Showing posts with label பட்டினத்தார். Show all posts
Showing posts with label பட்டினத்தார். Show all posts

Friday, 17 February 2017

பட்டினத்தார் பாடல் தலப்பாடல் 10-12 Pattinatthar poems 92

மாதா உடல்சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே நாதா
இருப்பையூர் வாழ்சிவனே இன்னம்ஓர் அன்னை
கருப்பையூர் வாராமற் கா (10)

தாய் சலித்துப் போய் வயிற்றிலிருந்து வெளியில் தள்ளிவிட்டாள். வல் வினையேன் காலால் நிற்க முடியாமல் படுத்த படுக்கையாகிவிட்டேன். படைத்த பிரமனும் என் உடம்பைப் கேணும் கை சலித்து விட்டுவிட்டான். நாதா, இரும்பையூர் வாழிம் சிவனே, இன்னும் ஓர் அன்னையின் கருப் பையில் நான் வராமல் என்னைக் காப்பாற்று.

மண்ணும் தணல்ஆற வானும் புகைஆற
எண்ணரிய தாயும் இளைப்பாறப் - பண்ணுமயன்
கையா றவும்அடியேன் கால்ஆற வும்காண்பார்
ஐயா திருவையா றா (11)

திருவையாற்றுப் பெருமானே, மண் சூடு தணியும்படியும், வானம் புகைதல் தணியும்படியும், பல தாய்மார் வயிற்றில் சுமக்காமல் இளைப்பாறும்படியும், என்னைப் படைக்கும் பிரமனின் கை ஓய்வு கொள்ளும் வகையிலும், நடந்து நடந்து சோரும் என் கால்கள் ஓய்வு கொள்ளவும் எனக்குப் பிறவி இல்லாமல் காப்பாற்று.  

காலன் வருமுன்னே கண்பஞ் சடைமுன்னே
பாலுண் கடைவாய்ப் படுமுன்னே - மேல்விழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத் தானையே கூறு (12) 

எமன் உயிரைக் கொண்டுபோக வருவதற்கு முன்னே, கண்கள் பஞ்சடைந்து தெரியாமல் போவதற்கு முன்னே, பிணத்தின்மீது உறவினர் விழுந்து அழுவதற்கு முன்னே, ஊரார் உடலைச் சுடுவதற்கு முன்னே, குற்றாலத்தான் பெயரைக் கூறு.  

பட்டினத்தார் தலப் பாடல்கள்

வெண்பா

பட்டினத்தார் பாடல்கள்
14 ஆம் நூற்றாண்டு

பட்டினத்தார் பாடல் தலப்பாடல் 7-9 Pattinatthar poems 91

எத்தனைஊர் எத்தனைவீ(டு) எத்தனைத்தாய் பெற்றவர்கள்
எத்தனைபேர் இட்டழைக்க ஏன்என்றேன் - நித்தம்
எனக்குக் கலையாற்றாய் ஏகம்பா கம்பா
உனக்குத் திருவிளையாட் டோ (7)

கச்சி ஏகம்பா, கம்பா, எத்தனைப் பிறவிகளில் எனக்கு எத்தனை ஊர்? எத்தனை வீடு? எத்தனைத் தாய்? எத்ததனைப் பெற்றோர்? என்னைக் கூப்பிட்டழைத்த பெயர்கள் எத்தனை? ஏன் இந்த நிலை? நிலாவுக்குக் கலை போல எனக்கு எத்தனை கலை என்று என்று கேட்டேன். நீ சொல்லவில்லை. இதுதான் உன் திருவிளையாட்டோ?

அத்தி முதல்எறும்(பு) ஈறான அத்தனைக்கும்
சித்தமகிழ்ந் தளிக்கும் தேசிகா - மெத்தப்
பசிக்குதையா பாவியேன் பாழ்வயிற்றைப் பற்றி
இசிக்குதையா காரோண ரே (8)

யானை முதல் எறும்பு ஈறான அத்தனை உயிரினங்களுக்கும் உள்ளம் மகிழ்ந்து உணவளிக்கும் திருக்கோகரண தேசிகா, எனக்கு மிகவும் பசிக்கிறது. பாழும் வயிற்றைப் பற்றி இழுக்கிறது. ஐயோ! இழுக்கிறது = இசிக்குது – சென்னை வட்டார வழக்கு, திருவொற்றியூரில் வாழ்ந்தவர் ஆதலால்

பொய்யை ஒழியாய் புலாலைவிடாய் காளத்தி
ஐயரை எண்ணாய் அறம்செய்யாய் - வெய்ய
சினமே ஒழியாய் திருவைந்தை ஓதாய்
மனமே உனக்கென்ன மாண்பு (9)

ஏ மனமே, நீ பொய்யை ஒழிக்கவில்லை. புலால் உண்பதை விடவில்லை. காளத்தி ஐயரை நினைப்பதில்லை. அறம் செய்வதில்லை. கொடிய சினத்தை ஒழிக்கவில்லை. திருவைந்தெழுத்தை நமசிவாய என்று ஓதுவதும் இல்லை. உனக்கு என்ன மாண்பு இருக்கிறது?

பட்டினத்தார் தலப் பாடல்கள்

வெண்பா

பட்டினத்தார் பாடல்கள்
14 ஆம் நூற்றாண்டு

பட்டினத்தார் பாடல் தலப்பாடல் 4-6 Pattinatthar poems 90

வாவிஎல் லாம்தீர்த்தம் மணல்எல்லாம் வெண்ணீறு
காவனங்கள் எல்லாம் கணநாதர் – பூவுலகில்
ஈது சிவலோகம் என்றென்றே மெய்த்தவத்தோர்
ஓதும் திருவொற்றி யூர் (4)

திருவொற்றியூர் குளங்களில் இருப்பதெல்லாம் தீர்த்தம் என்னும் புனித நீர். இவ்வூரில் கிடக்கும் மணலெல்லாம் திருவெண்ணீறு. காடுகள் எல்லாம் நந்தி. பூவுலகில் இதுதான் சிவலோகம் என்று மெய்த்தவத்தோர் ஓதுகின்றனர்.

ஆரூரர் இங்கிருக்க அவ்வூர்த் திருநாளென்(று)
ஊரூர்கள் தோறும் உழலுவீர் – நேரே
உளக்குறிப்பை நாடாத ஊமர்காள் நீவிர்
விளக்கிருக்கத் தீத்தேடு வீர் (5)

ஆரூரராகிய சுந்தரர் இங்கே சங்கிலியாருடன் இருக்கும்போது திருவாரூரில் திருவிழா என்று ஊர் ஊராக தேடிச் சென்று துன்புறுகிறீர்கள், சிவன் உள்ளக் குறிப்பை நாடாத ஊமை மக்களே, நீங்கள் விளக்கைக் கையில் வைத்துக்கொண்டு தீயைத் தேடுகிறீர்கள்.

எருவாய்க்கு இருவிரல்மேல் ஏறுண் டிருக்கும்
கருவாய்க்கோ கண்கலக்கப் பட்டாய்த் திருவாரூர்த்
தேரோடும் வீதியிலே செத்துக் கிடக்கின்றாய்
நீரோடும் தாரைக்கே நீ (6)

மலம் கழிக்கும் எருவாய்க்கு இரண்டு விரல்கடை மேலே ஏறிக்கொண்டிருப்பது மூலாதாரம் என்னும் கருவாய். இந்தக் கருமையத்தைக் கருதாமல் ஆரூரா, திருவாரூரில் தேரோடும் வீதியில் பரவையானின் நீர்த்தாரை ஓடும் உறுப்புக்காகவா செத்துக் கிடக்கிறாய்?

பட்டினத்தார் தலப் பாடல்கள்

வெண்பா

பட்டினத்தார் பாடல்கள்
14 ஆம் நூற்றாண்டு

பட்டினத்தார் பாடல் தலப்பாடல் 1-3 Pattinatthar poems 89

மென்று விழுங்கி விடாய்க்கழிக்க நீர்தேடல்
என்று விடியும் எனக்கிங்(கு) எங்கோவே – நன்றி
கருதார் புரமூன்றும் கட்டழலால் செற்ற
மருதாஉன் சந்நிதிக்கே வந்து  (1)

சோற்றை மென்று விழுங்கிய பின்னர் தாகம் தீர்க்க நீரைத் தேடுவது போல என்று என் வாழ்வுக்கு விடிவுகாலம் என்று தேடிக்கொண்டிருக்கிறேன். என் கோமானே! நன்னி உணராதவர் மூவரின் முப்புரங்களை எரித்து அழித்தவனே! திருவிடைமருதூர் திருக்கோயிலுக்கு வந்து என்று என் தாகத்தைத் தணித்துக்கொள்வேன்?

கண்டம் கரியதாம் கண்மூன்(று) உடையதாம்
அண்டத்தைப் போல அழகியதாம் – தொண்டர்
உடல்உருகத் தித்திக்கும் ஓங்குபுகழ் ஒற்றிக்
கடலருகே நிற்கும் கரும்பு (2)

திருவொற்றியூர்க் கடல் அருகே நிற்கும் கரும்பு விடம் தேங்கியுள்ள தொண்டையில் கருமை நிறம் கொண்டது. மூன்று கண் கொண்டது. வானத்தைப் போல அழகானது. அது தொண்டர் உள்ளத்தில் தித்திக்கும் கரும்பு.   

ஒடுவிழுந்து சீப்பாயும் ஒன்பதுவாய்ப் புண்ணுக்(கு)
இடுமருந்தை யான்அறிந்து கொண்டேன் – கடுஅருந்தும்
தேவாதி தேவன் திருவொற்றி யூர்த்தெருவில்
போவார் அடியிற் பொடி (3)

ஒடுக்கு விழுந்து சீப் பாயும் ஒன்பது புண் வாயில்களைக் கொண்டது இந்த உடம்பு. இந்தப் புண்களுக்குப் போடும் மருந்தை நான் கண்டுகொண்டேன். நஞ்சுண்ட தேவாதி தேவன் குடிகொண்டுள்ள திருவொற்றியூர்த் தெருவில் செல்பவர்களின் காலடிப் புழுதியே அந்த மருந்து.  

பட்டினத்தார் தலப் பாடல்கள்

வெண்பா

பட்டினத்தார் பாடல்கள்
14 ஆம் நூற்றாண்டு

பட்டினத்தார் பாடல் அன்னையிட்ட தீ 6-10 Pattinatthar poems 88

அள்ளி இடுவ(து) அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் - மெள்ள
முகமேல் முகம் வைத்து முத்தாடி என்றன்
மகனே எனஅழைத்த வாய்க்கு (6)

முகம் மேல் முகம் வைத்து முத்தம் கொடுத்த வாய்க்கு அரிசி அள்ளி இடுவேனோ? அவள் தலை மேல் கொள்ளி வைப்பேனோ?

முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே (7)

விருத்த யாப்பு

முன்னொருகால் சிவன் இட்ட தீ முப்புரத்திலே. பின்னர் அனுமான் இட்ட தீ தென் இலங்கையில். அன்னை இட்ட தீ என் அடிவயிற்றில். யானும் என் அன்னைக்கு இட்ட தீ மூண்டு எரியட்டும்.

வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ – மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை (8)

தாயை விட்டுவிட்டு வானத்தில் பறக்கும் குருவி போல் நான் பறந்து போகாமல் கருத்தோடு என் உடல் அழுக்குப் போகக் கோதாட்டி என்னை வளர்த்தெடுத்த என் தாயின் கை தீயில் வேகுதே. வெந்து பொடிந்து சாம்பலாகுதே.

வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ – சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம்கிடந்(து)என்
தன்னையே ஈன்றெடுத்த தாய் (9)

அருணாசல வித்தே! நாள்தோறும் உன்னையே நோக்கி உவப்போடு தவம் கிடந்து என்னை ஈன்றெடுத்த தாய் வெந்து போய்விட்டாளா? உன் திருவடிக்கு வந்துவிட்டாளா? என்னை மறந்துவிட்டாளா?

வீற்றிருந் தாள்அன்னை வீதி தனில்இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் – பால்தெளிக்க
எல்லீரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம் (10)

என் அன்னை வீற்றிருந்தாள். வீதியில் இருந்தாள். நேற்று இருந்தாள். இன்று வெந்து நீறு ஆனாள். ஏதோ என்று இரங்காமல் எல்லாரும் பால் தெளிக்க வாருங்கள். எல்லாம் ‘சிவமயம்’.

பட்டினத்தார் தாய் இறந்தபின்

வெண்பா

பட்டினத்தார் பாடல்கள்
14 ஆம் நூற்றாண்டு

Thursday, 16 February 2017

பட்டினத்தார் பாடல் அன்னையிட்ட தீ 1-5 Pattinatthar poems 87

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்துபெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் – செய்யஇரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி (1)

10 மாதம் உடல் எல்லாம் வருந்திப் பெற்றெடுத்து, பச்சை உடம்பினளாய் இருக்கும்போதே இரக்கத்தோடு எடுத்து, சிவந்த இரு முலைகளில் பாலூட்டியவளை இனி எந்தப் பிறவியில் காணப்போகிறேன்?

முந்தித் தவம்கிடந்து முந்நூறு நாள்அளவும்
அந்திபக லாச்சிவனை ஆதரித்துத் - தொந்தி
சரியச் சுமந்துபெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல்மூட்டு வேன் (2)

என்னை வேண்டித் தவம் கிடந்தாள். 300 நாள் அந்தியில் நாள்தோறும் சிவனை வழிபட்டாள். வயிறு சரியத் தாங்கினாள். அந்தத் தாயாருக்கோ நான் எரியும் தழலை மூட்டுகின்றேன்?

வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து – முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன் (3)

கூடையிலும், தொட்டிலிலும், மார் மேலும், தோள் மேலும், கட்டிலிலும், கிடத்தி எனக்கு அன்பு காட்டினாள். முந்தானைச் சிறகில் மூடி என்னைக் காப்பாற்றினாள். சீராட்டினாள். அந்தத் தாயையா விறகின் மேல் வைத்து தீ மூட்டுகின்றேன்?

நொந்து சுமந்துபெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே – அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய்தனக்கோ
மெய்யிலே தீமூட்டு வேன் (4)

அவள் நொந்து சுமந்தாள். நான் நோவாமல் முலையில் பால் ஊட்டினாள். அந்தியிலும் பகலிலும் கையில் வைத்துக்கொண்டு காப்பாற்றினாள். அந்தத் தாயின் உடம்பிலா நான் தீ மூட்டுகின்றேன்?

அரிசியோ நான்இடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் - உருசியுள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ
மானே எனஅழைத்த வாய்க்கு (5)

என் ஆத்தாளுக்குச் சிறப்புச் செய்து மகிழாமல் அவள் வாயிலா நான் அரிசி இடுகின்றேன்? தித்திக்கும் தேனே, அமிர்தமே, செலவத் திரவியமே, பூமானே என்றெல்லாம் என்னை அழைத்த வாய் ஆயிற்றே.

பட்டினத்தார் தாய் இறந்தபின்

வெண்பா

பட்டினத்தார் பாடல்கள்
14 ஆம் நூற்றாண்டு

பட்டினத்தார் பாடல் ஆரோ நான் Pattinatthar poems 86

பாரோஒ நீரோஒ தீயோஒ வளியோஒ படர்வானோஒ
ஆரோஒ நாஅனென் றாய்வுறு கின்றேன் அறிவில்லேன்
பாரோஒ நீரோஒ தீயோஒ வெளியோஒ படர்வானோஒ
ஆரோஒ நாஅனென் றாய்வுறு கின்றேன் அதுநீயே (64) 

பாரோ நீரோ தீயோ வளியோ படர் வானோ, ஆரோ நான் என்று ஆய்வுறுகின்றேன் அறிவில்லேன்.
பாரோ நீரோ தீயோ வெளியோ படர் வானோ, ஆரோ நான் என்று ஆய்வுறுகின்றேன் நான் ஆவது நீயே (64) 

பாடலில் ஒ அ – இசைநிறை அளபெடைகள்

பட்டினத்தார் பொது   
யாப்பியலும், பொருள் நோக்கும் கொண்ட பதிவு
குற்றியலுகரமும், குற்றியலிகரமும் [ ’ ] என்னும் குறியீடு சேர்த்து எழுதிக் காட்டப்பட்டுள்ளன.

பாடல்கள் கட்டளைக் கலித்துறை யாப்பால் ஆனவை
கட்டளைக் கலித்துறையின் இலக்கணம் வருமாறு
அடி வெண்டளை பிழையாமல் வரும்.
அடியில் 5 சீர்கள் மட்டுமே இருக்கும்.
5 ஆம் சீர் ‘விளங்காய்’ வாய்பாட்டு கொண்டடிருக்கும். 
நேர் அசையில் தொடங்கினால் அடியில் 16 எழுத்து மட்டுமே இருக்கும்
நிரை அசையில் தொடங்கினால் அடியில் 17 எழுத்து மட்டுமே இருக்கும்
ஒற்று, குற்றியலுகரம், குற்றியலிகரம் எழுத்துக்களை நீக்கி எழுத்துக்களை எண்ணவேண்டும்.

பட்டினத்தார் பாடல்கள்
14 ஆம் நூற்றாண்டு

பட்டினத்தார் பாடல் திருநாள் Pattinatthar poems 85

ஒருநான்கு சாதிக்கும் மூவகைத் தேவர்க்கும் உம்பருக்கும்
திருநாளும் தீர்த்தமும் வேறுள தோவத் திசைமுகனால்
வருநாளில் வந்திடு மந்தக்கண் ணாளன் வகுப்பொழியக்
குருநாத னாணைக்கண் டீர்பின்னை யேதுக் குவலயத்தே (63)

ஒரு நான்கு சாதி, மூவகைக் தேவர், உம்பர் ஆகியோருக்குத் திருநாள், தீர்த்தம் ஆகியவை வேறு வேறு உளதோ? அந்தத் திசைமுகன் பிரம்மாவால் வருநாளில் வருபவை வந்தே தீரும். இப்படி வருவதை ஒழிக்கக் குருவுக்கு நாதன் ஆனவன் ஆணையால் கூறுகின்றேன், குருநாதனை வணங்குங்கள். இவற்றுக்கெல்லாம் ஏதுவாகிய காரணக் கண்ணாளன் உலகத்தில் குருவுக்கு நாதன் ஆன சிவனே. (63)

பட்டினத்தார் பொது   
யாப்பியலும், பொருள் நோக்கும் கொண்ட பதிவு
குற்றியலுகரமும், குற்றியலிகரமும் [ ’ ] என்னும் குறியீடு சேர்த்து எழுதிக் காட்டப்பட்டுள்ளன.

பாடல்கள் கட்டளைக் கலித்துறை யாப்பால் ஆனவை
கட்டளைக் கலித்துறையின் இலக்கணம் வருமாறு
அடி வெண்டளை பிழையாமல் வரும்.
அடியில் 5 சீர்கள் மட்டுமே இருக்கும்.
5 ஆம் சீர் ‘விளங்காய்’ வாய்பாட்டு கொண்டடிருக்கும். 
நேர் அசையில் தொடங்கினால் அடியில் 16 எழுத்து மட்டுமே இருக்கும்
நிரை அசையில் தொடங்கினால் அடியில் 17 எழுத்து மட்டுமே இருக்கும்
ஒற்று, குற்றியலுகரம், குற்றியலிகரம் எழுத்துக்களை நீக்கி எழுத்துக்களை எண்ணவேண்டும்.

பட்டினத்தார் பாடல்கள்
14 ஆம் நூற்றாண்டு

பட்டினத்தார் பாடல் ஏகம்பவாணர் Pattinatthar poems 84

கல்லால் எறியுண்டும் காலால் உதையுண்டும் காளைகையில்
வில்லால் அடியுண்டு முன்னால் விடமுண்டு மேலளித்துப்
பல்லால் புரமெரி யேகம்ப வாணர் பாதாம்புயத்தின்
சொல்லால் செவியினில் கேளா திருந்ததென் தொல்வினையே (62)

சாக்கிய நாயனாரால் கல்லால் எறியுண்டும்
கண்ணப்ப நாயனாரால் காலால் உதையுண்டும்
அருச்சுணன் காளை கையில் வில்லால் அடியுண்டும்
மேலை நாளில் பாற்கடல் கடையும்போது விடம் உண்டும்
மேல் அளித்துப் பல்லைக் காட்டிச் சிரித்து முப்புரம் எரித்த ஏகம்பவாணர் பாதத் தாமரையைச் சொல்லால் போற்றாமலும், போற்றுவதைச் செவிகளால் கேளாமலும், இருந்தேன். இது என் தொல்வினை.

பட்டினத்தார் பொது   
யாப்பியலும், பொருள் நோக்கும் கொண்ட பதிவு
குற்றியலுகரமும், குற்றியலிகரமும் [ ’ ] என்னும் குறியீடு சேர்த்து எழுதிக் காட்டப்பட்டுள்ளன.

பாடல்கள் கட்டளைக் கலித்துறை யாப்பால் ஆனவை
கட்டளைக் கலித்துறையின் இலக்கணம் வருமாறு
அடி வெண்டளை பிழையாமல் வரும்.
அடியில் 5 சீர்கள் மட்டுமே இருக்கும்.
5 ஆம் சீர் ‘விளங்காய்’ வாய்பாட்டு கொண்டடிருக்கும். 
நேர் அசையில் தொடங்கினால் அடியில் 16 எழுத்து மட்டுமே இருக்கும்
நிரை அசையில் தொடங்கினால் அடியில் 17 எழுத்து மட்டுமே இருக்கும்
ஒற்று, குற்றியலுகரம், குற்றியலிகரம் எழுத்துக்களை நீக்கி எழுத்துக்களை எண்ணவேண்டும்.

பட்டினத்தார் பாடல்கள்
14 ஆம் நூற்றாண்டு

பட்டினத்தார் பாடல் உளி இட்ட கல் Pattinatthar poems 83

உளியிட்ட கல்லையும் ஒப்பிட்ட சாந்தையும் ஊத்தையறப்
புளியிட்ட செம்பையும் போற்றுகி லேன்உயர் பொன்னெனவே   
ஒளியிட்ட தாள்இரண் டுள்ளிருந் தாள்வது உண்மையென்று
வெளியிட் டடைத்துவைத் தேன்இனி மேல்ஒன்றும் வேண்டிலனே (61)
 
உளியிட்ட கல்
உளியிட்ட கல்லைப்
போற்றமாட்டேன்
உளியால் செய்த கற்சிலையையும், அதற்கு இடும் சந்தனக் காப்பையும், ஊத்தை இல்லாமல் புளி போட்டுத் துலக்கிய செம்புச் சிலையையையும் நான் போற்றமாட்டேன்.
உயர்ந்த பொன்னாக உள்ளத்திலே ஒளிவிடும் இரு திருவடிகள் என்னை ஆள்வது உண்மை என்று வெட்ட வெளியில் பலருக்கும் தெரியும்படி வைத்துக்கொண்டேன். இனிமேல் எனக்கு வேறொன்று வேண்டுமென்று கேட்கமாட்டேன்.

பட்டினத்தார் பொது   
யாப்பியலும், பொருள் நோக்கும் கொண்ட பதிவு
குற்றியலுகரமும், குற்றியலிகரமும் [ ’ ] என்னும் குறியீடு சேர்த்து எழுதிக் காட்டப்பட்டுள்ளன.

பாடல்கள் கட்டளைக் கலித்துறை யாப்பால் ஆனவை
கட்டளைக் கலித்துறையின் இலக்கணம் வருமாறு
அடி வெண்டளை பிழையாமல் வரும்.
அடியில் 5 சீர்கள் மட்டுமே இருக்கும்.
5 ஆம் சீர் ‘விளங்காய்’ வாய்பாட்டு கொண்டடிருக்கும். 
நேர் அசையில் தொடங்கினால் அடியில் 16 எழுத்து மட்டுமே இருக்கும்
நிரை அசையில் தொடங்கினால் அடியில் 17 எழுத்து மட்டுமே இருக்கும்
ஒற்று, குற்றியலுகரம், குற்றியலிகரம் எழுத்துக்களை நீக்கி எழுத்துக்களை எண்ணவேண்டும்.

பட்டினத்தார் பாடல்கள்
14 ஆம் நூற்றாண்டு

பட்டினத்தார் பாடல் பரத்தையர் Pattinatthar poems 82

சற்றாகி லும்தன்னைத் தானறி யாய்தன்னை ஆய்ந்தவரை
உற்றாகி லும்உரைக் கப்பொருந் தாய்உனக் கானநிலை
பற்றாய் குருவைப் பணியாய் பரத்தையர் பாலில்சென்றென்
பெற்றாய் மடநெஞ்ச மேஉனைப் போல்இல்லை பித்தனுமே (60)

மட நெஞ்சமே,
சற்றாகிலும் நீ உன்னைத் தன்னைத் தானே அறிய மாட்டாய்.
தன்னைத் தானே அறிந்தவரிடம் சென்றாவது அவர் சொல்வனவற்றைக் கேட்டு நடந்துகொள்ள மாட்டாய்.
உனக்குப் பயன்படும் நிலையை நீ பற்றிக்கொள்ளவில்லை.
குருவைப் பணிவதில்லை.
பரத்தையரின் பாலின்பத்தை சேடிச் சென்று பெறுகிறாய்.
உன்னைப் போல் பித்தன் வேறு யாரும் இல்லை.

பட்டினத்தார் பொது   
யாப்பியலும், பொருள் நோக்கும் கொண்ட பதிவு
குற்றியலுகரமும், குற்றியலிகரமும் [ ’ ] என்னும் குறியீடு சேர்த்து எழுதிக் காட்டப்பட்டுள்ளன.

பாடல்கள் கட்டளைக் கலித்துறை யாப்பால் ஆனவை
கட்டளைக் கலித்துறையின் இலக்கணம் வருமாறு
அடி வெண்டளை பிழையாமல் வரும்.
அடியில் 5 சீர்கள் மட்டுமே இருக்கும்.
5 ஆம் சீர் ‘விளங்காய்’ வாய்பாட்டு கொண்டடிருக்கும். 
நேர் அசையில் தொடங்கினால் அடியில் 16 எழுத்து மட்டுமே இருக்கும்
நிரை அசையில் தொடங்கினால் அடியில் 17 எழுத்து மட்டுமே இருக்கும்
ஒற்று, குற்றியலுகரம், குற்றியலிகரம் எழுத்துக்களை நீக்கி எழுத்துக்களை எண்ணவேண்டும்.

பட்டினத்தார் பாடல்கள்
14 ஆம் நூற்றாண்டு

பட்டினத்தார் பாடல் அருவருப்பு Pattinatthar poems 81

மானார் விழியைக் கடந்தேறி வந்தனன் வாழ்குருவும்
கோனாகி என்னைக் குடியேற்றிக் கொண்டனன் குற்றமில்லை
போனாலும் பேறிருந் தாலும்நற் பேறிது பொய்யன்றுகாண்
ஆனாலும் இந்த உடம்போ டிருப்பது அருவருப்பே (59)

பெண்களின் மான் போன்ற விழியைக் கடந்து கடைத்தேறி வந்துவிட்டேன்.
வாழ்வு தரும் குருவும் என் அரசனாகி என்னைக் குடியேற்றிக் கொண்டனன்.
குற்றமில்லை.
எங்கு போனாலும், எந்தப் பேறு இருந்தாலும், நல்ல பேறு இதுதான். பொய் அன்றுகாண்.
ஆனாலும் இந்த உடம்போடு இருப்பது அருவருப்பே (59)

பட்டினத்தார் பொது   
யாப்பியலும், பொருள் நோக்கும் கொண்ட பதிவு
குற்றியலுகரமும், குற்றியலிகரமும் [ ’ ] என்னும் குறியீடு சேர்த்து எழுதிக் காட்டப்பட்டுள்ளன.

பாடல்கள் கட்டளைக் கலித்துறை யாப்பால் ஆனவை
கட்டளைக் கலித்துறையின் இலக்கணம் வருமாறு
அடி வெண்டளை பிழையாமல் வரும்.
அடியில் 5 சீர்கள் மட்டுமே இருக்கும்.
5 ஆம் சீர் ‘விளங்காய்’ வாய்பாட்டு கொண்டடிருக்கும். 
நேர் அசையில் தொடங்கினால் அடியில் 16 எழுத்து மட்டுமே இருக்கும்
நிரை அசையில் தொடங்கினால் அடியில் 17 எழுத்து மட்டுமே இருக்கும்
ஒற்று, குற்றியலுகரம், குற்றியலிகரம் எழுத்துக்களை நீக்கி எழுத்துக்களை எண்ணவேண்டும்.

பட்டினத்தார் பாடல்கள்
14 ஆம் நூற்றாண்டு

பட்டினத்தார் பாடல் உண்ணாமுலை Pattinatthar poems 80

கச்சில் கிடக்கும் கனதனத் தில்கடைக் கண்கள்பட்டே
இச்சித் திருக்கின்ற ஏழைநெஞ் சேஇம வான்பயந்த
பச்சைப் பசுங்கொடி உண்ணாமு லைபங்கர் பாதத்திலே
தைச்சுக் கிடமன மேஒரு காலும் தவறில்லையே (58)
 
உண்ணாமுலையாளொடு
அண்ணாமலையார்
வரிந்து கட்டிய கச்சில் கிடக்கும் கனமான முலையில் உன் கடைக்கண்கள் பட்டு ஆசைப்பட்டுக்கொண்டு இருக்கின்ற ஏழை நெஞ்சே, இமயமலை அரசன் பெற்றெடுத்த பச்சைப் பசுங்கொடி உண்ணாமுலை உமையவளுக்குத் தன் உடலைப் பங்கு போட்டுத் தந்திருப்பவன் பாதத்தில், தைத்துக் கிட. ஒரு நாளும் உனக்குத் தவறு நேராது. (58)

பட்டினத்தார் பொது   
யாப்பியலும், பொருள் நோக்கும் கொண்ட பதிவு
குற்றியலுகரமும், குற்றியலிகரமும் [ ’ ] என்னும் குறியீடு சேர்த்து எழுதிக் காட்டப்பட்டுள்ளன.

பாடல்கள் கட்டளைக் கலித்துறை யாப்பால் ஆனவை
கட்டளைக் கலித்துறையின் இலக்கணம் வருமாறு
அடி வெண்டளை பிழையாமல் வரும்.
அடியில் 5 சீர்கள் மட்டுமே இருக்கும்.
5 ஆம் சீர் ‘விளங்காய்’ வாய்பாட்டு கொண்டடிருக்கும். 
நேர் அசையில் தொடங்கினால் அடியில் 16 எழுத்து மட்டுமே இருக்கும்
நிரை அசையில் தொடங்கினால் அடியில் 17 எழுத்து மட்டுமே இருக்கும்
ஒற்று, குற்றியலுகரம், குற்றியலிகரம் எழுத்துக்களை நீக்கி எழுத்துக்களை எண்ணவேண்டும்.

பட்டினத்தார் பாடல்கள்
14 ஆம் நூற்றாண்டு

பட்டினத்தார் பாடல் காஞ்சிரங்காய் Pattinatthar poems 79

நாய்க்கொரு சூலும் அதற்கோர் மருத்துவம் நாட்டிலுண்டோ 
பேய்க்கொரு ஞானம் பிடிபடு மோபெரும் காஞ்சிரங்காய்
ஆக்குவர் ஆஅர் அருந்துவர் ஆஅரது போலுடம்பு
தீக்கிரை யாவதல் லால்ஏதுக் காம்இதைச் செப்புமினே (57)
 
காஞ்சிரங்காய்
எட்டிக்காய்
வாலாட்டித் திரியும் நாய்க்கு ஒரு சூளுரை உண்டா? அதன் வாலை நிமிர்த்த ஒரு மருத்துவம் நாட்டில் உண்டா? பிணம் தின்னும் பேய்க்கு ஞானம் பிடிபடுமா? எட்டிக்காயை உணவாகச் சமைப்பவர் யார்? இதனைத் தின்னுபவர் யார்? அதுபோல் நம் உடம்பு தீக்கு இரையாவது அல்லாமல் வேறு எதற்குப் பயன்படும்? நீங்களே சொல்லுங்கள்.

பட்டினத்தார் பொது   
யாப்பியலும், பொருள் நோக்கும் கொண்ட பதிவு
குற்றியலுகரமும், குற்றியலிகரமும் [ ’ ] என்னும் குறியீடு சேர்த்து எழுதிக் காட்டப்பட்டுள்ளன.

பாடல்கள் கட்டளைக் கலித்துறை யாப்பால் ஆனவை
கட்டளைக் கலித்துறையின் இலக்கணம் வருமாறு
அடி வெண்டளை பிழையாமல் வரும்.
அடியில் 5 சீர்கள் மட்டுமே இருக்கும்.
5 ஆம் சீர் ‘விளங்காய்’ வாய்பாட்டு கொண்டடிருக்கும். 
நேர் அசையில் தொடங்கினால் அடியில் 16 எழுத்து மட்டுமே இருக்கும்
நிரை அசையில் தொடங்கினால் அடியில் 17 எழுத்து மட்டுமே இருக்கும்
ஒற்று, குற்றியலுகரம், குற்றியலிகரம் எழுத்துக்களை நீக்கி எழுத்துக்களை எண்ணவேண்டும்.

பட்டினத்தார் பாடல்கள்
14 ஆம் நூற்றாண்டு

Blog Archive

எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி