Showing posts with label சிறுபஞ்சமூலம். Show all posts
Showing posts with label சிறுபஞ்சமூலம். Show all posts

Sunday, 11 June 2017

சிறுபஞ்சமூலம் சேர்க்கை SiruPanchaMulam Added


புறத்திரட்டில் கண்ட பாடல்கள்
சொல்-பிரிப்பு பதிவு

அச்சமே, ஆயுங்கால் நன்மை, அறத்தொடு,
கச்சம் இல் கைம்மாறு, அருள், ஐந்தால்-மெச்சிய
தோகை மயில் அன்ன சாயலாய்!-தூற்றுங்கால்
ஈகை வகையின் இயல்பு.  (206)

 1. அச்சம் கொள்ளுதல்
 2. ஆராயும்போதெல்லாம் நன்மை செய்தல் 
 3. அறநெறியில் வாழ்தல் 
 4. கட்டுப்பாடு இல்லாமல் கைம்மாறு செய்தல் 
 5. அருள் வழங்குதல்

ஆகிய இவை ஐந்தும் 
போற்றும் தோகைமயில் போன்றவளே!
சொல்லும் காலத்தில் ஈகை வகையின் பாங்குகளாகக் கொள்ளத்தக்கவை.

கைம்மாறும், அச்சமும், காணின் பயம் இன்மை,
பொய்ம்மாறு நன்மை, சிறு பயம், மெய்ம் மாறு
அருள் கூடி ஆர் அறத்தோடு, ஐந்து இயைந்து, ஈயின்,-
பொருள் கோடி எய்தல், புகன்று.   (207)

 1. கைம்மாறாகத் திருப்பிச் செய்தல் 
 2. தீயன செய்ய அஞ்சுதல் 
 3. எதிராளிகளைக் காணின் அச்சம் கொள்ளாமை 
 4. பொய்யை மாற்றி நன்மை செய்தல் 
 5. சிறு பயன் தரக்கூடியதாயினும் உடம்பால் உதவும் அருளோடு கூடிய அறம் 

இவை ஐந்து பாங்குளோடு கொடுத்து உதவினால், பொருளைக் கோடி கோடியாகப் பெறலாம்.


இம்மை நலன் அழிக்கும்; எச்சம் குறைபடுக்கும்;
அம்மை அரு நரகத்து ஆழ்விக்கும்; மெய்ம்மை
அறம் தேயும்; பின்னும், அலர்மகளை நீக்கும்;-
மறத்தேயும் பொய் உரைக்கும் வாய்.   (311)

பொய் சொல்லுதல் 

 1. இம்மைப் பயனை அழிக்கும்
 2. மிஞ்சும் நல்ல பெயரைக் கெடுக்கும் 
 3. அடுத்து நரகத்தில் அழுத்திவைக்கும் 
 4. அறத்தைத் தேய்ம்படி செய்யும் 
 5. திருமகள் நீங்கும்படிச் செய்யும் 

அதனால் மறந்த நிலையிலும் பொய் உரைக்கும் வாய் வேண்டவே வேண்டாம்.

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு

சிறுபஞ்சமூலம் பாயிரம் SiruPanchaMulam Prologue


மல்லிவர்தோண் மாக்காயன் மாணாக்கன் மாநிலத்துப்
பல்லவர் நோய்நீ்க்கும் பாங்கினாற்-கல்லா
மறுபஞ்சந் தீர்மழைக்கை மாக்காரி யாசான்
சிறுபஞ்ச மூலஞ்செய் தான்

காரியாசான் என்பவன் சிறுபஞ்சமூலம் என்னும் நூலைச் செய்தான். 
கல்லாத களங்கமாகிய மறு என்னும் பஞ்சத்தைப் போக்குவதற்காகச் செய்தான். 
அதனால் "மாக்காரியாசான்" என்னும் சிறப்பினைப் பெற்றான். 
இவன் மாக்காயன் என்பவனின் மாணாக்கன். 
இந்த மாக்காயன் மற்போரில் வல்லமை காட்டிய தோளை உடையவன். 
மாநிலத்தில் உள்ள பலரின் மனநோய்களையும் நீக்கும் பாங்கினால் நூல் செய்தான். 
(மா காயன் - மா காயம் - பெரிய உடம்பு)
(காரி - நஞ்சு உண்ட சிவபெருமான், மழை பொழியும் கார் மேகம் போன்றவன்)

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு

Saturday, 27 May 2017

சிறுபஞ்சமூலம் 96 SiruPanchaMulam 96

வழிப்படர் வாய்ப்ப வருந்தாமை வாயல்
குழிப்படல் தீச்சொற்க ளோடு மொழிப்பட்ட
காய்ந்து விடுதல் களைந்துய்யக் கற்றவர்
ஆய்ந்து விடுதல் அறம். 96

 1. தீய வழியில் சென்றவரை,  துன்பத்தில் வருந்தாமல் காக்க வேண்டும் 
 2. உண்மை அல்லாத குழியில் அவரைத் தள்ளக்கூடாது 
 3. தீய சொற்களை அவர்மீது வீசக் கூடாது. 
 4. சினந்து பேசக்கூடாது 
 5. அவரது துன்பத்தைக் களைந்து உய்விக்க வேண்டும்.

கற்றவர் இவற்றை ஆராய்ந்து அவரை விடுதலை செய்வது கடமை.

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு

சிறுபஞ்சமூலம் 95 SiruPanchaMulam 95

பத்தினி சேவகன் பாத்தில் கடுந்தவசி
பொத்தில் பொருள்-திறத்துச் செவ்வியான் பொத்தின்றி
வைத்தால் வழக்குரைக்கும் சான்றான் இவர்செம்மை
செத்தால் அறிக சிறந்து! 95

 1. கற்புள்ள பத்தினிப் பெண் 
 2. அடிமைத் தொழிலாளி 
 3. பகிர்ந்து உண்ட இல்லத்தான்
 4. கடுந்தவம் மேற்கொண்ட தவசி 
 5. பொதுமை இல்லாமல் வைத்திருக்கும் பொருள்மீது அதன் பொதுமையை நிலைநாட்ட வழக்குரைத்த சான்றோன் 

ஆகியோரைச் செத்த பின்னராவது தெரிந்துகொள்ள வேண்டும்.

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு

சிறுபஞ்சமூலம் 94 SiruPanchaMulam 94

உண்ணிடத்தும் ஒன்னார் மெலிவிடத்தும் மந்திரம்கொண்
டெண்ணிடத்தும் செல்லாமை தான்தலையே - எண்ணி
உரைப்பூசல் போற்றல் உறுதவமேல் கங்கைக்
கரைப்பூசை போறல் கடை. 94

 1. பிறர் உண்ணும் இடத்துக்குச் செல்லக்கூடாது. 
 2. பிறர் மெலிவுற்று வறுமையில் வாடும் இடத்துக்குச் செல்லக்கூடாது. 
 3. மந்திரம் சொல்லி எண்ணும் இடத்திற்குச் செல்லக்கூடாது. 

இவை தலைமையான செயல்கள்.

 1. எண்ணித் திட்டமிட்டு உரைக்கும் சண்டைப் பூசல்களைத் தாங்கிக்கொண்டு தவ நெறியைப் பெரிதாகப் பின்பற்ற வேண்டும். 
 2. புனித நீராடும் கங்கைக் கரையில் சண்டையிட்டுக் கொள்வது போல் சண்டையிட்டுக்கொள்வது கடையாய செயல். 

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு

சிறுபஞ்சமூலம் 93 SiruPanchaMulam 93

ஈவது நன்றுதீ தீயாமை நல்லவர்
மேவது நன்றுமே வாதாரோ டோவாது
கேட்டுத் தலைநிற்க கேடில் உயர்கதிக்கே
ஓட்டுத் தலைநிற்கும் ஊர்ந்து. 93

 1. ஈவது நன்று 
 2. ஈயாமை தீது 
 3. நல்லவரால் விரும்பப்படுவது நன்று 
 4. விரும்பாதவரோடு கெடு வரும் காலத்தில் கூடிநிற்பது இயல்பு 
 5. கேடு வந்துற்ற போதுதான் தலைமண்டை ஓட்டுக்குள் உள்ள எண்ணம் தலைநிமிர்ந்து நிற்கும். 

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு

சிறுபஞ்சமூலம் 92 SiruPanchaMulam 92

புல்லறத்தின் நன்று மனைவாழ்க்கை போற்றுடைத்தேல்
நல்லறத் தாரோடும் நட்கலாம் நல்லறத்தார்க்
கட்டிட்டுண் டாற்றவாழ்ந் தார்களே இம்மையில்
அட்டிட்டுண் டாற்றவாழ் வார். 92

 1. வணிக நோக்குடன் புல்லிய அறநெறி வாழ்க்கையைப் பின்பற்றுவதைக் காட்டிலும் மனைவாழ்க்கை நன்று. 
 2. இது போற்றப்படுமாயின் நல்லறமாம். 
 3. இவர்கள் துறவறம் மேற்கொள்வாரோடு நட்பு கொள்ளலாம். 
 4. உணவு சமைத்து நல்லறத் உறவிகளுக்கு இட்டு உண்டு தொண்டடாற்றி வாழவேண்டும். 
 5. இப்படி வாழ்ந்தவர்களே இம்மை உலகத்தில் சமைத்துப் பிறருக்குக் கொடுத்து உண்டு நிறைவு கொள்ளும்படி வாழ்பவர் ஆவார். 

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு

சிறுபஞ்சமூலம் 91 SiruPanchaMulam 91

பொய்யாற் சுவர்க்கம்வா யானிர யம்பொருள்
மையார் மடந்தையால் வாழ்வினிது-மெய்யென்றான்
மைத்தக நீண்ட மலர்க்கண்ணாய் தீதன்றா
லெத்தவ மானும் படல்.    91

 1. பொய்யால் சுவர்க்கம் 
 2. மெய் பேசுவதால் நரகம் 
 3. பொருளை விரும்பும் மை தீட்டிய கண்ணை உடையவளால் வாழ்க்கை இனிக்கும். 
 4. இவற்றை மெய் என்று ஒருவன் சொன்னால் அது தீது என உணர்க. 
 5. எந்தத் தவம் வேண்டுமானாலும் செய்யலாம் என்பது தீது. 

மை போன்று கருமை கொண்டதாய் நீண்டு மலர் போல விளங்கும் கண்ணை உடையவளே!
இவற்றை உணர்ந்துகொள்க.

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 90 SiruPanchaMulam 90

தக்க திளையான் றவஞ்செல்வ னூண்மறுத்த
றக்கது கற்புடை யாள்வனப்புத்-தக்க
தழற்றண்ணென் றோளா ளறிவில ளாயி
னிழற்கண் முயிறாய் விடும்.   90
முயிறு

முயிறு 


முயிறு

 1. இளமையில் தவம் இயற்றுதல் தக்கது 
 2. செல்வம் மிக்கவன் உணவு உண்ணாமல் நோன்பு இருப்பது தக்கது 
 3. கற்புடைய பெண் அழகு பெற்றிருப்பது தக்க. 
 4. அப்போது அவள் நெருப்பே ‘தண்’ என்று இருக்கும்படியான தோளை உடையவளாக இருப்பாள்.  
 5. அவள் அறிவில்லாதவளாக இருந்தால், தங்கப் போன நிழலில் முயிறு என்னும் எறும்பு மேய்ந்தால் போன்ற நிலைமை ஆகிவிடும். 


காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 89 SiruPanchaMulam 89

இன்சொலா னாகுங் கிளைமை யியல்பில்லா
வன்சொல்லி னாகும் பகைமைமன்-மென்சொல்லி
னாய்வில்லா வார்ருளா மவ்வரு ணன்மனத்தான்
வீவில்லா வீடாய் விடும்.   89

 1. இன்சொல் பேசினால் உறவு பெருகும். 
 2. இயல்பு இல்லாத வன்சொல்லை வரவழைத்துக்கொண்டு பேசினால் பகைமைதான் நிலைபெறும். 
 3. மென்சொல் பேசினால் ஆராய்ந்து பார்க்க முடியாத நிறைந்த அருள் பெருகும். 
 4. அருளால் அருள்-மனம் கிட்டிட்டும். 
 5. அந்த அருள் மனத்தால் என்றும் அழியாத வீடுபேறு பெறலாம். 

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 88 SiruPanchaMulam 88

நாணெளிது பெண்மை நகையெளிது நட்டானே
லேணெளிது சேவக னேற்பெரியார்-பேணெளிது
கொம்பு மறைக்கு மிடையா யளியன்மீ
தம்பு பறத்த லரிது.    88

 1. பெண்ணுக்கு நாணம் எளிது 
 2. நண்பனோடு சிரித்து மகிழ்தல் எளிது 
 3. அடிமைத்தொழில் செய்பவன் இருந்தால் பெருமிதம் (ஏண்) எளிது 
 4. பெரியாரைப் பேணல் எளிது 
கொம்பு போன்ற (மறைக்கும்) இடையை உடையவளே!
 1. என் மேல் பகைவரின் அம்பு பறத்தல் அரியது. (நான் வீரன்) 

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 87 SiruPanchaMulam 87

நாணில னாய்நன்கு நள்ளாதா னாய்ப்பெரியார்ப்
பேணில் னாய்பிறர் சேவகனா-யேணில்
பொருந்திய பூண்முலையார் சேரிகைத் தில்லான்
பருத்தி பகர்வுழி நாய்.   87

 1. பழிக்கு நாணாதவன் நாய் 
 2. நட்பில் தோய்வில்லாதவன் நாய் 
 3. பெரியாரைப் பேணாதவன் நாய் 
 4. பிறருக்கு அடிமைத்தொழில் செய்பவன் நாய் 
 5. ஏண் என்னும் பெருமை இல்லாத, முலையில் பூண் அணிந்து எடுப்பாக்கிக் காட்டும் விலைமகளிர் வாழும் தெருவில் வலிமை (மதுகை, கைத்து) இல்லாதவனாகத் திரிபவன் பருத்தியால் செய்த ஆடை விற்பவனைப் பார்த்துக் குரைக்கும் நாய்.  

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 86 SiruPanchaMulam 86

கண்ணுங்காற் கண்ணுங் கணிதமே யாழினோ
டெண்ணுங்காற் சாந்தே யிலைநறுக்கிட்-டெண்ணுத
லிட்டவிவ் வைந்து மறிவா னிடையாய
சிட்டனென் றெண்ணப் படும்.    86

நினைத்துப் பார்க்குமிடத்து

 1. கண்ணாகக் கருதப்படும் கணிதம் 
 2. யாழ் இசைத்தல் 
 3. காலம் எண்ணிச் சொல்லுதல்
 4. சந்தனம் அரைத்தல் 
 5. வெற்றிலை எண்ணுதல் 

இவை ஐந்தும் அறிபவன் இடையாய சிட்டன் என்று அறியத் தக்கவன்.


காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 85 SiruPanchaMulam 85

சத்தமெய்ஞ் ஞானந் தருக்கஞ் சமயமே
வித்தகர் கண்டவீ டுள்ளிடாங் கத்தகத
தந்தவிவ் வைந்து மறிவான் றலையாய
சிந்திப்பின் சிட்டன் சிறந்து.   85

 1. ஒலி விளக்கம் (இசை)
 2. மெய்ஞ்ஞானம் 
 3. தருக்கம் என்னும் அளவை நூல் (logic) 
 4. சமய விளக்கம் 
 5. வல்லோர் கண்ட வீடுபேறு 

உள்ளிட்ட
ஆங்கு அத் தகவுடைய முடிவுகள் ஐந்தும் அறிபவன்
சிந்திக்கப்போனால்
தலையாய சிட்டன் என்று போற்றப்படுவான்


காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 84 SiruPanchaMulam 84

நகையொடு மந்திரம் நட்டார்க்கு வாரம்
பகையொடு பாட்டுரையென் றைந்துந்-தொகையொடு
மூத்தோ ரிருந்துழி வேண்டார் முதுநூலுள்
யாத்தா ரறிந்தவ ராய்ந்து.   84

முதுமையான நூல்களில் கருத்தூன்றிய கட்டுப்பாடு உடையவர்கள்
மூத்தோர் இருக்கும் இடத்தில்

 1. நகைப்புக்கு உரியன சொல்லிச் சிரிக்க மாட்டார் 
 2. மந்திரம் சொல்ல மாட்டார் 
 3. தன் நண்பருக்காக ஒரு பக்கமாகப் பேசமாட்டார். 
 4. பகை மொழி கூறமாட்டார் 
 5. பாட்டுக்கு உரை சொல்ல மாட்டார். 


காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 83 SiruPanchaMulam 83

தோற்கன்று காட்டிக் கறவார் கறந்தபால்
பாற்பட்டா ருண்ணார் பழிபாவம்-பாற்பட்டா
ரேற்றயரா தின்புற்று வாழ்வன வீடழியக்
கூற்றுவப்பச் செய்யார் கொணர்ந்து.    83

 1. வைக்கோல் திணித்துத் தோலால் செய்யப்பட்ட கன்றுக்குட்டியைப் பசுவின் முன் நிறுத்திப் பால் சுரக்கும்படிச் செய்து ஏமாற்றிப் பசுவின் பாலைக் கறக்க மாட்டார். 
 2. அப்படிக் கறந்த பாலை நல்வழியில் நிற்பவர் உண்ணமாட்டார். 
 3. பழி, பாவம் பார்த்து நல்வழியில் நிற்பவர் வாழ்க்கை நடத்துவார்.  
 4. இப்படிப்பட்ட வாழ்க்கையை ஏற்று இன்பமுடன் வாழ்வார். 
 5. வாழும் உயிரினங்களை ஈடுபாடு அழியும்படியும் கூற்றுவன் மகிழும்படியும் கொண்டுவந்து கொலை செய்ய மாட்டார். 

இவர்கள் நல்லவர்கள்.

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 82 SiruPanchaMulam 82

உடைந்த பானை ஓடு
பிறர் பொருளை
உடைந்த ஓடு போல்
கருதவேண்டும் 
காடுபோற் கட்கினிய வில்லம் பிறர்பொரு
ளோடுபோற் றாம் பிறந்ததா-யூடுபோய்க்
கோத்தின்னா சொல்லானாய்க் கொல்லானேற் பல்லவ
ரோத்தினா லென்ன குறை.   82

 1. கண்ணுக்கு இனிய பிறன் இல்லத்தைக் காடு போல் கருதுவான். 
 2. பிறர் பொருளை உடைந்த பானை ஓடு போல் கருதுவான்.
 3. பிறன் மனைவியைத் தன்னைப் பெற்றெடுத்த தாய் போல் கருதுவான். 
 4. பிறர் வாழ்க்கையில் குறுக்கிட்டுக் கேடு விளைவிக்கும் சொற்களைச் சொல்ல மாட்டான். 
 5. உயிர்க்கொலை செய்ய மாட்டான். 

இப்படிப்பட்டவனுக்குப் பலர் சொல்லிவைத்த வேத மொழியால் நிறைவேற்றிக் கொள்ளத் தக்க குறை என்ன இருக்கிறது?


காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 81 SiruPanchaMulam 81

கழிந்தவை தானிரங்கான் கைவாரா நச்சா
னிழிந்தவை யின்புறா னில்லார்-மொழிந்தவை
மென்மொழியா லுண்ணெகிழ் தீவானேல் விண்ணோரா
லின்மொழியா லேத்தப் படும்.   81

 1. வாழ்க்கையில் நடந்து முடிந்த செயல்களைப் பற்றிக் வருந்த மாட்டான். 
 2. கைக்குக் கிடைக்காததை விரும்ப மாட்டான். 
 3. கீழ்த்தனமான செயல்களில் இன்பம் காணமாட்டான். 
 4. பொருள் இல்லாதவர் சொல்லும் சொற்களை மென்மொழி எனக் கொள்வான். 
 5. உள்ளம் நெகிழ்ந்து அவர்களுக்கு ஈவான்.

இப்படிப்பட்டவன் வானுலகத் தேவர்களால் போற்றிப் புகழப்படுவான்.

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

சிறுபஞ்சமூலம் 80 SiruPanchaMulam 80

தக்கார் வழிகெடா தாகுந் தகாதவ
ருக்க வழியரா யொல்குவர்-தக்க
வினத்தினா னாகும் பழியும் புகழு
மனத்தினா னாகு மதி.   80

வாழ்க்கையில் பின்பற்றத் தக்கவர் "தக்கார்" எனப்படுவார்.

 1. தக்கவர் செல்லும் வழியைப் பின்பற்றினால் என்றும் கேடு விளைவதில்லை. 
 2. தகாதவர் வழியைப் பின்பற்றினால் வாழ்க்கையில் தளர்வு அடைவர். 
 3. சார்ந்திருக்கும் இனத்தினால் பழி வரும். 
 4. சார்ந்திருக்கும் இனத்தினால்  புகழ் வரும். 
 5. மன நிலையால் மதிக்கும் அறிவு பிறக்கும்.  

காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

Friday, 26 May 2017

சிறுபஞ்சமூலம் 79 SiruPanchaMulam 79

வரைவில்லாப் பெண்வையார் மன்னைப்புற் றேறார்
புரையில்லார் நள்ளார்போர் வேந்தன்-வரைபோற்
படுங்களிறு விட்டுழிச் செல்லார் வழங்கார்
கொடும்புலி கொட்கும் வழி.   79

நல்லவர்

 1. இன்னாருக்கு என்று வரையறை இல்லாமல் எல்லாருக்கும் பயன்படும் பெண்ணை விரும்பமாட்டார். 
 2. நெடுங்காலமாக நிலைபெற்றிருக்கும் புற்று மண்ணின்மீது ஏறமாட்டார் 
 3. மேன்மை இல்லாதவரோடு நட்புப் கொள்ளமாட்டார். 
 4. வேந்தன் மலை போல் உயர்ந்த தன் யானையை நீராட விட்டிருக்கும்போது குறுக்கே செல்லமாட்டார். 
 5. புலிகள் மேயும் காட்டு வழியில் செல்லமாட்டார்.  


காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம்
சங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு 

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி