Showing posts with label சிறுபாணாற்றுப்படை. Show all posts
Showing posts with label சிறுபாணாற்றுப்படை. Show all posts

Thursday, 23 April 2015

சிறுபாணாற்றுப்படை, தனிப்பாடல்கள் – பகுதி 32

சிறுபாணாற்றுப்படை நூலின் முடிலில் இரண்டு வெண்பாப் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவை பத்துப்பாட்டு என்னும் தொகுப்பினைச் செய்தவர் காலத்தவை. சுமார் 200 ஆண்டுகள் பிற்பட்டவை. இரண்டும் அகப்பொருள் சார்ந்த பாடல்கள். பெண் ஒருத்தி நல்லியக்கோடன் மீது காதல் கொண்டு சொல்வதாக அமைந்துள்ளன.
எயிற்பட்டின நாடன்
ஆண் தோள் அணிகலன் பூண்
நேர்த்தியான அணிகலன்களைப் பூண்ட பெண்மணிகளை வருத்தும் அழகு கொண்டு காமநோய் உண்டாக்கும் ஆண்தெய்வமாக எயிற்பட்டின நாடன் திகழ்கிறான். மற்று, அவனே அந்த நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் விளங்குகிறான். அவர்களை வருத்தியவை அவனது செம்மாந்த தோள். சிலை (வில்) மாட்டிக்கொண்டிருக்கும் தோள். மணி பதித்த பூண் அணிந்த தோள். ‘இம்’ என்று அருவி முழங்கும் நாடன் அவன்.  

வெண்பா

அணி இழையார்க்கு ஆர் அணங்கு ஆகி, மற்று அந் நோய்             
தணி மருந்தும் தாமே ஆம் என்ப - மணி மிடை பூண்        
இம்மென் முழவின் எயிற்பட்டின நாடன்     
செம்மல் சிலை பொருத தோள்.               1


உயர் நல்லியக்கோடன்
சந்தனம் பூசிய அவனது மார்பு அவளது நெஞ்சத்தைக் குளிரவைத்தது. படமெடுத்தாடும் பாம்பு போன்ற அவளது அல்குல் இடையை மறைத்துக்கொண்டிருக்கும் கொடியாடையை நழுவும்படிச் செய்கிறான். அவன் தலையில் சூடிய கண்ணிமாலை அவளைச் சுட்டெரிக்கிறது. அவன்மீது அவளுக்குக் காமம்.
வெண்பா


நெடு வரைச் சந்தனம் நெஞ்சம் குளிர்ப்பப்   
படும், அடும் பாம்பு ஏர் மருங்குல் - இடு கொடி        
ஓடிய மார்பன் உயர் நல்லியக்கோடன்           
சூடிய கண்ணி சுடும்.           2


சிறுபாணாற்றுப்படை, குறிஞ்சிக் கோமான் பகுதி 31

அவன் குறிஞ்சிக் கோமான்.
மலைப்பெண்ணின் மணாளன்.
மும்முகச் சிலேடை
குறிஞ்சிக் கோமான்

 • குறிஞ்சிக் கோமான் என்று சிறப்பிக்கப்படுவதால் நல்லியக்கோடன் மலைநாட்டுத் தலைவன் என்பது புலனைகிறது.
மனிதப் பெண்

 • மகளிர் இடுப்புறுப்பு துளங்கும். அது துளங்கும் நொடிப்பிற்கு ஏற்ப அதன்மேல் துகிலாடை. அம்மகளிர் குளித்தபின் தம் கூந்தலை அகில் கட்டை புகையும் நறுமணப் புகையில் உலர்த்துவர்.
மயில் பெண்

 • மயிலானது மகளிரின் துகிலாடை உடுத்திய இடையைப்போலத் தன் தோகையை விரித்து ஆடும். அவர்களின் கூந்தலுக்குள் அகில் புகை நுழைவது போல் மஞ்சு எனப்படும் வெண்மேகக் குருட்டு மாசிகள் மயில் விரித்தாடும் தோகைக்குள் நுழையும்.
மலைப்பெண்

 • அவனது மலையாகிய பெண் மூங்கில் காட்டைத் தன் இடைத்துகிலாக உடுத்தியிருப்பாள். அம் மூங்கில் காடு காற்றில் அசைந்தாடும்போது மழை பொழியும் மேகத்துணி அதில் அசைந்தாடும். இந்த மூன்று ஆட்டங்களும் ஒத்திசைக் கூட்டித் தருவது போல் இடியிசை முழக்கம் இருக்கும். அது அவனது மலைமுகட்டில் மோதி எதிரொலித்து இறந்துபோகும்.
குறிஞ்சிக் கோமானாகிய நல்லியக்கோடன் கொய்துக் கொண்டுவந்த தளிர்மாலையைத் தன் அடையாளப் பூவாகத் தலையில் அணிந்திருப்பான். (அந்தத் தளிர்மாலையை மருக்கொழுந்து மாலை என்றோ, மாந்தளிர் மாலை என்றோ கருதிப் பார்க்கலாம். )
ஒருவருக்கு அவர் வாழும் காலத்தில் செல்லுபடியாகும் புகழிசை நாளடைவில் மறைந்து போகும்
நல்லியக்கோடனின் புகழிசை\யோ என்றும் நிலைபெற்றிருக்கும். 
காரணம் 
அது அவனது பண்பினால் வந்தது. 
கொடை நல்கி வாங்கியது அன்று.
அவனிடம் நீங்கள் விரும்பிச் சென்றால் உங்களது வாழ்க்கையானது வளம் பெறத்தக்க வகையில் பரிசில் பெறுவீர்கள்.
போகும்போது நடந்து செல்லும் நீங்கள் வரும்போது தேரில் வருவீர்கள்.

பாட்டு

மென் தோள்,
துகில் அணி அல்குல், துளங்கு இயல் மகளிர்           
அகில் உண விரித்த அம் மென் கூந்தலின்
மணி மயில் கலாபம் மஞ்சு இடைப் பரப்பி
துணி மழை தவழும் துயல் கழை நெடுங் கோட்டு,               265
எறிந்து உரும் இறந்த ஏற்று அருஞ் சென்னி,              
குறிஞ்சிக் கோமான், கொய் தளிர்க் கண்ணி,              
செல் இசை நிலைஇய பண்பின்,            
நல்லியக்கோடனை நயந்தனிர் செலினே. 
   

ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை
இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
சிறுபாண் ஆற்றுப்படை முற்றும்சிறுபாணாற்றுப்படை, தேரிலேற்றிப் பரிசு - பகுதி 30நல்லியக்கோடன் பரிசிலேற்றி
வலவனுடன் அனுப்பிய பாண்டில்வண்டி
இப்படிக் குதிரை பூட்டிய வண்டி.
அன்றே பரிசு. தேரிலேற்றிப் பரிசு
பரிசில் பெறுவதற்காகக் காத்திருக்க வைக்காமல் அன்றே பரிசில் நல்கி அனுப்பி வைப்பான்.
 • பரிசுப் பொருள்களையும் உங்களையும் பாண்டில்-வண்டியில் ஏற்றி அனுப்பி வைப்பான்.
 • அவன் தரும் பரிசுப் பொருள்கள், வீரர்களின் திறத்தால் பெற்றவை.
இது மாடு பூட்டிய பாண்டில்
நல்லியக்கோடன் பரிசிலுடன் ஏற்றி
அனுப்பிவைப்பது
குதிரை பூட்டிய பாண்டில்
பாண்டில் (கூட்டுவண்டி)
 • அவற்றைப் பரிசில் பொருள்களாக ஏற்றி அனுப்பிவைக்கும் வண்டி கார்மேகம் கவிந்த வானத்தில் பால்கதிர் பரப்பிக்கொண்டு உலாவரும் மதியம் போலச் செல்லும்.
 • வண்டிச் சக்கரத்தின் ஆரைக்கால் குடத்தில் பொருத்தப்பட்டிருக்கும். அந்தக் குடம் கூர் உளிக் குறடு கொண்டு செதுக்கிய வேலைப்பாடு கொண்டது. இப்படிச் செதுக்கியவர் கருந்தொழில் வினைஞர். இது கைத்திறத் தொழில் (கைவினை).
 • முருக்கம் பூ பூத்திருப்பது போன்ற வேலைப்பாடுகள் சக்கரக் குடத்திலும், பாண்டில் வண்டி மூடாக்கிலும் உண்டு.
 • பாண்டில்-வண்டிப் போர்வைத் துணியிலும் சிவப்புத் துணிக் கலைத்தொழில் நிறைந்திருக்கும்.
 • குதிரை பூட்டிய அந்தப் பாண்டில்-வண்டியை ஓட்டிச் செல்ல ஓட்டிப் பழக்கப்பட்ட பாகனையும் அவனே அனுப்பி வைப்பான்.
 • பாண்டிலானது வாள் போன்ற முகப்புத் தோற்றம் கொண்டிருக்கும்.
போகும்போது நடந்து செல்கிறீர்கள். வரும்போது தேரில் வருவீர்கள்.
ஆரம் சூழ்ந்த அயில்வாய் நேமி
கூர் உளி பொருத
வடு ஆழ் நோன் குறட்டு ஆரம்
பாட்டு

வயவர் தந்த வான் கேழ் நிதியமொடு;             
பருவ வானத்துப் பாற்கதிர் பரப்பி           250
உருவ வான் மதி ஊர்கொண்டாங்கு
கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு   
ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு,          
சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடுஞ் சினைத்        
ததர் பிணி அவிழ்ந்த தோற்றம் போல,              255
உள் அரக்கு எறிந்த உருக்குறு போர்வை,       
கருந் தொழில் வினைஞர் கைவினை முற்றி,          
ஊர்ந்து பெயர் பெற்ற எழில் நடைப் பாகரொடு;         
மா செலவு ஒழிக்கும் மதனுடை நோன் தாள்            
வாள் முகப் பாண்டில் வலவனொடு; தரீஇ,  260
அன்றே விடுக்கும், அவன் பரிசில்         மென் தோள்,
சிறுபாணாற்றுப்படை, விருந்தாளிகள் - பகுதி 29


யார் யாருக்கு இப்படி ஊட்டுவான்
நயவர்கள் எனப்படுவோர் பகைவர்களை அகன்றோடச் செய்தும், வேல் வலிமை மிக்க மன்னர்களின் கோட்டையைத் தாக்கியும் தன் திறமை மிகுதியால் வெற்றி கண்டவர்கள். இப்படித் தன்னை நயந்து தனக்குத் துணையாக இருக்கும் நயவர்களுக்கும், பாணர்களுக்கும் ஊட்டுவான். பரிசும் வழங்குவான்.

பாட்டு

திறல் சால் வென்றியொடு தெவ்வுப் புலம் அகற்றி,            
விறல் வேல் மன்னர் மன் எயில் முருக்கி,   
நயவர், பாணர், புன்கண் தீர்த்தபின்,     


Wednesday, 22 April 2015

சிறுபாணாற்றுப்படை, அரசன் விருந்து - பகுதி 28

அளவு நோக்காமல் உருவு 
நோக்கிய கற்பனைப் படம்
கோள்மீன் 
சூழ்ந்த            
இளங்கதிர் 
ஞாயிறு போல
உண்கலம் 
வைத்து
விருந்து
படைப்பான்.
அரசன் நடுவில்

நல்லியக்கோடன் நல்கும் உடையும் உணவும்
 • முதலில் புத்தாடை உடுத்திக்கொள்ளச் செய்வான். அது மூங்கிலில் உரியும் தோல் போல் இருக்கும்.
 • பாம்பு வெகுண்டால் கடிக்கும். கடிபட்டவர் வாயில் நுரை தள்ளும். அந்த நுரையைப் போல நுதிக்கும் அரிசிச் சோற்றுக் கஞ்சித் தேறலை நல்குவான். ( இது இக்காலத்தில் உணவிடுவதற்கு முன்பு வழங்கப்படும் சூப் போன்றது. )
பின்னர் பொன் வட்டிலில் அடிசில் படைக்கப்படும்.
 • ஒளி மிக்க வானத்தில் கோளும் மீனும் சூழ்ந்து விளங்குவது போல பொன்வட்டில்களைப் பரப்பி அதில் உணவு அளிக்கப்படும். கறிகாய்க்கூட்டுப் பொறியலுடன் கூடிய உணவுக்கு அடிசில் என்று பெயர்.
அந்த அடிசில் 
முன்னோன் ஒருவன் எழுதிய சமையல் நூலில் கூறப்பட்டுள்ள முறைமையிலிருந்து சற்றும் வழுவாமல் சமைக்கப்பட்டது.
 • அந்த ஒருவன் தனது அம்பை எய்து காட்டை எரியூட்டியவன். அவன் எய்த அம்பு பிளவுபட்ட கவட்டை முனை கொண்டது. அவன் தன் தோளின் பின்புறம் அம்பறாத் தூணியை அணிந்திருந்தான். மலர்ந்த பூமாலைக் கச்சத்தைத் தன் இடுப்பில் கட்டியிருந்தான்.
இவனது அண்ணன்தான் அடிசில் நூலின் படைப்பாளி. இவன் பனிவரை மார்பன் என்று சிறப்பித்துக் கூறப்படுபவன். அவன் தன் நூலில் சமையல் கலையின் நுட்பங்களைக் குறிப்பிட்டிருந்தான். 
(சமையல் நூலின் ஆசிரியன் யார் என்பது விளங்கவில்லை, கா எரியூட்டியவன் அருச்சுனன் அவன் அண்ணன் வீமன் சமையல் கலையில் வல்லவன் என்றும் கூறப்படிகிறது. )
கா எரியூட்டியவன் நளன் என்றால் அவனது அண்ணன் சமையல் நூலை எழுதியவன் என முனியும். 
 • இந்த சமையல்நூல் குறிப்புகளில் பழகிச் சமைத்த உணவை நல்லியக்கோடன் தானே முன்னின்று உங்களுக்கு ஊட்டுவான். 
ஊட்டுவதில் அவனுக்கிருந்த ஆசை நிறைவடைவதே யில்லை. இன்னும் ஊட்டியிருக்கலாம் , இப்படி இப்படியெல்லாம் ஊட்டியிருக்கலாம் என்று தனக்குத்தானே குறைபட்டுக் கொள்ளும் ஆசை கொண்டவன்.
பாட்டு

[மாசு இல்,     235]
காம்பு சொலித்தன்ன அறுவை உடீஇ,             
பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கி,  
கா எரியூட்டிய கவர் கணைத் தூணிப்
பூ விரி கச்சைப் புகழோன் தன்முன்,   
பனிவரை மார்பன், பயந்த நுண் பொருள்         240
பனுவலின் வழாஅப் பல் வேறு அடிசில்,       
வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த           
இளங் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து    
விளங்கு பொற்கலத்தில் விரும்புவன பேணி,         
ஆனா விருப்பின், தான் நின்று ஊட்டி,                245

சிறுபாணாற்றுப்படை, புகழும் பாங்கு - பகுதி 27

முதியோர்க்கு
முகிழ்த்த கை
இளையோர்க்கு
மலர்ந்த மார்பு
புகழத் தொடங்குதல்
அவன் முன் நீங்கள் பாடும்போது இயல்பாகவே உள்ள அவனது பண்புகளைப் பாராட்டிச் சில சொற்களைக் கூறுவீர்கள்.
 • முதியோரை வணங்க மொட்டுப்போல் மூடிக் கும்பிடும் கையையுடையவனே!
 • இளையோரைத் தழுவுவதற்காக மலர்ந்து விரியும் மார்பினை உடையவனே!
 • உழவர்களுக்கு நிழல் தரும் செங்கோலை உடையவனே!
 • தேர்ப்படை எதிரிகள் முன் அழல் கக்கும் வேலினை உடையவனே!
இப்படி ஒருசில சொல்லத் தொடங்கும் போதே அவன் கொடை நல்கத் தொடங்கிவிடுவான்.
பாட்டு

முதுவோர்க்கு முகிழ்த்த கையினை' எனவும்,        
'இளையோர்க்கு மலர்ந்த மார்பினை' எனவும்           
'ஏரோர்க்கு நிழன்ற கோலினை' எனவும்        
'தேரோர்க்கு அழன்ற வேலினை' எனவும்    
நீ சில மொழியா அளவை, மாசு இல், 235
சிறுபாணாற்றுப்படை, யாழ் - பகுதி 26

சிறுபாணாற்றுப்படை நூல் காட்டும் யாழ்


வகை வகையான யாழ்
புடைப்போவியம்
இடப்புறம் ஆண் யாழ் மீட்டுகிறான்
வலப்புறம் பெண் யாழ் மீட்டுகிறாள்
மகளிர் பாடுவது ஐந்திசைப் பண்
பின்புறமுள்ள ஐவர் ஐந்திசையை
மாறி மாறிக் கூட்டித்தர வரும் சேர்ந்திசைப் பண்ணிசையும் யாழிசையும் இணைத்து இசையமிழ்தம் பாய்கிறது
இவள் இரண்டு கைகளாலும் நரம்பைத் தடவிப் பண்ணிசைக்கிறாள்


உங்கள் யாழிலிருந்து அமிழ்தம் பாய்ச்சுங்கள்
யாழ்நூல் வழி மீட்டுங்கள்
நல்லியக்கோடன் முன்னிலையில் யாழ் மீட்டுங்கள்.
 • பல இசைக்கருவிகளும் ஒத்தியங்க மீட்டுங்கள்.
 • ஏழு பண்களில் முதல் பண்ணாகிய குரல் பண்ணில் தொடங்கி வாயிலிருந்து பாடிவரும் குரலிசைக்கு ஏற்ப யாழ் மீட்டிப் பண் பாடுங்கள்.
 • பாடிப்பாடிப் பண்ணின் துறைகளில் முதிர்ச்சி பெற்றவர்கள் நீங்கள். இசைநூல்களில் கூறப்படும் மரபுப்படி பாடுபவர்கள் நீங்கள். உங்களிடம் உள்ளது பண்ணின் பயன் தெரிந்த கேள்வி. (யாழ்)
கேள்வியாழ் ஊகக் குரங்கு போலவும், யாழில் கட்டப்பட்டுள்ள நரம்பு அக்குரங்கு பிடித்திருக்கும் பாம்பு போலவும் காணப்படும். பாம்பின் தலையும் வாலும் வெளியில் நீட்டுக் கொண்டிருக்கும்படி குரங்கு யாழைப் பிடித்துக் கொண்டிருப்பது போல, யாழில் கட்டியிருக்கும் நரம்பு மேலும் கீழும் அவிழ்ந்திருக்கும்.
 • யாழ் வளைவின் உள்பகுதி யாழுக்கு வயிறு. அதன் அகலப் பகுதியில் குமிழம் பழம் போல் நரம்பைக் கட்டியிருக்கும் திருகாணிகள் இருக்கும். அந்த ஆணிகள் யாழில் திருகப்பட்டிருக்கும் துளைப்பகுதியில் நீலநிற மணிகளை வரிசைப்படுத்தி வைத்திருப்பது போன்ற துளைவட்டங்கள் இருக்கும்.
இத்தகைய வனப்புள்ள யாழைப் போர்த்தியிருக்கும் பச்சை நிறப் போர்வையில் புகழத்தக்க கைவினை வேலைப்பாடுகள் பொதிந்திருக்கும்.
 • தாயின் முலைநரம்புகளில் அமிழ்தம் பொதிந்திருக்கும்.
 • குழந்தைக்கு இலிற்றும் அமிழ்தம் ஒருவகை.
 • கணவனுக்கு இலிற்றும் அமிழ்தம்  ( தேன் ) மற்றொரு வகை.
அதுபோல அடங்கிச் சுருண்ட யாழின் நரம்புகளிலிருந்து அமிழ்தம் இலிற்றும். மேலும் இந்த அமிழ்தத்தில் தேனும் கலக்கப்பட்டிருக்கும். குரலிசைக்கு ஏற்பக் குரல் பண்ணிசையில் தொடங்கிப் பாடுங்கள்.
பாட்டு

பைங் கண் ஊகம் பாம்பு பிடித்தன்ன
அம் கோட்டுச் செறிந்த அவிழ்ந்து வீங்கு திவவின்;            
மணி நிரைத்தன்ன வனப்பின்; வாய் அமைத்து,     
வயிறு சேர்பு ஒழுகிய வகை அமை அகளத்து,        
கானக் குமிழின் கனி நிறம் கடுப்ப,        225
புகழ் வினைப் பொலிந்த பச்சையொடு; தேம் பெய்து,        
அமிழ்து பொதிந்து இலிற்றும், அடங்கு புரி நரம்பின்;        
பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்விக்   
கூடு கொள் இன் இயம் குரல் குரல் ஆக,         
நூல் நெறி மரபின், பண்ணி, 'ஆனாது, 230
சிறுபாணாற்றுப்படை, நல்லியக்கோடன் பண்பு - பகுதி 25

நல்லியக்கோடன் - நிலா
சுற்றத்தாரும் மற்றவர்களும் - மீன்கள்
இப்படி அவன் விளங்குவான் 
நல்லியக்கோடனின் பண்புகள்
பாணர்களே! கோட்டை வாயிலில் நுழைவதற்கு உங்களுக்குத் தடை இல்லை. எனவே உள்ளே சென்றால் நல்லியக்கோடனைக் காணலாம்.

 • விண்மீன்களுக்கு இடையே வெண்ணிலா விளங்குவது போல அவள் தன் சுற்றத்தாருக்கு இடையேயும், அவனிடம் பரிசில் பெற்று அவனை வாழ்த்தும் பரிசிலர்களிடையேயும் இருப்பதைக் காணலாம்.
அவன் எத்தகைய பண்புகளைப் பெற்றவன் தெரியுமா!

 • செய்ந்நன்றி மறவாதவன்.
 • சிற்றினத் தொடர்பு இல்லாதவன்.
 • இன்முகம் காட்டுபவன்.
 • இனியனாக நடந்து கொள்பவன்.
 • சிறப்புகள் குவிந்தாலும் செறிவோடு விளங்குபவன்.
 • அறிந்தவர்களின் போற்றுதல்களைப் பெற்றவன்.
 • அஞ்சியவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பவன்.
 • அவனிடம் சினம் இருக்கும். அதில் கொடுமை செய்யும் வெஞ்சினம் இருக்காது.
 • அணி செய்து தன்னை அழகுபடுத்திக் கொள்வான்.
 • அழிக்க வரும் படையைத் தானே முன்னின்று தாங்குவான்.
 • வாளால் புகழ் பெற்ற வயவர்கள் இவனைப் பாராட்டிப் புகழ்வர்.
 • எண்ணியதை எண்ணியாங்கு முடிப்பவன்.
 • எல்லாரும் ஆசை கொள்ளும் பாங்கு உள்ளவன்.
 • நடுவு நிலைமையிலிருந்து பிறழாதவன்.
 • நிகழ்ந்ததை உணர்ந்து தீர்ப்பறம் கூறவல்லவன்.
 • பெண்கள் புகழும்போது இவன் ஒன்றும் அறியாதவனாக மாறிவிடுவான்.
 • பிறரிடம் தன் அறிவாற்றலைப் புலப்படுத்துவான்.
 • வரிசை அறிந்து கொடை வழங்குவான்.
 • இவ்வளவு தான் தரவேண்டும் என்று வரையறை செய்யாமல் வழங்குவான்.
அவன் அருகில் சென்று ….
நல்லியக்கோடன் அவையில் வீற்றிருக்கும் காட்சி            

அவன் குணங்களும் அவற்றை ஏத்துவோரும்
செய்ந்நன்றி அறிதலும், சிற்றினம் இன்மையும்,   
இன் முகம் உடைமையும், இனியன் ஆதலும்,        
செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த;         
அஞ்சினர்க்கு அளித்தலும், வெஞ் சினம் இன்மையும்,     210
ஆண் அணி புகுதலும், அழிபடை தாங்கலும்,           
வாள் மீக் கூற்றத்து வயவர் ஏத்த;        
கருதியது முடித்தலும், காமுறப் படுதலும்,
ஒரு வழிப் படாமையும், ஓடியது உணர்தலும்,        
அரி ஏர் உண்கண் அரிவையர் ஏத்த;       215
அறிவு மடம் படுதலும், அறிவு நன்கு உடைமையும்,        
வரிசை அறிதலும், வரையாது கொடுத்தலும்,         
பரிசில் வாழ்க்கைப் பரிசிலர் ஏத்த;      
பல் மீன் நடுவண் பால் மதி போல,      
இன் நகை ஆயமொடு இருந்தோற் குறுகி       220

சிறுபாணாற்றுப்படை, அரண்மனை - பகுதி 24

சென்னை, கோட்டை, அருங்காட்சியகம்
இதன் வாயில் எப்போதும்
திறந்திருந்தால் எப்படியோ
அப்படி நல்லியக்கோடன்
கோட்டை வாயில் திறந்தே இருக்கும்
யாருக்கு?
திறந்திருக்கும் அரண்மனை வாயில்
நல்லியக்கோடனின் அரணமனை வாயில் எப்போதும் இமயமலை பிளவு பட்டிருபது போல் திறந்தே இருக்கும். என்றாலும் எல்லாரும் எளிதில் உள்ளே சென்றுவிட முடியாது. பொருநர். புலவர் அந்தணர் ஆகி\யோர் மட்டும் தடையின்றி உள்ளே செல்லலாம்.
பாட்டு

பொருநர்க்கு ஆயினும், புலவர்க்கு ஆயினும்,          
அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும்,
கடவுள் மால் வரை கண் விடுத்தன்ன,              205
அடையா வாயில் அவன் அருங் கடை குறுகி 
           


Monday, 20 April 2015

சிறுபாணாற்றுப்படை, மாவிலங்கை விழாக்கோலம் - பகுதி 23

பேய்மகள் (கற்பனை)
மாவிலங்கை விழாக்கோலம்
நல்லியக்கோடனின் மாவிலங்கை அந்த ஆமூரிலிருந்து அதிக தொலைவிலுள்ளது அன்று. பக்கத்தில்தான் உள்ளது.

 • மாவிலங்கைப் பேரூரில் எப்போதும் நல்லியக்கோடனின் வெற்றிவிழாக் கொண்டாட்டம் நிகழும். விழாக் காலங்களில் தெருவில் புழுதி அடங்குவதற்காக நீர் தெளிப்பர்.அதன் மீது யானைகள் நடப்பதால் புழுதிகள் மேலும் அடங்கும்.
அத்தெருவில் நடக்கும் யானைகள் எப்படிப் பட்டவை தெரியுமா! பேய்மகள் போன்றவை.

 • பேயின் நாக்கு எரியும் தீயை இழுத்து வைத்திருப்பது போல இருக்கும். பல் பளிச்சென்று வெளியே தெரியும். காது கருமைநிற வெள்ளாட்டுக் காது போல் இருக்கும். காலடி கவட்டை போல் பிளவுபட்டிருக்கும். காலில் இருக்கும் பெரிய நகங்களால் பிணத்தைக் கிளறி அது உண்ணும். 
இந்தப் பேய் பிணத்தின் கறியை உண்டு சிரிப்பது போல யானை பிளிறிக்கொண்டு தெருவில் நடக்கும்.
பாட்டு

எரி மறிந்தன்ன நாவின், இலங்கு எயிற்று,  
கரு மறிக் காதின், கவை அடிப் பேய்மகள்    
நிணன் உண்டு சிரித்த தோற்றம் போல,        
பிணன் உகைத்துச் சிவந்த பேர் உகிர், பணைத் தாள்,         
அண்ணல் யானை அருவி துகள் அவிப்ப,       200
நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர்  

சேய்த்தும் அன்று; சிறிது நணியதுவே.            


Friday, 17 April 2015

சிறுபாணாற்றுப்படை, ஆமூர் விருந்து - பகுதி 22

பிடிக்கை அன்ன பின்னுவீழ் சிறுபுறம்
ஆமூர் மக்கள் உழவர்.
அவர்களின் எருதுகள் பாரம் தாங்கி இழுக்கும் வல்லமை பெற்றவை.
இத்தகைய எருதுகளைப் பூட்டி ஆமூர் உழவர்கள் நிலத்தை உழுவார்கள்.
அவர்களின் தங்கைமார் தம் தலைமுடியைப் பின்னிப் பின்புறம் தொங்கவிட்டிருப்பர். அச்சடை யானையின் துதிக்கை போலத் தொங்கும்.
அவர்கள் உங்களைத் நீங்கள் பெற்ற மக்கள் போல எண்ணித் தடுத்து நிறுத்தி உணவளிப்பர்.
உலக்கைப் பூண் தேய நன்றாகக் குத்திச் சமைத்த வெண்பொங்கல் சோற்றுக்கு நண்டுக் குழம்பு ஊற்றிப் போடுவதைப் பெறுவீர்கள்.
பாட்டு
வலம் பட நடக்கும் வலி புணர் எருத்தின்       
உரன் கெழு நோன் பகட்டு உழவர் தங்கை,    190
பிடிக் கை அன்ன பின்னு வீழ் சிறுபுறத்துத்   
தொடிக் கை மகடூஉ, மக முறை தடுப்ப,          
இருங் காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த           
அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு,         
கவைத் தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர்.               195
முன்தொடர்ச்சி


சிறுபாணாற்றுப்படை, ஆமூர் - பகுதி 21

மணிச்சிரல்
ஆமூர் மருத வளம் மிக்க ஊர்
நல்லியக்கோடனின் ஆமூர் மருத நிலவளம் மிக்க ஊர்.
அங்கு உயரமில்லாமல் வளர்ந்திருந்த காஞ்சி மரத்தில் ஆழமான நீர்நிலையின் பக்கமாகச் சாய்ந்திருந்த கிளையில் அமர்ந்திருந்த சிரல் என்று சொல்லப்படும் மீன்கொத்திக் குருவி அம் மரத்தடிப் பொய்கையிலிருந்த மீனைக் கொத்தப் பாய்ந்தது. அதன் கால் நகம் தாமரை இலையைக் கிழித்தது. மீனைக் கொத்திக் கொண்டு அங்கே அன்று மலர்ந்த தாமரைப் பூவின்மேல் அமர்ந்தது. அதன் குருவி-நீல நிறம். நிலாவைப் போல் மலர்ந்திருந்த தாமரையை அது மறைத்தது. இச்செயல் கிரகண நாளில் நிலாவைப் பாம்பு மறைத்துவிட்டு விலகுவது போல இருந்தது.
இத்தகைய நீர்வளம் மிக்க ஊர்தான் ஆமூர்.
அவ்வூருக்கு அகழியும் உண்டு.
அங்கு அந்தணர்கள் வருவதில்லை.
உழவர்கள் மட்டுமே வாழ்ந்து வந்தனர்.
அங்குச் சென்றால்….
பாட்டு

நறும் பூங் கோதை தொடுத்த நாள் சினைக் 
குறுங் கால் காஞ்சிக் கொம்பர் ஏறி,     
நிலை அருங் குட்டம் நோக்கி, நெடிது இருந்து,   180
புலவுக் கயல் எடுத்த பொன் வாய் மணிச் சிரல்       
வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை
முள் அரைத் தாமரை முகிழ் விரி நாள்போது            
கொங்கு கவர் நீலச் செங் கண் சேவல்              
மதி சேர் அரவின் மானத் தோன்றும்   185
மருதம் சான்ற மருதத் தண் பணை,   
அந்தணர் அருகா, அருங் கடி வியல் நகர்,      
அம் தண் கிடங்கின், அவன் ஆமூர் எய்தின்


பின்தொடர்ச்சி


Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி