்.
 
கெடுவல் எனப்பட்டக்கண்ணும், தனக்கு ஓர் வடு அல்ல செய்தலே வேண்டும்; நெடு வரை முற்று நீர் ஆழி வரையகத்து ஈண்டிய கல் தேயும்; தேயாது, சொல்.

நீர் சூழ்ந்திருக்கும்  நீண்ட சக்கரவாளம் என்னும் மலையில் இருக்கும் பாறாங்கல்லும் தேயும். ஆனால் ஒருவனுக்கு ஏற்பட்ட பழிச்சொல் தேயாது. ஆகவே, "குற்றமற்ற செயலைச் செய்தால் நான் கெட்டுப்போவேன்" என்னும் நிலை வந்தாலும் தனக்குப் பழி வராத செயல்களையே ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். 

முன்றுறை அரையனார் இயற்றிய பழமொழி (பழமொழி நானூறு)
பழமைப் பேச்சு

Saturday, 29 July 2017

பழமொழி 393 PalaMoli 393

பயின்றது வானகம் ஆகிவிடும்
பழகியது எதுவும் இன்ப உலகம் ஆகிவிடும்
 
393.

ஓதநீர் வேலி உலகத்தார் இந்நெறி
காதலர் என்ப தறிந்தல்லால் யாதொன்றும்
கானக நாட பயிலார் பயின்றதூஉம்
வானகம் ஆகி விடும்.
 
ஓத நீர் வேலி உலகத்தார், ‘இந் நெறி காதலர்’ என்பது அறிந்து அல்லால், யாது ஒன்றும் கானக நாட! பயிலார்; பயின்றதூஉம் வானகம் ஆகிவிடும்.

முல்லை நில வேந்தனே 
கடல் அலை நீரை வேலியாக உடையது இந்த உலகம். 
இந்த உலகில் உள்ளவர்கள் தாம் பழகிய வழியை இன்ப வழி எனக் கொள்பவர்கள். 
அதன் மூது காதல் கொள்பவர்கள். 
எனவே பழகும்போதே பயன்பாடு கருதிப் பழக வேண்டும். 
நல்லதோ, தீயதோ, 
பயின்றுவிட்டால் அதுவே இன்பமாக மாறிவிடும். 

முன்றுறை அரையனார் இயற்றிய பழமொழி (பழமொழி நானூறு)
பழமைப் பேச்சு

பழமொழி 392 PalaMoli 392

கேளாதே, ஓடுக ஊர் ஓடும் ஆறு
 
392.

செல்லற்க சேர்ந்தார் புலம்புற செல்லாது
நில்லற்க நீத்தார் நெறியொரீஇ - பல்காலும்
நாடுக தான்செய்த நுட்பத்தைக் கேளாதே
ஓடுக ஊரோடு மாறு!
 
செல்லற்க, சேர்ந்தார் புலம்புற! செல்லாது நில்லற்க, நீத்தார் நெறி ஒரீஇ! பல் காலும் நாடுக, தான் செய்த நுட்பத்தை! கேளாதே ஓடுக, ஊர் ஓடுமாறு!

தன்னைச் சேர்ந்தவர்கள் புலம்புமாறு விட்டுவிட்டு ஒரு வழியில் செல்ல வேண்டாம். 
நீத்தார் காட்டும் வழியை விலக்கிவிட்டு வேறொரு வழியில் நிற்க வேண்டாம். 
தான் செய்த நுட்பமான செயலை மீண்டும் எண்ணிப் பார்க்க வேண்டும். 
ஊரார் செல்லும் வழியில் ஏன் என்று கேட்காமல் தானும் ஓட வேண்டும். 

முன்றுறை அரையனார் இயற்றிய பழமொழி (பழமொழி நானூறு)
பழமைப் பேச்சு

பழமொழி 391 PalaMoli 391

யானை தொடும் உணவுப் பானைக்கு மூடி போட முடியுமா

391.

வெண்குடைக்கீழ் வாழும் குடிகட்கு வேந்தனும்
செங்கோலன் அல்லனேல் செய்வதென் - பொங்கு
படுதிரைச் சேர்ப்பமற் றில்லையே யானை
தொடுவுண்ணின் மூடும் கலம்.

வெண்குடைக்கீழ் வாழும் குடிகட்கு வேந்தனும் செங்கோலன் அல்லனேல், செய்வது என்? பொங்கு படு திரைச் சேர்ப்ப! மற்று இல்லையே, யானை தொடு உண்ணின், மூடும் கலம்.

தன் வெண்கொற்றக் குடையின் நிழலில் வாழும் குடிமக்கள் 
அரசன் செங்காலனாக இருந்து பாதுகாக்கா விட்டால் 
என்ன  செய்ய முடியும்? 
கடல் அலை பொங்கி வரும் சேர்ப்பு நில வேந்தனே 
யானை பானையில் இருக்கும் உணவை உண்ண முற்பட்டால் அந்தப் பானைக்கு மூடி போட முடியுமா? 


முன்றுறை அரையனார் இயற்றிய பழமொழி (பழமொழி நானூறு)
பழமைப் பேச்சு

பழமொழி 390 PalaMoli 390

தனி மரம் காடு ஆவது இல்லை
 
390.

எதிர்த்த பகையை இளைதாய போழ்தே
கதித்துக் களையின் முதிராது - எதிர்த்து
நனிநிற்பச் செய்தவர் நண்பெலாம் தீர்க்க
தனிமரம் காடாவ தில்.
 
எதிர்த்த பகையை இளைது ஆய போழ்தே கதித்துக் களையின் முதிராது எதிர்த்து, நனி நிற்பச் செய்தவர் நண்பு எலாம் தீர்க்க; தனி மரம் காடு ஆவது இல்.

ஒருவன் தன்னை எதிர்க்கும் பகை இளையதாக இருக்கும்போதே முதிர விடாமல் வெட்டிக் களைய வேண்டும். எதிராளியை நன்றாக ஊன்றி நிற்கச் செய்தவரின் நட்பினை எல்லாம் களைய வேண்டும். தனி மரம் காடு ஆகுமா? 


முன்றுறை அரையனார் இயற்றிய பழமொழி (பழமொழி நானூறு)
பழமைப் பேச்சு

பழமொழி 389 PalaMoli 389

மூரி எருதான் உழவு 
கிழட்டு எருதால் நிலத்தை உழுதல்
 
389.

மடியை வியங்கொள்ளின் மற்றைக் கருமம்
முடியாத வாறே முயலும் - கொடியன்னாய்
பாரித் தவனை நலிந்து தொழில்கோடல்
மூரி எருத்தான் உழவு.
 
மடியை வியங்கொள்ளின், மற்றைக் கருமம் முடியாதவாறே முயலும் கொடி அன்னாய்! பாரித்தவனை நலிந்து தொழில் கோடல், மூரி எருத்தான் உழவு.

சோம்பல் உடையான் ஒருவனை ஒரு செயலைச் செய்யுமாறு ஏவினால், 
அந்தச் செயல் நிறைவேறாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதனை அவன் செய்வான். 
கொடி போன்றவளே 
காலம் தாழ்த்திய அவனை வற்புறுத்திச் செயலாற்ற வைத்தல் 
கிழட்டு எருதை ஏரில் பூட்டி நிலத்தை உழுவது போன்றதாகும். 

முன்றுறை அரையனார் இயற்றிய பழமொழி (பழமொழி நானூறு)
பழமைப் பேச்சு

பழமொழி 388 PalaMoli 388

பரிகாரம் இல்லாத குற்றம்
 
388.

செய்த கொடுமை உடையான் அதன்பயம்
எய்த உரையான் இடரினால் - எய்தி
மரிசாதி யாயிருந்த மன்றஞ்சு வாற்குப்
பரிகாரம் யாதொன்றும் இல்.
 
செய்த கொடுமை உடையான், அதன் பயம் எய்த உரையான், இடரினால் எய்தி
மரிசாதியாய் இருந்த மன்று அஞ்சுவாற்குப் பரிகாரம் யாதொன்றும் இல்.

ஒருவன் தான் செய்த கொடுமையை மன்றில் சொல்லமாட்டான். 
சொன்னால் விளையும் இடர்ப்பாட்டுப் பயனை எண்ணிச் சொல்லமாட்டான். 
அவனைத் திருத்தும் நல்லவர்கள் இருக்கும் அவையிலும் சொல்லமாட்டான். 
இதற்குப் பரிகாரம் எதுவுமே இல்லை. 

முன்றுறை அரையனார் இயற்றிய பழமொழி (பழமொழி நானூறு)
பழமைப் பேச்சு

பழமொழி 387 PalaMoli 387

ஒடி எறியத் தீராப் பகை
ஒடிந்த குச்சியால் அடித்துத் திருத்த முடியாதவை
 
387.

மறையா தினிதுரைத்தல் மாண்பொருள் ஈதல்
அறையான் அகப்படுத்துக் கோடல் முறையால்
நடுவணாச் சென்றவரை நன்கெறிதல் அல்லால்
ஒடியெறியத் தீராப் பகை.
 
மறையாது இனிது உரைத்தல், மாண் பொருள் ஈதல், அறையான் அகப்படுத்துக் கோடல், முறையால் நடுவணாச் சென்று அவரை நன்கு எறிதல், அல்லால், ஒடி எறியத் தீரா, பகை.

எதையும் மறைக்காமல் இனிமையாகச் சொல்லல் 
தன்னிடம் இருக்கும் சிறந்த பொருளைப் பிறருக்கு வழங்கல் 
தடியால் அடித்தது இந்தப் பண்புகளை உருவாக்க முடியாது. 
பகைவனிடம் காட்டிக் கொடுத்து அறைபோதல் 
நடுவுநிலைமையோடு சென்றவரை நன்றாகத் தாக்குதல் 
தீராப் பகைமை 
இவற்றைக் ஒடிந்த குச்சியால் அடித்துத் திருத்த முடியாது. 



முன்றுறை அரையனார் இயற்றிய பழமொழி (பழமொழி நானூறு)
பழமைப் பேச்சு

பழமொழி 386 PalaMoli 386

சாண், முழம் அளவை
புதிதாக முழம் நட்பின் சாண் உட்கு நன்று
 
386.

‘தீர்ந்தேம்’ எனக் கருதி, தேற்றாது ஒழுகி, தாம்
ஊர்ந்த பரிவும் இலர் ஆகி, சேர்ந்தார்
பழமை கந்து ஆக, பரியார், புதுமை;-
முழ நட்பின், சாண் உட்கு நன்று.
 
‘தீர்ந்தேம்’ எனக் கருதி, தேற்றாது ஒழுகி, தாம் ஊர்ந்த பரிவும் இலர் ஆகி, சேர்ந்தார் பழமை கந்து ஆக, பரியார், புதுமை; முழ நட்பின், சாண் உட்கு நன்று.

"தீர்ந்து போனோம்" எனக் கருதிக்கொண்டு தெளிவு இல்லாமல் பழகி தான் முன்பு பெற்றிருந்த இரக்கமும் இல்லாமல் போகி முன்பு சேர்ந்திருந்தவரின் பழமையைக் பற்றுக்கோடகக் கொள்ளாமல் இரக்கம் இல்லாமல் புதிய நட்பினை முழம் நீளம் மேற்கொண்டால் சாண் நீளம் அச்சம் இருப்பது நன்று. 

முன்றுறை அரையனார் இயற்றிய பழமொழி (பழமொழி நானூறு)
பழமைப் பேச்சு

பழமொழி 385 PalaMoli 385

தெளியானைத் தேறல் அரிது
தெளிவு இல்லாதவனைப் புரிந்துகொள்ள முடியாது
 
385.

ஆறாச் சினத்தன் அறிவிலன் மற்றவனை
மாறி ஒழுகல் தலையென்ப - ஏறி
வளியால் திரையுலாம் வாங்குநீர்ச் சேர்ப்ப
தெளியானைத் தேறல் அரிது.
 
‘ஆறாச் சினத்தன் அறிவு இலன்; மற்று அவனை மாறி ஒழுகல் தலை’ என்ப ஏறி வளியால் திரை உலாம் வாங்கு நீர்ச் சேர்ப்ப தெளியானைத் தேறல் அரிது.

அவன் தணியாத சினம் கொண்டவன். 
அறிவு இல்லாதவன். 
மற்று, அவனை விற்றுவிட்டு வாழ்வது தலைமையானது என்று சொல்லுவார்கள். 
வீசும் காற்றால் அலை கரையேறிப் பாயும் சேர்ப்பு நிலத்தின் வேந்தனே, 
தெளிவு இல்லாதவனை யாராலும் புரிந்துகொள்ள முடியாது.

முன்றுறை அரையனார் இயற்றிய பழமொழி (பழமொழி நானூறு)
பழமைப் பேச்சு

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி