Showing posts with label திருவாய்மொழி. Show all posts
Showing posts with label திருவாய்மொழி. Show all posts

Wednesday, 4 May 2016

திவ்வியப் பிரபந்தம் திருவாய்மொழி பத்து TiruVaiMoli Ten 2

வீடு பெறுக எனல்

திவ்வியப் பிரபந்தம் திருவாய்மொழி முதல் திருமொழி
பத்து 2
வஞ்சி விருத்தம்


வீடுமின் முற்றவும்*
வீடுசெய்து* உம்முயிர்
வீடுடை யானிடை*
வீடு செய்மினே 1
முழுமையாக விடுதலை செய்துகொள்ளுங்கள். விடுதலை செய்துகொண்ட பின்னர் வீடு-உடையவனிடம் உம் உயிர் வீடு பெற்று இருக்கும்படிச் செய்யுங்கள்.  

மின்னின் நிலையில *
மன்னுயிர் ஆக்கைக் *
என்னும் இடத்து *
இறை உன்னுமின் நீரே 2
உயிரும் உடம்பும் மின்னலைப் போல நிலை இல்லாதவை. அப்படி இருக்கும்போது சற்றே நினைத்துப் பாருங்கள்.

நீர் நுமது என்றிவை *
வேர்முதல் மாய்த்து * இறை
சேர்மின் உயிர்க்கும் * அதன்
நேர் நிறை இலவே 3
நீர், நுமது என்னும் வேரை அடியோடு கொன்றுவிடுங்கள். உயிராக இருக்கும் இறைவனை அடையுங்கள். அதற்கு நிகரான நிறைவு வேறு இல்லை.

இல்லதும் உள்ளதும் *
அல்லது அவனுக்கு *
எல்லையில் அத்தலம் *
புல்கு பற்றற்றே 4
அவன் இல்லதும் உள்ளதுமான எல்லை இல்லாத தலத்தில் இருக்கிறான். உலகின்பப் பற்றை விட்டுவிட்டு அவனைத் தழுவிக்கொள்ளுங்கள்.

அற்றது பற்றெனின் *
உற்றது வீடு உயிர் *
செற்றது மன்றுறில் *
அற்றிறை பற்றே 5
உலகின்பப் பற்று அற்றுவிட்டால் உயிருக்கு ‘வீடு’ தானே வந்துவிடும். உலக மன்றினை நீ சினந்து செத்தைத் தூசு ஆக்கிவிடுதலே இறைப்பற்று.

பற்றிலன் ஈசனும் *
முற்றவும் நின்றனன் *
பற்றிலையாய் * அவன்
முற்றில் அடங்கே 6
உன்னில் ஈசிக் கிடக்கும் ஈசன் பற்று இல்லாதவனாக இருக்கிறான். முழுமையானவனாக நிற்கின்றான். பற்று இல்லாதவனாக அவன் முழுமைக்குள்ளே அடங்கிக்கொள்.

அடங்கெழில் சம்பத்து *
அடங்கக் கண்டு * ஈசன்
அடங்கெழில் அஃதென்று *
அடங்குக உள்ளே 7
அழகும் செல்வமும் அடங்குகின்றன. ஈசன் அழகின் திரட்சியாக இருக்கிறான். அவன்தான் எழில் என்று உணர்ந்துகொண்டு உனக்குள் நீயே அடங்கிக்கொள்.

உள்ளம் உரைசெயல் *
உள்ள இம் மூன்றையும் *
உள்ளிக் கெடுத்து * இறை
உள்ளில் ஒடுங்கே 8
நினைவு, சொல், செயல் என்னும் மூன்றுமாக நீ இருக்கிறாய். இதனை எண்ணிப் பார்த்து, இறைவனுக்குள்ளே உன்னை ஒடுக்கிக்கொள்.

ஒடுங்க அவன்கண் *
ஒடுங்கலும் எல்லாம் *
விடும் பின்னும் ஆக்கை *
விடும்பொழுது எண்ணே 9
அவனிடம் ஒடுங்கிக்கொண்டால், அனைத்தும் உன்னிடம் ஒடுங்கிக்கொள்ளும். பின் உன் உடம்பு உன்னை விட்டுவிடும். அப்படி உன் உடம்பு உன்னை விடும் காலத்தை எண்ணிப்பார்.

எண்பெருக்கம் நலத்து *
ஒண்பொருள் ஈறில *
வண்புகழ் நாரணன் *
திண்கழல் சேரே 10
நன்றாக இருக்கவேண்டும் என்று எண்ணும் எண்ணத்தின் பெருக்கத்துக்கு எல்லையே இல்லை. கொடையால் புகழ் பெற்றவன் ‘நாரணன்’. அவன் திருவடிகளில் சேர்ந்துவிடு.

சேர்ந்த தடத் * தென் குரு
கூர்ச் சட கோபன் சொல்
சீர்த்தொடை ஆயிரத்து *
ஓர்த்த இப் பத்தே 11

இதில் உள்ள 10 பாடல்களும் அந்தாதியாக வரும்படித் தொடுக்கப்பட்டுள்ளன. நூலில் இடைச்செருகல் நேராமல் இருக்கவும், மனப்பாடம் செய்பவர் நினைவுக்குக் கொண்டுவர எளிதா அமையும் பொருட்டும் இந்த அந்தாதி முறைமை கையாளப்பட்டது.  

அடுத்த பத்தினை அந்தாதித்தொடை செய்யும் பொருட்டுப் பிற்கால அறிஞர் ஒருவர் பாடிச் சேர்த்த பாடல்

இந்தப் பத்து ’கரனே’ என்று முடிகிறது. அடுத்த பத்து ‘வீடு’ என்று தொடங்குகிறது. இரண்டேயும் அந்தாதியாக அமையும்-பொருட்டு இணைத்துவைக்கும் பாடல் இது.

நம்மாழ்வார் என்னும் குருகூர் வாழ் சடகோபன் பாடல்கள். – நாலாயிர திவ்வியப் பிரபந்தம் – திருவாய்மொழி
அடுத்த பத்தினை அந்தாதித்தொடை செய்யும் பொருட்டுப் பிற்கால அறிஞர் ஒருவர் பாடிச் சேர்த்த பாடல்

Tuesday, 3 May 2016

Worship the God, how

இறைவன் யார் who is God

திவ்வியப் பிரபந்தம் திருவாய்மொழி பத்து TiruVaiMoli Ten 1

நாலாயிர திவ்வியப் பிரபந்தம் 
திருவாய்மொழி 
முதல் திருமொழி
பத்து 1
கலிவிருத்தம்
அரங்கநாதன் (திருவரங்கம்)

உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே. 1 (2899)
மேலும் உயரமுடியாதபடி உயர்ந்த நலம் கொண்டவன் எவன், ஐயம் தோன்றாதபடி அறிவு-நலத்தை அளித்தவன் எவன், அயர்வு-உறக்கம் இல்லாமல் வாழும் அமரர்களின் தலைவன் எவன், - துயரம் போக்கும் அவனது சுடரும் திருவடிகளைத் தொழுதேன். மனத்தால் தொழுதேன்.
One, who has the top of welfare, wisdom of doubtless and rules as the king of Heavenly Beings, is He whom I worship in my mind.

மனனக மலமற மலர்மிசை யெழுதரும்
மனனுணர் வளவிலன், பொறியுணர் வவையிலன்
இனனுணர், முழுநலம், எதிர்நிகழ் கழிவினும்
இனனிலன், எனனுயிர், மிகுநரை யிலனே. 2  (2900)
அறிவால் உருவான மனம், பிறவி-ஊழால் உருவான அகம், இரண்டிலும் கழியவேண்டிய மலத்தை நீக்கி, மனன் அகம் என்னும் மலர்களில் அவன் எழுந்தருள்கிறான். ஆனால், என் மனம், அதன் உணர்வு ஆகிய அளவிலோ, மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் பொறி அளவிலோ, இன்ன பிற உணர்விலோ, முழுமையான நலத்திலோ அவன் தெரிவதில்லை. (துன்பப்படும்போதுதான் அவன் தெரிகிறான்) இறந்த-காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று அவனுக்கு எதுவும் இல்லை. என் உயிரிலும் இருக்கிறான். மிக்க பிறரிடமும் இருக்கிறான். அனைவரிடமும் இல்லாமலும் இருக்கிளான்.
He is blooming in the flower of knowledge and thought. But he will not appear either in mind or sensory organs or happiness. (He will appear in difficulties only). He has neither future nor present nor past. But he is in all moving times.  

இலனது வுடையனி தெனநினை வரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்
புலனொடு புலனலன் , ஒழிவிலன், பரந்த அந்
நலனுடை யொருவனை நணுகினம் நாமே. 3  (2901)
இதுவாக அவன் இல்லை, இதுவாக அவன் இருக்கிறான், - என்று நினைக்க முடியவில்லை. நிலத்திலும் விசும்பிலும், உருவமாகவும், அருவமாகவும் இருக்கிறான். கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் புலன்களிலும் இருக்கிறான். அந்தப் புலன்களுக்குத் தென்படாதவனாகவ்வும் இருக்கிறான். ஆனால் அவற்றில் நீங்காமல் இருக்கிறான். எங்கும் பரந்து கிடக்கும் பரந்தாமன் அவன். பரந்துகிடக்கும் நலம் பெற்றிருக்கும் அந்த ஒருவனை நண்பனாக்கிக்கொள்ள நாம் செல்லுகின்றோம்.
We can’t think “it is he and it is not he”. He is the matter of all from earth to heaven. Matter and energy, he is. The senses of organs, he is. Even though, he is apart from sensations. I approach him to be with him. 

நாமவ னிவனுவன், அவளிவளுவளெவள்
தாமவரிவருவர், அதுவிது வுதுவெது
வீமவை யிவையுவை, யவைநலந் தீங்கவை
ஆமவை யாயவை, யாய்நின்ற அவரே. 4 (2902)
நாம் அவனாக அவன் நிற்கின்றான். அவன், இவன், உவன் – அவள், இவள், உவள், எவள் -  தாம், இவர், அவர், உவர் – அது, இது, உது, எது – வீயும், அவை, இவை, உவை, நலமானவை, தீங்கானவை ஆகும் அவை எவையாகவும் நின்றவர் அவர்.
He is within us. That man, this man and the man appearing in a distance – that maid, this maid and the maid appearing in a distance – we, this men and that men – it, this and that – those things, these things and things at a sight decaying – good and evils – all of these, he is. 

அவரவர் தமதம தறிவறி வகைவகை
அவரவ ரிறையவ ரெனவடி யடைவர்கள்
அவரவ ரிறையவர் குறைவில ரிறையவர்
அவரவ விதிவழி யடையநின் றனரே. 5 (2903)
அவரவர் தமது தமது அறிவு அறிந்த, அறிகின்ற, அறியும் வகைப்பாட்டுக்கு ஏற்ப, அவரவர் இறையவர் எனக் கண்டு இறையவர் எனக் கண்டு இறைவன் திருவடியை அடைகின்றனர். அவரவர் இறையவர் யாராயினும் குறைவிலர். அந்த இறையவர் அவரவர் விதிப்படி அவர்களுக்கு அமைந்தவர்கள்.
Everybody attains ‘He’ as their knowledge reads. ‘He’ whom they attain is equal to other’s attained. Their destiny makes the to their corner.

நின்றனரிருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்*
நின்றிலரிருந்திலர் கிடந்திலர்திரிந்திலர்*
என்றுமோரியல்வினர் எனநினைவரியவர்*
என்றுமோரியல்வொடு நின்றவெந்திடரே.  6  (2904)
நிற்கின்றார், அமர்ந்திருக்கின்றார்,  படுத்திருக்கின்றார், திரிந்துகொண்டிருக்கிறார், - நிற்கவில்லை, இருக்கவில்லை, கிடக்கவில்லை, திரியவில்லை – என்று ஓர் இயல்புள்ளவராக அவரை நினைக்கக்கூட முடியவில்லை. ஆனால் என்றும் ஓர் இயல்போடு நிற்கின்றார். அது விரும்பத் தக்க திடம் (வலிமைத்திறம்).
We cannot think whether he is standing, sitting, lying or moving, though he is in these all. That is his nature of almighty. 

திடவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை
படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும்
உடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியு ளிவையண்ட சுரனே.        7  (2905)
திடப் பொருளான விசும்பு, எரி(தீ), வளி(காற்று), நீர், நிலம் இவற்றின் மேலும், ஊடாகவும் படர்-பொருளாகவும், அவை முழுவதும் ஒன்றாகப் பரந்த நிலையிலும், அந்தப் பொருள்களாகவும், மற்ற எல்லாப் பொருள்களுமாகவும், உடலில் இயங்கும் உயிர் போல மறைந்து இயங்குகிறான். ஒளியும் இசையுமாக உண்டாகியிருக்கும் பண் அவன்.
He is in shy, heat, wind, water and soil in movements as the life moves in body hiding its sight and energy. He is rhythm.

சுரரறி வருநிலை விண்முதல் முழுவதும்
வரன்முத லாயவை முழுதுண்ட பரபரன்
புரமொரு மூன்றெரித் தமரர்க்கு மறிவியந்து
அரனயன் எனவுல கழித்தமைத் துளனே.    8  (2906)
சுரர் என்னும் தேவர்களாலும் அறிய முடியாதவன். விண் முதல் மண் வழியே அனைத்துமாகி முழுவதுமாய் விளங்குபவன். வரனும் அவன்தான். வரம் தருபவனும் அவன்தான். அனைத்தையும் உண்டு பரந்துள்ள பரன். அமரர்க்கு அறிவு வியப்பாக விளங்குபவன். முப்புரம் எரித்து, அறிவு இயந்து அரன்(சிவன்) என உலகை அழித்தும், அயன்(பிரமன்) என உலகை அமைத்தும் வீற்றிருப்பவன்.
Even the Heavenly-beings couldn’t read him. Heaven to earth, all, he is. He is mercy and merciful. (There are three places, upper, middle and lower as the time passes through past, present and past. They are three cities God Siva destroyed. Brahman is creating.). He is the God of decay and emerges.  

உளனெனி லுளனவ னுருவமிவ் வுருவுகள்
உளனல னெனிலவன் அருவமிவ் வருவுகள்
உளனென விலனென விவைகுண முடைமையில்
உளனிரு தகைமையொ டொழிவிலன் பரந்தே. 9 (2907)
அவன் உளன் எனில் உளன். இங்குத் தெரியும் உருவங்கள் எல்லாம் அவன் உருவுகள். அவன் உளன்-அலன் எனில் அருவம் அவனது இந்த உருவுகள். உளன் என, இலன் என, - இவற்றைக் குணமுடைமையாகக் கொண்ட இல்லத்தில் உள்ளவன். இப்படி இரண்டு தகைமைப் பண்புகளைப் பெற்றவன். இரண்டு தகைமைப் பண்புகளினின்றும் ஒழியாதவனாகப் பரந்து கிடப்பவன்.  
If we say, he is, he is. All that appears in our sight, he is. If we say, no, he is, that is his status of nil. These are his natures. That is his greatness, we are enjoying.    

பரந்ததண் பரவையுள்நீர்தொறும் பரந்துளன்
பரந்த அண்டமிதென நிலவிசும் பொழிவற
கரந்த சிலிடந்தொறும் இடந்திகழ் பொருடொறும்
கரந்தெங்கும் பரந்துள னிவையுண்ட கரனே. 10  (2908)
பரந்து கிடக்கும் ஈரமுள்ள கடலில் உள்ள நீரிலெல்லாம் பரந்து கிடப்பவன். பரந்த அண்டம் இது என நிலம் விசும்பு அனைத்திலும் நீங்காமல், மறைந்திருக்கும் சில இடங்களிலும் நீங்காமல், இடத்தை அடைக்கும் பொருள்களிலெல்லாம் மறைந்துகொண்டும், விரிந்துகொண்டும், இவற்றை உண்ட கருமையானவனாக (கரன்) விளங்குபவன்.  
He is in the sea-water with its chillness. He swallows spreading in earth and heaven. He is dark.

கரவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை
வரனவில் திறல்வலி யளிபொறை யாய்நின்ற
பரனடி மேல்குரு கூர்ச்சட கோபன்சொல்
நிரனிறை யாயிரத் திவைபத்தும் வீடே. 11  (2909)
பாடல்களின் முதற்குறிப்பு

இதில் உள்ள 10 பாடல்களும் அந்தாதியாக வரும்படித் தொடுக்கப்பட்டுள்ளன. நூலில் இடைச்செருகல் நேராமல் இருக்கவும், மனப்பாடம் செய்பவர் நினைவுக்குக் கொண்டுவர எளிதா அமையும் பொருட்டும் இந்த அந்தாதி முறைமை கையாளப்பட்டது.

அடுத்த பத்தினை அந்தாதித்தொடை செய்யும் பொருட்டுப் பிற்கால அறிஞர் ஒருவர் பாடிச் சேர்த்த பாடல்

இந்தப் பத்து ’கரனே’ என்று முடிகிறது. அடுத்த பத்து ‘வீடு’ என்று தொடங்குகிறது. இரண்டேயும் அந்தாதியாக அமையும்-பொருட்டு இணைத்துவைக்கும் பாடல் இது. 

நம்மாழ்வார் என்னும் குருகூர் வாழ் சடகோபன் பாடல்கள். – நாலாயிர திவ்வியப் பிரபந்தம் – திருவாய்மொழி

Monday, 16 February 2015

அவன் (திருவாய்மொழி)

அவன் (திருவாய்மொழி)
முதல் பத்து
அவன் யார்?
நம்மாழ்வார் (9 ஆம் நூற்றாண்டு) பாடுகிறார்.

இந்த நூலின் பாடல்கள் அந்தாதி முறையில் தொடுக்கப்பட்டவை. பாடல் முடியும் சொல்லோ எழுத்தோ அடுத்த பாடலின் தொடக்கமாக அமையும்படித் தொடுக்கப்பட்டவை. இத்தமிழ் நலம் மனப்பாடம் செய்யப் பயன்படும் உத்தி. இது இடைச்செருகல் நேராமல் பாதுகாக்கவும் உதவும். 

இறைவனை ஆங்கிலத்தில் ‘He’ என்று குறிப்பிடுகின்றனர். 9-ஆம் நூற்றாண்டிலேயே நம்மாழ்வார் இறைவனை ‘அவன்’ என்னும் பொதுச்சொல்லால் குறிப்பிட்டு மகிழ்ந்துள்ளார்.

திருவாய்மொழி ஊழ்வினை, வாழ்வினை இரண்டையும் கூறும் நூல் – பட்டர்.
நூலாசிரியர் பெயர் சடகோபன் – கொட்டை நம்பிகள்.
வழுதி நாட்டுத் தென்குருகூர் இவர் ஊர் – ஈச்வர முனிகள்.
திருக்குறள் மணக்கும் இடங்கள்
உயர்வு (1) – ஆதிபகவன் (2)
மதிநலம் (1) – வாலறிவன் (2)
மனமிசை எழுதரும் (2) – மலர்மிசை ஏகினான் (3)
பொறியுணர் வவையிலன் (2) – பொறிவாயில் ஐந்தவித்தான் (6)
திடர் (6) – பொருள்சேர் புகழ் (5) 
நான்காம் பாடலில் 
இந்தத் தொல்காப்பிய நூற்பாக்கள் 
மணக்கின்றன.
அவன், இவன், உவன், என வரூஉம் பெயரும்;
அவள், இவள், உவள், என வரூஉம் பெயரும்;
அவர், இவர், உவர், என வரூஉம் பெயரும்;
யான், யாம், நாம், என வரூஉம் பெயரும்;
யாவன், யாவள், யாவர், என்னும்
ஆவயின் மூன்றொடு அப் பதினைந்தும்
பால் அறிவந்த உயர்திணைப் பெயரே . (தொல்காப்பியம், 3-162 பெயரியல்) (4)
அது, இது, உது, என வரூஉம் பெயரும்;
அவை முதல் ஆகிய ஆய்தப் பெயரும்;
அவை, இவை, உவை, என வரூஉம் பெயரும்;
அவை முதல் ஆகிய வகரப் பெயரும்;
`யாது, யா, யாவை,' என்னும் பெயரும்;
ஆவயின் மூன்றொடு அப் பதினைந்தும்
பால் அறி வந்த அஃறிணைப் பெயரே . (தொல்காப்பியம் 3-167 பெயரியல்) (4)

பாடல் கருத்து

அவன் உயர்நலம் உடையவன். அது மேலும் உயரமுடியாத அளவுக்கு உயர்ந்த நலம். அந்த நலப்பாட்டுடன் தன் மயக்கமில்லாத மதிநலத்தை அருளியிருக்கிறான். அதனால் அமரர்கள் (தேவர்கள்) அயர்வு அற்றுத் திரிகின்றனர். அவர்களுக்கு இவன் அதிபதி (தலைவன்). மனமே! துயரை அறுத்துச் சுடரச்செய்யும் அவனது திருவடிகளைத் தொழுது எழுவாயாக. (1)
உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதிநலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே             1

அவன் மனமலரில் எழுதருகிறான். அதனால் மனம் நகுகின்றது. (மகழ்ந்து சிரிக்கின்றது). மனத்தில் உள்ள கழிவுகள் அற்றுப்போகின்றன. அவன் மனத்தில் மலர்ந்தாலும் அந்த மலர்வை மனத்தால் உணர்ந்துகொள்ளும் அளவினனாக அவன் இல்லை. அன்றியும் அவன் பார்த்தோ, கேட்டோ, முகர்ந்தோ, சொல்லக் கேட்டோ, சுவைத்தோ, தொட்டுப்பார்த்தோ உணர்ந்துகொள்ளும் பொறியுணர்வாகவும் இல்லை. என்றாலும் இனிக்கும் உணர்வாகவும், முழுமையான நலமாகவும் இருக்கிறான். இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்னும் இன்னவற்றில் இல்லாதவன் என்னும்படி என் நல்லுயிரில் மிகுந்திருக்கிறான். இவனுக்கு மேலானவர் (மிகுநர்) இல்லை. (2)
மனனக மலமற மலர்மிசை யெழுதரும்
மனனுணர் வளவிலன் பொறியுணர் வவையிலன்
இன்னுணர் முழுநலம் எதிர்நிகழ் கழிவினும்
இன்னிலன் எனன்உயிர் மிகுநரை யிலனே         2

அது இல்லாதவன், இது உடையவன் என நினைத்துப் பார்க்கமுடியாதவன். நிலத்திலும், விசும்பிலும் உருவம் கொண்டவனாகவும், உருவம் இல்லாத அருவம் கொண்டவனாகவும் இருக்கிறான். அவன் புலனொடு, புலன்நலம் ஒழிவில்லாதவனாகப் பரந்துகிடக்கிறான். இப்படிப்பட்ட நலம் உடையவனை நட்பாக்கிக்கொள்ள நாம் நெருங்குகின்றோம். (3)
இலனது உடையனி தெனநினை வரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்
புலனொடு புலனலன் ஒழிவிலன் பரந்த அந்
நலனுடை யொருவனை நணுகினம் நாமே               3

அவர் எப்படி இருக்கிறார்? – நாமாக, எங்கோ இருக்கும் அவனாக, இங்கே இருக்கும் இவனாக, தூரத்தில் தெரியும் உவனாக, அதேபோல் அவளாக,  இவளாக, உவளாக, தனித்தியங்கும் தாமாக, அவராக, இவராக, உவராக, அதுவாக, இதுவாக, உதுவாக, எது என வினவும்படியாக, வீயும் பொருள்-நிகழ்வுகளாக, அவையாக, இவையாக, உவையாக, அவ்வவற்றின் நலமாக, மீங்காக, அவை அனைத்தும் எதிர்காலத்தில் ஆமவையாக, இறந்தகாலத்தில் ஆயவையாக, நிகழ்காலத்தில் ஆய்நின்றவையாக அவர் இருக்கிறார். (4)
நாமவன் இவன்உவன் அவள்இவள் உவளெவள்
தாமவர் இவர்உவர் அதுவிது வுதுவெது
வீமவை யிவையுவை அவைநலம் தீங்கவை
ஆமவை ஆயவை ஆய்நின்ற அவரே                    4

உலகில் வாழும் மக்கள் அனைவரும் தமது தமது அறிவு அறிந்த, அறிகின்ற, அறியும் வகைவகையான கோணங்களில் அவரவர் இறையவர் (கடவுள்) என இறைவனடியை அடைவார்கள். அவரவர் இறையவர் (தெய்வங்கள்) குறைவு இல்லாதவர்கள். அவரவர் விதி வழியே அவரவர் இறையவர் (தெய்வம்) அமையப்பெற்று வழிபடுகின்றனர். (5)
அவரவர் தமதம தறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி யடையநின் றனரே             5

அவர் (இறையவர்) திட்பமானவர். அவர் நிற்கிறார், அமர்ந்திருக்கிறார், பள்ளிகொண்டிருக்கிறார், திரிகிறார், - நிற்கவில்லை, அமர்ந்திருக்கவில்லை, பள்ளிகொண்டிருக்கவில்லை, திரியவில்லை – என்னும் ஓர் இயல்பினை உடையவர் – என்றெல்லாம் நினைக்கமுடியாத ஓர் இயல்பும் அவருக்கு உண்டு. (6)
நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றுமொர் இயல்வினர் எனநினை வரியவர்
என்றுமொர் இயல்வொடு நின்றஎம் திடரே               6

திடப்பொருள் என்பவை விசும்பு, எரி, வளி, நீர், நிலம் ஆகியவையும் அவற்றில் படரும் பொருளும் ஆகும். அவற்றின் உடலில் உயிராக அவன் மறைந்துகொண்டிருக்கிறான். உடலில் பரவியும் இருக்கிறான். இவற்றைக் கூறும் வேத இசைச் சுருதிக்குள்ளே அதனையே விழுங்கிய சுரமாக இருக்கிறான். (7)   
திடவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை
படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும்
உடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே            7

சுரர் என்னும் தேவர் அறிவுக்கும் அருநிலையாக உள்ளான். விண் முதலாகத் தோன்றி வளர்ந்துவரும் அனைத்தையும் உண்டு மகிழும் பரனுக்கும் பரன் அவன். முப்புரங்களை எரித்து அமரர் அறிவு இயந்து போற்றும்வண்ணம் அரனாகவும், அயனாகவும் உலகை அழித்து, அமைத்துக்கொண்டு இருக்கிறான். (8)
சுரர்அறி வருநிலை விண்முதல் முழுவதும்
வரன்முத லாயவை முழுதுண்ட பரபரன்
புரமொரு மூன்றெரித் தமரர்க்கு மறிவியந்து
அரனயன் எனஉல கழித்தமைத் துளனே           8

அவன் உள்ளான் எனில் உள்ளான். அவன் இவ்வுருவம் எனின் அந்த உருவங்களில் இருக்கிறான். அவன் உளன் அல்லன் எனில் அவன் அருவம் இந்த அருவங்கள். இப்படி உளன் எனவும் இலன் எனவும் கூறும் பண்புகளை உடையவன் ஆதலால், இருக்கின்ற அவன் இரண்டு தகைமைத் தன்மைகளோடும் ஒழிவில்லாதவனாகப் பரந்து இருக்கிறான். (9)
உளனெனில் உளன்அவன் உருவம்இவ் வுருவுகள்
உளனலன் எனில்அவன் அருவமிவ் வருவுகள்
உளனென இலனென இவைகுண முடைமையில்
உளன்இரு தகைமையொ டொழிவிலன் பரந்தே    9

பரந்து அகன்ற, அகல்கின்ற, அகலும் கடலுக்குள் நீர்த்துளி அனைத்திலும் பரந்துகிடக்கிறான். பரந்த அண்டம் இது என நிலம் விசும்பு எங்கும் எதையும் விடாமல் மறைந்துகொண்டு ஒவ்வொரு இடத்திலும், அவ்விடத்தில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் மறைந்துகொண்டு அவற்றை உண்ட கரனாக (மறையாளனாக) இருக்கிறான். (10)
பரந்ததண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன்
பரந்தஅண் டமிதென நிலவிசும் பொழிவற
கரந்தசி லிடந்தொறும் இடந்திகழ் பொருள்தொறும்
கரந்தெங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே       10

இந்தப் பத்துப் பாடல்களும் அவன் இருக்கும், காட்டும் வீடு பற்றியவை. நம் கையில் இருக்கும் விசும்பு, எரி, வளி, நீர், நிலம் இவற்றில் உள்ள வரனாக (வரும் மாப்பிள்ளையாக)ச் சொல்லும்படி உளத்திறல், உடல்வலிமை, அளிக்கும் கொடைப்பண்பு, தீங்கு செய்தால் பொறுத்துக்கொள்ளும் பண்பு, ஆகியனவாக உள்ள இந்தப் பரன் திருவடிமேல் ‘குருகூர்ச் சடகோபன்’ சொன்ன நிரல்நிறை ஆயிரம் பாடல்களில் இவை பத்தும் வீடு பற்றியவை ஆகும். (11)   
கரவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை
வரன்நவில் திறல்வலி யளிபொறை யாய்நின்ற
பரன்அடி மேல்குரு கூர்ச்சட கோபன்சொல்

நிரனிறை யாயிரத் திவைபத்தும் வீடே.            11

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி