Showing posts with label பதிற்றுப்பத்து. Show all posts
Showing posts with label பதிற்றுப்பத்து. Show all posts

Friday, 8 November 2019

பதிற்றுப்பத்து - புலவர்க்குப் பரிசு gift to poets

  • பதிற்றுப்பத்து சேர மன்னர்களைப் போற்றிப் பாடிய பாடல்களைக் கொண்ட நூல்.
  • 10 புலவர்கள் 10 மன்னர்களைப் போற்றிப் பாடிய பாடல்கள் இவை
  • முதலாம் பத்தும், 10-ஆம் பத்தும் நமக்குக் கிடைக்கவில்லை.

இரண்டாம் பத்து

  • பாடிய புலவர் கண்ணனார் - குமட்டூர் என்னும் ஊரில் வாழ்ந்தவர் 
  • அரசன் - ஆதன் - சேரலாதன் - நெடுஞ்சேரலாதன், இமயவரம்பன் 
  • பாடிப் பெற்ற பரிசில் 
  1. பிரமதாயம் என்று உம்பர்க்காடு என்னும் பகுதியில் இருந்த 500 ஊர்கள்
  2. தனக்குப் பாண்டிய நாட்டிலிருந்து வரும் வருவாயில் ஒரு பகுதி. 
மூன்றாம் பத்து 

  • பாடிய புலவர் - கௌதமனார் - பாலக்காடு என்னும் ஊரினர் - பார்ப்பனர் 
  • பாடப்பட்ட அரசன் - குட்டுவன் - பல யானைகள் செல்லும் படை கொண்டவன். 
  • பாடிப் பெற்ற பரிசில் 
  1. "உனக்கு வேண்டியதைக் கேட்டுப் பெற்றுக்கொள்" என்றான் அரசன் 
  2. "யானும் என் மனைவியும் சுவர்க்கம் புகவேண்டும்" என்றறார் புலவர் 
  3. பார்ப்பாரில் பெரியாரைக் கொண்டு அதற்கான வேள்வி செய்தான், மன்னன் 
  4. 10-ஆவது வேள்வியில் புலவரும் அவரது மனைவியும் மறைந்தனர் 
நான்காம் பத்து 

  • பாடிய புலவர் - காப்பியனார் - காப்பியாறு என்னும் ஊரினர் 
  • பாடப்பட்ட அரசன் - சேரல் - களங்காயை நாரில் கண்ணியாக முடிந்து முடியில் சுற்றிக்கொண்டவன் 
  • பாடிப் பெற்ற பரிசில் 
  1. 40 நூறாயிரம் \ 40 லட்சம் பொன் 
  2. தான் ஆளும் நாட்டில் ஒரு பகுதியை ஆளும் உரிமை 
ஐந்தாம் பத்து

  • பாடிய புலவர் - பரணர்
  • பாடப்பட்ட அரசன் - செங்குட்டுவன். கடல் பிறக்கு ஓட்டியவன் 
  • பாடுப் பெற்ற பரிசில் 
  1. உம்பற்காடு நாட்டுப் பகுதியில் தனக்குக் கிடைக்கும் வருவாய் முழுவதும் 
  2. புலவருக்குப் பணி செய்வதற்காகத் தன் மகன் ’குட்டுவன் சேரல்’ என்பவனையும் கொடுத்தான். 
ஆறாம் பத்து 

  • பாடிய புலவர் - நச்செள்ளையார் - காக்கையை பாடிச் சிறப்புப் பெற்றவர்  - பெண் 
  • பாடப்பட்ட அரசன் - சேரலாதன் - தண் தார் காட்டு வருடை ஆடுகளைக் கொண்டு வந்து வளர்த்தவன் 
  • பாடிப் பெற்ற பரிசில் 
  1. அணிகலன்கள் செய்துகொள்வதற்காக 9 கா நிறை அளவு பொன் 
  2. 100 ஆயிரம் காணம் (அக்காலச் சேரர் காசு) 
ஏழாம் பத்து 

  • பாடிய புலவர் - கபிலர் 
  • பாடப்பட்ட அரசன் - ஆதன் - ஆழி ஆதன் - வாழி ஆதன் - செல்வக் கடுங்கோ 
  • பாடிப் பெற்ற பரிசு 

  1. சிறுபுறம் என்னும் பெயரில் 1,00,000 காணம் செல்வக்கொடை வழங்கினான். 
  2. நன்றா என்னும் குன்றின்மீது ஏறி நின்றுகொண்டு தன் கண்ணில் பட்ட நாட்டுப்பரப்பு முழுவதையும் பரிசாக வழங்கினான்.
எட்டாம் பத்து 

  • பாடிய புலவர் - அரிசில் கிழார்
  • பாடப்பட்ட அரசன் - பெருஞ்சேரல் இரும்பொறை 
  • பாடிப்பெற்ற பரிசில் 
  1. இந்தப் பத்துப் பாடல்களைப் பாடியதற்காக, அரசனும் அரசியும் அரண்மனையிலிருந்து வெளியே வந்து நின்றுகொண்டு, “அரண்மனையில் உள்ள அனைத்தையும் கொள்க” என்று சொன்னதோடு 
  2. 9,00,000 காணம் பணமும், 
  3. ஆட்சி செய்யுமாறு தன் அரியணையையும் கொடுத்தான். 
  4. அதனைப் பெற்றுக்கொண்ட புலவர் “இதனை நீயே ஆள்க” என்று கெஞ்சிக் கேட்க, ஏற்றுக்கொண்டான். 
  5. புலவர் அரசனுக்கு அமைச்சரானார். 
ஒன்பதாம் பத்து 

  • பாடிய புலவர் - பெருங்குன்றூர் கிழார்
  • பாடப்பட்ட அரசன் - இளஞ்சேரல் இரும்பொறை
  • பாடிப் பெற்ற பரிசில் 

  1. மருள் இல்லார்க்கு மருளக் கொடுக்க என்று உவகையின் முப்பத்தீராயிரம் காணம் கொடுத்து 
  2. அவர் அறியாமை ஊரும் மனையும் வளமிகப் படைத்து 
  3. ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி 
  4. எண்ணற்கு ஆகா அருங்கல வெறுக்கையொடு 
  5. பன்னூறாயிரம் பாற்பட வகுத்துக்
  6. காப்புமறம் தான்விட்டான் அக்கோ.

Tuesday, 29 March 2016

பதிற்றுப்பத்து பதிகம் PatitrupPattu Patigam 9

பதிற்றுப்பத்து நூலைத் தொகுத்தவர் பாடிச்சேர்த்த பதிகப்பாடல் இது.
  • இந்தத் தொகுப்பில் உள்ள பத்துப் பாடல்களைப் பாடியவர் – பெருங்குன்றூர் கிழார்.
  • இந்தப் பத்தில் பாடப்பட்டவன் – இளஞ்சேரல் இரும்பொறை
  • இளஞ்சேரல் இரும்பொறையின் தந்தை – குட்டுவன் இரும்பொறை
  • இளஞ்சேரல் இரும்பொறையின் தாயார் – அந்துவஞ்செள்ளை. இவள் வேளிர் குடிமகன் மையூர் கிழான் என்பவனின் மகள்.
  • இளஞ்சேரல் இரும்பொறை ஐந்தெயில் என்னும் கோட்டையை வென்று துகளாக்கினான். அந்தக் கோட்டை அரிய காடுகளுடன் மலைப்பகுதியில் (கல் அகத்து) இருந்தது. அந்தப் போரில் கோட்டைக்கு உரிய அரசன் விச்சி என்பானும் அவனுக்குத் துணைநின்ற இரு பெரு வேந்தர்களும் (சோழன், பாண்டியன்) தோற்றனர்.

இளஞ்சேரல் இரும்பொறையிடம்
தோற்ற சோழன்
கோப்பெருஞ் சோழன்
  • தோற்ற சோழன் பொத்தியார் என்னும் புலவரை நட்பால் ஆண்ட பெருஞ்சோழன் (கோப்பெருஞ்சோழன்)
  • தோற்ற பாண்டியன் இளம்பழையன் மாறன். இவன் பலவகை வித்தைகளையும் பயன்படுத்திப் போரிட்டவன்.
  • இவர்களின் செல்வ வளங்களைத் தன் வஞ்சி மூதூருக்குக் கொண்டுவந்து பிறருக்கு உதவும்படி வழங்கினான்.
  • மந்திரம் சொல்லித் தெய்வத்தை வழிபட்டான். 
  • மாமனார் மையூர் கிழானை அமைச்சராக அமர்த்திக்கொண்டு அவரிடம் கேட்டு, ஆட்சி புரிந்துவந்தான்.
  • வானுலகப் பெருஞ்சதுக்கத்துப் பூதங்களை இவ்வுலகுக்குக் கொண்டுவந்து அவற்றின் கொடிய ஆற்றல்களைச் சாந்தி கொள்ளுமாறு செய்தான்.
  • மன்னுலகைக் காத்துக் குற்றமின்றிச் செங்கோல் நடத்திவந்தான்.
  • தன்மீது இந்தப் பத்துப் பாடல்களைப் பாடிய புலவருக்கு மகிழ்ச்சிப் பெருக்கில், மருளாதாரும் மருளும்படி, 32,000 காணம் பொருட்கொடை வழங்கினான். பேலும் அந்தப் புலவருக்குத் தெரியாமல், ஊரும் வீடும் கட்டிக்கொடுத்தான். மற்றும் ஏர் பூட்டி உழுதுண்ணும் ஏற்றமும், இன்பப் பொருள்களும் வழங்கினான். எண்ணமுடியாத அணிகலச் செல்வங்கள் கொடுத்தான். பல நூறாயிரம் என்று கணக்கிடும்படி ’காப்புமறம்’ (பாதுகாலர்) என்று சொல்லி வழங்கினான்.
  • குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை 16 ஆண்டு ஆட்சி புரிந்தான்.  


பாடல் சொல்-பிரிப்புப் பதிவு
பதிற்றுப்பத்து ஒன்பதாம் பத்து பதிகம் - 9

குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழாஅன்
வேண்மாள் அந்துவஞ் செள்ளை ஈன்றமகன்
வெருவரு தானையொடு வெய்(து)உறச் செய்துசென்(று)
இருபெரு வேந்தரும் விச்சியும் வீழ
அருமிளைக் கல்லகத்(து) ஐந்(து)எயில் எறிந்து  5
பொத்தி ஆண்ட பெரும்சோ ழனையும்
வித்தை ஆண்டஇளம் பழையன் மாறனையும்
வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று
வாஞ்சி மூதூர்த் தந்துபிறர்க்(கு) உதவி
மந்திர மரபின் தெய்வம் பேணி     10
மெய்யூர் அமைச்சியன் மையூர் கிழானைப்
புரைஅறு கேள்விப் புரோசு மயக்கி
அருந்திறல் மரபின் பெருஞ்சதுக்(கு) அமர்ந்த
வெந்திறல் பூதரைத் தந்(து)இவண் நிறீஇ
ஆய்ந்த மரபில் சாந்தி வேட்டு 15
மன்உயிர் காத்த மறுஇல் செங்கோல்
இன்இசை முரசின் இளஞ்சேரல் இரும்பொறையைப்
பெருங்குன்றூர்கிழார் பாடினார் பத்துப்பாட்டு.

அவைதாம்: நிழல்விடு கட்டி, வினை நவில் யானை, பஃறோல் தொழுதி, தொழில் நவில் யானை, நாடுகாண் நெடு வரை, வெந்திறல் தடக்கை, வெண்டலைச் செம்புனல், கல்கால் கவணை, துவராக் கூந்தல், வலிகெழு தடக்கை:
இவை பாட்டின் பதிகம்.
பாடிப்பெற்ற பரிசில்: மருள் இல்லார்க்கு மருளக் கொடுக்க என்று உவகையின் முப்பத்தீராயிரம் காணம் கொடுத்து அவர் அறியாமை ஊரும் மனையும் வளமிகப் படைத்து ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி எண்ணற்கு ஆகா அருங்கல
வெறுக்கையொடு பன்னூறாயிரம் பாற்பட வகுத்துக் காப்புமறம் தான்விட்டான் அக்கோ.
குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை பதினாறாண்டு வீற்றிருந்தான்.


பதிற்றுப்பத்து PatitrupPattu 90

மன்னனின் மாண்புகளும், கருவுற்றிருக்கும் அவனது மனைவியின் மாண்புகளும் இப்பாடலில் போற்றப்படுகின்றன.
1
மழை பொழியும் அறிகுறியில் அதனைக் காட்டும் மீன் வானத்தில் நின்றது. அச்சம் இல்லை. எங்கும் பாதுகாப்பு நிலை. துன்ப இருள் இல்லை. இன்பம் பெருகிய தோற்றம். அவரவர் துறையில் அவரவர் குறைவில்லாமல் நிறைவாகக் கற்றிருந்தனர். கழிந்துபோயினர். பிறர் துன்புத்தும் வலிமைக்கு அஞ்சாத, வாட்போரில் வல்ல வேந்தர்கள், அரசன் மாந்தரன் (மாந்தரச்சேரல்) இட்ட பணியை நிறைவேற்றிவந்தனர். யானைகளையும், அணுகலன்களையும் மாந்தரனுக்குத் திறையாகத் தந்தனர்.
2
அரசன் மாந்தரன் அகன்ற உலகுக்கு ஒளி வழங்கிக்கொண்டிருந்தான். இவனது பல்வகை மாயாப் புகழ் வானுலகிலும் பரவியிருந்தது. தன் வாள் வலிமையை நடத்தி, செம்மையுடன், அறக்கடவுள் வாழ்த்தும்படி நன்றாக ஆண்டுவந்தான். அவன் வழித்தோன்றலாக இந்த அரசன் விளங்கினான்.   
3
மன்ன! உன் நெஞ்சில் ஈரம் இருப்பதால் நீ நீர் போன்றவன். அளக்க முடியாதவனாக விளங்குவதால் விசும்பு போன்றவன். கொள்ளக் கொள்ளக் குறையாத செல்வம் படைத்தவனாக விளங்குவதால் பெருகிய நீருள்ள கடல் போன்றவன். பல மீன்களுக்கு இடையே தோன்றும் நிலாவைப் போல நீ உன் சுற்றத்தார்களுக்கு இடையே தோன்றுகிறாய்.  
4
அயிரை தெய்வத்தை வழிபட்டும் (பல்யானைச் செல்கெழு குட்டுவன்), கடல் பின்வாங்கும்படி வேல் நட்டும் (கடல்பிக்கோட்டிய செங்குட்டுவன்), துள்ளி எழும் பகைவர் வலிமையைச் சாய்த்தும், மலையிலும் கடலிலும் இருந்த கோட்டைகளைக் கைப்பற்றியும், பெற்ற பெரும்பெயராகிய புகழ் வழிவழி வந்த பலர் கைகளில் இருக்கும்படிச் செய்தும், வெற்றிச் செல்வத்தோடு வாழ்ந்த உன் அரச முன்னோர்களுக்கு இடையே நீ அரச-யானை போன்றவன்.
வேளை
வேளச்செடி
வேளச்செடி மண்டிக் கிடந்த ஊர் வேளச்சேரி
5
புளிப்பொங்கலை விரும்பும் கொங்கர்களின் கோமகனே! தேன்பொங்கலை விரும்பும் குட்டுவர்களின் காளையே! பூழியர்களுக்குத் தோள் கொடுத்த கவசமே! மரந்தை மக்களைப் போரிட்டு வென்றவனே! வெண்ணிற வேளைப்பூச் செடியும், சுரைக்கொடியும் படர்ந்து கிடக்கும் இடமாகவும், பல மொழிகளைப் பேசும் இடமாகவும் விளங்கும் போர்களக் கட்டூரை விரும்பும் வயவர்களின் வேந்தே!  
6
கடல் போன்ற படையுடன் சென்று வில் நாண் உன் மார்பில் மோதும்படி இழுத்து எய்யும் வலிமை மிக்க தோளினை உடையவனே! வளைத்துக் கட்டியது போன்ற வலிமை மிக்க மார்பை உடையவனே! மீன் பூத்ததுபோல் பல குதிரைகள் பூட்டிய பாண்டில் வண்டியின் மேல் இருந்துகொண்டு கூர்மையான வேலை வீசுபவனே! காயத் துன்பத்தைச் சொல்லிப் பின்வாங்காத ஆண்மைத்திறம் மிக்க வயவர்களின் பெருமகனே! வீங்கி ஓங்கும் புகழ் கொண்டவனே!
7
கழனியில் நெல் அறுவடை செய்யும் உழவர் தண்ணுமை முழக்கினால் அது இடியோசை என்று கருதி மரச்சோலையில் மயில்கள் ஆடும். ஆற்றில் நீராடுவோர் செய்யும் ஆரவாரத்தோடு சேர்ந்து போர்மள்ளர் கிணை முழக்க ஒலியும் கேட்கும். செல்வம் நிறைந்த இல்லங்களில் காளை மாடுகள் கணைக்கும். இப்படிச் செழுமையும் கொழுமையும் சேர்ந்து கிடக்கும் காவிரி நாடு போல்,   
8
வளம் மிக்க மகனை வயிற்றில் தாங்கிக்கொண்டிருபவள் உன் மனைவி. அவள் ஆறிய கற்பு கொண்டவள். தெளிந்த புகழ் பெற்றவள். வண்டு மொய்க்கும் கூந்தலை உடையவள். அவளது கணவன் என்னும் பெருமை உனக்கு உண்டு.
9
நீ வாழும் நாள் ஒவ்வொன்றும் மாதம் போல பெருகட்டும். மாதம் ஒவ்வொன்றும் ஆண்டு போல் பெருகட்டும். அண்டு ஒவ்வொன்றும் ஊழி போல் பெருகட்டும். ஊழி ஒவ்வொன்றும் வெள்ள-ஊழி போல் பெருகட்டும். இப்படிப் பெருகவேண்டும் என்று வாழ்த்திக்கொண்டு உன்னைக் காண வந்துள்ளேன். இடி போல் முரசு முழங்க, பெரிய நல்ல யானைமீது போர்களத்தில் இருக்கும் உன்னைக் காண வந்துள்ளேன்.

பாடல் சொல்-பிரிப்புப் பதிவு
பதிற்றுப்பத்து ஒன்பதாம் பத்து பாட்டு - 90

1

மீன்வயின் நிற்ப வானம் வாய்ப்ப
அச்(சு)அற்(று) ஏமம் ஆகி இருள்தீர்ந்(து)
இன்பம் பெருகத் தோன்றித் தம்துணைத்
துறையின் எஞ்சாமை நிறையக் கற்றுக்
கழிந்தோர் உடற்றும் கடும்தூ அஞ்சா     5
ஒளிறுவாள் வயவேந்தர்
களிறொடு கலம்தந்து
தொன்றுமொழிந்து தொழில்கேட்ப
2
அகல்வையத்துப் பகல்ஆற்றி
மாயாப் பல்புகழ் வியல்விசும்(பு) ஊர்தர   10
வாள்வலி உறுத்துச் செம்மை பூஉண்(டு)
அறன்வாழ்த்த நற்(கு)ஆண்ட
விறல்மாந்தரன் விறல்மருக
3
ஈரம் உடைமையின் நீரோர் அனையை
அளப்பரு மையின் இருவிசும்(பு) அனையை     15
கொளக்குறை படாமையின் முந்நீர் அனையை
பல்மீன் நாப்பண் திங்கள் போலப்
பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை
4
உருகெழு மரபின் அயிரை பரவியும்
கடல்இகுப்ப வேல்இட்டும்    20
உடலுநர் மிடல்சாய்த்தும்
மலயவும் நிலத்தவும் அருப்பம் வெளவிப்
பெற்ற பெரும்பெயர் பலர்கை இரீஇய
கொற்றத் திருவின் உரவோர் உம்பல்
5
கட்டிப் புழுக்கின் கொங்கர் கோவே 25
மட்டப் புகாவின் குட்டுவர் ஏறே
எழாஅத் துணைத்தோள் பூழியர் மெய்ம்மறை
இரங்குநீர்ப் பரப்பின் மரந்தையோர் பொருந
வெண்பூ வேளையொடு சுரைதலை மயக்கிய
விரவுமொழிக் கட்டூர் வயவர் வேந்தே    30
6
உரவுக்கடல் அன்ன தாங்(கு)அரும் தானையொடு
மாண்வினைச் சாபம் மார்(பு)உற வாங்கி
ஞாண்பொர விளங்கிய வலிகெழு தடக்கை
வார்ந்துபுனைந் தன்ன வேந்துகுவவு மொய்ம்பின்
மீன்பூத் தன்ன விளங்குமணிப் பாண்டில்  35
ஆய்மயிர்க் கவரிப் பாய்மா மேல்கொண்டு
காழ்எஃகம் பிடித்(து)எறிந்து
விழுமத்தின் புகலும் பெயரா ஆண்மைக்
காஞ்சி சான்ற வயவர் பெரும
வீங்குபெரும் சிறப்பின் ஓங்குபுக ழோயே  40
7
கழனி உழவர் தண்ணுமை இசைப்பின்
பழன மஞ்ஞை மழைசெத்(து) ஆலும்
தண்புனல் ஆடுநர் ஆர்ப்பொடு மயங்கி
வெம்போர் மள்ளர் தெள்கிணை கறங்கக்
கூழ்உடை நல்இல் ஏறுமாறு சிலைப்பச்   45
செழும்பல இருந்த கொழும்பல் தண்பணைக்
காவிரிப் படப்பை நல்நா(டு) அன்ன
8
வளம்கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை
ஆறிய கற்பின் தேறிய நல்லிசை
வண்(டு)ஆர் கூந்தல் ஒண்தொடி கணவ   50
9
நின்நாள், திங்கள் அனைய ஆக திங்கள்
யாண்(டு)ஓர் அனைய வாக யாண்டே
ஊழி அனைய ஆக ஊழி
வெள்ள வரம்பின ()என உள்ளிக்
காண்கு வந்திசின் யானே செருமிக்(கு)          55
உரும்என முழங்கும் முரசின்
பெருநல் யானை இறைகிழ வோயே. (90)

பெயர்: வலிகெழு தடக்கை
துறை: காட்சிவாழ்த்து
வண்ணம்: ஒழுகுவண்ணமும் சொற்சீர்வண்ணமும்
தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்


ஒன்பதாம் பத்து
பாடப்பட்டோன்: இளஞ்சேரல் இரும்பொறை
பாடியவர்: பெருங்குன்றூர்கிழார்
கி.மு. காலத்துப் பாடல்


Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி