Showing posts with label சீவகசிந்தாமணி. Show all posts
Showing posts with label சீவகசிந்தாமணி. Show all posts

Thursday, 11 June 2020

பதுமுகன், கோவிந்தை, முயக்கம் Seevaga-Sindamani 492

மேல் குலத்தவர் அல்லாதாரை மாலையிட்டுப் புணரக் கூடாது என்று சீவகன் நினைத்தான் 483

"உன் மகள் எனக்கு மாலை சூட்டும் முறைமையள் அல்லள்" என்று நந்தகோனிடம் பக்குவமாக எடுத்துரைத்தான் 484 
தன் தோழன் பதுமுகனுக்கு மணம் செய்து தரச் சொன்னான் 

அதனை ஏற்றுக்கொண்ட நந்தகோன் பந்தர் போட்டுத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தான் 485

கோவிந்தைக்குச் சிலம்பு-கழி நோன்பு நடைபெற்றது 486
அவளை நீராட்டினர் 487
தோடு, குழை அணிவித்து மங்கலக் காப்பு சூட்டினர் 488

நந்தகோன் தன் கையில் தண்ணீர் ஊற்றித் தாரைவார்த்து, பதுமனுக்கு மகளைக் கொடுத்தான் 489
1000 பசுக்கள், அவளைப் போன்ற பொற்பாவை 7, ஆகியவற்றையும் பதுமனுக்குக் கொடுத்தான் 490

பதுமன் கோவிந்தையின் எயிறு ஊறலை மாந்தி அவள் இன்பம் எல்லாவற்றையும் துய்த்தான் 491
கடல் கடைந்து தேவர் பெற்ற அமிழ்தோ, பால் குடவர் மகளோ என்றெல்லாம் பாராட்டிக்கொண்டே அவள் இன்பத்தைத் துய்த்தான் 492

பாடல் 

கன்னியர் குலத்தின் மிக்கார் கதிர் முலைக் கன்னி மார்பம்
முன்னினர் முயங்கின் அல்லான் முறி மிடை படலை மாலைப்
பொன் இழை மகளிர் ஒவ்வாதவரை முன் புணர்தல் செல்லார்
இன்னதான் முறைமை மாந்தர்க்கு என மனத்து எண்ணினானே. 483

கோட்டு இளங் களிறு போல்வான் நந்தகோன் முகத்தை நோக்கி
மோட்டுஇள முலையினாள் நின் மட மகள் எனக்கு மாமான்
சூட்டொடு ஒடு கண்ணி அன்றே என் செய்வான் இவைகள் சொல்லி
நீட்டித்தல் குணமோ என்று நெஞ்சு அகம் குளிர்ப்பச் சொன்னான். 484

தேன் சொரி முல்லைக் கண்ணிச் செந் துவர் ஆடை ஆயர்
கோன் பெரிது உவந்து போகிக் குடை தயிர் குழுமப் புக்கு
மான் கறி கற்ற கூழை மௌவல் சூழ் மயிலைப் பந்தர்க்
கான் சொரி முல்லைத் தாரான் கடிவினை முடிக என்றான். 485

கனிவளர் கிளவி காமர் சிறு நுதல் புருவம் காமன்
குனி வளர் சிலையைக் கொன்ற குவளைக் கண் கயலைக் கொன்ற
இனி உளர் அல்லர் ஆயர் எனச் சிலம்பு அரற்றத் தந்து
பனி வளர் கோதை மாதர் பாவையைப் பரவி வைத்தார். 486

நாழியுள் இழுது நாகு ஆன் கன்று தின்று ஒழிந்த புல் தோய்த்து
ஊழி தொறு ஆவும் தோழும் போன்று உடன் மூக்க என்று
தாழ் இரும் குழலினாளை நெய்தலைப் பெய்து வாழ்த்தி
மூழை நீர் சொரிந்து மொய் கொள் ஆயத்தியர் ஆட்டினாரே. 487

நெய் விலைப் பசும் பொன் தோடும் நிழல் மணிக் குழையும் நீவி
மை விரி குழலினாளை மங்கலக் கடிப்புச் சேர்த்திப்
பெய்தனர் பிணையல் மாலை ஓரிலைச் சாந்து பூசிச்
செய்தனர் சிறு புன் கோலம் தொறுத்தியர் திகைத்து நின்றார். 488

ஏறம் கோள் முழங்க ஆயர் எடுத்துக் கொண்டு ஏகி மூதூர்ச்
சாறு எங்கும் அயரப் புக்கு நந்தகோன் தன்கை ஏந்தி
வீறு உயர் கலசம் நல்நீர் சொரிந்தனன் வீரன் ஏற்றான்
பாறு கொள் பருதி வைவேல் பதுமுக குமாரற்கு என்றே. 489

நலத் தகை அவட்கு நாகு ஆன் ஆயிரம் திரட்டி நன்பொன்
இலக்கணப் பாவை ஏழும் கொடுத்தனன் போல இப்பால்
அலைத்தது காமன் சேனை அரு நுனை அம்பு மூழ்க
முலைக் குவட்டு இடைப் பட்டு ஆற்றான் முத்து உக முயங்கினானே. 490

கள் வாய் விரிந்த கழுநீர் பிணைந்து அன்ன வாகி
வெள் வேல் மிளிர்ந்த நெடுங் கண் விரை நாறு கோதை
முள்வாய் எயிற்று ஊறு அமுதம் முனியாது மாந்திக்
கொள்ளாத இன்பக் கடல் பட்டனன் கோதை வேலான். 491

தீம் பால் கடலைத் திரை பொங்கக் கடைந்து தேவர்
தாம் பால் படுத்த அமிர்தோ? தட மாலை வேய்த் தோள்
ஆம் பால் குடவர் மகளோ? என்று அரிவை நைய
ஓம்பா ஒழுக்கத்து உணர்வு ஒன்று இலன் ஆயினானே. 492

கோவிந்தையார் இலம்பகம் முற்றும்

திருத்தக்க தேவர் இயற்றிய சீவக சிந்தாமணி 
கோவிந்தையார் இலம்பகம்
கோவிந்தை Seevaga-Sindamani 482

தொறு உடைமையாளன் நந்தகோன் 
சீவகனைக் கண்டு கூறலானான் 474

விசயை நாற்று கட்டியங்காரனுக்கு விலங்கு பூட்டிற்று 475 
கட்டியங்காரன் நெறி தவறியபோதே ஆலம் விதை முளைத்து வந்து அயிக்கும் என்று எண்ணினேன் 476 

என் பெயர் கோவிந்தன் 
என் மகள் கோவிந்தை 
அவள் கோதாவரி ஆறு போன்று வளம் மிக்கவள் 477
கொம்பு போன்ற நுசும்பினாள் 478

அவளை, அவளைப்போல் செய்த ஏழு பொன்சிலைகளுடன் தருகிறேன் 
திருமணம் செய்துகொள்ள வேண்டும் 479

வெண்ணெய் உருகும் நெய் போன்ற மேனியள் அவள் 480
அவள் உனக்கு அடிமை 
திருமண விருந்தாகப் பசுவின் நெய், பால், தயிர் பாதாளம் வரை நிறைத்துத் தருவேன் 481

குலம் பார்க்காதே 
முருகன் வள்ளியை மணந்தான் அல்லவா - என்றான் 482

பாடல்

தகை மதி எழிலை வாட்டும் தாமரைப் பூவின் அங்கண்
புகை நுதி அழல வாள் கண் பொன் அனாள் புல்ல நீண்ட
வகை மலி வரை செய் மார்பின் வள்ளலைக் கண்டு வண் தார்த்
தொகை மலி தொறுவை ஆளும் தோன்றல் மற்று இன்ன கூறும். 474

கேட்டு இது மறக்க நம்பி கேள் முதல் கேடு சூழ்ந்த
நாட்டு இறை விசையை என்னும் நாறு பூம் கொம்பு அனாளை
வேட்டு இறைப் பாரம் எல்லாம் கட்டியங் காரன் தன்னைப்
பூட்டி மற்று அவன் தனாலே பொறி முதல் அடர்க்கப் பட்டான். 475

கோல் இழுக்கு உற்ற ஞான்றே கொடு முடி வரை ஒன்று ஏறிக்
கால் இழுக்கு உற்று வீழ்ந்தே கருந் தலை களையல் உற்றேன்
மால் வழி உளது அன்று ஆயின் வாழ்வினை முடிப்பல் என்றே
ஆலம் வித்து அனையது எண்ணி அழிவினுள் அகன்று நின்றேன். 476

குலத் தொடு முடிந்த கோன்தன் குடி வழி வாரா நின்றேன்
நலத் தகு தொறுவின் உள்ளேன் நாமம் கோவிந்தன் என்பேன்
இலக்கணம் அமைந்த கோதாவரி என இசையில் போந்த
நலத்தகு மனைவி பெற்ற நங்கை கோவிந்தை என்பாள். 477

வம்பு உடை முலையினாள் என் மட மகள் மதர்வை நோக்கம்
அம்பு அடி இருத்தி நெஞ்சத்து அழுத்தி இட்டு அனையது ஒப்பக்
கொம்படு நுசுப்பினாளைக் குறை இரந்து உழந்து நின்ற
நம்படை தம்முள் எல்லாம் நகை முகம் அழிந்து நின்றேன். 478

பாடகம் சுமந்த செம் பொன் சீறடிப் பரவை அல்குல்
சூடகம் அணிந்த முன் கைச் சுடர் மணிப் பூணினாளை
ஆடகச் செம் பொன் பாவை ஏழுடன் தருவல் ஐய
வாடலில் வதுவை கூடி மணமகன் ஆக என்றான். 479

வெண்ணெய் போன்று ஊறு இனியள் மேம் பால் போல் தீம் சொல்லள்
உண்ண உருக்கிய வான் நெய் போல் மேனியள்
வண்ண வனமுலை மாதர் மட நோக்கி
கண்ணும் கருவிளம் போது இரண்டே கண்டாய். 480

சேதா நறு நெய்யும் தீம்பால் சுமைத் தயிரும்
பாதாலம் எல்லா நிறைத்திடுவல் பைந்தாரோய்
போது ஆர் புனை கோதை சூட்டு உன் அடித்தியை
யாது ஆவது எல்லாம் அறிந்து அருளி என்றான். 481

குலம் நினையல் நம்பி கொழும் கயல் கண் வள்ளி
நலன் நுகர்ந்தான் அன்றே நறும் தார் முருகன்
நில மகட்குக் கேள்வனும் நீள் நிரை நப்பின்னை
இலவு அலர் வாய் இன் அமிர்தம் எய்தினான் அன்றே. 482

திருத்தக்க தேவர் இயற்றிய சீவக சிந்தாமணி 
கோவிந்தையார் இலம்பகம்

சீவகனுக்கு வரவேற்பு Seevaga-Sindamani 473

நந்தகோன் மக்கள் சீவகனை வரவேற்க  நகரை அழகுபடுத்தினர் 456

ஆனிரை மீட்டுவரும் சீவகனைக் காண மகளிர் தெருவுக்கு ஓடிவந்தனர் 457
காமனின் மகளிர் படை சீவகனைத் தாக்க எழுந்தது 458
கையில் மாலையை வைத்துக்கொண்டு தேவமகளிர் போல் நின்றனர் 459
நாகருலக மகளிர் போல் நின்றனர் 460

சீவகன் வரும் வழியில் மகளிர் கண்கள்  நெருஞ்சி போல் பூத்திருந்தன 461
மாடங்களில் எல்லாம் அல்குலார் 462
சீவகன்மீது சுண்ணப் பொடிகளைத் தூவினர் 463

கொடையிலும், கொடிய போரிலும் கொல்லலும் நம்பி இவன் என்று பேசிக்கொண்டனர் 464
சீவகனைப் பெற்றவள் தவப்பேறு கொண்டவள் - என்றறனர் 465
யாரும் கேட்காமல் எதை எதையோ பேசினர் 466

சீவகனை தவக் கோலத்தில் தந்தவர் அளியர் எனப் பேசிக்கொண்டனர் 467

சீவகனைக் கண்டபோதே, காமத்தில் கை வளையல்கள் கழன்று ஏங்கினர் 468
சீவகன் தேர் தம்மைக் கடந்து சென்றபோது முலைகளில் பீர்க்கம்பூ போன்ற பசலை ஏறியது 469
மகளிரின் பசலை பாய்ந்த கண்கள் பார்த்துக்கொண்டிருக்கையில் சீவகன் கோட்டை வாயிலை அடைந்தான் 470

பூ, சந்தனம், விளக்கு முதலான மங்ஙகலப் பொருள்களுடன் மின்னலார் தேர் வாயிலில் வரவேற்றது 471
அட்ட மங்கலப் பொருள்களுடன் 1008 மகளிர் சீவகனை உள்ளே அழைத்துச் சென்றனர் 472
தாய் தந்தையர் வரவேற்றனர் 473

பாடல் 

இரவி தோய் கொடி கொள் மாடத்து இடுபுகை தவழச் சுண்ணம்
விரவிப் பூந் தாமம் நாற்றி விரை தெளித்து ஆரம் தாங்கி
அரவு உயர் கொடியினான் தன் அகன் படை அனுங்க வென்ற
புரவித் தேர்க் காளை அன்ன காளையைப் பொலிக என்றார். 456

இன் அமுது அனைய செவ்வாய் இளங் கிளி மழலை அம் சொல்
பொன் அவிர் சுணங்கு பூத்த பொங்கு இள முலையினார் தம்
மின் இவர் நுசுப்பு நோவ விடலையைக் காண ஓடி
அன்னமும் மயிலும் போல அணி நகர் வீதி கொண்டார். 457

சில்லரிச் சிலம்பின் வள் வார்ச் சிறுபறை கறங்கச் செம்பொன்
அல்குல் தேர் அணிந்து கொம்மை முலை எனும் புரவி பூட்டி
நெல் எழில் நெடுங் கண் அம்பாப் புருவவில் உருவக் கோலிச்
செல்வப் போர்க் காமன் சேனை செம்மல் மேல் எழுந்தது அன்றே. 458

நூல் பொர அரிய நுண்மை நுசுப்பினை ஒசிய வீங்கிக்
கால் பரந்து இருந்த வெம்கண் கதிர் முலை கச்சின் வீக்கிக்
கோல் பொரச் சிவந்த கோல மணிவிரல் கோதை தாங்கி
மேல் வரல் கருதி நின்றார் விண்ணவர் மகளிர் ஒத்தார். 459

ஆகமும் இடையும் அஃக அடி பரந்து எழுந்து வீங்கிப்
போகமும் பொருளும் ஈன்ற புணர் முலைத் தடங்கல் தோன்றப்
பாகமே மறைய நின்ற படை மலர்த் தடங் கண் நல்லார்
நாகம் விட்டு எழுந்து போந்த நாகர் தம் மகளிர் ஒத்தார். 460

வாள் அரம் துடைத்த வைவேல் இரண்டு உடன் மலைந்தவே போல்
ஆள் வழக்கு ஒழிய நீண்ட அணிமலர்த் தடங்கண் எல்லாம்
நீள் சுடர் நெறியை நோக்கும் நிரை இதழ் நெருஞ்சிப் பூப் போல்
காளைதன் தேர் செல் வீதி கலந்து உடன் தொக்கது அன்றே. 461

வடகமும் துகிலும் தோடும் மாலையும் மணியும் முத்தும்
கடகமும் குழையும் பூணும் கதிர் ஒளி கலந்து மூதூர்
இடவகை எல்லை எல்லாம் மின் நிரைத்து இட்டதே போல்
பட அரவு அல்குலாரைப் பயந்தன மாடம் எல்லாம். 462

மாது உகு மயிலின் நல்லார் மங்கல மரபு கூறிப்
போதக நம்பி என்பார் பூமியும் புணர்க என்பார்
தோதகம் ஆக எங்கும் சுண்ணம் மேல் சொரிந்து தண் என்
தாது உகு பிணையல் வீசிச் சாந்து கொண்டு எறிந்து நிற்பார். 463

கொடையுளும் ஒருவன் கொல்லும் கூற்றினும் கொடிய வாள் போர்ப்
படையுளும் ஒருவன் என்று பயம் கெழு பனுவல் நுண் நூல்
நடையுளார் சொல்லிற்று எல்லாம் நம்பி சீவகன்கண் கண்டாம்
தொடையல் அம் கோதை என்று சொல்லுபு தொழுது நிற்பார். 464

செம்மலைப் பயந்த நல் தாய் செய்தவம் உடையாள் என்பார்
எம் மலைத் தவம் செய்தாள் கொல் எய்துவம் யாமும் என்பார்
அம் முலை அமுதம் அன்னார் அகம் புலர்ந்து அமர்ந்து நோக்கித்
தம் உறு விழும வெம் நோய் தம் துணைக்கு உரைத்து நிற்பார். 465

சினவுநர்க் கடந்த செல்வன் செம் மலர் அகலம் நாளைக்
கனவினில் அருளி வந்து காட்டி யாம் காண என்பார்
மனவு விரி அல்குலார் தம் மனத்தொடு மயங்கி ஒன்றும்
வினவுநர் இன்றி நின்று வேண்டுவ கூறுவாரும். 466

விண் அகத்து உளர் கொல் மற்று இவ் வென்றி வேல் குருசில் ஒப்பார்
மண் அகத்து இவர்கள் ஒவ்வார் மழ களிறு அனைய தோன்றல்
பண் அகத்து உறையும் சொல்லார் நல் நலம் பருக வேண்டி
அண்ணலைத் தவத்தில் தந்தார் யார் கொலோ அளியர் என்பார். 467

வட்டு உடைப் பொலிந்த தானை வள்ளலைக் கண்ட போழ்தே
பட்டு உடை சூழ்ந்த காசு பஞ்சி மெல் அடியைச் சூழ
அட்ட அரக்கு அனைய செவ்வாய் அணி நலம் கருகிக் காமக்
கட்டு அழல் எறிப்ப நின்றார் கை வளை கழல நின்றார். 468

வார் செலச் செல்ல விம்மும் வனமுலை மகளிர் நோக்கி
ஏர் செலச் செல்ல ஏத்தித் தொழுது தோள் தூக்க இப்பால்
பார் செலச் செல்லச் சிந்திப் பைந்தொடி சொரிந்த நம்பன்
தேர் செலச் செல்லும் வீதி பீர் செலச் செல்லும் அன்றே. 469

வாள் முகத்து அலர்ந்த போலும் மழை மலர்த் தடங்கண் கோட்டித்
தோள் முதல் பசலை தீரத் தோன்றலைப் பருகுவார் போல்
நாள் முதல் பாசம் தட்ப நடுங்கினார் நிற்ப நில்லான்
கோள் முகப் புலியோடு ஒப்பான் கொழுநிதிப் புரிசை புக்கான். 470

பொன் நுகம் புரவி பூட்டி விட்டு உடன் பந்தி புக்க
மன்னுக வென்றி என்று மணிவள்ளம் நிறைய ஆக்கி
இன்மதுப் பலியும் பூவும் சாந்தமும் விளக்கும் ஏந்தி
மின் உகு செம் பொன் கொட்டில் விளங்கு தேர் புக்கது அன்றே. 471

இட்ட உத்தரியம் மெல்லென்று இடை சுவல் வருத்த ஒல்கி
அட்ட மங்கலமும் ஏந்தி ஆயிரத்து எண்மர் ஈண்டிப்
பட்டமும் குழையும் மின்னப் பல்கலன் ஒலிப்பச் சூழ்ந்து
மட்டு அவிழ் கோதை மாதர் மைந்தனைக் கொண்டு புக்கார். 472

தாய் உயர் மிக்க தந்தை வந்து எதிர் கொண்டு புக்குக்
காய் கதிர் மணி செய் வெள் வேல் காளையைக் காவல் ஓம்பி
ஆய் கதிர் உமிழும் பைம் பூண் ஆயிரச் செங் கணான்தன்
சேய் உயர் உலகம் எய்தி அன்னது ஓர் செல்வம் உற்றார். 473

திருத்தக்க தேவர் இயற்றிய சீவக சிந்தாமணி 
கோவிந்தையார் இலம்பகம்

சீவகன் போர் Seevaga-Sindamani 455


ஆனிரைகளை மீட்டுக் கொண்டு வந்தவனுக்குத் தன் மகளை மணம் முடித்துத் தருவதாக நந்தகோன் பறை அறைவித்தான். 440
மகளும் தந்தை கூற்றுக்கு இசைந்தாள் 441

சீவகனுக்கு ஒருவன் இதனைத் தெரிவித்தான் 442
சீவகன் வஞ்சினம் கூறினான் 
பசு, பெண்டிர், பாலர், பார்ப்பாரைக் காப்பேன் என்றான் 443

குதிரை பூட்டிய தேரில் சென்றான் 
புழுதி பகலை மறைத்தது 444

கவர்ந்தோருக்குத் தீநிமித்தம் 445
என்றாலும் கவர்ந்த ஆனிரைகளை விடாமல் போருக்கு எழுந்தனர் 446
போர்ப்பறை முழங்கினர் 447
சீவகனை வளைத்துக்கொண்டனர் 448

சீவகன் தாக்கினான் 
புளிஞர் படை குறைந்தது 449

சீவகன் மேல் அம்புமழை பொழிந்தனர் 450
சீவகன் அவற்றை வீழ்த்தினான் 451

சீவகன் படையினர் மகிந்து ஆர்த்தனர் 452
சீவகன் நூறு நூறாக அம்புகளைப் பாய்ச்சினான் 453
தொறுவைச் சீவகன் மீட்டான் 454

கவர்ந்தவர் வருந்தினர். 
மீட்டவன் நகரம் மகிழ்ச்சியில் ஆர்த்தது 455

பாடல் 

மன் நிரை பெயர்த்து மைந்தர் வந்தனர் கொள்க வாள்கண்
பொன் இழை சுடரும் மேனிப் பூங் கொடி அனைய பொற்பில்
கன்னியைத் தருதும் என்று கடி முரசு இயம்பக் கொட்டி
நல் நகர் வீதி தோறும் நந்த கோன் அறை வித்தானே. 440

வெதிர்ங் குதைச் சாபம் கான்ற வெம் நுனைப் பகழி மூழ்க
உதிர்ந்தது சேனை ஈட்டம் கூற்றொடு பொருது கொள்ளும்
கருந் தடங் கண்ணி அன்றிக் காயம் ஆறு ஆக ஏகும்
அரும் பெறல் அவளும் ஆகென்று ஆடவர் தொழுது விட்டார். 441

கார் விரி மின் அனார் மேல் காமுகர் நெஞ்சி னோடும்
தேர் பரி கடாவித் தேம் தார்ச் சீவகன் அருளில் போகித்
தார் பொலி புரவி வட்டம் தான் புகக் காட்டு கின்றாற்கு
ஊர் பரிவுற்றது எல்லாம் ஒரு மகன் உணர்த்தினானே. 442

தன் பால் மனையாள் அயலான் தலைக் கண்டு பின்னும்
இன் பால் அடிசில் இவர்கின்ற கைப் பேடி போலாம்
நன்பால் பசுவே துறந்தார் பெண்டிர் பாலர் பார்ப்பார்
என்பாரை ஓம்பேன் எனின் யான் அவன் ஆக என்றான். 443

போர்ப் பண் அமைத்து நுகம் பூட்டிப் புரவி பண்ணித்
தேர்ப் பண் அமைத்துச் சிலை கோலிப் பகழி ஆய்ந்து
கார்க் கொண்மூ மின்னி நிமிர்ந்தான் கலிமான் குளம்பில்
பார்க் கண் எழுந்த துகளால் பகல் மாய்ந்தது அன்றே. 444

இழுது ஒன்று வாள் கண் இளையார் இளையார்கண் நோக்கின்
பழுது இன்றி மூழ்கும் பகழித் தொழில் வல்ல காளை
முழுது ஒன்று திண் தேர் முகம் செய்தவன் தன்னொடு ஏற்கும்
பொழுது அன்று போதும் எனப் புள் மொழிந்தான் மொழிந்தான். 445

மோட்டும் முதுநீர் முதலைக்கு வலியது உண்டேல்
காட்டுள் நமக்கு வலியாரையும் காண்டும் நாம் என்று
ஏட்டைப் பசியின் இரை கவ்விய நாகம் போல்
வேட்டு அந் நிரையை விடல் இன்றி விரைந்தது அன்றே. 446

கடல் படை அனுங்க வென்ற கானவர் என்னும் கூற்றத்து
இடைப் படாது ஓடிப் போமின் உய்ய என்று இரலை வாய் வைத்து
எடுத்தனர் விளியும் சங்கும் வீளையும் பறையும் கோடும்
கடத்து இடை முழங்கக் காரும் கடலும் ஒத்து எழுந்த அன்றே. 447

கை விசை முறுக்கி வீசும் கொள்ளியும் கறங்கும் ஏய்ப்ப
செய் கழல் குருசில் திண் தேர் விசையொடு திசைகள் எல்லாம்
ஐ என வளைப்ப வீரர் ஆர்த்தனர் அவரும் ஆர்த்தார்
மொய் அமர் நாள் செய்து ஐயன் முதல் விளையாடினானே. 448

ஆழியான் ஊர்திப் புள்ளின் அம் சிறகு ஒலியின் நாகம்
மாழ்கிப் பை அவிந்த வண்ணம் வள்ளல் தேர் முழக்கினானும்
சூழ்துகள் மயக்கத்தானும் புளிஞர் உள் சுருங்கிச் சேக்கைக்
கோழி போல் குறைந்து நெஞ்சின் அறம் என மறமும் விட்டார். 449

புள் ஒன்றே சொல்லும் என்று இப் புன்தலை வேடன் பொய்த்தான்
வெள்ளம் தேர் வளைந்த நம்மை வென்றி ஈங்கு அரிது வெய்தா
உள்ளம் போல் போது நாம் ஓர் எடுப்பு எடுத்து உய்ய என்னா
வள்ளல் மேல் அப்பு மாரி ஆர்ப்பொடு சிதறினாரே. 450

மால் வரைத் தொடுத்து வீழ்ந்த மணிநிற மாரி தன்னை
கால் இரைத்து எழுந்து பாறக் கல் எனப் புடைத்ததே போல்
மேல் நிரைத்து எழுந்த வேடர் வெம் நுனை அப்பு மாரி
கோல் நிரைத்து உமிழும் வில்லால் கோமகன் விலக்கினானே. 451

கானவர் இரிய வில்வாய்க் கடுங் கணை தொடுத்தலோடும்
ஆன்நிரை பெயர்ந்த ஆயர் ஆர்த்தனர் அணி செய் திண் தோள்
தான் ஒன்று முடங்கிற்று ஒன்று நிமிர்ந்தது சரம் பெய் மாரி
போல் நின்ற என்ப மற்று அப் பொருவரு சிலையினார்க்கே. 452

ஐந்நூறு நூறு தலை இட்ட ஆறாயிரவர்
மெய்ந் நூறு நூறு நுதி வெம் கணை தூவி வேடர்
கைந் நூறு வில்லும் கணையும் அறுத்தான் கணத்தின்
மைந் நூறு வேல் கண் மடவார் மனம் போல மாய்ந்தார். 453

வாள் வாயும் இன்றி வடி வெம் கணை வாயும் இன்றிக்
கோள் வாய் மதியம் நெடியான் விடுத்த ஆங்கு மைந்தன்
தோள் வாய் சிலையின் ஒலியால் தொறு மீட்டு மீள்வான்
நாள் வாய் நிறைந்த நகை வெண் மதி செல்வது ஒத்தான். 454

ஆள் அற்றம் இன்றி அலர் தார் அவன் தோழ ரோடும்
கோள் உற்ற கோவன் நிரை மீட்டனன் என்று கூற
வாள் உற்ற புண்ணுள் வடி வேல் எறிந்திற்றதே போல்
நாள் உற்று உலந்தான் வெகுண்டான் நகர் ஆர்த்தது அன்றே. 455

திருத்தக்க தேவர் இயற்றிய சீவக சிந்தாமணி 
கோவிந்தையார் இலம்பகம்

கட்டியங்காரன் தோல்வி Seevaga-Sindamani 439

கவரப்பட்டவை நந்தகோன், கட்டியங்காரன் ஆகியோரின் ஆனிரைகள்

ஆனிரை கவர்வோர் அம்பு எய்தனர் 
ஆயர் மத்து கடையும் தயிர் போல் ஆயினர் 421
தொழுவத்துக்கும் சென்று ஆனிரை கவர்ந்தனர் 422
ஆயர் தடுக்க முயன்றனர் 423
முடிவு வயிற்றில் அடித்துக்கொள்ளும் நிலைமை 424
கன்றுகளைத் தழுவிக்கொண்டு கதறினர் 425
மடப்பள்ளிக்கும் பால் இல்லா ஆகுலம் (அவல நிலை) 426

செய்தியை அரசன் கட்டியங்காரனுக்குத் தெரிவித்தனர் 427
ஊருக்கெல்லாம் தெரிவித்தனர் 428

கன்னியர் சாமரம் வீசக் கட்டியங்காரன் அரியணையில் இருந்தான் 429 
நாடு ஆனிரைகளை இழந்தது 430
தனக்குப் பாதுகாப்பாக இருந்த குப்பாய மிலேச்சரைச் சினத்துடன் நோக்கினான். 431 

படையுடன் சென்று தொறு மீட்குமாறு ஆணயிட்டான் 432
யானை, தேர், குதிரைப் படை சென்றது 433

வளை, இரலை, துடி - பறைகள் முழங்கின 334 
வில் வளைந்து பகழிகள் பாய்ந்தன 435
வாள் போர் நடைபெற்றது 436

போருக்குச் சென்ற படை உடைந்தது 437 
கட்டியங்காரன் கவலையில் ஆழ்ந்தான் 438
கட்டியங்காரன் வீரர்கள் உடலில் பாய்ந்த அம்புடன் மீண்டனர். 
ஆயர் மறவர் ஆனிரைகளை மீட்டுச் சென்றனர் 439

பாடல் 

காய மீன் எனக் கலந்து கான் நிரை
மேய வெம் தொழில் வேடர் ஆர்த்து உடன்
பாய மாரிபோல் பகழி சிந்தினார்
ஆயர் மத்து எறி தயிரின் ஆயினார். 421

குழலும் நவியமும் ஒழியக் கோவலர்
சுழலக் காடு போய்க் கன்று தாம்பு அரிந்து
உழலை பாய்ந்து உலா முன்றில் பள்ளியுள்
மழலைத் தீம் சொல்லார் மறுக வாய் விட்டார். 422

மத்தம் புல்லிய கயிற்றின் மற்று அவர்
அத்தலை விடின் இத்தலை விடார்
உய்த்தனர் என உடை தயிர்ப் புளி
மொய்த்த தோள் நலார் முழுதும் ஈண்டினார். 423

வலைப் படு மான் என மஞ்ஞை எனத் தம்
முலைப் படு முத்தொடு மொய் குழல் வேய்ந்த
தலைப் படு தண் மலர் மாலை பிணங்க
அலைத்த வயிற்றினர் ஆய் அழுதிட்டார். 424

எம் அனைமார் இனி எங்ஙனம் வாழ்குவிர்
நும் அனைமார்களை நோவ அதுக்கி
வெம் முனை வேட்டுவர் உய்த்தனரோ எனத்
தம் மனைக் கன்றொடு தாம் புலம்பு உற்றார். 425

பாறை படு தயிர் பாலொடு நெய் பொருது
ஆறு மடப் பள்ளி ஆகுலம் ஆக
மாறு பட மலைந்து ஆய்ப்படை நெக்கது
சேறு படு மலர் சிந்த விரைந்தே. 426

புறவு அணி பூ விரி புன் புலம் போகி
நறவு அணி தாமரை நாட்டகம் நீந்திச்
சுறவு அணி சூழ் கிடங்கு ஆர் எயில் மூதூர்
இறை அணிக் கேட்க உய்த்திட்டனர் பூசல். 427

கொடு மர எயினர் ஈண்டிக் கோட்டு இமில் ஏறு சூழ்ந்த
படு மணி நிரையை வாரிப் பைந் துகில் அருவி நெற்றி
நெடு மலை அத்தம் சென்றார் என்று நெய் பொதிந்த பித்தை
வடி மலர் ஆயர் பூசல் வள நகர் பரப்பினாரே. 428

காசு இல் மா மணிச் சாமரை கன்னியர்
வீசு மா மகரக் குழை வில் இட
வாச வான் கழுநீர் பிடித்து ஆங்கு அரி
ஆசனத்து இருந்தான் அடல் மொய்ம்பினான். 429

கொண்ட வாளொடும் கோலொடும் கூப்புபு
சண்ட மன்னனைத் தாள் தொழுது ஆயிடை
உண்டு ஓர் பூசல் என்றாற்கு உரையாய் எனக்
கொண்டனர் நிரை போற்று எனக் கூறினான். 430

செங் கண் புன் மயிர்த் தோல் திரை செம் முகம்
வெம் கண் நோக்கின் குப்பாய மிலேச்சனைச்
செங் கண் தீ விழியாத் தெழித்தான் கையுள்
அம் கண் போது பிசைந்து அடு கூற்று அனான். 431

கூற்றின் இடிக்கும் கொலை வேலவன் கோவலர் வாய்
மாற்றம் உணர்ந்து மறம் கூர் கடல் தானை நோக்கிக்
காற்றின் விரைந்து தொறு மீட்க எனக் காவல் மன்னன்
ஏற்றை அரி மான் இடி போல இயம்பினானே. 432

கார் விளை மேகம் அன்ன கவுள் அழி கடாத்த வேழம்
போர் விளை இவுளித் திண் தேர் புனைமயிர்ப் புரவி காலாள்
வார் விளை முரசம் விம்ம வான் உலாப் போந்ததே போல்
நீர் விளை சுரி சங்கு ஆர்ப்ப நிலம் நெளி பரந்த அன்றே. 433

கால் அகம் புடைப்ப முந்நீர்க் கடல் கிளர்ந்து எழுந்ததே போல்
வேல் அகம் மிடைந்த தானை வெம் சின எயினர் தாக்க
வால் வளை அலற வாய் விட்டு இரலையும் துடியும் ஆர்ப்பப்
பால் வளைந்து இரவு செற்றுப் பகலொடு மலைவது ஒத்தார். 434

வில் பழுத்து உமிழ்ந்த வெய்ய வெம் நுனைப் பகழி மைந்தர்
மல் பழுத்து அகன்ற மார்பத்து இடம் கொண்டு வைகச் செந்நாச்
சொல் பழுத்தவர்க்கும் ஆண்மை சொல்லலாம் தன்மைத்து அன்றிக்
கொல் பழுத்து எரியும் வேலார் கொடுஞ் சிலை குழைவித்தாரே. 435

வாள் படை அனுங்க வேடர் வண் சிலை வளைய வாங்கிக்
கோள் புலி இனத்தின் மொய்த்தார் கொதி நுனைப் பகழி தம்மால்
வீட்டினார் மைந்தர் தம்மை விளிந்த மா கவிழ்ந்த திண் தேர்
பாட்டு அரும் பகடு வீழ்ந்த பனிவரை குனிவது ஒத்தே. 436

வென்றி நாம் கோடும் இன்னே வெள்ளிடைப் படுத்து என்று எண்ணி
ஒன்றி உள் வாங்குக என்ன ஒலி கடல் உடைந்ததே போல்
பொன் தவழ் களிறு பாய்மா புன மயில் குஞ்சி பிச்சம்
மின் தவழ் கொடியொடு இட்டு வேல் படை உடைந்த அன்றே. 437

பல்லினால் சுகிர்ந்த நாரில் பனிமலர் பயிலப் பெய்த
முல்லை அம் கண்ணி சிந்தக் கால் விசை முறுக்கி ஆயர்
ஒல் என ஒலிப்ப ஓடிப் படை உடைந்திட்டது என்ன
அல்லல் உற்று அழுங்கி நெஞ்சில் கட்டியங் காரன் ஆழ்ந்தான். 438

வம்பு கொண்டு இருந்த மாதர் வன முலை மாலைத் தேன் சோர்
கொம்பு கொண்டு அன்ன நல்லார் கொழுங் கயல் தடங் கண் போலும்
அம்பு கொண்டு அரசர் மீண்டார் ஆக் கொண்டு மறவர் போனார்
செம்பு கொண்டு அன்ன இஞ்சித் திருநகர்ச் செல்வ என்றார். 439

திருத்தக்க தேவர் இயற்றிய சீவக சிந்தாமணி 
கோவிந்தையார் இலம்பகம்

ஆனிரை கவர்தல் Seevaga-Sindamani 420

அச்சணந்தி பிறவி நீத்தல்

வாழவேண்டும் என்னும்  ஆர்வ வேர் அச்சணந்திக்கு அவிழ்ந்தது. 
அருகன் தாள் நிழலை வேண்டி நோன்பு இயற்றினான் 
மழைநீரில் தோன்றும் குமிழி போல் அவன் உடல் மறைந்தது 409

சீவகன் குமரன் ஆனான்

யானை, தேர், குதிரையில் சீவகன் உலாவந்தான். 410 
கலைத்திறன், கட்டழகு, வில்லாற்றல், வீணை இசை ஆகியவற்றில் சிறந்து விளங்கினான் 411
காமன் இவனே என்று கன்னியர் காமித்தனர் 412 

ஆனிரை கவர்தல்

அங்கு முல்லை நிலத்தில் ஆனிரைகள் கடல்போல் பல்கின 413
நன்னாளில் ஆயர்கள் ஒன்று கூடினர் 414

மன்னனின் ஆனிரைகள் மேய்வதைக் கண்டனர். 
இந்த நாளில் ஆனிரைகளைக் கவரலாம் என முடிவடுத்தனர்.
ஒருவன் புள் நிமித்தம் அறிந்து சொன்னான் 415

அரசனுக்குக் கேடு நேரும் என்று நிமித்தக்காரன் சொன்னான் 416
அதனைப் பொருட்படுத்தாமல் ஆனிரை கவரச் சென்றனர் 417

நறவக் கள் பருகினர் 
துடி, தொண்டகப் பறைகளை முழக்கினர் 
தெய்வத்தை வணங்கி "வெல்க" என்று சொல்லிக்கொண்டு புறப்பட்டனர் 418

வள்ளுவன் பறை அறைந்தான் 419
பிள்ளையாட்டாக ஆனிரைக் கூட்டத்துக்குள் புகுந்தனர் 420

பாடல்

ஆர்வ வேர் அவிந்து அச்சணந்தி போய்
வீரன் தாள் நிழல் விளங்க நோற்ற பின்
மாரி மொக்குளின் மாய்ந்து விண் தொழச்
சோர்வு இல் கொள்கையான் தோற்றம் நீங்கினான். 409

நம்பன் இத் தலை நாக நல் நகர்
பைம் பொன் ஓடை சூழ் பரும யானையும்
செம் பொன் நீள் கொடித் தேரும் வாசியும்
வெம்ப ஊர்ந்து உலாம் வேனிலானினே. 410

கலையினது அகலமும் காட்சிக்கு இன்பமும்
சிலையினது அகலமும் வீணைச் செல்வமும்
மலையினின் அகலிய மார்பன் அல்லது இவ்
உலகினில் இலை என ஒருவன் ஆயினான். 411

நாம வென்றி வேல் நகை கொள் மார்பனைக்
காமனே எனக் கன்னி மங்கையர்
தாமரைக் கணால் பருகத் தாழ்ந்து உலாம்
கோ மகன் திறத்து உற்ற கூறுவாம். 412

சில்அம் போழ்தின் மேல் திரைந்து தேன் உலாம்
முல்லை கார் எனப் பூப்ப மொய்ந்நிரை
புல்லு கன்று உளிப் பொழிந்து பால் படும்
கல் என் சும்மை ஓர் கடலின் மிக்கதே. 413

மிக்க நாளினால் வேழம் மும் மதம்
உக்க தேனினோடு ஊறி வார் சுனை
ஒக்க வாய் நிறைந்து ஒழுகு குன்றின் மேல்
மக்கள் ஈண்டினார் மடங்கல் மொய்ம்பினார். 414

மன்னவன் நிரை வந்து கண் உறும்
இன்ன நாளினால் கோடும் நாம் எனச்
சொன்ன வாயுளே ஒருவன் புள் குரல்
முன்னம் கூறினான் முது உணர்வினான். 415

அடைதும் நாம் நிரை அடைந்த காலையே
குடையும் பிச்சமும் ஒழியக் கோன் படை
உடையும் பின்னரே ஒருவன் தேரினால்
உடைதும் சுடுவில் தேன் உடைந்த வண்ணமே. 416

என்று கூறலும் 'ஏழை வேட்டுவீர்
ஒன்று தேரினால் ஒருவன் கூற்றமே
என்று கூறினும் ஒருவன் என் செயும்
இன்று கோடும் நாம் எழுக' என்று ஏகினார். 417

வண்டு மூசு அறா நறவம் ஆர்ந்தவர்
தொண்டகப் பறை துடியோடு ஆர்த்து எழ
விண்டு தெய்வதம் வணங்கி வெல்க என
மண்டினார் நிரை மணந்த காலையே. 418

பூத்த கோங்கு போல் பொன் சுமந்து உளார்
ஆய்த்தியர் நலக்கு ஆ செல் தூண் அனான்
கோத்த நித்திலக் கோதை மார்பினான்
வாய்த்த அந் நிரை வள்ளுவன் சொனான். 419

பிள்ளை உள் புகுந்து அழித்தது ஆதலால்
எள்ளன்மின் நிரை இன்று நீர் என
வெள்ளி வள்ளியின் விளங்கு தோள் நலார்
முள்கும் ஆயரும் மொய்ம்பொடு ஏகினார். 420

திருத்தக்க தேவர் இயற்றிய சீவக சிந்தாமணி 
கோவிந்தையார் இலம்பகம்

Wednesday, 10 June 2020

அச்சணந்தி அடிகள் வரலாறு Seevaga-Sindamani 408

அச்சணந்தி அடிகள் தன் வரலாறு கூறுதல்

வாரசாசி மன்னன் உலோகமா-பாலன் 
தன் மகனிடம் அரசினை ஒப்படைத்துவிட்டுத் தவம் செய்தான் 
அவன் பாவம் அவனைத் தாக்கிற்று 
அவன் தலை குருகுப் பறவை வடிவம் கொண்டதாக மாறிற்று 395 

மாடி வீடு ஒன்றில் புகுந்தான் 396 
உரை விளங்காமல் ஏதோ  பேசினான் 
வீட்டுக்காரன் யார் என வினவினான் 
"பால் வேண்டும்" என்றான், குருகு முனி - 397

வீட்டுக்காரனிடம் பசு ஒன்று இருந்தது. 
அது பூ மேய்ந்து பால் சுரக்கும் 
அதன் பாலைக் குருகு முனிவனுக்குத் தந்தான்  
தந்த பலனால் வீட்டுக்கார நம்பி தன் தோழனோடு அரியணை ஏறினான் 398 

அவன் மனைவியோடு அமிழ்தம் (சோறு) உண்ணும்போது பொன்வட்டிலில் பால் தந்தான் 399
நெய்யும், கன்னலும் கொண்ட குடங்களைத் தந்தான் 
விலா புடைக்க உண்டவன் அந்தணனாக மாறினான். 

அவன்தான் நான் என்றான் குருகுமுனி 400
விருந்தளித்தவர் சுநந்தையும் அவள் கணவனும் ஆவர். 
அவர்கள் தான் உன்னை வளர்த்த பெற்றோர் எனவும் அச்சணந்தி (குருகு முனிவன்) கூறினான் 401

அவன் வீட்டில்தான் உன்னைக் கண்டேன் - என்றான் 402 
தெய்வம் போன்ற உருவில் கண்டேன் 
அப்போது இல்லத்தில் முரசு முழக்கம் கேட்டது. 403
ஒளி வட்டத்துக்ககுள் தோன்றும் திங்கள் போன்றது உன் முகம் 
நீ இளஞ்சிங்கம் போன்றவன் - என்றான் அச்சணந்தி. 404

அச்சணந்தி அடிகள் தவம் மேற்கொள்ளல்

இந்தச் செய்திகளை வில் உழவன் சீவகன் கேட்டான் 
தவங்கள் செயும் தயாத் தந்தை நீ - என்று போற்றினான் 
அச்சணந்தி தவம் செய்யலானான் 405 

நானும் துறவறம் பூண்பேன் - என்றான் சீவகன் 406 

தன் எண்ணத்தை எழுதி, தன்னை வளர்த்தவர்களுக்கு அனுப்பினான் 407
வளர்த்தவர்களால் மகன் திறவைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை 408

நாமகள் இலம்பகம் முற்றியது.

பாடல்

வான் உறை வெள்ளி வெற்பின் வாரணவாசி மன்னன்
ஊன் உறை பருதி வெள் வேல் உலோகமா பாலன் என்பான்
தேன் உறை திருந்து கண்ணிச் சிறுவனுக்கு அரசு நாட்டிப்
பால் நிறக் குருகின் ஆய்ந்து பண்ணவர் படிவம் கொண்டான். 395

வெம் சினம் குறைந்து நீங்க விழுத் தவம் தொடங்கி நோற்கும்
வஞ்சம் இல் கொள்கையாற்குப் பாவம் வந்து அடைந்தது ஆகக்
குஞ்சரம் முழங்கு தீயில் கொள்கையின் மெலிந்து இம் மூதூர்
மஞ்சு தோய் குன்றம் அன்ன மாட வீட்டு அகம் புகுந்தான். 396

உரை விளையாமை மைந்தன் கேட்கிய உவந்து நோக்கி
வரை விளையாடு மார்பன் 'யார் அவன் வாழி' என்ன
'விரை விளையாடும் தாரோய் யான்' என விரும்பித் தீம்பால்
'திரை விளை அமிர்தம் அன்ன கட்டுரை செல்க' என்றான். 397

பூத் தின்று புகன்று சேதாப் புணர் முலை பொழிந்த தீம்பால்
நீத்து அறச் செல்ல வேவித்து அட்ட இன் அமிர்தம் உண்பான்
பாத்தரும் பசும் பொன் தாலம் பரப்பிய பைம் பொன் பூமி
ஏத்த அரும் தவிசின் நம்பி தோழரொடு ஏறினானே. 398

புடை இரு குழையும் மின்னப் பூந்துகில் செறிந்த அல்குல்
நடை அறி மகளிர் ஏந்த நல் அமிர்து உண்ணும் போழ்தின்
இடை கழி நின்ற என்னை நோக்கிப் போந்து ஏறுக என்றான்
கடல் கெழு பருதி அன்ன பொன் கலத்து எனக்கும் இட்டார். 399

கை கவி நறு நெய் பெய்து கன்னல் அம் குடங்கள் கூட்டிப்
பெய் பெய் என்று உரைப்ப யானும் பெருங் கடல் வெள்ளிக் குன்றம்
பெய்து தூர்க்கின்ற வண்ணம் விலாப் புடை பெரிதும் வீங்க
ஐயன் அது அருளினால் யான் அந்தணர் தொழிலன் ஆனேன். 400

சுரும்பு உடை அலங்கல் மாலைச் சுநந்தையும் துணைவன் தானும்
விரும்பினர் எதிர் கொண்டு ஓம்ப வேழ வெந்தீயின் நீங்கி
இருந்தனன் ஏம முந் நீர் எறி சுறவு உயர்த்த தோன்றல்
கரும்பு உடைக் காளை அன்ன காளை நின் வலைப் பட்டு என்றான். 401

நிலம் பொறுக்கலாத செம் பொன் நீள் நிதி நுந்தை இல்லம்
நலம் பொறுக்கலாத பிண்டி நான் முகன் தமர்கட்கு எல்லாம்
உலம் பொறுக்கலாத தோளாய் ஆதலால் ஊடு புக்கேன்
கலம் பொறுக்கலாத சாயல் அவர் உழை நின்னைக் கண்டேன். 402

ஐயனைக் கண்ணில் காண யானைத்தீ அதகம் கண்ட
பை அணல் நாகம் போல வட்க யான் பெரிதும் உட்கித்
தெய்வம் கொல் என்று தேர்வேற்கு அமிர்து உலாய் நிமிர்ந்ததே போல்
மொய் குரல் முரசம் நாணும் தழங்கு குரல் முழங்கக் கேட்டேன். 403

கோட்டு இளந் திங்கள் சூழ்ந்து குலவிய திருவில் போல
மோட்டு ஒளி முத்தம் சூழ்ந்து முருகு கொப்பளிக்கும் தாரோய்
கேட்டு அளப் பரிய சொல்லும் கிளர் ஒளி வனப்பும் நின்னைச்
சேட்டு இளஞ் சிங்கம் அன்னாய் சாதகம் செய்த என்றான். 404

கோள் இயங்கு உழுவை அன்ன கொடும் சிலை உழவன் கேட்டே
தாள் இயல் தவங்கள் தாயாத் தந்தை நீ ஆகி என்னை
வாள் இயங்கு உருவப் பூணோய் படைத்தனை வாழி என்ன
மீளி அம் களிறு அனாய் யான் மெய்ந்நெறி நிற்பல் என்றான். 405

மறு அற மனையின் நீங்கி மா தவம் செய்வல் என்றால்
பிற அறம் அல்ல பேசார் பேர் அறிவு உடைய நீரார்
துறவறம் புணர்க என்றே தோன்றல் தாள் தொழுது நின்றான்
நறவு அற மலர்ந்த கண்ணி நல் மணி வண்ணன் அன்னான். 406

கை வரை அன்றி நில்லாக் கடுஞ் சின மடங்கல் அன்னான்
தெவ்வரைச் செகுக்கும் நீதி மனத்து அகத்து எழுதிச் செம்பொன்
பை விரி அல்குலாட்கும் படுகடல் நிதியின் வைகும்
மை வரை மார்பினாற்கும் மனம் உறத் தேற்றி இட்டான். 407

அழல் உறு வெண்ணெய் போல அகம் குழைந்து உருகி ஆற்றாள்
குழல் உறு கிளவி சோர்ந்து குமரனைத் தமியன் ஆக
நிழல் உறு மதியம் அன்னாய் நீத்தியோ எனவும் நில்லான்
பழவினை பரிய நோற்பான் விஞ்சையர் வேந்தன் சென்றான். 408

நாமகள் இலம்பகம் முற்றியது.

திருத்தக்க தேவர் இயற்றிய சீவக சிந்தாமணி 
நாமகள் இலம்பகம்

அச்சணந்தி அடிகள் Seevaga-Sindamani 394

சீவக நம்பியும் அச்சணந்தி அடிகளும்

சீவகன் ஓலையில் பொன் எழுத்தாணியால் எழுதி கல்விப் பெண்ணோடு கலந்தான் 369
நாமகள் நலத்தை எல்லாம் நுகர்ந்தான் 
பூமகள் இன்பத்தை எல்லாம் துய்த்தான் 370

கறவையை நீங்கிய கன்று போல் வளர்ந்தான் 371
அல்குல் விற்கும் பெண்டிர் இவன் தோளைக் கண் வில்லால் எய்தனர் 372

சீவனிடம் வளர்ப்புத் தந்தை கூறினான் 373

நூல் நெறியை நோக்கி, பால் நெறியைக் கைவிட்டு, கோல்நெறி தழுவிய 
அரசனாக விளங்கினால் உயிரினங்களுக்கு எல்லாம் நீ அமிழ்தம்  374

ஐம்புல வெறியில் நின்றார் வேதனைக் கடலுள் வீழ்வர் 375
கூற்றுவன் வலையை நோன்பால் அறுக்க வேண்டும் 376
உடலை எரி கவ்வும்போது நோன்பு செய்ய முடியாது 377
களிக்கும் அரசு நரகில் மூழ்கும் முயற்சி ஆகும் 378 

பாவையர் பவள வாயில் முத்து விதைத்து, காளையர்  உழவு செய்யும்போது சீலம் என்னும் வேலி கட்டிப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் 379 

பொன்னுலகம் சேரும் நெறியைப் பின்பற்ற வேண்டும் 380
வரம்பில்லா இன்ப உலகில் ஏற வேண்டும் 381 
இவ்வாறு கூறி மேலும் இல்லலற நெறிகளையும் புகட்டினான் 382 

அச்சணந்தி அடிகள், சீவகனுக்கு அவன் பிறப்பினை உணர்த்துதல்

இளைஞர் கூட்டத்திலிருந்து சீவகனைப் பிரித்து, சீவகன் பிறப்பு பற்றி அச்சணந்தி அடிகள் கூறலானார் 383 

அச்சணந்தி முனிவர் பிண்டி மர நிழலில் தவிசில் அமர்ந்திருந்தார் 
பூவையும் கிளியும் ஒன்றாகிப் புணரும் சாதி இல்லை என்று எண்ணிக்கொண்டிருந்தார் 
சீவகனை அழைத்துக் கூறலானார் 384

சச்சந்தன் தன் மனைவி விசயையை மயில்பொறியில் அனுப்பிவிட்டுப் போர் புரிகையில் அமைச்சனால் மொல்லப்பட்டான் 385
விசயை சுடுகாட்டில் மகனைப் பெற்றாள் 386
உத்திரட்டாதி நாளில் பிறந்த சிறுவன் வானத்துச் சிந்தாமணி போல் கிடந்தான். 387 

அரசன் அவனை எடுத்தபோது குழந்தை தும்மிற்று 
அப்போது தெய்வம் அவனை ‘சீவ’ என்று வாழ்த்திற்று 388

என்று அடிகள் கூறியபோது சீவகன் அவன் யார் என வினவினான் 
அவன்தான் நீ - என்றான் அச்சணந்தி 

என்றதும் சீவகன் மயங்கினான் 389 
அடிகள் தேற்றினார் 
சீவகன் கவலையில் ஆழ்ந்தான் 390

பெண்ணைப் போலப் புலம்ப வேண்டாம் - என்று சீவகன் கண்ணீரைத் துடைத்தார். பகைவன் எண்ணம் சீவகன் நெஞ்சில் நின்றது 391
பகைவனை அழிக்க வில்லேந்தி தின்றவனை அடிகள் தடுத்தார் 392 

இப்போது வளர்த்த குரவரை நினை - என்றார் அடிகள் 393 
வெகுளியை விட்டுவிடு 
இதுபோல் வேறொருவர்க்கு நேர்ந்தது என்றும் அடிகள் தெரிவித்தார் 394

பாடல் 

அரும் பொனும் மணியும் முத்தும் காணமும் குறுணி ஆகப்
பரந்து எலாப் பிரப்பும் வைத்துப் பைம் பொன் செய் தவிசின் உச்சி
இருந்து பொன் ஓலை செம் பொன் ஊசியால் எழுதி ஏற்பத்
திருந்து பொன் கண்ணியாற்குச் செல்வியைச் சேர்த்தினாரே. 369

நாமகள் நலத்தை எல்லாம் நயந்து உடன் பருகி நல் நூல்
ஏ முதல் ஆய எல்லாப் படைக் கலத் தொழிலும் முற்றிக்
காமனும் கனிய வைத்த புலம் கரை கண்டு கண் ஆர்
பூ மகள் பொலிந்த மார்பன் புவிமிசைத் திலகம் ஒத்தான். 370

மின் தெளித்து எழுதி அன்ன விளங்கும் நுண் நுசுப்பின் நல்லார்
பொன் தெளித்து எழுதி அன்ன பூம் புறப் பசலை மூழ்கிக்
குன்று ஒளித்து ஒழிய நின்ற குங்குமத் தோளினாற்குக்
கன்று ஒளித்து அகல வைத்த கறவையில் கனிந்து நின்றார். 371

விலை பகர்ந்து அல்குல் விற்கும் வேலினும் வெய்ய கண்ணார்
முலை முகந்து இளையர் மார்பம் முரிவிலர் எழுதி வாழும்
கலை இகந்து இனிய சொல்லார் கங்குலும் பகலும் எல்லாம்
சிலை இகந்து உயர்ந்த திண் தோள் சீவகற்கு அரற்றி ஆற்றார். 372

வான் சுவை அமிர்த வெள்ளம் வந்து இவண் தொக்கது என்னத்
தான் சுவைக் கொண்டது எல்லாம் தணப்பு அறக் கொடுத்த பின்றைத்
தேன் சுவைத்து அரற்றும் பைந்தார்ச் சீவக குமரன் என்ற
ஊன் சுவைத்து ஒளிறும் வேலாற்கு உறுதி ஒன்று உரைக்கல் உற்றான். 373

நூல் நெறி வகையின் நோக்கி நுண்ணிதின் நுழைந்து தீமைப்
பால் நெறி பலவும் நீக்கிப் பருதி அம் கடவுள் அன்ன
கோன் நெறி தழுவி நின்ற குணத்தொடு புணரின் மாதோ
நால் நெறி வகையில் நின்ற நல் உயிர்க்கு அமிர்தம் என்றான். 374

அறிவினால் பெரிய நீரார் அருவினை கழிய நின்ற
நெறியினைக் குறுகி இன்ப நிறை கடல் அகத்து நின்றார்
பொறி எனும் பெயர ஐ வாய்ப் பொங்கு அழல் அரவின் கண்ணே
வெறி புலம் கன்றி நின்றார் வேதனைக் கடலுள் நின்றார். 375

கூற்றுவன் கொடியன் ஆகிக் கொலைத் தொழில் கருவி சூழ்ந்து
மாற்ற அரும் வலையை வைத்தான் வைத்ததை அறிந்து நாமும்
நோற்று அவன் வலையை நீங்கி நுகர்ச்சியில் உலகம் நோக்கி
ஆற்று உறப் போதல் தேற்றாம் அளியமோ? பெரியமே காண். 376

பேர் அஞர் இடும்பை எல்லாம் பிளந்திடும் பிறப்பு நீக்கும்
ஆர் அமிர்து அரிதில் பெற்றாம் அதன் பயன் கோடல் தேற்றாம்
ஓரும் ஐம் பொறியும் ஓம்பி உள பகல் கழிந்த பின்றைக்
கூர் எரி கவரும் போழ்தில் கூடுமோ குறித்த எல்லாம். 377

தழங்கு குரல் முரசின் சாற்றித் தத்துவம் தழுவல் வேண்டிச்
செழுங் களியாளர் முன்னர் இருள் அறச் செப்பினாலும்
முழங்கு அழல் நரகின் மூழ்கும் முயற்சியர் ஆகி நின்ற
கொழுங் களி உணர்வினாரைக் குணவதம் கொளுத்தல் ஆமோ. 378

பவழவாய்ச் செறுவு தன்னுள் நித்திலம் பயில வித்திக்
குழவிநாறு எழுந்து காளைக் கொழும் கதிர் ஈன்று பின்னாக்
கிழவு தான் விளைக்கும் பைங் கூழ் கேட்டிரேல் பிணி செய் பன்மா
உழவிர்காள்! மேயும் சீல வேலி உய்த்திடுமின் என்றான். 379

சூழ் கதிர் மதியம் அன்ன சுடர் மணிப் பூணினானும்
வீழ் தரு கதியின் நீங்கி விளங்கு பொன் உலகத்து உய்க்கும்
ஊழ் வினை துரத்தலானும் உணர்வு சென்று எறித்தலானும்
ஆழ் கடல் புணையின் அன்ன அறிவரன் சரண் அடைந்தான். 380

காட்சி நல் நிலையில் ஞானக் கதிர் மணிக் கதவு சேர்த்திப்
பூட்சி சால் ஒழுக்கம் என்னும் வயிரத் தாழ் கொளுவிப் பொல்லா
மாட்சியில் கதிகள் எல்லாம் அடைத்த பின் வரம்பு இல் இன்பத்து
ஆட்சியில் உலகம் ஏறத் திறந்தனன் அலர்ந்த தாரான். 381

நல் அறத்து இறைவன் ஆகி நால்வகைச் சரணம் எய்தித்
தொல் அறக் கிழமை பூண்ட தொடு கழல் காலினாற்குப்
புல் அற நெறிக் கண் நின்று பொருள் வயிற் பிழைத்த வாறும்
இல்லறத்து இயல்பும் எல்லாம் இருள் அறக் கூறி இட்டான். 382

எரி முயங்கு இலங்கு வை வேல் இளையவர் குழாத்தின் நீங்கித்
திரு முயங்கு அலங்கல் மார்பின் சீவகன் கொண்டு வேறா
விரி மலர்க் கண்ணி கட்டி விழைதக வேய்ந்த போலும்
தெரி மலர்க் காவு சேர்ந்து பிறப்பினைத் தெருட்டல் உற்றான். 383

பூவையும் கிளியும் மன்னர் ஒற்றென புணர்க்கும் சாதி
யாவையும் இன்மை ஆராய்ந்து அம் தளிர்ப் பிண்டி நீழல்
பூ இயல் தவிசின் உச்சிப் பொலிவினோடு இருந்த போழ்தில்
ஏ இயல் சிலையினானை இப் பொருள் கேண்மோ என்றான். 384

வையகம் உடைய மன்னன் சச்சந்தன் அவற்குத் தேவி
பை விரி பசும்பொன் அல்குல் பைந்தொடி விசையை என்பாள்
செய் கழல் மன்னன் தேர்ந்து தேவியைப் பொறியில் போக்கி
மையல் கொள் நெஞ்சில் கல்லா மந்திரி விழுங்கப் பட்டான். 385

புலம்பொடு தேவி போகிப் புகற்கு அருங் காடு நண்ணி
வலம்புரி உலகம் விற்கும் மா மணி ஈன்றது என்ன
இலங்கு இழை சிறுவன் தன்னைப் பயந்து பூந் தவிசின் உச்சி
நலம் புரி நங்கை வைத்து நல் அறம் காக்க என்றாள். 386

வானத்தின் வழுக்கித் திங்கள் கொழுந்து மீன் குழாங்கள் சூழக்
கானத்தில் கிடந்ததே போல் கடல் அகம் உடைய நம்பி
தானத்து மணியும் தானும் இரட்டுறத் தோன்றி னானே
ஊனத்தில் தீர்ந்த சீர்த்தி உத்திரட்டாதி யானே. 387

அருந் தவன் முந்து கூற அலங்கல் வேல் நாய்கன் சென்று
பொருந்துபு சிறுவன் கொண்டு பொலிவொடு புகன்று போகத்
திருந்திய நம்பி ஆரத் தும்மினன் தெய்வம் வாழ்த்திற்று
அரும் பொனாய் கேண்மோ என்றான் அலை கடல் விருப்பில் கொண்டாள். 388

கரியவன் கன்னற்கு அன்று பிறப்பினைத் தேற்றி ஆங்கு அப்
பெரியவன் யாவன் என்ன நீ எனப் பேசலோடும்
சொரி மலர்த் தாரும் பூணும் ஆரமும் குழையும் சோரத்
திரு மலர்க் கண்ணி சிந்தத் தெருமந்து மயங்கி வீழ்ந்தான். 389

கற்பகம் கலங்கி வீழ்ந்த வண்ணம் போல் காளை வீழச்
சொல் பகர் புலவன் வல்லே தோன்றலைச் சார்ந்து புல்லி
நல் பல குழீஇய தம்மால் நவை அறத் தேற்றத் தேறிக்
கல் புனை திணி திண் தோளான் கவலை நீர்க் கடலுள் பட்டான். 390

இனையை நீ ஆயது எல்லாம் எம்மனோர் செய்த பாவம்
நினையல் நீ நம்பி என்று நெடுங் கண் நீர் துடைத்து நீவிப்
புனை இழை மகளிர் போலப் புலம்பல் நின் பகைவன் நின்றான்
நினைவு எலாம் நீங்குக என்ன நெடும் தகை தேறினானே. 391

மலை பக இடிக்கும் சிங்கம் மடங்கலின் மூழங்கி மாநீர்
அலை கடல் திரையின் சீறி அவன் உயிர் பருகல் உற்றுச்
சிலையொடு பகழி ஏந்திக் கூற்று எனச் சிவந்து தோன்றும்
இலை உடைக் கண்ணியானை இன்னணம் விலக்கினானே. 392

வேண்டுவல் நம்பி யான் ஓர் விழுப் பொருள் என்று சொல்ல
ஆண் தகைக் குரவீர் கொண்மின் யாது நீர் கருதிற்று என்ன
யாண்டு நேர் எல்லை ஆக அவன் திறத்து அழற்சி இன்மை
வேண்டுவல் என்று சொன்னான் வில் வலான் அதனை நேர்ந்தான். 393

வெவ் வினை வெகுண்டு சாரா விழுநிதி அமிர்தம் இன்னீர்
கவ்விய எஃகின் நின்ற கயக்கமில் நிலைமை நோக்கி
அவ்வியம் அகன்று பொங்கும் அழல் படு வெகுளி நீக்கி
இவ் இயல் ஒருவற்கு உற்றது இற்றெனக் கிளக்கல் உற்றான். 394

திருத்தக்க தேவர் இயற்றிய சீவக சிந்தாமணி 
நாமகள் இலம்பகம்

வழித்துணைத் தெய்வம் விடைபெறல் Seevaga-Sindamani 368

நம்பியுடன் இருந்ததை விசயை நினைத்தாள் 355

விசயையைச் சமணப் பள்ளியில் ஒப்படைத்துவிட்டு, வழித்துணையாக வந்த சண்பகமாலை தெய்வம் விடைபெற்றுக்கொண்டு மறைந்தது. 256

சிறுவன் சீவகனின் நிலையை அறிந்து வருமாறு மன்னன் கூனி ஒருத்தியை அனுப்பினான் 357

அவள் சீவகன் இருக்கும் ஊருக்கு வந்தாள் 358
அவள் வரும் வழியில் ஆனிரைகள் மேயச் சென்றன 359

பின்னர் நிகழ்ந்ததை இனிச் சொல்கிறேன் 360

அரசனும் அரசியும் சிறுவனுக்குச் சீவகன் என்று பெயர் வைத்தனர் 361

சீவகன் மதியம் போன்றவன் 
காமன் கணையால் காமம் வளர்வது போல் வளர்ந்தான் 362
சிறுதேர் (நடைவண்டி) ஓட்டி மகிழ்ந்தான் 
தேரிலும் யானைமீதும் உலாவந்தான் 363
சிங்கக் குட்டி போல் எதிர்த்தவர்களை வென்றான் 364

கொடையில் வளர்ப்புத் தந்தை கந்துக்கடன் போலவும் 
கண் நோக்கத்தில் வளர்ப்புத் தாய் சுநந்தை போலவும் விளங்கினான் 365

இந்திரன் மகன் போல விளங்கினான் 366
"காமனை வெல்லும் கட்டழகன்" என வளர்ந்தான் 367 

வளர்த்த தாயும் தந்தையும் ‘கல்வி ஞானம்’ என்னும் கன்னியைப் புணருமாறு செய்தனர். 368

பாடல்

மெல் விரல் மெலியக் கொய்த குள நெல்லும் விளைந்த ஆம்பல்
அல்லியும் உணங்கும் முன்றில் அணில் விளித்து இரிய ஆமான்
புல்லிய குழவித் திங்கள் பொழி கதிர்க் குப்பை போலும்
நல் எழில் கவரி ஊட்ட நம்பியை நினைக்கும் அன்றே. 355

பெண்மை நாண் வனப்புச் சாயல் பெரு மட மாது பேசின்
ஒண்மையின் ஒருங்கு கூடி உருவு கொண்ட அனைய நங்கை
நண்ணிய நுங்கட்கு எல்லாம் அடைக்கலம் என்று நாடும்
கண்ணிய குலனும் தெய்வம் கரந்து உரைத்து எழுந்தது அன்றே. 356

உறுதி சூழ்ந்து அவண் ஓடலின் ஆய் இடை
மறுவில் வெண் குடை மன்னவன் காதல் அம்
சிறுவன் தன்மையைச் சேர்ந்து அறிந்து இவ்வழிக்
குறுக வம் எனக் கூனியைப் போக்கினாள். 357

நெஞ்சின் ஒத்து இனியாளை என் நீர்மையால்
வஞ்சித்தேன் என வஞ்சி அம் கொம்பு அனாள்
பஞ்சி மெல்லடி பல் கலன் ஆர்ப்பச் சென்று
இஞ்சி மா நகர்த் தன் இடம் எய்தினாள். 358

தானும் தன் உணர்வில் தளர்ந்து ஆற்றவும்
மானின் நோக்கி வரும் வழி நோக்கி நின்று
ஆனியம் பல ஆசையில் செல்லுமே
தேன் இயம்பும் ஓர் தேம் பொழில் பள்ளியே. 359

மட்டு அவிழ் கோதை வாள் அன உண்கண் மயில் அன்னாள்
கட்டு அழல் எவ்வம் கைம் மிக நீக்கிக் களிகூர
விட்டு அகல்வு ஆற்றா வேட்கையின் ஓடும் பொழுது இப் பால்
பட்டதை எல்லாம் பல்லவர் கேட்கப் பகர்கு உற்றேன். 360

கூற்றம் அஞ்சும் கொல் நுனை எஃகின் இளையானும்
மாற்றம் அஞ்சும் மன்னிய கற்பின் மடவாளும்
போற்றித் தந்த புண்ணியர் கூடிப் புகழோனைச்
சீற்றத் துப்பின் சீவகன் என்றே பெயர் இட்டார். 361

மேகம் ஈன்ற மின் அனையாள் தன் மிளிர் பைம் பூண்
ஆகம் ஈன்ற அம் முலை இன் பால் அமிர்து ஏந்தப்
போகம் ஈன்ற புண்ணியன் எய்த கணையே போல்
மாகம் ஈன்ற மா மதி அன்னான் வளர்கின்றான். 362

அம் பொன் கொம்பின் ஆயிழை ஐவர் நலன் ஓம்பப்
பைம் பொன் பூமிப் பல் கதிர் முத்தார் சகடமும்
செம் பொன் தேரும் வேழமும் ஊர்ந்து நிதி சிந்தி
நம்பன் செல்லும் நாளினும் நாளும் நலம் மிக்கே. 363

பல் பூம் பொய்கைத் தாமரை போன்றும் பனி வானத்து
எல்லார் கண்ணும் இன்பு உற ஊரும் மதி போன்றும்
கொல்லும் சிங்கக் குட்டியும் போன்று இவ் உலகு ஏத்தச்
செல்லும் மன்னோ சீவகன் தெய்வப் பகை வென்றே. 364

மணியும் முத்தும் மாசு அறு பொன்னும் பவளமும்
அணியும் பெய்யும் மாரியின் ஏற்பார்க்கு அவை நல்கிக்
கணிதம் இல்லாக் கற்பகம் கந்துக் கடன் ஒத்தான்
இணை வேல் உண்கண் சுநந்தையும் இன்பக் கொடி ஒத்தாள். 365

சாதிப் பைம் பொன் தன் ஒளி வௌவித் தகை குன்றா
நீதிச் செல்வம் மேல் மேல் நீந்தி நிறைவு எய்திப்
போதிச் செல்வம் பூண்டவர் ஏத்தும் பொலிவினால்
ஆதி காலத்து அந்தணன் காதல் மகன் ஒத்தான். 366

நனம் தலை உலகில் மிக்க நல் நுதல் மகளிர் தங்கள்
மனம் தளை பரிய நின்ற மதலை மை ஆடுக என்றே
பொன் அம் கொடி இறைஞ்சி நின்று பூமகள் புலம்பி வைக
அனங்கனுக்கு அவலம் செய்யும் அண்ணல் நற்றாய் உரைத்தாள். 367

முழவு எனத் திரண்ட திண் தோள் மூரி வெம் சிலையினானும்
அழல் எனக் கனலும் வாள் கண் அவ் வளைத் தோளி னாளும்
மழலை யாழ் மருட்டும் தீம் சொல் மதலையை மயில் அம் சாயல்
குழை முக ஞானம் என்னும் குமரியைப் புணர்க்கல் உற்றார். 368

திருத்தக்க தேவர் இயற்றிய சீவக சிந்தாமணி 
நாமகள் இலம்பகம்

விசயை துறவறம் Seevaga-Sindamani 354

கப்பல் கவிழக் கப்பலில் இருந்தவர் துன்புறுதல்  போலத் துன்புறும் விசயை நிலையினைச் சொல்லுவாம் 332

நிகழ்ந்தவை எல்லாவற்றையும் சண்பகமாலை தெய்வத்திடம் கூறிய பின் விசயை மயக்கம் அடைந்தாள் 333
அவளுக்கு நிகழப்போவதை தெய்வதம் கூறலாயிற்று 334

கற்பரசியே! இந்தப் போர்வையால் மூடிக்கொண்டு ஆற்றங்கரை அமரிகை செல்வோம் 335
அந்த அமரிகை 50 யோசனை தொலைவில் உள்ளது 
உலகம் காக்கும் திலகம் அங்கு உள்ளாள் 336
அது தண்டாரணியத்தில் உள்ள தாபதப் பள்ளி 337
என்றாள் 

விசயை அச்சொல்லைப் பொருளுடை வாய்மொழி என மதித்து அதனை நோக்கிச் சென்றாள் 338

அவளது மகரக் குழை அவளுக்கு வெளிச்சம் காட்டிற்று 339
போர்வையாப் போர்த்திக்கொண்டு சென்றாள் 340
அனிச்ச மலரடி கொப்பளிக்க, காட்டில் நடந்து சென்றாள் 341
காடும் மலையும் கடந்து ஆற்றங்கரை அடைந்தாள் 342

கடலோரம் வந்தது 
நல்வினை தலைதூக்கிற்று 343 
பொழில் தோன்றிற்று 344
அமரிகை அடி மண்ணைத் தொட்டாள் 345 
அன்னம் மான் முதலானவற்றைக் கண்டாள் 346

தவப்பள்ளியை அடைந்தாள் 347 
தவப்பள்ளி மகளிர் விசயையின் நல்லணிகளைக் களைந்தனர் 348
மாலைகளைக் கழற்றினர் 349
நெற்றித் திலகம், மகரகுண்டலம், கழுத்தணி, முலைப்பூண் - அனைத்தும் அகற்றினர் 350
கை வளையல்களை உடைத்து விரல் மோதிரங்களை அகற்றினர் 351
ஆடவரைக் கவரா வண்ணம் அரம்பை போன்றவளைச்  செய்தனர் 352
காவி உடை அணிவித்தனர் 253
பால்சோறு உண்டவள் பச்சைக் கீரை உண்பவள் ஆனாள் 354

பாடல்

நல் உயிர் நீங்கலும் நல் மாண்பு உடையது ஓர்
புல் உயிர் தன்னொடு நின்றுழிப் புல்லுயிர்
கல் உயிர் காட்டில் கரப்பக் கலம் கவிழ்த்து
அல்லல் உற்றாள் உற்றது ஆற்ற உரைப்பாம். 332

பொறி அறு பாவையின் பொம் என விம்மி
வெறி உறு கோதை வெறு நிலம் எய்த
இறு முறை எழுச்சியின் எய்துவது எல்லாம்
நெறிமையில் கூற நினைவின் அகன்றாள். 333

பெரு மகற்கு ஆக்கம் பிறழ்வு இன்றிக் கேட்டே
திரு மகள் தான் இனிச் செய்வதை எல்லாம்
ஒரு மனத்து அன்னாய் உரை எனலோடும்
தெரு மரு தெய்வதம் செப்பியது அன்றே. 334

மணி அறைந்து அன்ன வரி அறல் ஐம்பால்
பணி வரும் கற்பின் படை மலர்க் கண்ணாய்
துணி இருள் போர்வையில் துன்னுபு போகி
அணி மணல் பேர் யாற்று அமரிகை சார்வாம். 335

அமரிகைக்கு ஓசனை ஐம்பது சென்றால்
குமரிக் கொடி மதில் கோபுர மூதூர்
தமர் இயல் ஓம்பும் தரணி திலகம்
நமர் அது மற்றது நண்ணலம் ஆகி. 336

வண்டார் குவளைய வாவியும் பொய்கையும்
கண்டார் மனம் கவர் காவும் கஞலிய
தண்டாரணியத்துத் தாபதப் பள்ளி ஒன்று
உண்டு ஆங்கு அதனுள் உறைகுவம் என்றாள். 337

பொருள் உடை வாய் மொழி போற்றினள் கூற
மருள் உடை மாதர் மதித்தனள் ஆகி
அருள் உடை மாதவர் அத்திசை முன்னி
இருள் இடை மின்னின் இலங்கு இழை சென்றாள். 338

உருவ மா மதி வாள் முகத்து ஓடிய
இருவிலும் எறி மா மகரக் குழைத்
திருவிலும் இவை தேமொழி மாதரைப்
பொரு இல் நீள் அதர் போக்குவ போன்றவே. 339

சிலம்பு இரங்கிப் போற்று இசைப்பத் திருவில் கை போய் மெய் காப்ப
இலங்கு பொன் கிண்கிணியும் கலையும் ஓங்க எறிவேல் கண்
மலங்க மணி மலர்ந்த பவளக் கொம்பு முழு மெய்யும்
சிலம்பி வலந்தது போல் போர்வை போர்த்துச் செல்லுற்றாள். 340

பஞ்சி அடர் அனிச்சம் நெருஞ்சி ஈன்ற பழமால் என்று
அஞ்சும் மலர் அடிகள் அரம் கண்ட அன்ன அரும் காட்டுள்
குஞ்சித்து அசைந்து அசைந்து குருதி கான்று வெய்து உயிரா
வஞ்சி இடை நுடங்க மயில் கை வீசி நடந்ததே. 341

தடங் கொள் தாமரைத் தாது உறை தேவியும்
குடங்கை போல் உண் கண் கூனியும் கூர்ம் பரல்
கடங்களும் மலையும் கடந்து ஆர் புனல்
இடம் கொள் ஆற்றகம் எய்தினர் என்பவே. 342

எல்லை எய்திய ஆயிரச் செங்கதிர்
மல்லல் மாக் கடல் தோன்றலும் வைகிருள்
தொல்லை நல்வினை முற்படத் தோன்றிய
அல்லல் வெவ்வினை போல அகன்றதே. 343

நுணங்கு நுண்கொடி மின் ஓர் மழை மிசை
மணம் கொள் வார் பொழில் வந்து கிடந்தது ஒத்து
அணங்கு நுண் துகில் மேல் அசைந்தாள் அரோ
நிணம் கொள் வைந்நுதி வேல் நெடும் கண்ணினாள். 344

வைகிற்று எம் அனை வாழிய போழ்து எனக்
கையினால் அடி தைவரக் கண் மலர்ந்து
ஐயவோ என்று எழுந்தனள் ஆய் மதி
மொய் கொள் பூமி முளைப்பது போலவே. 345

தூவி அம்சிறை அன்னமும் தோகையும்
மேவி மென் புனம் மான் இனம் ஆதியா
நாவி நாறு எழில் மேனியைக் கண்டு கண்டு
ஆவித்து ஆற்று கிலாது அழுதிட்டவே. 346

கொம்மை வெம்முலைப் போதின் கொடி அனாள்
உம்மை நின்றது ஓர் ஊழ்வினை உண்மையால்
இம்மை இவ் இடர் உற்றனள் எய்தினாள்
செம்மை மாதவர் செய் தவப் பள்ளியே. 347

வாள் உறை நெடுங் கணாளை மாதவ மகளிர் எல்லாம்
தோள் உறப் புல்லுவார் போல் தொக்கு எதிர் கொண்டு புக்குத்
தாள் உறு வருத்தம் ஓம்பித் தவ நெறிப் படுக்கல் உற்று
நாள் உறத் திங்கள் ஊர நல் அணி நீக்குகின்றார். 348

திருந்து தகரச் செந் நெருப்பில் தேன் தோய்த்து அமிர்தம் கொள உயிர்க்கும்
கருங் காழ் அகிலின் நறும் புகையில் கழுமிக் கோதை கண் படுக்கும்
திருந்து நானக் குழல் புலம்பத் தேனும் வண்டும் இசைப் புலம்ப
அரும் பொன் மாலை அலங்கலோடு ஆரம் புலம்ப அகற்றினாள். 349

திங்கள் உகிரில் சொலிப்பது போல் திலகம் விரலில் தான் நீக்கிப்
பைம்பொன் மகர குண்டலமும் பாவை கழுத்தின் அணிகலமும்
வெம் கண் வேந்தற்கு அமிர்து ஆகி வேல் கண் பாவை பகை ஆய
அம் கண் முலையின் அணி முத்தும் அரும்பொன் பூணும் அகற்றினாள். 350

பஞ்சி அனைய வேய் மென் தோள் பகுவாய் மகரம் கான்றிட்ட
துஞ்சாக் கதிர் கொள் துணை முத்தம் தொழுதேன் உம்மை எனத் துறந்து
அஞ்சி வருத்து நுசுப்பினாள் வளை கை உடைத்து மணிக் காந்தள்
அஞ்சச் சிவந்த மெல் விரல் சூழ் அரும் பொன் ஆழி அகற்றினாள். 351

பூப் பெய் செம் பொன் கோடிகமும் பொன் ஆர் ஆல வட்டமும்
ஆக்கும் மணி செய் தேர்த்தட்டும் அரவின் பையும் அடும் அல்குல்
வீக்கி மின்னும் கலை எல்லாம் வேந்தன் போகி அரம்பையரை
நோக்கி நும்மை நோக்கான் நீர் நோவது ஒழிமின் எனத் துறந்தாள். 352

பிடிக்கை போலும் திரள் குறங்கின் அணியும் நீக்கிப் பிணை அன்னாள்
அடிக் கிண்கிணியும் அம் சிலம்பும் விரல் மோதிரத்தோடு அகற்றிய பின்
கொடிப் பூத்து உதிர்ந்த தோற்றம் போல் கொள்ளத் தோன்றி அணங்கு அலற
உடுத்தாள் கல் தோய் நுண் கலிங்கம் உரவோன் சிறுவன் உயர்க எனவே. 353

பால் உடை அமிர்தம் பைம் பொன் கலத்திடைப் பாவை அன்ன
நூல் அடு நுசுப்பின் நல்லார் ஏந்தவும் நேர்ந்து நோக்காச்
சேல் அடு கண்ணி காந்தள் திருமணித் துடுப்பு முன் கை
வால் அடகு அருளிச் செய்ய வனத்து உறை தெய்வம் ஆனாள். 354

திருத்தக்க தேவர் இயற்றிய சீவக சிந்தாமணி 
நாமகள் இலம்பகம்

Tuesday, 9 June 2020

கந்துக்கடன் Seevaga-Sindamani 331

கந்து (=துணை) என்னும் பெயர் கொண்ட அரசன் வாளேந்தி வேட்டைக் கோலத்தில் அங்கு  வந்தான் 320

இருளில் மணி போல் கிடக்கும் குழந்தையைக் கண்டான் 321 
நம்பியிடம் (ஆண் குழந்தை) வந்தான் 322

குழந்தை தும்மியது. 
அப்போது "சீவ" என்று குழந்தையை வாழ்த்தும் குரல் ஒன்று கேட்டது 323
அது சண்பகமாலை தெய்வத்தின் குரல் 324
இந்த வாழ்த்தொலியால் குழந்தை  "சீவகன்" என்று பின்னர் பெயர் சூட்டப்பட்டான்

கந்துக்கடன் குழந்தையைத் தூக்கிச் சென்றான் 325 
குழந்தை கிடைத்த இனிய செய்தியைத் தன் மனைவிக்குத் தெரிவித்தான். 326
"உன் மகன்" என்றான். 327
களிப்புற்ற மனைவியிடம் குழந்தையைக் கொடுத்தான் 328
மகளிர் குந்தைக்குப் பொன்முத்தம் சிந்தினர் 329

குழந்தை கிடைத்த மகிழ்ச்சியில் அரசன் கந்துக்கடன் மற்றவர்களுக்கு நிதிக்கொடை வழங்கி மகிழ்ந்தான். 330
இரவலர்களுக்கு உதவி மகிழ்ந்தான் 331

பாடல்

நாளொடு நடப்பது வழுக்கி மின்னொடு ஊர்
கோளொடு குளிர் மதி வந்து வீழ்ந்து எனக்
காளக உடையினன் கந்து நாமனும்
வாளொடு கனை இருள் வந்து தோன்றினான். 320

வாள் கடைந்து அழுத்திய கண்ணினார்கள் தம்
தோள் கடைந்து அழுத்திய மார்பன் தூங்கு இருள்
நீள் சுடர் நிழல் மணி கிழிப்ப நோக்கினான்
ஆள் கடிந்து அணங்கிய அணங்கு காட்டுளே. 321

அருப்பு இள முலையவர்க்கு அனங்கன் ஆகிய
மருப்பு இளம் பிறை நுதல் மதர்வை வெம் கதிர்
பரப்புபு கிடந்து எனக் கிடந்த நம்பியை
விருப்பு உள மிகுதியின் விரைவின் எய்தினான். 322

புனை கதிர்த் திருமணிப் பொன் செய் மோதிரம்
வனை மலர்த் தாரினான் மறைத்து வண் கையால்
துனை கதிர் முகந்து என முகப்பத் தும்மினான்
சினை மறைந்து ஒரு குரல் சீவ என்றதே. 323

என்பு எழுந்து உருகுபு சோர ஈண்டிய
அன்பு எழுந்து அரசனுக்கு அவலித்து ஐயனை
நுன் பழம் பகை தவ நூறுவாய் என
இன்பழக் கிளவியின் இறைஞ்சி ஏத்தினாள். 324

ஒழுக்கியல் அரும் தவத்து உடம்பு நீங்கினார்
அழிப்பரும் பொன் உடம்பு அடைந்தது ஒப்பவே
வழுக்கிய புதல்வன் அங்கு ஒழிய மாமணி
விழுத் தகு மகனொடும் விரைவின் ஏகினான். 325

மின் அடு கனை இருள் நீந்தி மேதகு
பொன் உடை வள நகர் பொலியப் புக்கபின்
தன் உடை மதிசுடத் தளரும் தையலுக்கு
இன் உடை அருள் மொழி இனிய செப்பினான். 326

பொருந்திய உலகினுள் புகழ் கண் கூடிய
அருந்ததி அகற்றிய ஆசு இல் கற்பினாய்
திருந்திய நின் மகன் தீதின் நீங்கினான்
வருந்தல் நீ எம் மனை வருக என்னவே. 327

கள் அலைத்து இழி தரும் களி கொள் கோதை தன்
உள் அலைத்து எழு தரும் உவகை ஊர்தர
வள்ளலை வல் விரைந்து எய்த நம்பியை
வெள் இலை வேலினான் விரகின் நீட்டினான். 328

சுரிமுக வலம்புரி துவைத்த தூரியம்
விரிமுக விசும்பு உற வாய் விட்டு ஆர்த்தன
எரிமுக நித்திலம் ஏந்திச் சேந்த போல்
கரிமுக முலையினார் காய் பொன் சிந்தினார். 329

அழுகுரல் மயங்கிய அல்லல் ஆவணத்து
எழுகிளை மகிழ்ந்து எமது அரசு வேண்டினான்
கழிபெரும் காதலான் கந்து நாமன் என்று
உழிதரு பெருநிதி உவப்ப நல்கினான். 330

திருமகன் பெற்று எனச் செம் பொன் குன்று எனப்
பெரு நல நிதி தலை திறந்து பீடு உடை
இரு நிலத்து இரவலர்க்கு ஆர்த்தி இன்னணம்
செருநிலம் பயப்பு உறச் செல்வன் செல்லுமே. 331

திருத்தக்க தேவர் இயற்றிய சீவக சிந்தாமணி 
நாமகள் இலம்பகம்


சண்பகமாலை Seevaga-Sindamani 319

விசயை புலம்புதல்

மன்னன் மகன் பிறந்தான் 
சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யுங்கள் 306
அரச பண்டாரத்தில் உள்ள பொருள்களை அள்ளிச் செல்லுங்கள் என்று பறை அறைமின் 307 

’சாதகம்’ எழுதுங்கள் 
அரசர்களுக்குச் செய்தி ஓலை அனுப்புங்கள் 
பொன்னும் யானையும் புலவர்களுக்கு வழங்குங்கள் 
என்றெல்லாம் மன்னன் சொல்லப் பிறப்பாய் என்று எண்ணியிருந்தேன் 
இந்தச் சுடுகாடோ நீ பிறக்க வேண்டிய இடம் - என்றெல்லாம் சொல்லிப் புலம்பினாள். 308

ஊளையிடும் நரி ஓசை இங்கு முழவு 
பிணம் எரியும் தீ இங்கு விளக்கு 
பேய் ஆட்டம் இங்கு நடனம் 
கூகை ஒலி இங்கு உனக்குப் பாராட்டு 
இவ்வாறு பிறந்திருக்கிறாயே - என்று ஓலமிட்டாள் 309

பகை மன்னன் மண் 
பிணம் சுடும் காடு 
உற்றார் இல்லாத் தனியேன் 
ஒதுங்க முடியாத நள்ளிருள் 
எப்படி வளரப்போகிறாய் 
என் உயிர் இன்னும் இருக்கிறதே - என்று கதறினாள் 310

பிண்டிப் பெருமான் அடிகளே துணை 
"சிந்தாமணியே" இங்குக் கிடக்கிறாயே - என்றாள். 311

மரங்களிலிருந்து பனி நீர் உதிர்ந்தன. அவை விசையை நிலையை எண்ணி அழுவது போல இருந்தன 312

விசையை வாழ்க்கை சுடர் மறையும் அந்தி வேளை போல இருந்தது 313

அங்கிருந்த தெய்வம் ஒன்று ‘சண்பகமாலை’ பெயர் வைத்துக்ககொண்டு விசையையிடம் வந்தது 314 

பாவாய்! நான் செய்த பாவத்தால் இங்குத் தனிமையில் துன்புறுகிறேன் - என்றாள் விசயை 315

பகைவன் என் கணவனைக் கொன்றுவிட்டான். 
நானும் சாவது நன்று என்றாள் 316

நம்பியை ஈமப் பள்ளியில் இட்டுவிட்டனர். 
நான் கடல் அலையில் ஆடும் சங்குப் பூச்சி போல் அல்லாடுகிறேன் 317 
என்றாள் விசயை. 

தெய்வம் விசயையைத் தூக்கிச் சென்றது

சண்பகமாலை தெய்வம் விசயை மட்டும் தனி இடத்துக்குத் தூக்கிச் சென்று மறைத்தது 318

நம்பி! தனியே கிடக்கிறாயா - என்று புலம்பினாள். 319

பாடல்

கறை பன்னீர் ஆண்டு உடன் விடுமின் காமர்சாலை தளி நிறுமின்
சிறை செய் சிங்கம் போல் மடங்கிச் சேரா மன்னர் சினம் மழுங்க
உறையும் கோட்டம் உடன் சீமின் ஒண் பொன் குன்றம் தலை திறந்திட்டு
இறைவன் சிறுவன் பிறந்தான் என்று ஏற்பார்க்கு ஊர்தோறு உய்த்து ஈமின். 306

மாடம் ஓங்கும் வள நகருள் வரம்பு இல் பண்டம் தலை திறந்திட்டு
ஆடை செம் பொன் அணிகலங்கள் யாவும் யாரும் கவர்ந்து எழு நாள்
வீடல் இன்றிக் கொளப் பெறுவார் விலக்கல் வேண்டா வீழ்ந்தீர்க்குக்
கோடி மூன்றோடு அரைச் செம் பொன் கோமான் நல்கும் என அறைமின். 307

அரும் பொன் பூணும் ஆரமும் இமைப்பக் கணிகள் அகன் கோயில்
ஒருங்கு கூடிச் சாதகம் செய்து ஒகை அரசர்க்கு உடன் போக்கிக்
கரும் கைக் களிறும் கம்பலமும் காசும் கவிகள் கொள வீசி
விரும்பப் பிறப்பாய் வினை செய்தேன் காண இஃதோஒ பிறக்குமா. 308

வெவ் வாய் ஓரி முழவு ஆக விளிந்தார் ஈமம் விளக்கு ஆக
ஒவ்வாச் சுடுகாட்டு உயர் அரங்கில் நிழல் போல் நுடங்கிப் பேய் ஆட
எவ்வாய் மருங்கும் இருந்து இரங்கிக் கூகை குழறிப் பாராட்ட
இவ்வாறு ஆகிப் பிறப்பதோ இதுவோ மன்னர்க்கு இயல் வேந்தே. 309

பற்றா மன்னன் நகர்ப் புறமால் பாயல் பிணம் சூழ் சுடு காடால்
உற்றார் இல்லாத் தமியேனால் ஒதுங்கல் ஆகாத் தூங்கு இருளால்
மற்று இஞ் ஞாலம் உடையாய்! நீ வளரும் ஆறும் அறியேனால்
எற்றே இது கண்டு ஏகாதே இருத்தியால் என் இன் உயிரே. 310

பிறந்த நீயும் பூம் பிண்டிப் பெருமான் அடிகள் பேர் அறமும்
புறந்தந்து என்பால் துயர்க் கடலை நீந்தும் புணை மற்று ஆகாக்கால்
சிறந்தார் உளரேல் உரையாயால் சிந்தா மணியே! கிடத்தியால்
மறம் கூர் நும் கோன் சொல் செய்தேன் மம்மர் நோயின் வருந்துகோ. 311

அந்தோ! விசயை பட்டன கொண்டு அகங்கை புறங்கை ஆனால் போல்
கந்தார் களிற்றுத் தம் கோமான் கழிய மயில் ஓர் மயில் ஊர்ந்து
வந்தாள் போலப் புறம் காட்டுள் வந்தாள் தமியே என மரங்கள்
சிந்தித்து இரங்கி அழுவன போல் பனி சேர் கண்ணீர் சொரிந்தனவே. 312

அடர் பொன் பைம் பூண் அரசு அழிய அரும் பொன் புதல்வன் பெற்று இருந்த
இடர் கொள் நெஞ்சத்து இறைவியும் இருங் கண் ஞாலத்து இருள் பருகிச்
சுடர் போய் மறையத் துளங்கு ஒளிய குழவி மதிபெற்று அகம் குளிர்ந்த
படர் தீர் அந்தி அது ஒத்தாள் பணை செய் கோட்டுப் படா முலையாள். 313

தேன் அமர் கோதை மாதர் திருமகன் திறத்தை ஓராள்
யான் எவன் செய்வல் என்றே அவலியா இருந்த போழ்தில்
தான் அமர்ந்து உழையின் நீங்காச் சண்பக மாலை என்னும்
கூனியது உருவம் கொண்டு ஓர் தெய்வதம் குறுகிற்று அன்றே. 314

விம்முறு விழும வெந் நோய் அவண் உறை தெய்வம் சேரக்
கொம் என உயிர்த்து நெஞ்சில் கொட்புறு கவலை நீங்க
எம் அனை தமியை ஆகி இவ் இடர் உற்றது எல்லாம்
செம் மலர்த் திருவின் பாவாய் யான் செய்த பாவம் என்றாள். 315

பூவினுள் பிறந்த தோன்றல் புண்ணியன் அனைய நம்பி
நாவினுள் உலகம் எல்லாம் நடக்கும் ஒன்றாது நின்ற
கோவினை அடர்க்க வந்து கொண்டு போம் ஒருவன் இன்னே
காவி அம் கண்ணினாய்! யாம் மறைவது கருமம் என்றாள். 316

சின் மணி மழலை நாவின் கிண்கிணி சிலம்பொடு ஏங்க
பன் மணி விளக்கின் நீழல் நம்பியைப் பள்ளி சேர்த்தி
மின் மணி மிளிரத் தேவி மெல்லவே ஒதுங்கு கின்றாள்
நன் மணி ஈன்று முந்நீர்ச் சலஞ்சலம் புகுவது ஒத்தாள். 317

ஏதிலார் இடர் பல் நூறு செய்யினும் செய்த எல்லாம்
தீது இல ஆக என்று திரு முலைப் பால் மடுத்துக்
காதலான் பெயர் சுமந்த கதிர் மணி ஆழி சேர்த்திக்
கோதை தாழ் குழலினாளைக் கொண்டு போய் மறைய நின்றாள். 318

நல் வினை செய்து இலாதேன் நம்பி நீ தமியை ஆகிக்
கொல் வினை மாக்கள் சூழக் கிடத்தியோ என்று விம்மாப்
புல்லிய கொம்பு தான் ஓர் கருவிளை பூத்ததே போல்
ஒல்கி ஓர் கொம்பு பற்றி ஒரு கணால் நோக்கி நின்றாள். 319

திருத்தக்க தேவர் இயற்றிய சீவக சிந்தாமணி 
நாமகள் இலம்பகம்

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி