Showing posts with label நற்றிணை. Show all posts
Showing posts with label நற்றிணை. Show all posts

Tuesday, 17 January 2017

நற்றிணை 400 Natrinai 400

நெல் விளைந்திருக்கும் வயலில் வாழைப்பூ இதழ்கள் பிடிப்பு விடுபட்டு விழும். அறுத்துக் கட்டி வைத்திருக்கும் நெற்கட்டுகளுக்கு அருகில் வாளைமீன் புரண்டு விளையாடும். இப்படிப்பட்ட நீர்வளம் மிக்க ஊரின் தலைவன் நீ.
நீ இல்லாமல் நான் வாழ்வேனாயின், அது துன்பப் பார்வையாக இருக்கும். நீ இல்லாவிட்டால் என் பிழைப்புக்கு வழி ஏது?
வீரம் மிக்க சோழ அரசர்களின் உறையூர் அவைக்களத்தில் அறநெறி தவறுவதைப் பார்க்க முடியாது. அது போல உன் நட்பைப் பெற்றிருக்கும் எனக்கு நீ கேடு செய்ய அறியாதவன். என் நெஞ்சத்திலும் வஞ்சனை இல்லை.
பரத்தை தன்னை நாடி வந்த தலைவனிடம் இவ்வாறு கூறுகிறாள்.
 
வயலில் நெல்லுக் கட்டு
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை மருதம்

வாழை மென் தோடு வார்புஉறுபு ஊக்கும்
நெல் விளை கழனி நேர் கண் செறுவின்,
அரிவனர் இட்ட சூட்டு அயல், பெரிய
இருஞ் சுவல் வாளை பிறழும் ஊர!
நினின்று அமைகுவென்ஆயின், இவண் நின்று,      5
இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ?
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து,
அறம் கெட அறியாதாங்கு, சிறந்த
கேண்மையொடு அளைஇ, நீயே
கெடு அறியாய் என் நெஞ்சத்தானே.     10

பரத்தை தலைவனைப் புகழ்ந்தது.
முன்பு நின்று யாதோ புகழ்ந்தவாறு எனின், ''நின் இன்று அமையாம்'' என்று சொன்னமையான் என்பது.
ஆலங்குடி வங்கனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

நற்றிணை 399 Natrinai 399

அருவியொலி கேட்டுக்கொண்டடிருக்கும் பெருமலை அடுக்கத்தில் குருதி (இரத்தம்) நிறம் கொண்ட செங்காந்தள் பூக்கள் அழகிய சிறகுகளை உடைய வண்டுகள் தேன் உண்ணும்படி மலரும். வழை மரம் மிக்க சோலையில் காட்டுப் பன்றி உழுத (கிழங்குக்காகக் கிண்டிய) நிலத்தின் புழுதியில் அழகிய மணிக்கற்கள் மேலெழுந்து கிடக்கும். அந்த மணிகள் தரும் விளக்கு வெளிச்சத்தில் கன்று போட்டிருக்கும் பெண்யானை தன் கன்றுடன் ஆண்யானை பாதுகாப்புடன் இருக்கும். இப்படிப்பட்ட பெருமலை நாட்டின் தலைவன் அவன். அவன் உன்னை விரும்பி வந்திருக்கிறான் என்னும் பெருமை உடையவள் நீ – என்றாள் தோழி.
அவன் என்னை மணந்துகொண்டு வாடிக் கிடக்கும் நெற்றி (முகத்துக்கு ஆகுபெயர்) அழகை திரும்பத் தருவானோ – என்று தலைவி வினவுகிறாள்.
தொலைவில் கேட்டுக்கொண்டிருக்கும் தலைவன் மணந்துகொள்ளவேண்டும் என்பது கருத்து.
 
செங்காந்தள் மலர்
6 இதழ் - 6 முகம் - குறிஞ்சிநிலத் தெய்வம் முருகன்
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை குறிஞ்சி

அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து,
குருதி ஒப்பின் கமழ் பூங் காந்தள்
வரி அணி சிறகின் வண்டு உண மலரும்
வாழை அம் சிலம்பில், கேழல் கெண்டிய
நிலவரை நிவந்த பல உறு திரு மணி 5
ஒளி திகழ் விளக்கத்து, ஈன்ற மடப் பிடி,
களிறு புறங்காப்ப, கன்றொடு வதியும்
மா மலை நாடன் நயந்தனன் வரூஉம்
பெருமை உடையள் என்பது
தருமோ தோழி! நின் திரு நுதல் கவினே?    10

நெடுங்காலம் வந்து ஒழுக ஆற்றாமை வேறுபட நின்ற தலைமகளைத் தோழி, ''எம்பெருமான் இதற்காய நல்லது புரியும்'' என்று தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது.
''இதற்காய நல்லது புரியும் பெருமான் திறம் வேண்டும்'' என்றாட்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.
தொல்கபிலர் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

நற்றிணை 398 Natrinai 398

அச்சம் தரும் தெய்வம் மறைந்திருக்கிறது. ஞாயிறு மேற்கில் மறைகிறது. இதுவரை நீரலையைக் கலைத்துக்கொண்டு விளையாடினோம். உன்னுடன் சேர்ந்து ஓரை விளையாடிய மகளிர் வயிறு பசிக்கக்ககிறது என்று தம் பின்புறக் கூந்தலில் வடியும் நீரைப் பிழிந்துகொண்டு ஊருக்குத் திரும்புகின்றனர். சோலையிலுள்ள பல்வகையான நல்ல மலர்களை பார்த்துப் பாராட்டிக்கொண்டே (பழிச்சி) அவர்களுக்கு முன் நாமும் செல்லலாமா பெருமாட்டி (சேயிழை = செவ்விய அணுகலன் பூண்டவள்) என்று நான் (தோழி) கேட்டேன். அதற்கு அவள் எதுவுமே சொல்லவில்லை. அவள் மென்மையான இதயம் கொண்டவள். தன் எழிலான கண்களிலிருந்து சில நீர்த்துளிகள் வளரும் இளமுலையை நனைக்க நின்றுகொண்டே இருந்தாள். அவன் வரவுக்காக ஏங்குகிறாள். நான் என்ன செய்வேன்?
தோழியின் கலக்கம்.
 
கூழை நீர் 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை நெய்தல்

உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றே;
விரி கதிர் ஞாயிறும் குடக்கு வாங்கும்மே;
நீர் அலைக் கலைஇய கூழை வடியாச்
சாஅய் அவ் வயிறு அலைப்ப, உடன் இயைந்து,
ஓரை மகளிரும், ஊர் எய்தினரே;            5
பல் மலர் நறும் பொழில் பழிச்சி, யாம் ''முன்,
சென்மோ, ''சேயிழை?'' என்றனம்; அதன் எதிர்
சொல்லாள் மெல்லியல், சிலவே நல் அகத்து
யாணர் இள முலை நனைய,
மாண் எழில் மலர்க் கண் தெண் பனி கொளவே.       10

முன்னுற உணர்ந்து பகற்குறி வந்து மீளும் தலைமகனை, ''நீ தான் இவளது தன்மையை ஆற்றுவி'' எனச் சொல்லியது.
உலோச்சனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

நற்றிணை 397 Natrinai 397

என் தோளின் அழகு அழிகின்றது. அவன் தொடர்பு இல்லாமல் பல நாட்கள் சென்றுவிட்டன. அவன் வரும் நீண்ட வழியையே பார்த்துக்கொண்டிருந்து என் கண்ணின் பார்வையும் ஒளி இழந்து பூத்துப்போயிற்று. (மங்கிப்போயிற்று) அவனை விட்டுவிட்டு என் அறிவும் மயங்கி வேறொன்றாக (பித்து) மாறிவிட்டது. காம வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. காமம் தோன்றும் மாலைக் காலமும் வந்துவிட்டது. நான் என்ன ஆவேனோ தெரியவில்லை. இந்தப் பிறவியில் நான் சாவதற்கு அஞ்சவில்லை. இந்தப் பிறவியில் அவனைக் கணவனாக அடையாமல் செத்துவிட்டால், அடுத்தப் பிறவியில் வேறொரு பிறவியில் தோன்றி, இப்போதுள்ள என் காதலனை மறந்துவிடுவேனோ என்று அஞ்சுகிறேன்.
தலைவி தன் தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.

கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து (திருக்குறள் 1144) தவ்வென்னும் < தௌவென்னும் - தௌவின
 
அவள் கற்பு
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை பாலை

தோளும் அழியும், நாளும் சென்றென;
நீள் இடை அத்தம் நோக்கி, வாள் அற்றுக்
கண்ணும் காட்சி தௌவின; என் நீத்து
அறிவும் மயங்கி, பிறிது ஆகின்றே;
நோயும் பெருகும்; மாலையும் வந்தன்று;      5
யாங்கு ஆகுவென்கொல் யானே? ஈங்கோ
சாதல் அஞ்சேன்; அஞ்சுவல், ''சாவின்
பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின்,
மறக்குவேன்கொல், என் காதலன்'' எனவே.

பிரிவிடை ஆற்றாளாகி நின்ற தலைமகளை வற்புறாநின்ற தோழிக்கு ''ஆற்றுவல்'' என்பது படச் சொல்லியது.
அம்மூவனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

Monday, 16 January 2017

நற்றிணை 396 Natrinai 396

மழை பொழிந்த பின்னர் மேகம் மலையியில் இறங்கிவிடும். அதனால் தேன் தொங்கும் உயர்ந்த மலையில் அருவி முழக்கத்துடன் கொண்டும். வேங்கை மலர் மலையெல்லாம் பூத்துக் குலுங்கும். பொன் போன்ற அதன் பூக்களை மயில் உண்ணும். அப்போது வேங்கைப் பூவின் தாதுகள் மயிலின் தோகையில் கொட்டி மணக்கும். இப்படி மணக்கும் தோகையுடன் மயில்கள் கூட்டமாக பாறைமேல் இருந்துகொண்டு காலையில் தோன்றும் ஞாயிற்றின் இளவெயிலை உண்ணும். (ஞாயிறு காயும்). இப்படிப்பட்ட நாட்டின் தலைவனே! உன் மார்பை எனக்குத் தந்தாய். அதனால் உன் நினைவுத் துன்பத்தில் நான் தவிக்கிறேன், இதனை வேறு யாரிடம் சொல்லமுடியும்? உன் காமத்தைப் பல நாள் சொல்லி என்னை மயக்கிவிட்டாய். திருமணப் பாதுகாப்பு எனக்கு வழங்கவே இல்லை. யாரிடம் சொல்லி நொந்துகொள்வேன்?
காதலி காதலனிடம் சொல்லிக் கலங்குகிறாள்.
 
மார்பு அணங்கிய செல்லல்
மார்பு இன்பம் தந்த நினைவுத் துன்பம்
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை குறிஞ்சி

பெய்து போகு எழிலி வைகு மலை சேர,
தேன் தூங்கு உயர் வரை அருவி ஆர்ப்ப,
வேங்கை தந்த வெற்பு அணி நல் நாள்,
பொன்னின் அன்ன பூஞ் சினை துழைஇ,
கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகை    5
பாசறை மீமிசைக் கணம் கொள்பு, ஞாயிற்று
உறு கதிர் இள வெயில் உண்ணும் நாடன்!
நின் மார்பு அணங்கிய செல்லல் அரு நோய்
யார்க்கு நொந்து உரைக்கோ யானே பல் நாள்
காமர் நனி சொல் சொல்லி,          10
ஏமம் என்று அருளாய், நீ மயங்கினையே?

தோழி தலைமகனை வரைவு கடாயது;
வரைவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய்ச் சொல்லியதூஉம் ஆம்;
இரவுக்குறி மறுத்ததூஉம் ஆம்.
ஆசிரியர் பெயர் தெரியவில்லை

இது கி.மு. காலத்துப் பாடல்.

நற்றிணை 395 Natrinai 395

நண்பரே (எலுவ), யார் நீ? என் தலைவிக்கு என்ன உறவு? எந்த உறவுக்காரரும் இல்லை. ஏதோ உறவோ, பகையோ இல்லாத ஒரு நொதுமலாளர். அவ்வளவுதான், கொண்கனே (கொண்டிருப்பவன்). நினைத்துப் பார்த்தால் நம்மிடையே இருக்கும் உறவு அவ்வளவுதான்.
யானைமீதும் தேர்மீதும் செல்லும் வேந்தன் குட்டுவன். அவன் பிற வேந்தர்களை அழிக்கும் போர்முகத்தில் முரசு அதிர்வது போல, உயர்ந்த பாறைக்கல்லின்மீது ஏறி கடலில் குதித்து மகளிர் விளையாடுவர். அப்போது அவர்கள் முன்பு அணிந்திருந்த பூக்களைக் களைந்து எறிந்துவிட்டு விளையாடுவர். அப்படி அவர்கள் எறிந்த பூக்களை மேய்ந்துவிட்டுப் பசுவினம் மாலை வேளையில் இல்லம் மீளும். அந்த மாலை வேளையிலும் நீ என் தலைவியை விரும்பவில்லை. (வேட்டனை அல்லை). இந்த நிலையில் இவளை விட்டுவிட்டு நீ செல்வதாயின், இவளது பண்டைய உடல் நலத்தைத் தந்துவிட்டுச் செல்க. இவளை மணந்து மனைவியாக்கிக்கொண்டு செல்க.
தோழி தலைவனிடம் இவ்வாறு கூறுகிறாள்.
 
பசுவினம் இல்லம் திரும்பல் 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை நெய்தல்

யாரை, எலுவ? யாரே, நீ எமக்கு
யாரையும் அல்லை; நொதுமலாளனை;
அனைத்தால் கொண்க, நம்மிடையே நினைப்பின்;
கடும் பகட்டு யானை நெடுந் தேர்க் குட்டுவன்
வேந்து அடு மயக்கத்து முரசு அதிர்ந்தன்ன,                 5
ஓங்கற் புணரி பாய்ந்து ஆடு மகளிர்
அணிந்திடு பல் பூ மரீஇ, ஆர்ந்த
புலம் புகுதரு பேர் இசை மாலைக்
கடல் கெழு மாந்தை அன்ன, எம்
வேட்டனை அல்லையால், நலம் தந்து சென்மே.   10

''நலம் தொலைந்தது'' எனத் தலைவனைத் தோழி கூறி, வரைவு கடாயது.
அம்மூவனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

நற்றிணை 394 Natrinai 394

திசையெங்கும் பரந்து கிடக்கும் அந்தக் காட்டுக்கு மரங்கள்தான் தலை. அங்கே தலை விரித்து நிற்கும் ஞெமை மரத்தில் இருந்துகொண்டு கோட்டான் (குடிஞை) குழறுகிறது. பொன்னில் அணிகலன் செய்யும் தட்டான் பொன்னைத் தட்டும் ஓசை இனிமையாகக் கேட்பது போல் அந்தக் கோட்டானின் குழறல் இனிமையாகக் கேட்கிறது.

காதலன் வந்தான். என்னோடு இருந்தான். இன்பம் தந்துவிட்டு மீள்கிறான்.
ஒப்பனை செய்யப்பட்டு ஒளி வீசும் உயர்ந்த தேர். (இழை கிளர் நெடுந்தேர்) அதில் கட்டிவைத்திருக்கும் மணி. (பெய்ம்மணி) வறண்டு பரல் கற்களுடன் முரம்பு பட்டுக் கிடக்கும் நிலத்தில் அதன் சக்கரமும் (நேமி) மணியும் ஒலி எழுப்பத் தேர் செல்கிறது.

செல்க, (சென்றிசின்) வாழ்க, என்று சொல்லி வழியனுப்பி வைக்கிறேன். கடுமையான பனி பொழிந்துகொண்டிருக்கும் காலத்தில் அனுப்பிவைக்கிறேன். வழியில் செல்லும்போது (இடைச்சுரத்து) மேகம் (எழிலி) சுரந்து மழை பொழியுமோ? பொழிவதால் அவன் மார்பில் கோடு கோடாக அணிந்திருக்கும் குறும்பொறிச் சந்தனம் ஈரம் பட்டு மேலும் குளுமையாகுமோ? குளிரில் நடுங்குவானோ? (என்னை அணைத்த வெதுவெதுப்பு இல்லாமல் போய்விடுமே) அதற்காக நான் நோகிறேன். (வருந்துகிறேன்)
புணர்ச்சிக்குப் பின்னர் தலைவனை அனுப்பிவைக்கும் தலைவி இவ்வாறு நினைக்கிறாள்.
 
குடிஞை 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை முல்லை

மரந்தலை மணந்த நனந் தலைக் கானத்து,
அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை,
பொன் செய் கொல்லனின், இனிய தெளிர்ப்ப,
பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடுந் தேர்,
வன் பரல் முரம்பின், நேமி அதிர,           5
சென்றிசின் வாழியோ, பனிக் கடு நாளே;
இடைச் சுரத்து எழிலி உறைத்தென, மார்பின்
குறும் பொறிக் கொண்ட சாந்தமொடு
நறுந் தண்ணியன்கொல்; நோகோ யானே?

வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகனை இடைச் சுரத்துக் கண்டார் சொல்லியது;
வன்சொல்லால் குறை நயப்பித்த தோழி தந்து அளித்ததூஉம் ஆம்.
ஒளவையார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

நற்றிணை 393 Natrinai 393

மலைக்காட்டில் ஓங்கி உயர்ந்திருக்கும் மூங்கில் நிழலில், பெண்யானை வயா ஆசையுடன் சூல் முதிர்ந்து கன்று போட்டுத் தளர்ந்த நிலையில் இருக்கிறது. அந்த யானைக்குப் பால் ஊறவும், வலி தீரவும், உணவு தருவதற்காக, தினைக்கதிரை (வாலா வேழம்) ஆண்யானை மகிழ்ச்சியுடன் வயலில் கவர்கிறது. அதனைக் கண்ட கானவர் (மலை உழவர்) எரியும் பந்தத்தை (ஞெகிழி) விரைந்து செல்லும்படி யானைமேல் வீசுகின்றனர். அந்தப் பந்தம் எரிமீன் போல மின்னிக்கொண்டு பாய்கிறது. இப்படிப்பட்ட நாட்டை உடையவன் உன் காதலன்.
அவன் உன்னைப் பெற இரவில் வரும் துன்பத்திலிருந்து உய்யத் திருமணம் செய்துகொள்ள வருகிறான். அப்படி வந்த அவனது வாய்மை (உண்மை)த் தன்மையை எண்ணி நம்மவர்களும் உன்னைக் கொடையாக வழங்குவாராயின் நன்று. வந்தவர்களுடன் கலந்து பேசி வழங்குவார்களோ, மாட்டார்களோ? (நேர்வர்கொல்?) உன் காதலர் நம்மவர்களுக்குப் புதியவராக (புதுவர்) வந்திருக்கிறார். நீயோ திருணம் ஆகப்போகும் நாணத்தில் ஒடுங்கிக்கொண்டு இருக்கிறாய். இப்படி நீ இருந்தால், நம்மவர் உன்னைக் கொடுப்பார்களோ, மாட்டார்களோ?
தோழி தலைவியிடம் இவ்வாறு கூறுகிறாள்.
 
"கிளர் மீன்" \ கிளர்மீன் \ எரிமீன்
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை குறிஞ்சி

நெடுங் கழை நிவந்த நிழல் படு சிலம்பின்
கடுஞ் சூல் வயப்பிடி கன்று ஈன்று உயங்க,
பால் ஆர் பசும் புனிறு தீரிய, களி சிறந்து,
வாலா வேழம் வணர் குரல் கவர்தலின்,
கானவன் எறிந்த கடுஞ் செலல் ஞெகிழி   5
வேய் பயில் அடுக்கம் சுடர மின்னி,
நிலை கிளர் மீனின், தோன்றும் நாடன்
இரவின் வரூஉம் இடும்பை நாம் உய,
வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப,
நமர் கொடை நேர்ந்தனர் ஆயின், அவருடன்,            10
நேர்வர்கொல் வாழி தோழி! நம் காதலர்
புதுவர் ஆகிய வரவும், நின்
வதுவை நாண் ஒடுக்கமும் காணுங்காலே?

வரைவு மலிந்தது.
கோவூர் கிழார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

நற்றிணை 392 Natrinai 392

கடுமையான சுறா மீனைக் கால் கவிட்டியில் (கொடுந்தாள்) நசுக்கிப் பிடிக்கும் வலிமை மிக்கவன் தந்தை. இந்தத் தந்ததை கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும்போது அவனுடைய சிறுவர்கள், தம்மையும் கூட்டிச் செல்லவில்லை என வீட்டில் அழுதுகொண்டிருப்பர். அவர்கள் செப்பம் செய்யாத புல்லிய மயிர் கொண்ட தலையை உடையவர்கள். ஒருவர்க்கு ஒருவர் துணையாக நின்று பனைமுலை (பனைநுங்கு) பெற்று ஒருவாறு மகிழ்ச்சி கொள்வர். இப்படிப்பட்டது நம் ஊர். பனை (பெண்ணை) மரங்கள் இந்த ஊருக்கு வேலி. இது நான் என் காதலரோடு விளையாடிய கானல் பூங்காவுக்கு அருகில்தான் உள்ளது. அந்தக் கானல் பூங்காவுக்குப் பகலில் வந்து மீண்டு பழக்கப்பட்டவர் இன்று நள்ளிரவு வேளையிலும் அங்கு வந்து காத்திருக்கிறார் போலும். இந்த ஊரில் உள்ள என் வீடு என் காதலருக்குத் தெரிந்தால் நல்லது. இது நள்ளிரவு (பானாள்) வேளை. நான் இருக்கும் இந்த வீடு என் காதலருக்குத் தெரிந்தால், செம்மாந்த உள்ளத்தோடு அவர் இங்கு வரவும் கூடும். வந்தால், அவரையே நினைத்துக்கொண்டிருக்கும் என் வருத்தத்தைப் (முனிபடர்) போக்கினாலும் போக்கக் கூடும். என் காதலர் என்மீது மிகப் பெரிய அன்பினைக் கொண்டவர்.
தலைவி தன் தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.
இடம் சொல்லி அழைத்துவர வேண்டும் என்பது குறிப்பு.
 
நுங்கு
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை நெய்தல்

கடுஞ் சுறா எறிந்த கொடுந் தாட் தந்தை
புள் இமிழ் பெருங் கடல் கொள்ளான் சென்றென,
மனை அழுது ஒழிந்த புன் தலைச் சிறாஅர்
துணையதின் முயன்ற தீம் கண் நுங்கின்
பணை கொள் வெம் முலை பாடு பெற்று உவக்கும்,                              5
பெண்ணை வேலி, உழை கண் சீறூர்
நல் மனை அறியின், நன்றுமன் தில்ல;
செம்மல் நெஞ்சமொடு தாம் வந்து பெயர்ந்த
கானலொடு அழியுநர் போலாம் பானாள்,
முனி படர் களையினும் களைப;             10
நனி பேர் அன்பினர் காதலோரே.

இரவுக்குறி முகம்புக்கது;
வரைவு நீட ஆற்றாளாய தலைமகளைத் தோழி வரைவு உணர்த்தி வற்புறுத்தியதூஉம் ஆம்.
மதுரை மருதன் இளநாகனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி