Showing posts with label தெய்வ அலை. Show all posts
Showing posts with label தெய்வ அலை. Show all posts

Sunday, 9 April 2017

தெய்வ அலை 120 God waves 120

நாராயணன் நம சிவாயம்

ஆரை நோவேன் ஆர்க்குரைப்பேன்
ஆட்டும் என்னை ஆட்டுகிறாய்
வேரே நீதான் எனக்கென்பேன்
வேறு விதமாய்ப் பேசுகிறாய்
நாரா யணனாய் இருக்கையிலே
நம சிவாயம் பூக்கையிலே
வாரா திருந்தால் விடுவாயா
மனிதா உன்னுள் அடக்கம் நான்

அடியேன் பொதுவன் அடிகள் பாடல்
இயற்றிய ஆண்டு 2004


தெய்வ அலை 119 God waves 119

கடவுள் சொல்கிறார்
முடியுமா உன்னால்

செடியை நட்டான் நீர் விடுவான்
செப்பித் திரிவார் பலபேர்கள்
செடியும் நீரும் நட்டவனும்
சேர்ந்து நமக்குள் ஒன்றானோம்
படியை அளப்ப துன்தாளே
பாவா அடிகள் எனக்கென்பாய்
முடியை அடியில் வைப்பதெனில்
முடியும் செயலா என் தோழா

அடியேன் பொதுவன் அடிகள் பாடல்
இயற்றிய ஆண்டு 2004


தெய்வ அலை 118 God waves 118

நீ கும்பிட்டால் உனக்கும் ஒரு கும்பிடு

வாயில் மொழியாய் மலர்கின்றேன்
மனமாய் உணர்வாய்க் காய்கின்றேன்
நோயின் எதிர்ப்பாய் உனக்குள்ளே
நுழைந்து வந்து தொலைகின்றேன்
காயாய்க் கனியாய்ப் பசி தீர்ப்பேன்
கனவும் நனவும் உறக்கமும் நான்
கோயில் வந்து கும்பிட்டால்
கும்பிட் டுன்னை அனுப்பேனோ

அடியேன் பொதுவன் அடிகள் பாடல்
இயற்றிய ஆண்டு 2004


தெய்வ அலை 117 God waves 117

கடவுள் சொல்கிறார்
நீ வேடன் நான் பறவை

ஓடும் நீரில் நானிலையா
உனது மூச்சில் பாயலையா
ஆடும் நிழலாய் வருவேனை
அருந்தும் உணவாய்ச் சுவைப்பேனை
கூடும் உணர்வில் குதிப்பேனைக்
கூசா மல்நீ கொல்லுகிறாய்
வேடனாக நீ வந்தால்
வீழும் உயிரே நான் தானடா

அடியேன் பொதுவன் அடிகள் பாடல்
இயற்றிய ஆண்டு 2004


தெய்வ அலை 116 God waves 116

கடவுள் சொல்கிறார்
உன் இன்பம் நான்

பெண்ணில் ஆணில் பிசை உணவில்
பிணித்து வைத்தேன் இன்பமெலாம்
கண்ணில் காண மாட்டாமல்
காண வில்லை என்கின்றாய்
மண்ணில் என்னோ டிருக்கையிலே
வானில் தேடிப் பார்க்கின்றாய்
எண்ணில் இருக்கும் என்னைநீ
எதற்குள் பார்க்கத் துடிக்கின்றாய்

அடியேன் பொதுவன் அடிகள் பாடல்
இயற்றிய ஆண்டு 2004


தெய்வ அலை 115 God waves 115

அழுகை வருகிறது
கடவுள் அழுகிறார்
கடவுள் சொல்கிறார்

கையை ஏந்திப் பார்த்தாலும்
கையைக் கூப்பித் தொழுதாலும்
பையைப் பார்க்கும் திருடன் போல்
பரத்தைப் பார்த்துக் கிடக்கின்றாய்
கையில் பழமாய் நானிருக்க
காட்டில் வீட்டில் தேடுகிறாய்
அய்யோ உன்னை நினைத்தாலே
அழுது குழம்பிக் கலங்குகிறேன்.

அடியேன் பொதுவன் அடிகள் பாடல்
இயற்றிய ஆண்டு 2004


தெய்வ அலை 114 God waves 114

கடவுள் சொல்கிறார்
உன்னோடு பழகுகிறேன்

நோட்டின் அச்சில் பணமானேன்
நுழையும் என்னால் சுடுகின்றாய்
கூட்டம் கூட்ட மாய் வாழும்
குலவும் உறவில் விரிகின்றேன்
பாட்டில் கூத்தில் பக்குவத்தில்
பழகும் என்னைத் தெரியலையா
நாட்டில் வாழும் எனை விட்டு
நாடி யாரை நினைக்கின்றாய்

அடியேன் பொதுவன் அடிகள் பாடல்
இயற்றிய ஆண்டு 2004


தெய்வ அலை 113 God waves 113

கடவுள் சொல்கிறார்
என்னோடு பேசு

உன்னைத் தேடி வருகின்றேன்
ஒதுங்கி என்னைத் தேடுகிறாய்
மின்னல் அறிவில் இடிக்கின்றேன்
வெட்ட வெளியில் தேடுகிறாய்
பின்னல் வலையில் நான் வந்தால்
பேசா விட்டால் என்செய்வேன்
சின்னஞ் சிறிய உனதுயிர் நான்
தேடி எங்கே பார்க்கின்றாய்

அடியேன் பொதுவன் அடிகள் பாடல்
இயற்றிய ஆண்டு 2004


தெய்வ அலை 112 God waves 112

கடவுள் சொல்கிறார்
நான்தான் பித்தன்

பதுங்கிக் கொண்டா இருக்கின்றேன்
பார்க்கும் பொருளில் நான் இலையோ
ஒதுங்கிக் கொண்டா கிடக்கின்றேன்
உன்னை விட்டால் கதியில்லை
வதங்கும் உன்னுள் வதங்குகிறேன்
மலரும் உன்னால் வளர்கின்றேன்
பிதுங்கி எங்கே பார்க்கின்றாய்
பித்தா பித்தன் நான் தானடா

அடியேன் பொதுவன் அடிகள் பாடல்
இயற்றிய ஆண்டு 2004


தெய்வ அலை 111 God waves 111

கடவுள் மனிதனிடம் பேசுகிறார்
எப்படி வருவேன்

உழைக்கும் கைகள் உன்னிடத்தில்
ஊக்கம் வலிமை உன்னிடத்தில்
தழைக்கும் பயிர்கள் உன்னருகில்
தங்கும் வீடும் உன்னருகில்
இழைக்கும் உயிரும் உன்னுடலில்
இன்பம் துன்பம் உன்னுடலில்
அழைத்தால் எங்கே நான் வருவேன்
அகத்துக் குள்ளே கடவுள் நான்

அடியேன் பொதுவன் அடிகள் பாடல்
இயற்றிய ஆண்டு 2004


தெய்வ அலை 110 God waves 110

எது நீ

ஓடும் நீரா உவர் கடலா
ஒதுங்கி மேயும் காற்றா நீ
சூடா ஒளியா நிலத்தோடா
சுமக்கும் விண்ணா இல்வெளியா
ஆடும் பொருளா ஆட்டத்தில்
அசையா திருக்கும் அமைதியதா
நாடும் புகழா செல்வாக்கா
நானும் நீயும் ஒருநிலையா

அடியேன் பொதுவன் அடிகள் பாடல்
இயற்றிய ஆண்டு 2004


தெய்வ அலை 109 God waves 109

எதற்காக

சங்கை ஊதி அழைக்கின்றாய்
சக்கரத்தால் வளைக்கின்றாய்
மங்கை ஒருபால் ஆணானாய்
வாழும் உலகாம் மலரானாய்
கங்கை சடையில் எதற்காக
கையில் சுடுதீ அதற்காக
எங்கே நீதான் அங்கே நான்
என்னை விட்டால் நினைப்பது யார்

அடியேன் பொதுவன் அடிகள் பாடல்
இயற்றிய ஆண்டு 2004


தெய்வ அலை 108 God waves 108

ஒரு நினைவு பல நினைவு

நினைக்க நினைக்க வளர்கின்றாய்
நெஞ்சில் இனித்து மலர்கின்றாய்
நனைக்க நனைக்கக் காய்கின்றாய்
நஞ்சை உண்ணும் அமிழ் தானாய்
உனக்கே உனக்கே ஒரு நினைவு
உதவாக் கரைக்கேன் பல நினைவு
தனக்கே தனக்கே என்பதனால்
தாவிப் பற்றிக் கொண்டதுவோ

அடியேன் பொதுவன் அடிகள் பாடல்
இயற்றிய ஆண்டு 2004


தெய்வ அலை 107 God waves 107

நீ யார்

மனத்துக் குள்ளே கிடக்கின்றாய்
வாக்குக் குள்ளே வருகின்றாய்
நினைத்துச் செய்யும் செயலானாய்
நினையாப் பழக்கம் நீயானாய்
சினத்துக் குள்ளே வருவது யார்
திமிரில் அடங்கிப் போவது யார்
இனத்தில் உயர்வு தாழ்வெல்லாம்
எனக்கா உனக்கா எம்மிறையே

அடியேன் பொதுவன் அடிகள் பாடல்
இயற்றிய ஆண்டு 2004


தெய்வ அலை 106 God waves 106

வேதம் – விதி
ஆதி – பகவன்
நீதி – நியதி

வேதம் என்பார் விதி என்பார்
வினையின் பயனே வாழ்வென்பார்
ஆதி என்பார் அதில் வளர்ந்துள்
அசையும் பகவன் என்பார்கள்
நீதி என்பார் மாந்தருக்கே
நியதி என்பார் நில நடுக்கம்
போதம் என்பார் உன் நிலையை
பூட்டா திறப்பா என்னறிவு

அடியேன் பொதுவன் அடிகள் பாடல்
இயற்றிய ஆண்டு 2004


தெய்வ அலை 105 God waves 105

பாசக் கயிற்றில் தொங்குகிறேன்

உணவாய் வலிமை தருவாயா
உடையாய் அற்றம் மறைப்பாயா
திணவாய்த் திமிராய்த் திரிவாயா
செம்மை பொறுமை கொள்வாயா
குணவா யாலே தின்பாயா
கூடும் வாழ்வு தருவாயா
பணவாய் அதவும் பருக்கை நான்
பாசக் கயிற்றில் தொங்குகிறேன்

அடியேன் பொதுவன் அடிகள் பாடல்
இயற்றிய ஆண்டு 2004


தெய்வ அலை 104 God waves 104

கடவுளின் கண்

உலகம் உருளும் போதே நான்
உருளு கின்றேன் தெரியவில்லை
கலகம் செய்யும் கொடியவர்கள்
கடவுள் கண்ணில் படவில்லை
திலகம் நீறு திரு நாமம்
தீட்டிக் கொண்டால் வருவாயா
விலகி நின்று பார்ப்பாயா
வெந்தே என்னோ டிருப்பாயா
 
திலகம் \ நீறு \ நாமம்
அடியேன் பொதுவன் அடிகள் பாடல்
இயற்றிய ஆண்டு 2004


தெய்வ அலை 103 God waves 103

மனிதன் கடவுளைக் கேட்கிறான்
என்ன செய்கிறாய்

எந்தப் பக்கம் நீ யில்லை
எந்தப் பொருளில் நீ யில்லை
வந்தென் உள்ளே புகுந்தாயா
மனத்தில் நானே கண்டேனே
கந்து கந்தாய்ப் பிய்வாயா
கட்டாய் ஒன்றாய்ச் சேர்வாயா
எந்த வேலை செய்கின்றாய்
எதனை நீயும் செய்ய வில்லை

அடியேன் பொதுவன் அடிகள் பாடல்
இயற்றிய ஆண்டு 2004


தெய்வ அலை 102 God waves 102

மனிதன் கடவுளைக் கேட்கின்றான்
எதைத் தொழுவேன்

பொருளா அன்றி அதற்குள்ளே
பொங்கும் ஆற்றல் திணவாநீ
இருளா அதனுள் பாய்ஒளியா
இடையே பாயும் பன்னிறமா
உருளா நிலையா உன்தன்மை
உரசும் சுரணைத் தனிப் பொருளா
அருளா அன்பா யார் நினைவு
அறியேன் உன்னை எதைத் தொழுவேன்

அடியேன் பொதுவன் அடிகள் பாடல்
இயற்றிய ஆண்டு 2004


தெய்வ அலை 101 God waves 101

தனித்தது எப்படி

காற்றேற முடியாமல் வான் அமுக்க லாச்சா
கால் விட்டுக் கொடுத்தளால் வான் விரிந்து போச்சா
தீ ஆறிப் போனதனால் நிலமாக ஆச்சா
நிலம் தோன்றி வந்ததனால் தீ ஆறிப் போச்சா
நீர் தோன்றிப் பொழிந்ததனால் கடல் நிரம்பிப் போச்சா
கடல் தோன்றி நீராவி மழை பொழியல் ஆச்சா
ஒளி வந்தால் இருள் போகும் இருள் வந்தால் ஒளிபோம்
ஒளிக்குள்ளே இருளிருக்கும் தனித்தனியாய்த் தெரியும்

அடியேன் பொதுவன் அடிகள் பாடல்
இயற்றிய ஆண்டு 2004


Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி